Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | கம்பெனி ஆட்சியில் கல்வி வளர்ச்சி

ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் - கம்பெனி ஆட்சியில் கல்வி வளர்ச்சி | 11th History : Chapter 17 : Effects of British Rule

   Posted On :  15.03.2022 09:18 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

கம்பெனி ஆட்சியில் கல்வி வளர்ச்சி

மௌல்வி ஒருவரின் துணையோடு வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு மதரசாவை உருவாக்கியதே பிரிட்டிஷார் கல்விக்கு ஆற்றிய முதல் தொண்டு ஆகும்.

கம்பெனி ஆட்சியில் கல்வி வளர்ச்சி

மௌல்வி ஒருவரின் துணையோடு வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு மதரசாவை உருவாக்கியதே பிரிட்டிஷார் கல்விக்கு ஆற்றிய முதல் தொண்டு ஆகும். இம்மதரசா நாற்பது மாணவர்களைக் கொண்டு துவங்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கியது. இஸ்லாமியர்களுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் செய்தது போன்ற சேவையை இந்துக்களுக்கு மேற்கொள்ள அவருக்குப் பின் பொறுப்பேற்றோர் தயாராக இருந்தனர். காரன்வாலிஸ் வாரணாசியில் ஒரு சமஸ்கிருதக் கல்லூரியை (1791) நிறுவினார். அதன் பின் வந்த இருபது ஆண்டுகளில் பெரிய நடவடிக்கைகள் எதையும் பிற ஆளுநர்கள் மேற்கொள்ளவில்லை. கம்பெனியின் நலம் கருதி இந்தியாவில் கல்வி வளர்ச்சியை மேற்கொள்வது விரும்பத்தக்கது அல்ல என்றே நினைத்து செயல்பட்டது. பின்னர் 1813ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டயச்சட்டத்தில் தெளிவான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்ற பின் கிறித்தவ சமயத் தொண்டாற்றுவோர் மூலமாகத் தாய்மொழிக் கல்வியின் வளர்ச்சியை ஊக்குவித்தார். கல்கத்தாவில் 1817ஆம் ஆண்டு ஆங்கில மொழியையும் மேற்கத்திய அறிவியலையும் ஆதரித்த இந்தியரின் எண்ணவோட்டத்தைப் பூர்த்தி செய்யும் விதமாகத் துவக்கப்பட்ட இந்து கல்லூரிக்கு அவரே புரவலரானார். அலெக்சாண்டர் டஃப் போன்ற கிறித்தவ சமயப்பணியாளர்களும் கல்வியை வளர்த்தெடுக்கத் தூண்டுகோலாக இருந்தனர். ஹேஸ்டிங்ஸின் தாராளப்பார்வையும், அதன் விளைவாக 1799இல் பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்டிருந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் கல்வி வளர்ச்சியில் பாராட்டுக்குறிய நடவடிக்கைகளாகும். இச்சூழலில்தான் 1818ஆம் ஆண்டு வங்காள வாராந்திர இதழ்சமாச்சார் தர்பன்துவங்கப்பட்டது.

இந்திய மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையுமே 1833 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் வலியுறுத்தியது. ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான வில்லியம் பெண்டிங் சமூக சீர்திருத்தத்தின் பொருட்டு தக்கர்களை (Thuggee) (சடங்கு முறையாக கொள்ளையடிப்பதையும், கொலை செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள்) அழிக்கவும், சதி முறையை ஒழிக்கவும், கல்வி மேம்பாட்டுக்காகப் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறக்கத் தலைப்பட்டார். கல்கத்தா மருத்துவக் கல்லூரியை 1835இல் துவங்கினார். இக்கல்லூரியின் மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் பொருட்டு 1844ஆம் ஆண்டு லண்டனுக்கு அனுப்பப்பட்டார்கள். 1845இல் பம்பாயில் கிராண்ட் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது. தாம்சன் பொறியியல் கல்லூரி 1847ஆம் ஆண்டு ரூர்க்கியில் தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவில் 1849இல் பெண்களுக்கான பள்ளி துவங்கப்பட்டது.

பட்டயம் (charter) என்பது ஒரு நாட்டின் இறையாண்மை அதிகாரத்தை மையமாகக்கொண்டு சகல அதிகாரங்களும், சலுகைகளும் உள்ள ஒரு வணிக நிறுவனத்தையோ, பல்கலைக்கழகத்தையோ, நகரத்தையோ உருவாக்க வழங்கப்படும் சட்டமாகும். கிழக்கிந்தியக் கம்பெனி, மகாராணி எலிசபெத் 1600இல் வழங்கிய பட்டயத்தின் மூலம் துவங்கப்பட்டது. வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக 1773ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டயம் புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியமானது. பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா வருவதற்கு முன்பு வழங்கப்பட்ட 1853ஆம் ஆண்டின் பட்டயச்சட்டமே கடைசியானது ஆகும்.



மெக்காலே : இந்திய இலக்கியம், தத்துவம், மருத்துவம் இவற்றில் எதிலும் மெக்காலே நல்லவற்றை காணவில்லை. 1835ஆம் ஆண்டு அவர் எழுதிய கல்வி குறித்த குறிப்பில் மெக்காலே கீழ்கண்டவாறு எழுதுகிறார்:

 .... எனக்கு அரபு மொழியும் தெரியாது, சமஸ்கிருதமும் தெரியாது. ஆனால் அரபு, சமஸ்கிருத மொழிகளில் சிறப்பானவையாகக் கருதப்படும் நூல்களின் மொழியாக்கங்களைப் படித்திருக்கிறேன். எனது நாட்டிலும், இங்கும் (இந்தியாவில்) கிழக்கத்திய மொழிகளில் புலமை பெற்ற மனிதர்களுடன் உறவாடியிருக்கின்றேன். நல்லதோர் ஐரோப்பிய நூலகத்தில் உள்ள ஓர் அலமாரியில் இருக்கும் நூல்கள் அரேபியாவிலும், இந்தியாவிலும் உள்ள அனைத்து இலக்கிய நூல்களுக்கும் சமம் என்பதை அவர்களுள் ஒருவர்கூட மறுக்கமாட்டார்கள்.

...... தற்போது நமக்கும், நாம் ஆள்கின்ற லட்சக்கணக்கான மக்களுக்குமிடையே உரைபெயர்ப்பாளர்களாக ஒரு வர்க்கத்தை உருவாக்க நாம் முடிந்ததைச் செய்ய வேண்டும் - இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியர் ஆனால் சுவையில், கருத்தில், தார்மீகத்தில், அறிவில் ஆங்கிலேயராக இருக்கும் ஒரு வர்க்கம்.

..... பிராந்திய மொழிகளைச் சீர்திருத்தி, மேற்கத்திய சொற்பட்டியலிலிருந்து அறிவியல் தொடர்பான சொற்களைச் சேர்த்து செழுமைப்படுத்தி அனைத்து மக்களுக்கும் எவ்வழியில் அறிவைக் கொண்டு சேர்க்க முடியுமோ அவ்வழியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அவ்வர்க்கத்திடமே விட்டுவிடலாம்.

மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக 1835ஆம் ஆண்டில் இந்தியாவை வந்தடைந்தார். அவர் கல்விக்குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு உள்நாட்டுக் கல்வி மீது மதிப்பிருக்கவில்லை. மெக்காலே ஆங்கிலவழிக் கல்வியை ஆதரித்துப் பரிந்துரைத்ததால் அரசு ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகவும் அலுவலக மொழியாகவும் ஏற்றுக்கொண்டது.

டல்ஹெளசியும் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டினார். அவர் வடகிழக்கு மாகாணத்தின் துணை ஆளுநர் (1843-53) ஜேம்ஸ் தாமஸினால் உருவாக்கப்பட்ட தாய்மொழிக் கல்விமுறைக்கு ஆதரவு கொடுத்தார். சார்லஸ் உட்டின் கல்வி அறிக்கை (1854) ஆரம்பக்கல்வி முதல் உயர்நிலைப் பள்ளியையும், கல்லூரிப் படிப்பையும் உள்ளடக்கிய ஒரு விரிவான வரைவாகும். பொதுக் கல்வித்துறை துவங்கப்பட்டு மூன்று மாகாணத் தலைநகரங்களிலும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே 1857இல் சென்னை பல்கலைக்கழகமும் பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டன. டல்ஹௌசி மெக்காலேயின் கொள்கையை மாற்றி, தாய் மொழியிலும் கல்வி நிலையங்கள் உருவாவதை ஆதரித்தார். அவர் சாதி சமயப்பாகுபாடு பார்க்காமல் தனியாரின் கல்விச்சேவையை ஆதரிக்கும் விதமாக கல்விச் சேவையில் ஈடுபட்ட தனியாருக்கும் மானியம் வழங்கினார்.

Tags : Effects of British Rule ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்.
11th History : Chapter 17 : Effects of British Rule : Education and Development under Company Rule Effects of British Rule in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : கம்பெனி ஆட்சியில் கல்வி வளர்ச்சி - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்