Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | நில நிர்வாக முறை: நிலையான நிலவரி முறையும் இரயத்துவாரி முறையும்

ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் - நில நிர்வாக முறை: நிலையான நிலவரி முறையும் இரயத்துவாரி முறையும் | 11th History : Chapter 17 : Effects of British Rule

   Posted On :  14.05.2022 08:56 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

நில நிர்வாக முறை: நிலையான நிலவரி முறையும் இரயத்துவாரி முறையும்

ஒழுங்குமுறைச் சட்டம் 1773இன்படி கம்பெனி ஊழியர்களின் வரவு செலவு கணக்கு பற்றி இயக்குநர் குழு பிரிட்டிஷ் கருவூலத்திற்குத் தெரியப்படுத்துவது சட்டரீதியாக கடமையாக்கப்பட்டது.

நில நிர்வாக முறை: நிலையான நிலவரி முறையும் இரயத்துவாரி முறையும்

ஒழுங்குமுறைச் சட்டம் 1773இன்படி கம்பெனி ஊழியர்களின் வரவு செலவு கணக்கு பற்றி இயக்குநர் குழு பிரிட்டிஷ் கருவூலத்திற்குத் தெரியப்படுத்துவது சட்டரீதியாக கடமையாக்கப்பட்டது. ஆளுநரும் தலைமைத் தளபதியும் இரு ஆலோசகர்களும் கொண்ட குழு, வருவாய் வாரியமாகச் செயல்பட்டு, வருவாய் குறித்து விவாதித்தது. 1784ஆம் ஆண்டின் பிட் இந்தியச் சட்டம், இராணுவ மற்றும் குடிமை அமைப்புக்களை தனித்தனியாகப் பிரித்தது.

 

1772 வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்தலைவர் ஆளுநரே ஆவார் (வில்லியம் கோட்டையிலோ ஜார்ஜ் கோட்டையிலோ வீற்றிருப்பார்). வில்லியம் கோட்டையில் ஆளுநராகப் பதவியிலிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒழுங்கு முறைச் சட்டத்தின் (1773) மூலமாக கவர்னர் ஜெனரலாகப் பதவி கவர்னர் ஜெனரல் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர் மன்றத்தின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 1833 பட்டயச் சட்டம் மூலமாக அப்பதவி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்று நிலையேற்றம் பெற்றது. அப்பதவியும் இயக்குநர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, பதவி வகிப்பவர் இயக்குநர் மன்றத்திற்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டிய கடமையுமிருந்தது. 1857 பெருங்கிளர்ச்சிக்குப்பின் இந்திய அரசின் பொறுப்பைக் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்து இங்கிலாந்து அரசு நேரடியாக எடுத்துக்கொள்ள வகைசெய்த 1858இன் ‘விக்டோரியா ராணியாரின் பிரகடனம்’ முதன்முறையாக அரசப்பிரதிநிதி (வைஸ்ராய் மற்றும் கவர்னர் ஜெனரல்) என்ற சொற்றொடரைக் கையாண்டது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்குக் கட்டுப்பட்ட முதல் வைஸ்ராய் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரலாக கானிங் நியமிக்கப்பட்டார்.



தானே ஒரு நிலச்சுவான்தாரராக இருந்த காரன்வாலிஸ் பிரிட்டிஷ் முறையைப் பின்பற்றிய நிலப்பிரபுத்துவ முறையை உருவாக்க நினைத்தார். வருவாய் வசூலிப்பவரோடு கலந்து பேசி அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இது ஜமீன்தார் என்கிற இடைத்தரகர்களை உருவாக்கியதோடு பயிரிடுவோரைக் குத்தகை விவசாயிகளாக மாற்றியது. இயக்குநர் குழுவின் அறிவுரைப்படி வங்காளம், பீகார், ஒரிசா பகுதிகளின் ஜமீன்தார்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு முறையே நிலையான நிலவரி முறையாக அறியப்படுகிறது. ‘சாசுவதம்' என்பது நிலத்தை அளவிட்டு அதனடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் அரசுக்கு வழங்க வேண்டிய வருவாயை நிர்ணயம் செய்வதாகும். 1793இல் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளுக்கு அந்த நிர்ணயம் நிரந்தரமாக்கப்பட்டது. இம்முறையின் மூலமாக வரி வசூலிப்போராக இருந்தோர் வாரிசுரிமை கொண்ட ஜமீன்தார்களாக மாற்றி அரசு வழங்கிய நிலத்தின் பயன்களை அனுபவிக்கலானார்கள். நிர்ணயிக்கப்பட்ட மதிப்பிற்கு மேலாக வசூலிக்கப்பட்ட அனைத்தையும் ஜமீன்தார்கள் கையகப்படுத்திக் கொண்டார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு சென்னை மாகாணத்தின் நில வருவாய் வரலாற்றின் தொடக்கக் காலமாகும். ஆரம்பத்தில் பெரும் சர்ச்சைக்குப் பின் நிரந்தர நிலவரித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் மாவட்டங்கள் பல மிட்டாக்களாக பிரிக்கப்பட்டு அதிக தொகைக்குக் கேட்போருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு நிலவுரிமை பெற்றோர் வேளாண் குடிகளை அப்புறப்படுத்தியமையால் ஓரிரு ஆண்டுகளில் தோல்வியையே எதிர்கொண்டனர். ஆகவே அம்முறை கைவிடப்பட்டது. அதன்பின் வருவாய் வாரியம் (Board of Revenue) கிராமங்களைக் குத்தகைக்கு விடும் முயற்சியை மேற்கொண்டது.

 

வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் (1833) மகல்வாரிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி நிலவருவாய்க்கான ஒப்பந்தம் நிலத்தின் உரிமையாளரோடு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நிலவரியானது பயிர் சாகுபடி செய்பவரிடமிருந்தே வசூலிக்கப்பட்டது.

கிராமக் குத்தகை முறையில், பழைய வரிவசூல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கிராமமும் மூன்று ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. மிராசுதார் முறை நிலவி வந்த மாவட்டங்களில் நிலவரி வசூலிக்கும் பொறுப்பு மிராசுதார்களிடம் கொடுக்கப்பட்டது. மிராசுதார்கள் இல்லாத பகுதிகளில் கிராமத்தலைவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இம்முறை மோசமான பருவநிலை, தானிய விலைக் குறைவு, குறைந்த கால குத்தகை முறை போன்ற காரணங்களால் தோல்வியடைந்தது. போதிய விளைச்சல் இல்லாத போது மொத்த கிராமங்களும் வரி செலுத்த முடியாமல் புலம் பெயர்வது என்பது சாதாரணமாக நிகழ்ந்தது. அரசு, மாவட்ட ஆட்சியரின் துணையோடு அவ்வாறு புலம் பெயர்ந்தோரை மறுகுடியமர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

1814 ஆம் ஆண்டு இயக்குநர் குழுவில் இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இது ஆளுநராக இருந்த தாமஸ் மன்றோ என்பவரால் உருவாக்கப்பட்டது. வேளாண் நிலத்தின் உரிமையாளரும், அதன் வரிகளை செலுத்துபவரும் என்ற பொருள் கொண்ட ‘ரைய்யா’ என்ற அரபு வார்த்தையின் ஆங்கில திரிபே ‘ரயத்’ (Ryot) ஆகும். ‘ரயத்’ என்ற சொல்லிற்கு உழவர் என்று பொருள். எந்த இடைத்தரகரும் இல்லாமல் அரசே நேரடியாகப் பயிரிடுவோருடன் தொடர்பு கொள்வதே இம்முறையாகும். நிலவரி செலுத்தும் வரை விவசாயம் செய்வோரின் வசமே நிலமிருப்பது உறுதி செய்யப்பட்டது. வரி செலுத்தாதோரை நிலத்திலிருந்து அப்புறப்படுத்துவதோடு அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த கால்நடை, வீடு தனிப்பட்ட உடைமை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அரசு, பயிர் செய்யப்பட்ட ஒவ்வொரு வயலிலிருந்தும் கிடைக்க கூடிய வருவாயைக் கணித்தது. தானிய விலை மாற்றம், சந்தைப்படுத்தும் வசதிகள், பாசன வசதி போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முப்பது ஆண்டுக்கு ஒருமுறை தீர்வு மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. இரயத்துவாரி முறை நிலத்தில் தனியுடைமையை அறிமுகப்படுத்தியது. தனிப்பட்ட உடைமையாளர்களின் பெயர் பதிவு செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. அவர்கள் நிலத்தை விற்பதற்கும், அடமானம் வைப்பதற்கும், குத்தகைக்கு விடுவதற்கும், உரிமையை மாற்றிக் கொடுப்பதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.


தாமஸ் மன்றோ : தாமஸ் மன்றோ 1780 இல் மதராஸ் வந்தடைந்தார். முதல் பன்னிரெண்டு வருடங்கள் அவர் ஒரு படை வீரராக மைசூர் போரில் பங்கேற்றார். அவர் பாரமஹால் பகுதியில் (சேலம் மாவட்டம்) 1792 முதல் 1799 வரையிலும், கனரா பகுதியில் 1799 முதல் 1800 வரையிலும் பணியிலிருந்தார். பிரித்தெடுக்கப்பட்ட மாவட்டங்களான கடப்பா, கர்னூல், சித்தூர், அனந்தபூர் ஆகியவற்றிற்கு ஆட்சியராக பணி புரிந்தார். இக்காலத்தில்தான் அவர் இரயத்துவாரி முறை பற்றி யோசிக்கலானார். அவர் 1820 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்று அதன் பின் ஏழு வருடங்கள் சேவையாற்றினார். அப்போது 1822 ஆம் ஆண்டில் இரயத்துவாரி முறையை செம்மையாக அறிமுகப்படுத்தி செயலூட்டினார். அவர் ஆளுநராக இருந்த காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு கல்விக்கான செலவீனங்களை எதிர்காலத்திற்கான முதலீடாகவே கருதினார். அவர் நிர்வாகத்தில் இந்தியர்கள் பெருமளவில் பங்காற்றுவதை ஆதரித்தார். அவர் ஜுலை 1827 ஆம் ஆண்டு கர்னூலில் அமைந்துள்ள பட்டிக்கொண்டாவில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மக்களிடையே பிரபலமாகியிருந்த ஆளுநரான அவரின் நினைவாக பல நினைவிடங்கள் எழுப்பப்பட்ட தோடு, குழந்தைகள் பலருக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது. பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து அவரது சிலை வடிவமைக்கப்பட்டு 1839 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.

Tags : Effects of British Rule ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்.
11th History : Chapter 17 : Effects of British Rule : Land Tenures: Permanent Settlement and Ryotwari Settlement Effects of British Rule in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : நில நிர்வாக முறை: நிலையான நிலவரி முறையும் இரயத்துவாரி முறையும் - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்