ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் - துணைப்படைத் திட்டமும், வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும் | 11th History : Chapter 17 : Effects of British Rule
துணைப்படைத் திட்டமும், வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும்
கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி (17981805) பிரிட்டிஷ் ஆட்சியை உறுதி செய்யும் பொருட்டு ஒரு முன்னோக்கிய கொள்கையை பின்பற்றினார். அவர் சிற்றரசுகளைப் போர் வெற்றியின் மூலமாக வசப்படுத்தவில்லை. அதற்கு மாறாக அரசர்களைப் பெயரளவிற்கு அங்கீகரித்து அவர்களுக்கு மானியம் வழங்கியதோடு மொத்த நிர்வாகத்தையும் தன் வசப்படுத்தினார்.
வெல்லெஸ்லிக்கு முன்பாக இந்திய அரசர்களோடு கம்பெனி கூட்டணி அமைத்திருந்த நிஜாமும், அவத் நவாபும் பிரிட்டிஷ் படைகளைப் பராமரிக்க மானியம் பெற்றிருந்தார்கள். ஆனால் அவ்வாறு பராமரித்த படைப்பிரிவுகள் அவர்களின் நாட்டு எல்லைகளுக்கு வெளியே தான் நிறுத்தப்பட்டிருந்தன. பராமரிப்புச் செலவு பணமாகவே வழங்கப்பட்டது. பணப்பட்டுவாடா குறித்த நேரத்தில் நடந்தேறாத போது சிக்கல் எழுந்தது. இம்முறையை வெல்லெஸ்லி துணைப்படைத் திட்டத்தின் மூலம் விசாலமாக்கியதோடு ஹைதராபாத், மைசூர், லக்னோ, மராத்திய பேஷ்வா, போன்ஸ்லே (கோலாப்பூர்), சிந்தியா (குவாலியர்) போன்ற அரசுகளையும் அரசர்களையும் அதன் கீழ்க்கொண்டு வந்தார்.
துணைப்படைத் திட்டத்தின் கூறுகளாவன (அ) கூட்டணிக்குள் வரும் இந்திய ஆட்சியாளர் தனது சொந்தப் படைகளை கலைத்து விட்டு பிரிட்டிஷ் படைகளை ஏற்பதோடு அவர்கள் அனுப்பும் அதிகாரி ஒருவரை ஸ்தானிகராக (Resident) ஏற்க வேண்டும். (ஆ) பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்புச் செலவை ஏற்க வேண்டும். அது முடியாத போது மாகாணத்தின் ஒரு பகுதியை பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும். (இ) பாதுகாப்புக்கு உட்பட்ட அரசர் பிற ஐரோப்பிய நாடுகளுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். அதிலும் பிரெஞ்சு நிர்வாகத்தோடு தொடர்பு இருக்கக்கூடாது. (ஈ) பிரிட்டிஷார் அனுமதியில்லாமல் மற்ற ஐரோப்பியரை பணியிலமர்த்தக்கூடாது. (உ) பிற இந்திய அரசுகளோடு கம்பெனியின் அனுமதியில்லாமல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது. (ஊ) எந்த அரசும் பிற அரசுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிடக்கூடாது. இவ்வாறு சுதேச அரசுகள் தங்கள் இறையாண்மையை இழந்து அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களில் கம்பெனியை சார்ந்திருக்கும் நிலை உருவாக்கப்பட்டது.
துணைப்படைத் திட்டம் கம்பெனி அரசின் இராணுவ பலத்தை உயர்த்தியதோடு அதன் ஒட்டுமொத்தத் திறனையும் கூட்டியது. அதன் உடனடி விளைவு என்பது சொந்த நாட்டில் ஆயிரக்கணக்கான தொழில் முறை போர் வீரர்கள் வேலை இழந்ததே ஆகும். அவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்ட வீரர்கள் கொள்ளையர்களாக மாறினார்கள். பிண்டாரிகளின் (கூட்டமாக சூறையாடுவோர்) எண்ணிக்கை துணைப்படைத் திட்டத்திற்கு பின் கணிசமாக உயர்ந்தது. அரசர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கிய போதும், பாதுகாப்பிற்குள்ளிருந்த பல அரசுகளின் நிர்வாகம் திறம்பட இல்லை எனக் குற்றம் சுமத்தி அவற்றை இலகுவாக இணைப்பதும் நடந்தேறியது.
மாகாணம் (Presidency) என்பதற்கும் மாநிலம் (Province) என்பதற்குமான வேறுபாடு: கிழக்கிந்தியக் கம்பெனியாரின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமையப் பெற்றிருக்கும் இடம் மாகாணம் ஆகும். அவ்விதத்தில் சென்னை , பம்பாய், கல்கத்தா ஆகியவை மாகாணங்கள் ஆகும். பின்னர் இம்மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் மத்திய மாநிலம், ஒருங்கிணைந்த மாநிலம் போன்றவை உருவாக்கப்பட்டன.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கை
இந்து சம்பிரதாயங்களின்படி, வாரிசில்லாத மன்னர் ஓர் ஆண் மகவைத் தத்தெடுக்க முடியும். அவ்வாறு தத்தெடுக்கப்பட்ட மகனுக்குச் சொத்தில் முழு உரிமையும் உண்டு. இச்சூழலில் உச்ச அதிகாரத்திற்கு (இங்கிலாந்திற்கு) கட்டுப்பட்ட ஒரு சிற்றரசு அவ்வதிகாரத்தின் அனுமதி பெறாமல் வாரிசுகளை நியமிக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்தது. டல்ஹௌசியின் வரவுக்கு முன்புவரை கம்பெனி அரசின் அனுமதியை சுவீகாரத்திற்கு முன்போ , பின்போ அரச குடும்பத்தினர் பெற்று வந்தனர். ஆனால் டல்ஹௌசியோ இம்முறை உச்சபட்ச அதிகாரத்தின் பார்வைக்கு சென்றால் சட்டபூர்வமான சிக்கலை எதிர்கொள்ளலாம் என்று நினைத்தார். அவ்வாறு இருக்குமாயின் தத்தெடுக்கப்பட்ட வாரிசுகள் அரியணை ஏறுவது கம்பெனி அரசால் செல்லாதது என்று அறிவிக்கவும் வாய்ப்பிருந்தது.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கையின் கீழ் முதலில் வீழ்ந்த அரசு சதாரா ஆகும். சதாராவின் மன்னரான ஷாஜி இறந்த பின் (1848) அவரது தத்தெடுக்கப்பட்ட வாரிசை டல்ஹௌசி அங்கீகரிக்க மறுத்தார். ஜான்சியின் அரசர் கங்காதர்ராவ் நவம்பர் 1853இல் இறந்த மறுகணமே அவ்வரசு டல்ஹெளசியால் இணைக்கப்பட்டது. (விதவையான அவரது மனைவி இராணி லட்சுமிபாய் 1857 பெருங்கிளர்ச்சியின் போது பெரும் பங்காற்றினார்.) குழந்தைகள் இல்லாமல் மூன்றாம் ரகுஜி போன்ஸ்லே 1853இல் மறைந்தார். நாக்பூர் உடனடியாகக் கம்பெனி ஆட்சியில் இணைக்கப்பட்டது. மராத்தியர்களின் கடைசி பேஷ்வா 1851இல் காலமானார். அவர் முப்பத்து மூன்று வருடம் கம்பெனி கொடுத்த ஓய்வூதியத்தைப் பெற்றிருந்தார். ஆனால் டல்ஹௌசியோ அவரது வாரிசான நானா சாகிப்பிற்கு ஓய்வூதியம் கொடுக்க மறுத்தார். இவ்வாறாக வாரிசு உரிமை இழப்புக் கொள்கை நாடு பிடிக்கும் உத்தியாகச் செயல் வடிவம் பெற்றது. எனினும் பிரிட்டிஷ் முடியரசு இந்திய நாட்டின் பொறுப்பை ஏற்ற பின் இக்கொள்கை திரும்ப பெறப்பட்டது.