Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | குடிமை மற்றும் நீதி நிர்வாகங்களில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள்

ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் - குடிமை மற்றும் நீதி நிர்வாகங்களில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் | 11th History : Chapter 17 : Effects of British Rule

   Posted On :  15.03.2022 09:15 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

குடிமை மற்றும் நீதி நிர்வாகங்களில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள்

நீதிபதியும், கிழக்கத்திய சிந்தனை மரபை ஏற்றவருமான வில்லியம் ஜோன்சின் உதவியினைப் பெற்று காரன்வாலிஸ் கம்பெனி நிர்வாகத்தைக் கட்டமைத்தார்.

குடிமை மற்றும் நீதி நிர்வாகங்களில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள்

நீதிபதியும், கிழக்கத்திய சிந்தனை மரபை ஏற்றவருமான வில்லியம் ஜோன்சின் உதவியினைப் பெற்று காரன்வாலிஸ் கம்பெனி நிர்வாகத்தைக் கட்டமைத்தார். குற்றம் நடப்பதைக் கண்டுபிடிக்கவும், தண்டனை வழங்கவும் ஒரு சீரிய முறையை அறிமுகப்படுத்தியதன் மூலமாக கிளைவ் உருவாக்கிய இரட்டை ஆட்சி முறையை முடிவு கொண்டு வந்தார். வரி வசூலிக்கும் பொறுப்பைப் பொது நிர்வாகத்திலிருந்தும், நீதித்துறையிலிருந்தும் பிரித்தார். ஆட்சியர்களை (Collectors) வரி வசூலிக்க மட்டுமே பணித்து, அவர்களை நீதி வழங்கும் பொறுப்பிலிருந்து விடுவித்தார். குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டன. நீதித்துறையின் உச்சங்களாக சதர் திவானி அதாலத்தும், சதர் நிஜாமத் அதாலத்தும் திகழ்ந்தன. குற்றவியல், குடிமையியல் நீதியில் உச்சபட்ச முறையீட்டு நீதிமன்றங்களான இவை கல்கத்தாவில் அமையப்பெற்று கவர்னர் ஜெனரல் உள்ளிட்ட குழுவினரால் வழிநடத்தப்பட்டன. அவற்றின் கீழ் நான்கு பிராந்திய முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தா, தக்காணம், மூர்ஷிதாபாத், பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன. இந்நீதிமன்றங்கள் ஒவ்வொன்றினுக்கும் மூன்று ஐரோப்பிய நீதிபதிகளும், அவர்களுக்கு உதவி புரிய ஓர் இந்திய வல்லுனரும் நியமிக்கப்பட்டார்கள். இந்நீதிமன்றங்களின் கீழ் ஒரு ஐரோப்பிய நீதிபதியையும், அவருக்குத் துணையாகச் சில இந்தியர்களையும் உள்ளடக்கிய மாவட்ட மற்றும் நகர நீதிமன்றங்கள் இயங்கின. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெருநகரிலும் ஓர் நீதிமன்றம் அமைந்தது. அவற்றின் கீழ் இந்திய நீதிபதிகளைக் கொண்ட முன்சீப் நீதிமன்றங்கள் இயங்கின. சீரியல் (சிவில்) வழக்குகளில் இஸ்லாமியச் சட்டங்கள் பின்பற்றப்பட்டன. குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவரின் சமயப் பின்னணியினைப் பொறுத்து இந்து சட்டமும், இஸ்லாமிய சட்டமும் பின்பற்றப்பட்டன.

காரன்வாலிஸின் தலையாய பங்களிப்பானது குடிமைப் பணிகளின் சீர்திருத்தமே ஆகும். அவர் திறமை வாய்ந்தவர்களையும் நேர்மையானவர்களையும் பணியமர்த்த வழிவகை செய்தார். கம்பெனி அதிகாரிகளுக்குச் சொற்ப சம்பளத்தை வழங்கிவிட்டு அவர்களைத் தனியாக வியாபாரம் செய்ய அனுமதித்த பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். திறமையின் அடிப்படையில் பணி வழங்கிய போதும், இந்தியர்கள் பணியாற்றத் தகுதியற்றவர்கள் என்று கருதியதால் அவர்களைப் பணிக்கு அமர்த்த மறுத்தார்.

ஒவ்வொரு மாவட்டமும் தானாக்களாகப் (காவல் வட்டம்) பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு தானாவும் இந்தியர் ஒருவரால் வகிக்கப்பட்ட தரோகா என்ற பதவியின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. காரன்வாலிஸின் காவல் துறை நிர்வாக முறை பின்னர் மேலும் மெருகேற்றப்பட்டது. நீதியதிகாரத்திற்கும் வருவாய் அதிகாரத்திற்குமிடையேயான திடமான பிரிவு கைவிடப்பட்டது. ஆட்சியரே நீதி வழங்குபவராகவும் செயலாற்றத் துவங்கினார்.

குடிமை மற்றும் நீதி நிர்வாகத்தைப் பண்படுத்திய காரன்வாலிஸ் கம்பெனி ஊழியரின் கல்வியை மேம்படுத்த போதிய அக்கறை செலுத்தவில்லை. வெல்லெஸ்லியோ அவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். இங்கிலாந்தின் தாராளவாதக் கல்வி முறையோடு இந்தியரின் மொழி, சட்டங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைக் குடிமைப் பணியாளர்கள் அறிந்திருத்தல் நன்று என அவர் கருதினார். இந்நோக்கத்தோடு கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் 1800இல் ஒரு கல்லூரி துவங்கப்பட்டது. கம்பெனியின் குடிமைப் பணியாளர்களுக்கு இங்கு மூன்று வருட காலப் பயிற்சி வழங்கப்பட்டது. பல ஐரோப்பியப் பேராசிரியர்களும் எண்பது இந்தியப் பண்டிதர்களும் இங்குப் பணிபுரிந்தனர். இதுவே வங்காளக் கிழக்கத்தியப் பள்ளியாக உருவெடுத்தது. கிழக்கிந்தியக் கல்லூரி 1806இல் இங்கிலாந்தில் துவக்கப்பட்டது. வில்லியம் கோட்டை கல்லூரியின் அடியொற்றி, எல்லிஸ் என்பவர் தூய ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை (1812) சென்னையில் உருவாக்கினார். இங்குதான் தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்தோடு தொடர்பில்லாத சுதந்திரமான தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்னும் கருத்தாக்கம் முதன் முதலில் உருவாக்கப்பட்டது.

Tags : Effects of British Rule ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்.
11th History : Chapter 17 : Effects of British Rule : Reforms in Civil and Judicial Administration Effects of British Rule in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : குடிமை மற்றும் நீதி நிர்வாகங்களில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்