Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பஞ்சங்களும், ஒப்பந்தக் கூலிகளும்

ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் - பஞ்சங்களும், ஒப்பந்தக் கூலிகளும் | 11th History : Chapter 17 : Effects of British Rule

   Posted On :  15.03.2022 09:28 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

பஞ்சங்களும், ஒப்பந்தக் கூலிகளும்

பஞ்சம் இந்தியாவுக்குப் புதியதல்ல என்ற போதும் பிரிட்டிஷ் ஆட்சியில் அது அடிக்கடி தோன்றியதோடு மிக கோரமானதாகவும் விளங்கியது.

பஞ்சங்களும், ஒப்பந்தக் கூலிகளும்

பஞ்சம் இந்தியாவுக்குப் புதியதல்ல என்ற போதும் பிரிட்டிஷ் ஆட்சியில் அது அடிக்கடி தோன்றியதோடு மிக கோரமானதாகவும் விளங்கியது. நான்கு பஞ்சங்களே 1800ஆம் ஆண்டிலிருந்து 1825ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தோன்றின. ஆனால் அந்நூற்றாண்டின் கடைசி இருபத்தைந்து ஆண்டுகளில் 22 பஞ்சங்கள் தோன்றின. இவற்றால் ஐம்பது இலட்சத்திற்கும் மேலானோர் இறந்ததாகக் கருதப்படுகிறது. முன்னாள் குடிமைப் பணி அதிகாரியான ரோமேஷ் சந்திர தத் 1901ஆம் ஆண்டில் கணக்கிடும் போது 1860ஆம் ஆண்டிற்கு பின் 10 பெரும் பஞ்சங்களைச் சுட்டுவதோடு, அதனால் ஒன்றரை கோடி மக்கள் இறந்ததாகவும் கூறுகிறார்.

தலையிடா வணிகக்கொள்கை (Laissez Faire) என்பதைக் கடைபிடிப்பதாக 1833இல் காலனி அரசு எடுத்த முடிவைப் பஞ்சக் காலத்திலும் பலமாகப் பின்பற்றியது. பல ஆண்டுகளாக மேற்கத்தியக் கல்வி முறையில் கற்ற இந்திய இளைஞர்கள் பிரிட்டிஷ் ஆட்சியே இந்தியாவை வறுமையின் பிடியில் வைத்திருக்கிறது என்று வாதிட்டனர். ஒரிசாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் மூன்றில் ஒருவர் என்ற அளவில் மக்கள் பசியாலும் நோயாலும் செத்து மடிந்ததே அக்கூற்றுக்குச் சான்றாக விளங்கியது. இந்நிகழ்வே தாதாபாய் நௌரோஜியை தமது வாழ்க்கை முழுக்க இந்திய வறுமை பற்றிய ஆய்வை மேற்கொள்ள வைத்தது.

சென்னை மாகாணப் பெரும்பஞ்சம், 1876 - 78:

இரு ஆண்டுகளில் தொடர்ச்சியாக பருவகாலம் பொய்த்ததால் சென்னை மாகாணத்தில் 1876-78ஆம் ஆண்டுகளில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. ஒரிஸ்ஸாவில் பின்பற்றியது போன்றே வைஸ்ராய் கைவிரிக்கும் போக்கை பின்பற்றினார். இதனால் மாகாணத்தில் முப்பத்தைந்து லட்சம் மக்கள் மடிந்தனர்.

அன்றைய சென்னை மாகாணத்தின் குண்டூர் மாவட்டத்தில் 1833ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சம் பற்றிய ஒரு நேரடிப் பார்வையாளரின் (ஆங்கிலேயர்) கூற்று வருமாறு: மிகுந்த நெருக்கடியான சூழலில் மனிதர்கள் எத்தகைய அருவருப்பான உணவை உட்கொள்வார்கள் என்பதை யோசிக்கவே மிகவும் அச்சமாக உள்ளது. ஏனென்றால் உயிர் பிழைத்த சிலர் ஒரு செத்த நாயையும் குதிரையையும் பேராசையோடு சுவைப்பதைக் கண்டேன். மற்றொரு சமயம் ஒரு துரதிருஷ்டமான கழுதை கோட்டையை விட்டு வெளியேறிய அக்கணத்திலேயே அதன் மீது ஓநாய்கள் போல் பாய்ந்து முன்னங்கால், பின்னங்கால் வேறுபாடில்லாமல் பாய்ந்து அங்கேயே கொன்று சுவைத்ததைக் கண்டேன்.

தோட்டப்பயிர்களின் அறிமுகமும், மலைச் சரிவு நிலப் பயிரிடு முறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் இலங்கை , மொரீசியஸ், பிஜி, மலேயா, கரீபியன் தீவுகள், நேட்டால், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் அதிகமான தொழிலாளர் தேவையை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் அடிமைகளே பயன்படுத்தப்பட்டார்கள். கம்பெனி அரசு 1843இல் இந்தியாவில் அடிமை முறையை ஒழித்த பின் ஒப்பந்தக் கூலிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையின் கீழ், தொழிலாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பணியமர்த்தப்பட்டு முடிவில் பயணச் செலவு வழங்கப்பட்டவுடன் தாய் நாட்டிற்குத் திரும்ப வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட பல தொழிலாளர்களும் நெசவாளர்களும் சிறிதளவேனும் பணம் ஈட்ட முடியும் என்று எண்ணி இம்முறைக்கு இசைந்தார்கள். ஆனால் அதற்கு மாறாக அவர்களுடைய நிலை அடிமை முறையைவிட மோசமானதாக விளங்கியது. காலனி அரசு நிலமற்ற விவசாயக்கூலிகளை ஏமாற்றியோ, ஆட்கடத்தல் முறையிலோ கொண்டு வர கண்காணிகள் எனும் முகவர்களை நியமித்தது. இப்புதிய அடிமைமுறையால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் 150 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாய் முதன்முறையாக 1828இல் தஞ்சாவூர் பகுதியிலிருந்து இலங்கையில் அமையப்பெற்ற பிரிட்டிஷ் காப்பித் தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் பணியை விட்டு தப்பிச் சென்றார்கள். தப்பிச்செல்வது குற்றம் என்று கூறிய 1830களின் சட்ட விதிகளையும் இணைத்து நடந்த பணி நியமனம் இந்நிலைமையை மேலும் மோசமாக்கியது எனினும் பட்டினி சாவிலிருந்து தப்பிக்கப் பலர் தாமாக முன்வந்து இப்புதிய அடிமை முறையில் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.


சென்னையின் ஆளுநர் 1815ஆம் ஆண்டு இலங்கையின் ஆளுநரிடமிருந்து காப்பித் தோட்டங்களில் பணி புரிய கூலித் தொழிலாளர்களைக் கேட்டு கடிதம் ஒன்றை பெற்றார். சென்னை ஆளுநர் அக்கடிதத்தை தஞ்சாவூர் ஆட்சியருக்கு அனுப்ப, அவர் நிலைமையை ஆராய்ந்து அங்குள்ள மக்கள் நிலத்தோடு மிகுந்த பற்றுக்கொண்டவர்களாக விளங்குவதால் ஏதாவது ஊக்கமளிக்காவிட்டால் விஷயமில்லாமல் அவர்களை ஊரை விட்டுக் கிளப்புவது கடினம் என்று பதில் கொடுத்தார். ஆனால் அப்பகுதியை தாக்கிய இருபெரும் பஞ்சங்கள் (1833 மற்றும் 1843 ஆம் ஆண்டுகளில்) அரசின் எந்தவித ஊக்கமோ, சலுகையோ இல்லாமல் அவர்களை இலங்கைக்குப் புலம் பெயர்த்து காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் ஒப்பந்த முறையின் கீழ் கூலித் தொழிலாளர்களாக பணியில் அமரக் கட்டாயப்படுத்தின. கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் (14,44,407) மக்கள் 1843 - 1868 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையிலிருந்து இலங்கைக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சென்றார்கள்.

 

ஒப்பந்தக் கூலிமுறை: இன்றைய நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் திட்டத்திற்கு முற்றிலும் மாறான, தண்டனைக்குரிய ஒப்பந்தமுறை ஆகும் இது. இம்முறையின்படி கூலி (இந்திய ஒப்பந்தத் தொழிலாளரை அழைக்கும் பெயர்) சிறைச்சாலை போன்ற சூழலில் பணி செய்ய வேண்டும். பணியில் அலட்சியம் காட்டினாலோ அல்லது பணி செய்ய மறுத்தாலோ, மிடுக்காகத் திரிந்தாலோ உத்தரவுக்குக் கீழ்படிய மறுத்தாலோ, ஒப்பந்தக் காலம் முடியுமுன் பணியைவிட்டு விலகினாலோ, கூலியை மறுக்கவோ அல்லது சிறைத் தண்டனை வழங்கவோ முடியும். ஓர் அற்பப் பிரச்சனைக்காகக் கூட சட்டச் சரத்துக்களைக்காட்டி தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை மறுப்பதோ அவர்களை சிறையிலடைக்கவோ செய்தனர். கூலி உயர்வுக்காவோ அல்லது ஒப்பந்தத்தை முறிக்கவோ செய்திட சங்கம் வைத்துப் போராட ஒப்பந்தக் கூலிச் சட்டம் தோட்டத் தொழிலாளர்களை அனுமதிக்கவில்லை. பாரதி தனது 'கரும்புத் தோட்டத்திலே' என்ற பாடலில் பெண் தோட்டத் தொழிலாளர்களின் பரிதாப நிலையை - உருக்கமாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

செல்வச் சுரண்டல்

இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்’ (Poverty and UnBritish Rule in India) என்ற நூலில் ஆங்கிலேயருக்கு முன்பு படையெடுத்து வந்த ஆட்சியாளர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதை தாதாபாய் நௌரோஜி விளக்குகிறார். ஆங்கிலேயருக்கு முன்பு படையெடுத்து வந்தவர்கள் கொள்ளையடித்து தங்கள் நாடுகளுக்குத் திரும்பச் சென்று விட்டார்கள். சந்தேகமில்லாமல் அவர்கள் மிகுந்த ரணங்களை ஏற்படுத்தினார்கள் என்ற போதும் செயலூக்கம் கொண்ட இந்தியா சிறிது காலத்தில் மீண்டெழுந்தது. அவ்வாறல்லாமல் படையெடுத்தோர் ஆட்சியாளர்களாக இந்த மண்ணில் குடியமர்ந்த போது அவர்கள் ஆட்சி முறை எவ்வாறு இருந்த போதும் இங்கிருந்து பொருட்கடத்தலோ, நன்னடத்தை சீர்கேடோ ஏற்படவில்லை. ஆங்கிலேய ஆட்சி இதிலிருந்து வேறுபடுகிறது. பொதுப்பணத்தில் நடத்தப்பட்ட முதற்போர்கள் பெரும் கடன் சுமையை ஏற்படுத்தின என்பதோடு காயத்தை ஆறவிடாமல் உயிர் பாய்ச்சும் உதிரத்தை உறிஞ்சும் போக்கில் தொடர் சுரண்டலே நடைபெற்றது. பழைய ஆட்சியாளர்கள் கசாப்புக்காரர் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டினர், ஆனால் ஆங்கிலேயரோ விஞ்ஞான அறிவோடு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கத்தியால் நேரடியாக இதயத்தை வெட்டினாலும், வடு தெரியாதவாறு நேர்த்தியைக் கையாளுவதோடு நாகரீகம், வளர்ச்சி போன்ற சொல்லாடல்களை பயன்படுத்திக் காயத்தை மறைக்கிறார்கள்.


நௌரோஜி தன் வாதத்தில் இந்தியாவிலிருந்து பெருந்தொகை உள்நாட்டின் செலவுக் கட்டணம் (Home Charges) என்ற வகையில் இங்கிலாந்து போய்ச் சேர்கிறது என்கிறார். உள்நாட்டு செலவுக் கட்டணம் கீழ்க்கண்ட கூறுகளை உள்ளடக்கியது.

கம்பெனியின் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட இலாபம்

ஐரோப்பிய அதிகாரிகள், ஐரோப்பிய வியாபாரிகள், தோட்ட முதலாளிகள் போன்றோரின் சம்பளம், சேமிப்பு என்ற வகையில் இங்கிலாந்தில் வரவு வைக்கப்பட்டத் தொகை.

இராணுவத்திலிருந்தும், குடிமைப் பணிகளிலிருந்தும் ஓய்வு பெற்றோருக்குச் சேர வேண்டிய ஓய்வு ஊதியத் தொகை.

இலண்டனில் அமைந்திருந்த இந்திய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் செயலருக்குமான வேண்டிய பெருஞ் சம்பளம்.

இந்தியாவில் நிகழ்ந்த போர்களுக்கான செலவுகள், போர் நடத்துவதற்காக வங்கியில் பெற்ற கடன்களுக்கான வட்டி மற்றும் இருப்புப்பாதை அமைக்க ஏற்பட்ட செலவுகள்.

இங்கிலாந்திற்கு இந்தியா 1837இல் கொடுக்க வேண்டிய கடன் 130 மில்லியன் பவுண்டுகளாகும். அது சிறிது காலத்தில் 220 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்த போது அதில் 18 சதவீதம் ஆப்கானிஸ்தானோடும், பர்மாவோடும் போர் நடத்திய வகையில் செலவு செய்ததாகக் சொல்லப்பட்டது. ஒரு அரசு அறிக்கை 1908 ஆம் ஆண்டின் நிலவரத்தைக் குறிப்பிடும் போது இருப்புப்பாதை பதிக்கும் வகையில் மட்டும் இந்தியாவின் கடன் பாக்கி 177.5 மில்லியன் பவுண்டு என்றது. இந்தியாவில் முதலீடுகள் தொய்வு நிலையை எட்டிய போது பிரிட்டிஷ் அரசு இங்கிலாந்தின் தனியாரிடமிருந்து முதலீடுகளை பெற்றுக்கொண்டது. இவ்வாறு பெறப்பட்ட முதலுக்கு உறுதியாக 5 சதவீத வட்டியை ஸ்டெர்லிங்கில் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இந்த வகையில் மட்டுமே இந்தியாவிற்கு 220 மில்லியன் பவுண்டுகள் என்ற அளவில் இழப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் நடந்த செல்வவளக் கடத்தல் (Drain of Wealth) என்று இப்போக்கை வர்ணிக்கும் தாதாபாய் நௌரோஜி இவ்வளங்கள் இந்தியாவிலேயே தங்கியிருந்தால் இந்த நாடு செழித்திருக்கும். மேலும் கூறுகையில் அவர் கஜினி முகமதுவின் கொள்ளை பதினெட்டு முறையோடு நின்றுவிட, பிரிட்டிஷாரின் கொள்ளையோ முடிவில்லாமல் தொடர்கிறது என்றார். ஆர்.சி. தத் மதிப்பீட்டில் மகாராணி விக்டோரியாவின் ஆட்சிக் காலத்தின் கடைசிப் பத்து ஆண்டுகளில் (1891- 1901) மொத்த வருவாயான 647 மில்லியன் பவுண்டுகளில், 159 மில்லியன் பவுண்டுகள் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது எனத் தெரிய வருகிறது. இது மொத்த வருவாயில் 24 சதவீதம் என்று சொல்லப்படுகிறது.

Tags : Effects of British Rule ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்.
11th History : Chapter 17 : Effects of British Rule : Famines and Indentured labour Effects of British Rule in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : பஞ்சங்களும், ஒப்பந்தக் கூலிகளும் - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்