ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் - பாதுகாப்பு முயற்சிகளும் வளர்ச்சி நடவடிக்கைகளும் | 11th History : Chapter 17 : Effects of British Rule
பாதுகாப்பு முயற்சிகளும் வளர்ச்சி நடவடிக்கைகளும்
பிண்டாரிப் போர்
பிண்டாரி கொள்ளைக்கூட்டத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற இரு சமயத்தைச் சார்ந்தவர்களும் இருந்தனர். துணைப்படைத் திட்டத்தினால் வேலையிழந்த பல வீரர்கள் இக்கொள்ளைக்கூட்டத்தில் சேர்ந்து கவலை கொள்ளும் அளவுக்குப் பெருகினர். பிரிட்டிஷ் அரசு பிண்டாரிகள் மீது போர்ப் பிரகடனம் செய்தது. ஆனால் அது மராத்தியருக்கு எதிரானப் போராக உருப்பெற்றது. இப்போர்கள் பல்லாண்டுகள் (1811-1818) நடைபெற்றாலும் மொத்த மத்திய இந்தியாவையும் இறுதியில் பிரிட்டிஷார் வசம் கொண்டு சேர்த்தது.
தக்கர்களை அடக்குதல்
தக்கர்கள் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து தில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் ஆவார். அவர்கள் தங்கள் அமைப்பை உறுதி மொழி ஏற்பதன் மூலமாகவும், சில சடங்கு ஆச்சாரங்களைப் பின்பற்றுவதன் மூலமாகவும் பலப்படுத்தி அப்பாவி வழிப்போக்கர்களை எதிர்பாராத தருணத்தில் தாக்கி காளியின் பெயரால் கொலை செய்து வந்தனர். தக்கர்களின் அச்சுறுத்தலை அடியோடு நீக்க பெண்டிங் ஒரு திட்டத்தை வகுத்து அவர்களை அழிக்க வில்லியம் ஸ்லீமேனை நியமித்தார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தக்கர்களின் குற்றங்கள் 1831 முதல் 1837 வரையான காலகட்டத்தில் நிரூபணமானது. ஐந்நூறு பேர் அரசு சாட்சிகளாக மாறினர். தக்கர்களை முன்னிட்டு எழுந்த பிரச்சினைகள் 1860ஆம் ஆண்டுவாக்கில் முடிவுக்கு வந்தன.
சதி ஒழிப்பு
விதவைகளை அவர்களது கணவர்களின் சிதையோடு சேர்த்து எரிக்கும் சதி முறையை ஒழிக்க முடிவெடுத்ததின் மூலம் வில்லியம் பெண்டிங் தன் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு முன் பதவி வகித்த கவர்னர் ஜெனரல்கள் சமயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தலையிட யோசித்த பின்புலத்தில், பெண்டிங் தயக்கமில்லாமல் சட்டம் (சதி ஒழிப்புச் சட்டம், 1829) ஒன்றை இயற்றி, அதன் மூலம் இப்பழக்கத்திற்கு ஒரு முடிவு கொண்டுவர முயன்றார். இராஜா ராம் மோகன் ராயின் பிரச்சாரங்களும் முயற்சியும் இந்த மனிதத்தன்மையற்ற முறை ஒழிய முக்கியக் காரணமாக இருந்தன.
இருப்புப்பாதையும், தபால்-தந்தி முறையும்
இருப்புப்பாதை அமைக்க முதல் கோரிக்கையை வைத்தது ஐரோப்பிய வியாபாரச் சமூகமே ஆகும். இந்தியாவில் வெற்றிகரமாக இருப்புப்பாதைப் போக்குவரத்துத் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனர்களிடம் இருக்கவே செய்தது. இருப்புப்பாதைப் போக்குவரத்தின் மூலமாக பொருளாதாரச் சாதகங்கள் ஏற்படும் என்று டல்ஹௌசி வாதிட்டு அதை வலியுறுத்தினார். எனினும் 1857 பெருங்கிளர்ச்சிக்கு முன்பு வெறும் முந்நூறு மைல் தூரம் மட்டுமே இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்தியாவிற்கும் லண்டனுக்குமிடையே தந்திப் போக்குவரத்தை உருவாக்க பல கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதும் தந்திப் போக்குவரத்து இந்தியாவில் 1854ஆம் ஆண்டுதான் தொடங்கியது. 1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சியின் போது அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. 1857ஆம் ஆண்டின் பெருங்கிளர்ச்சிக்குப் பின் அது அதி முக்கியத் தேவையென்ற நிலையை எட்டியது. லண்டனுக்கும், கல்கத்தாவிற்குமிடையே தொடர்பு கொள்ள பல நாட்கள் ஆன சூழல் மாறி இருபத்தியெட்டு நிமிடங்களில் தொடர்பு கொள்ள தந்தி வழிசெய்தது. ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமிடையே உள்ள தூரம் 1869ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 4000 மைல்களாகக் குறைந்தது. 1870ஆம் ஆண்டிற்குள் இலண்டன் இந்தியா அலுவலகத்தில் அரசு செயலருடன் பிரிட்டிஷ் இந்திய அரசு திறன் கொண்ட தொடர்பு வைக்க முடிந்திருந்தது. இதன் பின் கர்சன் நீங்கலாக மற்ற கவர்னர் ஜெனரல்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமைச் செயலகமாகத் திகழ்ந்த “வெள்ளை மாளிகையைத்” (Whitehall) தொடர்பு கொள்ளாமல் முடிவெடுக்கத் தயங்கினார்கள்.
பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையே இருப்புப்பாதை 1853ஆம் ஆண்டு அமையவும், ஹௌராவுக்கும் ராணிகஞ்சிற்கும் இடையே 1854-55ஆம் ஆண்டுகளில் அமையவும் செய்தது. தென்னிந்தியாவில் முதல் இருப்புப்பாதை 1856ஆம் ஆண்டு மதராஸுக்கும், அரக்கோணத்திற்கும் இடையே அமைக்கப்பட்டது. அவ்வாண்டில் திறந்து வைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ராயபுரம் ரயில் நிலையமும் ஒன்றாகும்.
நீர்ப்பாசன வசதி
பாசனவசதி ஏற்படுத்திக் கொடுப்பதை பிரிட்டிஷ் அரசு புறக்கணித்தது. இந்திய அரசர்கள் வெட்டிச் சென்ற பழைய கால்வாய்களும் குளங்களும் பயனற்றுக் கிடப்பதை கண்ட போதும் அவற்றைத் தூர் வாரி பயன்பாட்டிற்குக் கொடுக்கவோ, புதுப்பிக்கவோ கம்பெனி முயற்சி செய்யவில்லை. சென்னையில், நாம் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காணப்போவது போல, ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் சிற்சில பாசன வேலைகள் நடந்தேறின. பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கொள்ளிடத்தின் குறுக்கே 1836இல் அணையைக் கட்டினார். கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை கட்டும் பணி 1853 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுபாட்டுக்குள் இந்தியா செல்வதற்கு முன்பாக வட இந்தியாவில் 1830இல் யமுனா கால்வாயும், 1857இல் கங்கைக் கால்வாயை 450 மைல்கள் வரை நீட்டித்த பணியும், 1856இல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரி இடைத்துறைக் கால்வாய் (தோ ஆப்) தோண்டும் பணியும் பாசன வசதி மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முக்கிய பணிகளாகும். ஆனால் கால்வாய்கள் மண்ணில் உப்புத் தன்மையை கூட்டவும், தேவையில்லாத இடங்களில் தண்ணீர் தேங்கவும் வழிவகுத்தது.
காடுகள்
பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக்கொடுக்க கூடியதாக நிலமே விளங்கியது. அதனால் வேளாண் நிலத்தை விரிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காகக் காடுகள் அழிக்கப்பட்டன. ஜங்கிள் மஹல் காடுகளிலிருந்து ஜமீன்கள் உருவாக்கப்பட்டு ஏலம் விடப்பட்டபின் முறையான வேளாண்மைக்கு உட்படுத்தப்பட்டன. இந்நிலங்களின் பூர்வீக குடிகளான சந்தால் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டார்கள். ஆகவே சந்தால் இன மக்களே பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்களாகத் திகழ்கிறார்கள். ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மலைகளில் தோட்டப்பயிர் விவசாயத்திற்கு நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டது. ஆர்வ மிகுதியால் தோட்டப்பயிர்களைச் சாகுபடி செய்ய இந்திய அரசர்களும் ஜமீன்தாரர்களும் காடுகளை அழித்தார்கள். ஆனால் காப்பி பல இடங்களில் செழித்து வளரவில்லை . எனினும், விடாமல் காடுகளை அழித்துக் காப்பித் தோட்டங்களை உருவாக்க முயன்றுகொண்டே இருந்தார்கள். இருப்புப்பாதை பதிக்கும் பொருட்டு பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டன. 1870களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட பத்து இலட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டு இருப்புப் பாதை அமைக்க தண்டவாளக் குறுக்குக் கட்டைகளாகப் பயன்படுத்தப்பட்டன. இந்திய மரங்களில் சால், தேவதாரு, தேக்கு போன்றவை அவற்றின் வலிமைக்காக பிற மரங்களை விட அதிகம் வெட்டப்பட்டன. வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளை உள்ளடக்கிய ஜங்கிள் மஹால் காடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் அவை வெட்டப்பட்டன. இங்கிலாந்தில் இருப்புப்பாதை அமைக்கும் பொருட்டு இந்தியாவிலிருந்து மரப்பலகைகள் அனுப்பப்பட்டன. இந்தியக் காடுகளின் செல்வவளம் அழிக்க முடியாதது என்ற தொன்மக்கூற்று உடைபட்டது. இப்பின்னணியில் காடுகளின் வளங்களை மேலாண்மை புரிவதற்கும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் 1865இல் இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பாரபட்சமான இச்சட்டம் காடுகளின் வளங்களைப் பூர்வீக குடிகள் பயன்படுத்தத் தடை விதித்ததால் அவர்களின் அதிருப்தியைப் பெற்றது. அவர்களின் எதிர்ப்பையும் புறக்கணிப்பையும் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம், 1871இல் இயற்றப்பட்டது. காலனிய ஆதிக்கக்காலம் முழுமையும் அவ்வப்போது பழங்குடியின மக்கள் காலனி அரசுக்கு எதிராகக் கிளர்த்தெழுந்தனர். காலனி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச் சட்டங்கள் இன்றளவிலும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.