Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | ஆங்கிலேய அரசு உருவாக்கம்

ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் - ஆங்கிலேய அரசு உருவாக்கம் | 11th History : Chapter 17 : Effects of British Rule

   Posted On :  15.03.2022 09:06 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

ஆங்கிலேய அரசு உருவாக்கம்

ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்ற பக்சார் போரே முக்கியக் காரணமாகும். வங்காளம், அவத் நவாபுகள் மட்டுமல்லாமல் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமும் ஆங்கிலேயரை எதிர்த்தார்.

ஆங்கிலேய அரசு உருவாக்கம்

ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்ற பக்சார் போரே முக்கியக் காரணமாகும். வங்காளம், அவத் நவாபுகள் மட்டுமல்லாமல் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமும் ஆங்கிலேயரை எதிர்த்தார். பக்சார் போரின் முடிவில், கிழக்கிந்தியக் கம்பெனி வியாபாரத் தன்மையை இழந்து அசைக்கமுடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்தது. போரின் முடிவில் ராபர்ட் கிளைவ் இங்கிலாந்திற்குச் சென்றார். வங்காள நிர்வாகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகக் கருதப்பட்டதால் அவர் வில்லியம் கோட்டை ஆளுநராக நியமிக்கப்பட்டார். கிளைவிற்கு, அவருக்கு முன்பாக பதவி வகித்த ஆளுநரான வான்சிடார்ட் அவத்தை ஷா ஆலம் வசம் மீண்டும் ஒப்படைத்தது ஏற்புடையதாக இல்லை . அதனால் அவர் சூஜா - உத் - தௌலாவுடன் புதிய பேச்சு வார்த்தையைத் துவங்கினார். அதன் விளைவாக இரண்டு அலகாபாத் உடன்படிக்கைகள் கையெழுத்தாயின. வங்காளம், பீகார், ஒரிசா (ஒடிசா) பகுதிகளின் திவானி (வருவாய் நிர்வாகம்) அதிகாரத்தைக் கம்பெனி வசம் பேரரசர் ஒப்படைத்தார் அலகாபாத், காரா பகுதிகளின் நிர்வாகத்தைப் பெறுவதோடு பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் வங்காளம், பீகார், ஒரிசா பகுதிகளின் வருவாயிலிருந்து ஆண்டுக்கு 26 இலட்சம் ரூபாய் பெறப்போவதாக அறிவிக்கப்பட்டது. போர் இழப்பீடு வழங்கிவிட்டு சூஜா -உத்-தௌலா அவத் பகுதியை தக்க வைத்துக்கொள்ள உறுதி செய்யப்பட்டது. வங்காளம், பீகார், ஒரிசா பகுதிகளின் பொது நிர்வாகம் வங்காள நவாபின் பொறுப்பானது.


பேரரசர், கிளைவிடம் திவானி பொறுப்பை ஒப்படைக்கும் முன்பே மீர் ஜாபரின் வாரிசாக பொறுப்பேற்ற நவாப், நிஜாமத் (பொது நிர்வாகம்) பொறுப்புகளைக் கம்பெனி வசம் ஒப்படைத்திருந்தார். ஆகவே திவானாகவும் நிஜாமாகவும் கம்பெனி செயல்பட வேண்டியிருந்தது. திவானின் கடமை வரி வசூலிப்பதும் குடிமக்களின் நீதி நிர்வாகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் ஆகும். நிஜாமின் கடமையோ இராணுவச் செயல்பாடுகளும் குற்றவியல் நீதி வழங்கலும் ஆகும். இவ்வாறாகக் கம்பெனி மெய்யான முழு அதிகாரத்தையும் தன்வசம் தக்க வைத்துக்கொண்டு வெற்று நிர்வாகச் சுமையை மட்டுமே நவாபிடம் விட்டு வைத்தது. இத்தகைய நிர்வாக முறையே இரட்டை ஆட்சிமுறை என்றும்இரட்டை அரசுமுறை’ (dyarchy) என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆனால்இரட்டை ஆட்சிமுறைவிரைவில் உடையத் துவங்கியது. பொறுப்புகளை ஏற்காத அரசாட்சி முறை வங்காளத்தில் 1770 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பஞ்சத்திற்கு இட்டுச்சென்றது. மூன்றில் ஒருவர் என்ற விகிதத்தில் மக்கள் மடிந்தனர். கம்பெனி ஊழியர்கள் அரிசி வணிகத்தில் கொண்டிருந்த ஏகபோகக் கட்டுப்பாடும், அவர்கள் அவ்வேளையிலும் கடைப்பிடித்த லாப நோக்கமும் துயரச்சூழலை மேலும் அதிகமாக்கியது. இறுதியாகக் கம்பெனி தனது பொறுப்பை உணர்ந்ததன் விளைவாக, 1773ஆம் ஆண்டில் ஒழுங்குமுறைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. வங்காளத்தின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்டார்.

Tags : Effects of British Rule ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்.
11th History : Chapter 17 : Effects of British Rule : Establishment of British Raj Effects of British Rule in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : ஆங்கிலேய அரசு உருவாக்கம் - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்