அரசியல் அறிவியல் - அரசியல் கட்சிகளின் பணிகள் | 11th Political Science : Chapter 9 : Public Opinion and Party System
அரசியல் கட்சிகளின் பணிகள்
ஒரு மக்களாட்சியில் அரசியல் கட்சிகள், அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஒரு ஒருங்கிணைந்த இணைப்பாக செயல்படுகின்றன. அரசியல் கட்சிகள் மக்களை அரசியல் முன்முயற்சிகள் மற்றும் பொது அனுபவங்களை நோக்கி நகர்த்தும் - அடித்தளமாக செயல்படுகின்றன. அரசியல் கட்சிகள் வாக்குகளை அணிதிரட்டும் நோக்கத்துடன் மக்களின் அரசியல் சிந்தனை மற்றும் கருத்துக்களின் மீது தாக்கத்தை எற்படுத்துகின்றன.
அரசியல் பொருளாதார மற்றும் சமூக செயல்பாட்டிற்கான ஓர் தளத்தை வழங்குவதன் மூலம் எதிர்கால மாநில மற்றும் தேசிய தலைமைகளுக்கு பயிற்சிக் களமாக செயல்படுகின்றன. நீண்ட காலமாக அவர்கள் கட்சிக்குள்ளேயும், எதிர்க்கட்சிகளிலிருந்தும் கடுமையான விவாதம் மற்றும் வினா எழுப்புவதன் மூலம் தங்களின் நடவடிக்கைகளுக்குக் கட்சித்தலைவர்கள் பொறுப்புணர்வுடன் இருக்கிறார்கள். இவ்வாறு மக்களுக்கு பலதரப்பட்ட வேட்பாளர்களையும், கொள்கைகளையும், தேசத்தில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கான அணுகுமுறைகளையும் கட்சிகள் வழங்கியுள்ளன. மக்களாட்சியில் அவர்களுடைய நம்பிக்கையானது மாற்றம் மற்றும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அறிவை வலுவூட்டுகின்றது. இதன்மூலம் மக்களில் பெரும்பான்மையினர் அவர்களின் ஆட்சியின் மூலம் தாங்கள் விரும்பும் ஓர் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
கட்சி முறை என்பது அரசாங்கங்களை நடத்துவதற்கும், நிலைநிறுத்துவதற்கும் உதவுகிறது. மேலும் அவை மக்களாட்சியின் திறன் வாய்ந்த செயல்பாட்டிற்கும் தேவையானதாக இருக்கின்றன. கட்சிமுறை என்பது அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மற்றும் அதிகாரச் சமநிலையை வழங்கும் முறையாகும். பொது மக்களிடையே ஆதரவைக் பெறுவதன் முலம் கட்சிக்குள்ளேயே தலைமைத்துவத்திற்கும், கலந்துரையாடலுக்கும் ஓர் கட்டமைப்பினை அந்தந்த கட்சிகளின் குறிக்கோள் மற்றும் செயல்திட்டப்படி வழங்குவதன் மூலம் அது நிலையான மற்றும் நல் ஆட்சிக்கு உதவும்.
உங்களுக்குத் தெரியுமா?
ஓர் அரசியல் கட்சி என்பது மக்களின் ஒன்றிணைந்த ஒரு குழுவாக தேர்தலில் போட்டியிட்டு அரசாங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது. அவர்கள் சமுதாயத்திற்கான கூட்டு நலனை ஊக்குவிப்பதற்கான கொள்கைகளையும், திட்டங்களையும் ஒப்புக்கொள்கிறார்கள்.
பல்வேறு வகையான கட்சி முறைகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் குறிப்பிட்ட கூறுகளை பொறுத்து பரிணாமவளர்ச்சியில் உருவாகியுள்ளன. ஓர் மக்களாட்சியின் தரமானது எப்படி அரசாங்கம் அதன் மக்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. எப்படி அரசாங்கம் அதன் மக்களுக்கு பொறுப்புடன் இருக்கிறது, எப்படி மனித உரிமைகள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சமூக நிலையிலும், வாய்ப்புக்களிலும் சமத்துவத்தை உறுதி செய்வதுடன், அரசியல் பங்கேற்பில் மக்களுக்கு சமமான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறது. பல விதமான கட்சி முறைகள் இந்த சிக்கல்களை பல்வேறு வழிகளில் அணுகுவதன் மூலமாக பின்பற்றப்பட்டு மக்களாட்சியின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.
அ. ஒரு கட்சி முறை:
ஒரு கட்சி முறையில் ஓர் அரசியல் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் உரிமையை பெறுகிறது. இது எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத அரசமைப்பிலிருந்து பெரும்பாலும் பெறப்படுகிறது. ஒரு கட்சி முறையின் கீழ் பெரும்பாலானசந்தர்ப்பங்களில் குறைவான பங்கேற்பு மற்றும் பலவீனமான பொறுப்புடைமை உள்ளது. (எ.கா) சிங்கப்பூர், (வடகொரியா), கொரிய தொழிலாளர் கட்சி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி (வியட்நாம்), கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி (கியூபா), கம்யூனிஸ்ட் கட்சி (சீனா). ஒரு கட்சி முறையானது மக்களாட்சியிலான வெளிப்பாடுகளுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்காததுடன் மாற்றத்திற்கான பரவலான வரையெல்லையையும் வழங்கவில்லை .
உதாரணத்திற்கு 1920-களில் தேசியவாத இராணுவத்தை ஆதரித்து பாசிச இயக்கங்கள் ஹிட்லரின் தலைமையில் ஜெர்மனியிலும், முசோலினியின் கீழ் இத்தாலியிலும், ஜெனரல் பிராங்கோவின் கீழ் ஸ்பெயினிலும் அதிகாரத்தை கைப்பற்றியதுடன் அரசியல் கட்சிகள் உருவாவதைத் தடைசெய்தன.
ஆ. இரு கட்சி முறை:
இரு கட்சி முறையில், இரண்டு அரசியல் கட்சிகள் வேறுபட்ட நலன்களுடன், பெரும்பான்மையைப் பெற்று அரசாங்கத்தை அமைப்பதற்கான சம வாய்ப்பைக் கொண்டுள்ளன. இரு கட்சி முறையில் பெரும்பான்மை பெறும் கட்சி ஆளும் கட்சியாகவும் சிறுபான்மைக் கட்சி, எதிர்கட்சியாகவும் உருவாக்குகின்றன. இரு கட்சி முறையில் அரசியல் தலைவர்களிடம், மிக அதிக பொறுப்புணர்வும், அதிக அரசியல் பங்கேற்பும் உள்ளது. எதிர் கட்சிகள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் முலமாக தங்களை நீக்கும் அச்சுறுத்தல் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருப்பதனால் ஆட்சியில் இருப்பவர்கள் அதிக அளவிலான பொறுப்பான நடத்தை மற்றும் செயல்பாட்டினை மேற்கொள்கின்றனர்.
அரசியல் சூழ்நிலை பெரிதும் ஒருமுகப்படுத்தப்படுவதால், ஓர் கட்சி அதிகாரத்தை இழந்தபின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கடுமையான மாற்றங்கள் ஏற்படலாம். இருகட்சி முறையின் எடுத்துக்காட்டாக அமெரிக்கா (மக்களாட்சி வாதிகள் / குடியரசுவாதிகள்) மற்றும் இங்கிலாந்து - (பழமைவாதிகள் மற்றும் தாராளவாதிகள்). எவ்வாறாயினும், எந்தவொரு நாட்டிலும், கட்சிகளின் எண்ணிக்கையில் எந்த அரசமைப்பு சார்ந்த கட்டுப்பாடும் இல்லை. அரசமைப்பு நடைமுறைகள் மற்றும் மக்களின் அரசியல் முதிர்ச்சியே இரு கட்சி முறையின் தோற்றத்திற்கு வழிவகுக்கின்றது.
இ. பல கட்சி முறை:
பல கட்சி முறையில், பல அரசியல் கட்சிகள் இருப்பதுடன் பெரும்பான்மை பெற்ற கட்சி அல்லது பெரும்பான்மை பெறாத ஒரே நோக்கமுடைய பல கட்சிகளுடனான கூட்டணியின் மூலமாகவும் மக்கள் ஆதரவை வென் றெடுத்து அரசாங்கத்தை உருவாக்குகின்றன. இந்த முறையில் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களால் உற்று நோக்கப்படுவதுடன் அரசியல் சமநிலையையும் நிலை நாட்டுகின்றனர். அவர்கள் மக்களுக்கு அதிக பொறுப்பு உள்ளவர்களாகின்றனர். பல கட்சிமுறை வாக்காளர்களுக்கு அரசியல் பங்கேற்பில் பல்வேறு வழிகளையும், பெரிய அளவிலான தேசிய மேம்பாட்டிற்குரிய அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரும் திறமையையும் வழங்குகிறது.
பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பல கட்சி முறையிலும் கூட்டணி அமைச்சரவைகளிலும் முடிவடைகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, சுவீடன் ஆகிய நாடுகள் பல கட்சி முறையிலான நாடுகளின் எடுத்துக்காட்டுகள் ஆகும்.