அரசியல் அறிவியல் - ஓர் உண்மையான பொதுக்கருத்தை உருவாக்குவதற்குத் தடையாக இருப்பவை | 11th Political Science : Chapter 9 : Public Opinion and Party System
ஓர் உண்மையான பொதுக்கருத்தை உருவாக்குவதற்குத் தடையாக இருப்பவை:
மக்களின் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளின் உண்மையான பிரதிபலிப்பாக பொதுக்கருத்து இருக்க வேண்டும். இருப்பினும் உண்மையான பொதுக்கருத்திற்கு சில தடைகள் உள்ளன.
சுயநல விருப்பங்கள் (தேசத்தை விட மேலானது எனது நலன்)
மக்கள் தங்களின் சுயநலத்தினை முன்னிறுத்தி தங்கள் நாட்டினுடைய விவகாரங்களைக் காட்டிலும் தனிப்பட்ட விவகாரங்களில் முன்னேற்றத்தை காண்பதற்கு நகரச்செய்கிறது. ஒற்றுமை, அர்ப்பணிப்பு, ஒருமைப்பாடு மற்றும் தேசத்தின் முன்னேற்றம் தொடர்பான முக்கிய பிரச்சனைகளை மக்கள் உணருமாறு செய்ய வேண்டும்.
கல்வியறிவு உடைய பொறுப்புள்ள பொதுமக்கள், பயமோ அல்லது தயவோ இல்லாமல் தங்கள் உரிமையைக் கையாள்வதன் மூலம் நல்ல குடிமக்களை உருவாக்குகின்றனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வியறிவற்ற மக்கள் பெரும்பாலும் கட்சித் தொண்டர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு உணர்வுகள், ஆதாயங்கள் மற்றும் வாக்குவன்மை (பேச்சாற்றல்) ஆகியவற்றால் ஏமாற்றப்படுகிறார்கள். ஓர் தரமான பொதுக்கருத்து என்பது அறிவும் கருத்துச் சுதந்திரம் இருக்கும் சூழலில் தான் உருவாக முடியும்.
அ) வறுமை: எந்தவொரு நாட்டிலும் ஏழைகள் அரசியல் தலைவர்களின் பொய்யான வாக்குறுதியால் எளிதில் கவரப்பட்டு, தங்களது வாக்குகளை அவர்களுக்கு அளித்துவிடுகின்றனர். வறுமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே ஓர் தரமான குறிக்கோளுடைய பொதுக்கருத்து என்பது சாத்தியமாகும்.
ஆ) இனவாத மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடு: சாதி, சமயம் மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டைத் தூண்டும் விவாதங்கள் மக்களிடையே பிளவுகளை உருவாக்குகின்றன. அவை பெரும்பாலும் அரசியல் கட்சிகளால் தங்களின் நன்மைக்காக கையாளப்படுகின்றன. நாட்டில் பயனுள்ள வகையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் மக்களாட்சியை சமூக நல்லிணக்கமின்மை சீரழிக்கின்றது.
இ) பேச்சு மற்றும் ஊடக சுதந்திரம்:
நடுநிலையான, குறிக்கோள்மிக்க மற்றும் சுதந்திரமிக்க ஊடகமும், தனிமனித பேச்சுரிமைக்கு மதிப்பளிக்கின்ற சட்டமன்றமும் ஆரோக்கியமான கருத்துக்களை உருவாக்குவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மக்களின் சுதந்திரத்தை மதித்து செய்தி அறிக்கைகளை பொறுப்புடன் வெளியிடுகின்ற ஊடகங்கள் பொதுமக்களின் கருத்தை முதிர்வுடன் உருவாக்குவதற்கான முக்கியமான அடிப்படை ஆகும்.