அரசியல் அறிவியல் - மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் பங்கு | 11th Political Science : Chapter 9 : Public Opinion and Party System
மக்களாட்சியில் அரசியல் கட்சிகளின் பங்கு
ஓர் மக்களாட்சியின் திறன்மிக்க செயல்பாட்டிற்கு, முரண்பாடான விருப்பங்களைப் பிரதிபலிப்பு செய்யும் அரசியல் கட்சிகளின் இருப்பது கட்டாயமாகும். பல்வேறு விருப்பங்களையும், கொள்கைகளையும் பரிந்துரைக்கையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், வலதுசாரி (பழமைவாதம், பாரம்பரியம் மற்றும் முதலாளித்துவம்) அல்லது இடதுசாரி சிந்தனையை (சமத்துவசார்பு, தாராளவாதம் மற்றும் தொழிலாளர் நலனை) பின்பற்றுகின்றன. மக்களாட்சிக்கான லட்சியத்தை அடைவதற்கு அரசியல் கட்சிகள் அவசியமானவை என்பது உண்மையே என்றாலும், மக்களாட்சி கோட்பாடற்ற, தனிப்பட்ட கட்சிகளின் வளர்ச்சி மற்றும் சர்வாதிகார தலைமையின் கீழ் தனிப்பட்ட கட்சிகளின் எழுச்சி என்பது மக்களாட்சிக்கு ஒரு முக்கியமான சவால் ஆகும். இந்தியா போன்ற பன்முக பண்பாடு, மொழி, மத மற்றும் பொருளாதார வேற்றுமை கொண்ட நாடுகளில், நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்களின் பல்வேறுபட்ட நலன்களை அரசியல் கட்சிகள் மட்டுமே பிரதிபலிக்கின்றன. இத்தகைய முதிர்ச்சியடைந்த, மதச்சார்பற்ற நிலைப்பாட்டை மேற்கொள்வது இந்தியா போன்ற மக்களாட்சி நாடுகளுக்குப் பொருத்தமானது. இல்லையெனில், இந்தியாவின் மதிப்புயர்வான ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மையை பாதுக்காக்க முடியாது. நாட்டின் நலனிற்காக பொறுப்புணர்வு மற்றும் கொள்கை ரீதியான கட்சிகள், மக்களாட்சி அமைப்புகளின் நிலைதன்மைக்காக தங்கள் கடமையையும், செயல்பாட்டையும் கையாளுவதில் முதிர்ச்சி மற்றும் பொறுப்புணர்வை காட்டுகின்றன.
கட்சி முறை மற்றும் மக்களாட்சி ஆகியவற்றிக்கு இடையிலான உறவு, மக்களாட்சியில் எதிர்கட்சிகளின் பங்கு பற்றிய விவாதம் இல்லாமல் முழுமையடையாது. நாட்டில் ஓர் சக்தி வாய்ந்த எதிர்கட்சி அல்லது கட்சிகள் இல்லாமல் மக்களாட்சிக்கு எந்த அர்த்தமும் இல்லை. மக்களாட்சியின் தன்மை ஆளும் கட்சியின் வலிமையினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவது அல்ல, எதிர்க்கட்சியின் பங்கு மற்றும் அதன் செயல்பாட்டிலும் உள்ளது.
உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அமைச்சர் பதவிக்கான தகுதியையும், சலுகைகளையும் பெறுகிறார். ஓர் பலவீனமான எதிர்க்கட்சி பொறுப்புணர்வற்ற அரசாங்கத்திற்கு அல்லது பெரும்பான்மையின் கொடுங்கோண்மைக்கு வழிவிடுகிறது.
அழுத்தக்குழுக்கள் அல்லது தன்னலக்குழுக்கள் ஆகியவை முக்கியப் பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகளில் ஓர் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை பொதுவான அரசியல் மற்றும் சமூக நலன்களைக் கொண்ட குழுக்களாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அவை வெளியிலிருந்து வரும் முடிவுகளின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன. அழுத்தக் குழுக்கள் குறிப்பிட்ட நலன்களுக்காக தன்னார்வ உறுப்பினர்கள் மூலம் ஆதரவு திரட்டுகின்றன. அரசியல் கட்சிகள் போலன்றி, அழுத்தக்குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை.
அழுத்தக்குழுக்கள் பல பொதுக் கொள்கை சிக்கல்களால் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி அரசாங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அவை அழுத்தக் குழுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. தொழில் சார்ந்த அழுத்தக் குழுக்கள் என்பவை வணிக நலன்களை, தொழிற் சங்கங்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மருத்துவர்கள், பண்பாட்டு குழுக்கள் மற்றும் நிறுவன குழுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம். மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கிடையிலான தொடர்பு மற்றும் தொடர்புக்கான ஆதாரமாக செயல்படுவதன் மூலம் இந்திய அரசியல் முறைமையில் அழுத்தக் குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்கள் பொதுமக்களின் சமூக, பொருளாதார சிக்கல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, அரசாங்கத்தின் நிர்வாகக் கொள்கைகள் மீது செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
தேர்தல் பற்றிய ஆய்வு மற்றும் புள்ளிவிவர பகுப்பாய்வே தேர்தலியல் ஆகும். பொது கருத்துக் கணிப்புகள், தேர்தலியலில் ஓர் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகள் ஆகியவை இதில் பகுப்பாய்வு செய்யப்படுன்றன . கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஆகியவை தேர்தல்களில் வாக்காளர் விருப்பத்தின் முக்கிய குறியீடாக இருக்கின்றன.
இரண்டுக்கும் இடையேயான பிரதான வேறுபாடு, வாக்காளர் வாக்களிக்கும் முன் நடத்தப்படும் கருத்துக்கணிப்பு மற்றும் வாக்குப்பதிவு நடைபெறுகையில் வாக்காளர் வாக்களித்த பின் வாக்குச்சாவடிக்கு வெளியே நடத்தப்படும் கருத்துக்கணிப்பு என்பதாகும். தேர்தலுக்குப் பின் வெளிவரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை விட நம்பகமானதாகக் கருதப்படுகிறது. கருத்துக்கணிப்புகளின் முடிவு உண்மையில் தேர்தல் முடிவுகளை ஒத்திருக்கலாம் அல்லது தவறாகலாம். இருப்பினும், அவை உறுதியற்ற யாருக்கு வாக்களிப்பது என்பதனை தீர்மானிக்காத வாக்காளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதுடன் அனைத்து கட்சிகளுக்கும் வாக்களிப்பு நடைமுறைகளிள் சமநிலையை உருவாக்குவதற்கு முக்கியமானதாக இருக்கிறது.