அரசியல் அறிவியல் - நவீன கட்சி முறை | 11th Political Science : Chapter 9 : Public Opinion and Party System
நவீன கட்சி முறை
அ. இங்கிலாந்தில் கட்சி முறை
இங்கிலாந்தில் முடியாட்சியின் நிலை மற்றும் அதன் பங்கினை பற்றிய பிரச்சனைகள், கருத்துக்கள் மையப்படுத்தப்படுவது இரண்டு கட்சிகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.
அவையாவன:
1. டோரீஸ் அல்லது பழமைவாதிகள்
2. விக்ஸ் அல்லது தாராளவாதிகள்
20 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர் கட்சி தாராளவாதிகளை விட பெரிய சக்தியாக மாறியது.
ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கட்சி முறை
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிறுவனத் தலைவர், அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றுக்கு இடையேயான பிரிவினைவாத மோதல்களைத் துடைத்தெறிய விரும்பினர். இருப்பினும் அமெரிக்க சுதந்திரத்திற்குப் பின்னர், ஜார்ஜ் வாஷிங்டனின் பதவிக்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க தேசத்தில் முதலில் உருவான கட்சிகளில் வலுவான தேசிய அரசாங்கத்தை ஆதரிக்கும் கூட்டாட்சிக் கட்சியும், மாநில தன்னாட்சி உரிமையை ஆதரிக்கும் கட்சியாக குடியரசுக் கட்சியும் இருந்தன. 1828-ல் மக்களாட்சியிலான குடியரசுக் கட்சி என்ற பெயர் மக்களாட்சிக் கட்சியாக மாற்றப்பட்டது. இது அரசின் உரிமைகளை வென்றது. 1854-ல் குடியரசுக் கட்சி கொத்தடிமை முறைக்கு எதிராகத் தனது போராட்டக் களத்தை அமைத்துக் கொண்டதுடன் அமெரிக்க குடியரசுத் தலைவராக ஆபிரகாம் லிங்கன் பதவிவகித்ததால் அதிக முன்னுரிமையைப் பெற்றது. அமெரிக்காவில் இரு கட்சி முறை என தீர்வு காணப்பட்டதிலிருந்து, குடியரசு கட்சி மற்றும் மக்களாட்சிக் கட்சிகள் அமெரிக்க அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இருப்பினும் மூன்றாவது கட்சி வேட்பாளர்கள் அவ்வப்போது வெளிப்பட்டு மறைந்தனர்.
இரு கட்சி முறை
❖ உலகம் முழுவதும் அரிதானது அகும்.
❖ தேசிய மற்றும் உள்ளாட்சி அளவில் சமமான நிலையில் உள்ளது.
❖ தேர்தல் அமைப்பு (முறைமை).
❖ வெற்றி பெற்றவர் அனைத்தையும் எடுத்துக் கொள்வர்.
❖ வீணாக்கப்பட்ட வாக்கு.
❖ முன்னுரிமை அடிப்படையிலான அமைப்பு.
❖ தேர்தலுக்கு முன் பரந்த கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன.
❖ வாக்காளர்களின் கருத்து.
❖ மூன்றாவது கட்சியினருக்கு வாக்குச் சீட்டில் இடம்பெறுவது கடினமாக உள்ளது.
இ. ஐரோப்பாவில் கட்சி முறை
பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் (1789), ஐரோப்பிய நாடுகளில் மக்களாட்சி சக்திகள் பலம் பெற்று அரசியல் கட்சிகள் தோன்றின. ஐரோப்பிய கண்டத்தில் அரசியல் கட்சிகள், பழமைவாதிகள், தாராளவாதிகள் மற்றும் கிறிஸ்துவ மக்களாட்சிவாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் சமதர்ம இயக்கங்கள் பிரபலமடைந்து சமூக மக்களாட்சி அல்லது தொழிலாளர் கட்சிகள் உருவாயின. அவை பிரபலமடைந்து தொழிற்சங்க ஆதரவைப் பெற்றன. சோவியத் ரஷ்யாவில், போல்ஷிவிக் கட்சி 1917-ல் நடந்த பொதுவுடைமைப் புரட்சியினை நடத்தி சோவியத் யூனியன் என்ற பிரபலமான சோவியத் சோசலிச குடியரசுகளை உருவாக்கியது. COMINTERN (கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல்) அமைப்பு பிற நாடுகளில் பொதுவுடைமைப் கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் உலக பொது உடைமைப் புரட்சியை ஊக்குவிக்கும் பணியைக் மேற்கொள்ள நிறுவப்பட்டது. பனிப்போர் முடிவுக்கு பின் பொதுவுடைமைப் கட்சி ரஷ்யாவில் அதன்புகழை இழந்தது. இருப்பினும், சில பொது உடைமைக் கட்சிகள் இன்னும் மக்களாட்சி அரசுகளுக்குள் அரசாங்கக் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துகின்றன. பொதுவுடைமைப் கட்சிகள் இன்றும் தொடர்ந்து சீனா மற்றும் வட கொரியாவில் எதேச்சதிகார அரசாங்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன.
ஈ. தென்னாப்பிரிக்காவின் கட்சி முறை
ஆப்பிரிக்க நாடுகளில், அரசியல் கட்சிகள் முதலில் காலனித்துவத்துக்கு எதிராக போராடுவதற்காக உருவாக்கப்பட்டது. காலனித்துவத்திலிருந்து விடுதலை அடைந்த ஆப்பிரிக்க நாடுகளில், அரசியல் கட்சிகள் இராணுவவாதத்திற்கு எதிராக கடுமையாக போராடுகின்றன.
தென்னாப்பிரிக்காவின் அரசமைப்பு
❖ 18 வயதில் அனைவருக்கும் வாக்குரிமை
❖ பொதுவான வாக்களர் பட்டியல்
❖ வழக்கமான தேர்தல்
❖ பொறுப்புணர்வு, பதிலுரைத்தல் மற்றும் வெளிப்படையான அரசாங்கத்தை உறுதிப்படுத்த பல கட்சி முறை மக்களாட்சி அவசியம்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான சுதந்திர போராட்டத்தினாலும், தேசியவாதத்தின் எழுச்சியினாலும் இந்தியாவில் கட்சி முறைகள் வெளிப்பட்டன. இந்திய அரசியல் இன்று பல கட்சி முறையை கொண்டதாக இருப்பினும் இந்திய வரலாற்றில் நீண்ட காலமாக, ஒரே கட்சி அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
இந்திய தேசிய காங்கிரசு (INC) 1885 ஆம் ஆண்டில் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (A.O.Hume) என்பவரால் நிறுவப்பட்டது. இது சட்டமன்ற மற்றும் அரசியல் பிரிவுகளில் இந்தியர்களின் அரசியல் பங்கேற்பிற்கான அடித்தளமாக இருந்தது. இது படிப்படியாக பல்வேறு நிலைகளில் அரசியல் சீர்திருத்தங்களைக் கோரியது. ஒத்துழையாமை இயக்கத்திற்கு (1921-23) பின்னர், இந்திய தேசிய காங்கிரசு (INC) முழுமையான அரசியல் சுதந்திரத்தை கோரியது.
20-ஆம் நூற்றாண்டில், வகுப்புவாதத்தை செயல்திட்டமாக கொண்ட கட்சிகள், அதாவது 1906 ஆம் ஆண்டு இந்தியாவில் முஸ்லிம் லீக் மற்றும் 1916-இல் இந்து மகாசபை போன்ற கட்சிகள் உருவாகின. சென்னை மாகாணத்தில், தென்னிந்திய சுதந்திரவாதச் கூட்டமைப்பு (நீதிக்கட்சி) பிராமணரல்லாதோரின் (திராவிடர்கள்) நலன்களை பிரதிபலிக்க உருவாக்கப்பட்டது. எனினும் இந்திய தேசிய காங்கிரசில் நகர்ப்புற, உயர்குடி சாதியினர், பெரும்பாலும் மேற்கத்திய கல்வி கற்றவர்களையே பிரதிநிதித்துவப்படுத்தியதுடன். ஆங்கிலேய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு தளத்தை வழங்கியது. படிப்படியாக இந்திய தேசிய காங்கிரசு இந்தியாவின் அரசியல் கட்சியின் முறையின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கினை வகித்தது. 1905-இல் வங்கப் பிரிவினைக்குப் பிறகு, இந்திய தேசிய காங்கிரசில் மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் என பிரிவினை எற்பட்டது.
1906-ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக்கின் உருவாக்கம் முரண்பாடான அரசியல் பேரம் பேசும் வெளிப்படையான காலமாக உருவானதோடு, இந்திய கட்சி முறையின் உண்மையான தொடக்கத்தை பிரதிபலித்தது.
அரசியல் அரங்கில் மகாத்மா காந்தியின் வருகையைத் தொடர்ந்து, அவரின் அகிம்சையின் மீதான தார்மீக - நெறிமுறைக் கவனமுடன் கூடிய, அரசியல் லட்சியங்கள் மற்றும் வழி முறைகளில் இந்திய தேசிய காங்கிரசு (INC) என்பது அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த ஏழை விவசாயிகள் மற்றும் பின்தங்கிய பிரிவினர்களையும், பிரதிநிதித்துவப்படுத்தியது
செயல்பாடு
❖ இந்தியாவில் பல கட்சி அமைப்பு ஏன் நமக்கு உள்ளது?
❖ பல கட்சி அமைப்புகளின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?
❖ வகுப்பை மூன்று அல்லது நான்கு குழுக்களாக பிரிக்கவும், குழு கலந்துரையாடலை நடத்தவும். ஏதேனும் ஓர் அணியை தேர்ந்தெடுத்து அவர்களின் கருத்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.
சித்தரஞ்சன் தாஸ் 1922-இல் தொடங்கிய சுயராஜ்ய கட்சி, 1934-இல் ஆச்சார்யா நரேந்திர தேவ் தொடங்கிய காங்கிரசு சோசலிஸ்ட் கட்சி மற்றும் 1920-இல் எம்.என். ராயின் (M.N. Roy) முயற்சியால் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகள் இதர முக்கிய அரசியல் கட்சிகள் ஆகும். அரசியல் பரப்புரைகளில் ஈடுபடும் பல அரசியல் கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடாமல் இருந்தன. இத்தகையவை அழுத்த குழுக்களாகச் செயல்பட்டன.
1977-ஆம் ஆண்டு வரை பொதுவுடமை கட்சி, சோசலிஸ்ட் கட்சிகள் மற்றும் வலதுசாரி ஜனசங்கம் ஆகியவை தேசிய அளவில் குறிப்பிடத்தக்க எதிர்கட்சிகளாக இருந்தன. 1977 வரை, எந்த ஒரு கட்சியும் தேசிய அளவில் இந்திய தேசிய காங்கிரசுக்கு மாற்றாக வர இயலவில்லை. எனவே, ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையின் கீழ் பல தேசிய கட்சிகள், தேசிய அளவிலான மாற்றுக் கட்சியை உருவாக்க இணைந்தன. 1977-ஆம் ஆண்டில் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. 1980-க்குப் பிறகு, இந்த கட்சிகள் ஒன்றியிருக்கும் திறனையும், ஒற்றுமையையும் இழந்து விட்டன. பாரதீய ஜனதா கட்சி என்ற புதிய பெயருடன் ஜனசங்கம் புத்துயிர் பெற்றது. இதற்கிடையில் கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சி சமூக நீதியை பிரதான திட்டமாக கொண்ட ஒரு தேசியக் கட்சியாக உருவாகியது. கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா போன்ற சில மாநிலங்களில் பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்) மிகவும் சக்திவாய்ந்ததாக ஆனது.
1990-களில் இந்திய அரசியல் கூட்டணி அரசாங்கங்களுக்கான காலமாக இருந்தது. இந்திய அரசியல் முறைமை என்பது சமகால இந்தியாவில் காணப்பட்ட பலதரப்பட்ட பண்பாட்டு சமூக உறவு, பன்முகத்தன்மை, அதிக போட்டித்திறனோடு அதிக அளவில் மக்களாட்சி மயமாக்கப்பட்ட பிரதிநிதித்துவம் பெற்றது. பழைய கட்சிகள் வழக்கற்று செயலற்றதாகவும் மாறிவிட்டன. மேலும் புதிய கட்சிகள் மாறிவரும் சவால்களை எதிர்கொள்ள முயற்சித்தன.
1990-களில் இருந்து கூட்டாட்சி அரசியல் முறையை நாம் காண்பதுடன் பிராந்தியக்கட்சிகள் பெரிய செல்வாக்கைப் பெற்றுள்ளதையும் மத்திய அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக பிரதேச உணர்வுகளை பிரதிநிதிப்படுத்துவதையும் நாம் காண்கிறோம். தற்போதைய காலத்தில், பிராந்திய அளவிலான கூட்டணிகள் கூட்டாட்சி அரசியலுக்கு ஆதரவாகப் குரல் கொடுக்கும் போக்கு இருப்பதைக் காணலாம். இதற்கு காரணமாக அரசியலில் பிரதேசமயமாக்கலும், குறிப்பிட்ட பகுதிகளில் அதிக ஆதரவைக் கொண்டிருக்கும் கட்சிகளும் உள்ளன.
மண்டலக் கட்சிகள்
பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளம், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சி, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், மேற்கு வங்காளத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு, தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, அசாமில் அசாம் கண பரிசத், மகாராஷ்டிராவில் சிவசேனா, ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக்கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை முக்கிய பிராந்தியக் கட்சிகளாக உள்ளன.
வாக்காளர்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகரிக்கையில், பிரதேச, சமூக மற்றும் மத அடையாளங்களுடன் அதிக அணி திரட்டலும் உள்ளது. அரசியல்குழுக்களின் அமைப்பில் பார்க்கும்போது ஒரு பிராந்தியத்திற்கும் இன்னொன்றிற்கும் இடையில் உள்ள அரசியல் மற்றும் சமூக குழுக்களின் பண்புகள் போன்றவற்றில் பரந்த வேறுபாடு உள்ளது.
தமிழ்நாட்டில், பெரும்பாலான இந்திய மாநிலங்களைப் போலவே தொடக்கத்தில் சுதந்திர போரட்ட காலத்தில் காங்கிரசு கட்சி ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் சாதி அடுக்குமுறையில் சிக்கல்கள் மற்றும் அதிகரிக்கும் வடக்கு, தெற்கு பிரிவினையின் எழுச்சி ஆகியவை மாநிலத்தில் காங்கிரசினுடைய புகழைக் குலைத்தன. திராவிட இயக்கம் பெரியார், ஈ.வே.ராமசாமியின் கீழ் தமிழ்நாட்டில் புத்துயிர் பெற்று திராவிட உரிமைகள், சுயமரியாதை, கண்ணியம் ஆகியவற்றை வலியுறுத்தல் மற்றும் வடக்கு எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பிராமணர் ஆதிக்கத் திறன் எதிரான சமூக கொண்டு ஆகியவற்றினால் பிரபலமடைந்தது.
தமிழ்நாட்டில் கட்சி அமைப்பு முறையானது சுதந்திர இந்தியாவின் அரசியலில் மாநில கட்சிகளின் ஒப்புயர்வற்ற நிலைக்கு முன் மாதிரியாக உள்ளது. இந்த மேம்பாட்டிற்கு மிகவும் தெளிவான சமூகபொருளாதார, பண்பாடு மற்றும் வரலாற்று காரணங்கள் உள்ளன. காலனித்துவ காலம்முதல் பகுத்தறிவு மற்றும் சமூக நீதி இயக்கங்களின் நீண்ட வரலாறு மற்றும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து திராவிட சிந்தனையை அணி திரட்டுதல் போன்றவை தமிழக அரசியலின் தன்மையையும், மாநில அரசியலில் அரசியல் கட்சி முறையின் எதிர்காலத்தையும் தீர்மானித்தது எனலாம்.