Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | இலக்கணம்: அணி

இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: அணி | 10th Tamil : Chapter 9 : Anbin mozhi

   Posted On :  22.07.2022 03:20 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி

இலக்கணம்: அணி

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : இலக்கணம்: அணி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மனிதம்

கற்கண்டு

அணி


மக்களுக்கு அழகு சேர்ப்பன அணிகலன்கள். அது போன்று செய்யுள்களுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவன அணிகள். அத்தகைய அணிகள் சிலவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

 

தற்குறிப்பேற்ற அணி

இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

எ.கா.

'போருழத் தெடுத்த ஆரேயில் நெடுங்கொடி

'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட'

 

பாடலின் பொருள்

கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பது போல, கை காட்டியது என்பது பொருள்.

 

அணிப்பொருத்தம்

கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால் இனங்கோவடிகள், கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து. "இம்மதுரைக்குள் வரவேண்டா' என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.


தீவக அணி

தீவகம் என்னும் சொல்லுக்கு ‘விளக்கு’ என்று பொருள். ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

இது முதல்நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் என்னும் மூன்று வகையாக வரும்.

எ.கா.

சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து

திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,

மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து

(சேந்தன - சிவந்தன; தெவ் - பகைமை; சிலை - வில்; மிசை - மேலே; புள் - பறவை;)

 

பாடலின் பொருள்

அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன; வலிய வில்லால் எய்யப்பட்ட அம்புகளும் சிவந்தன; குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.

 

அணிப் பொருத்தம்

வேந்தன் கண் சேந்தன

தெவ்வேந்தர் தோள் சேந்தன

குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன

அம்பும் சேந்தன

புள் குலம் வீழ்ந்து

மிசைஅனைத்தும் சேந்தன

இவ்வாறாக முதலில் நிற்கும் சேந்தன (சிவந்தன) என்ற சொல் பாடலில் வருகின்ற கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் ஆகிய அனைத்தோடும் பொருத்திப் பொருள் தருகிறது. அதனால் இது தீவக அணி ஆயிற்று.

 

நிரல்நிறை அணி

நிரல் = வரிசை: நிறை = நிறுத்துதல்,

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அன்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது திரல்நிறை அணி எனப்படும்.

எ.கா.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. - குறள்: 45

 

பாடலின் பொருள்

இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

 

அணிப்பொருத்தம்

இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.

 

தன்மையணி

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணியாகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர். இவ்வணி நான்கு வகைப்படும். பொருள் தன்மையணி, குணத் தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற் தன்மையணி என்பனவாகும்.

எ.கா.

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்

கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்

கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில்

உண்டளவே தோற்றான் உயிர்.

சிலம்பு - வழக்குரை காதை வெண்பா

 

பாடலின் பொருள்

உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை நதி பாயும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் தோற்றான். அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிரை நீத்தான்.

 

அணிப்பொருத்தம்

கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.

"எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்

சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்"

- தண்டியலங்காரம்: 27

 

கற்பவை கற்றபின்....

1. முன் வகுப்புகளில் கற்ற அணிகளை எடுத்துக்காட்டுகளுடன் தொகுத்து ஒப்படைவு ஒன்றை உருவாக்குக.

2. பாடப்பகுதியில் உள்ள திருக்குறளில் பயின்றுவரும் அணிகளைக் கண்டறிந்து வகுப்பறையில் விளக்குக.

 

 

Tags : Chapter 9 | 10th Tamil இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 9 : Anbin mozhi : Grammar: Ani Chapter 9 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : இலக்கணம்: அணி - இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி