Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | துணைப்பாடம்: ஒருவன் இருக்கிறான்

கு. அழகிரிசாமி | இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: ஒருவன் இருக்கிறான் | 10th Tamil : Chapter 9 : Anbin mozhi

   Posted On :  22.07.2022 03:17 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி

துணைப்பாடம்: ஒருவன் இருக்கிறான்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : துணைப்பாடம்: ஒருவன் இருக்கிறான் - கு. அழகிரிசாமி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மனிதம்

விரிவானம்

ஒருவன் இருக்கிறான்

-- கு. அழகிரிசாமிநுழையும்முன்

துணையின்றி வாழும் நிலை இரங்கத்தக்கது! எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிறரது துணையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. துணையே இல்லாதவர் என்று கருதி நாம் அலட்சியம் செய்பவருக்கும் துணையொன்று இருப்பதை அறியும் போது நமக்குக் குற்றவுணர்ச்சி தோன்றும் வாய்ப்பிருக்கிறது. எப்படிப்பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும். அந்தக் துணைதான் மனிதத்தின் வேருக்கு நீர். அதில் மனிதம் துளிர்க்கும்.

பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்னால் தான் ஆபீசிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்தபோது அவன் வாசல் திண்ணையில் உட்கார்ந்துகொண்டிருந்தான். வயது இருபத்தைந்து இருக்கும். எலும்பும் தோலுமான உடம்பு. எண்ணெய் காணாத தலை, காடாக வளர்ந்து கிடந்தது. சட்டையும் வேஷ்டியும் ஒரே அழுக்கு, சட்டையில் ஒரு பொத்தான்கூட இல்லை. கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த அவன், இடது கையால் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டிருப்பதையும் பார்த்தேன், என்னை ஒரு தரம் ஏறிட்டுப் பார்த்தான், காய்ந்து போன விழிகன், அவற்றில் ஒரு பயம். தன் நிலையை எண்ணிக் கூகம் ஓர் அவமானம்.

"யாரப்பா நீ? எங்கே வந்தே?" என்று முகத்தில் வெறுப்பைப் பூரணமாகக் காட்டிக்கொண்டு கேட்டேன்.

கையை அடிவயிற்றிலிருந்து எடுக்காமலே ஒரு பெருமூச்சுவிட்டான். பிறகு பதில் சொன்னான். “தங்கவேலு வீட்டுக்கு வந்திருக்கிறேன்.”

தங்கவேலு என் பக்கத்துக் குடித்தனக்காரர்,

மனைவியிடம், "வயித்துவலிக்காரன் வந்திருக்கிறான்போல் இருக்கிறது. பக்கத்து வீட்டுக்கு விருந்தாளியா?” என்று தமாஷாகச் சொன்னேன்.

"காஞ்சிபுரம். பக்கத்து வீட்டு அம்மாவுக்கு அக்கா மகனாம். வைத்தியம் பார்க்க வந்திருக்கிறான்" என்றாள் மனைவி.

இரவு தங்கவேலு வீடு திரும்பினார். ஒன்பது மணிக்கெல்லாம் அவன் ஒரு பழைய தலையணையையும் கிழிந்த போர்வையையும் எடுத்துக்கொண்டு வந்தான். தங்கவேலு அவனை அழைத்துக்கொண்டு வந்து, நான்கு குடித்தனங்களுக்கும் பொதுவான சிமிண்டு நடைபாதையில் படுத்துக்கொள்ளச் சொன்னார். அந்த இடம் என்னுடைய அறையின் மற்றொரு ஜன்னலுக்கு நேராக இருந்தது. அந்நோயாளி என் தலைமேல் வந்து உட்கார்ந்துகொண்டதாகவே நினைத்தேன். அதை ஆட்சேபிக்கவும் முடியவில்லை. தங்கவேலுவின் குடித்தனப் பகுதியில் அவன் படுத்துக் கொள்ளலாம் என்றால், அங்கே உண்மையிலேயே இடம் இல்லை.

எனக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது. அதை மனைவியிடமும் சொன்னேன். "பாவம்! நோயாளியாய் இருக்கிறான். கிடந்துட்டுப் போகட்டும்" என்றாள் மிகுந்த இரக்கத்தோடு.

மறுநாள் தங்கவேலுவை விசாரித்தபோது அவனைப் பற்றி மேற்கொண்டு சில விவரங்கள் கிடைத்தன.

அவன் அவருடைய மனைவிக்கு அக்கா பின்ளை என்பது உண்மைதான். தாய் தகப்பன் கிடையாது. அவனுக்கு இருந்த உறவு தங்கவேலுவின் மனைவியான அவனுடைய சித்தியும், காஞ்சிபுரத்திலேயே உள்ள தாய்மாமன் ஒருவனுந்தான். அந்த ஊரில் தாய்மாமன் வீட்டிலேயே சாப்பிட்டுக்கொண்டு, ஒரு சைக்கிள் ரிப்பேர்க் கடையில் தினக்கூலியாக ஒன்றரையும் இரண்டும் வாங்கிக்கொண்டு வேலைசெய்து வந்தானாம். வயிற்றுவலி வந்து ஆறேழு மாதங்களாக வேலை இல்லை. சம்பாத்தியமும் இல்லை. நோயும் வேறு. இந்த நிலையில் தாய்மாமன் வீட்டிலிருந்து அவனை ஒரு வழியாக விரட்டிவிட்டார்கள். அங்கிருந்து, சித்தியை நம்பிச் சென்னைக்கு வந்திருக்கிறான், வைத்தியம் பார்ப்பதற்கு.

இவ்வளவு கதையையும் தங்கவேலு சொல்லிக்கொண்டிருக்கும் போது அவன் தெருத் திண்ணையில்தான் இருந்தான். நாங்கள் பேசியது அவனுக்கு நன்றாகக் கேட்டிருக்கும். கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் தங்கவேலுவும் குரலைச் சற்று உயர்த்தியே பேசினார். அவர் வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் அவனைக் குற்றம் சாட்டுவது போலவும், அவன் எதற்காக இங்கே வந்தான் என்று கேட்பது போலவும், அவன் வீட்டைவிட்டு உடனே தொலைந்தால் நல்லது என்று கருதுவது போலவும் ஒலித்தது. எனக்கும் அது பிடித்திருந்தது.

தங்கவேலுவின் மனைவிக்கும் அவன் வந்திருப்பது பிடிக்கவில்லையாம்! என் மனைவி சொன்னதைப் பார்க்கும் போது. தங்கவேலுவை முந்திக்கொண்டு அவனை விரட்டுவதற்கு அவள் அவசரப்படுவதாகத் தெரிந்தது. எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

“தொலைகிற பீடை சீக்கிரமா தொலையட்டும்” என்று சொல்லி என் மனப் பாரத்தைச் சிறிது இறக்கி வைத்தேன்.

என் மனைவி அப்பொழுதும் அவனிடம் இரக்கம் காட்டிப் பேசினாள். 'ஏன் இப்படிச் சொல்றீங்க? அவன் நம்மை என்ன செய்கிறான்? எதுக்கு ஓர் அனாதையைப் போய் இப்படிச் சொல்லணும்?" என்று என்னை இலேசாகக் கண்டிக்கவே ஆரம்பித்துவிட்டாள்.

நாளை நம் குழந்தைகளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா இவனா வந்து தாங்கப் போறான்?" என்று கோபத்தைக் காட்டிக்கொள்ளாமலே சொன்னேன்.

"அப்படி ஒண்ணும் வந்துடாது. இப்படிப் பயந்தால் உலகத்திலேயே வாழ முடியாது".

"சரி சரி, புத்திமதி நல்லாத்தான் இருக்கு. பேசாமல் போ" என்று அவள் வாயை அடைத்துவிட்டு, அவளோடு பேசப் பிடிக்காமல் வந்துவிட்டேன்.

ஏறக்குறையத் தினந்தோறும் இப்படி நாங்கள் முரண்படுவதும், நான் கவலையும் பயமும் கொள்ளுவதுமாக ஆகிவிட்டது.

மேலும் இரண்டு நாட்கள் கழிந்தன. ஒவ்வொரு நாள் இரவும் அவன் ஓலத்துடனும் என் கவலையுடனுந்தான் கழிந்தது. ஆறாம் நாள் தங்கவேலு நான் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவனை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினார். நான் போய் எட்டிப் பார்த்தேன். அவனைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடப் போவதாகத் தங்கவேலு சொன்னார். எனக்கு அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியையும் நிம்மதியையும் இவ்வளவு அவ்வளவு என்று கூறுவதற்கில்லை.

"அதுதான் நல்ல யோசனை, அங்கே நல்லா கவனிப்பாங்க" என்று ஒப்புக்குச் சொன்னேன். அவன் என்னைப் பார்த்து, என் பூரண ஆசீர்வாதத்தை வேண்டி, கை எடுத்துக் கும்பிட்டு, "நான் போய்ட்டு வர்றேன்" என்றான்.

"போய்ட்டு வாப்பா. கடவுள் கிருபையால் சீக்கிரம் குணமாகட்டும், போய்ட்டு வா" என்று வாழ்த்தினேன்.

மனத்தில் நஞ்சாக வெறுத்துக்கொண்டு அவனை இப்படிப் பொய்யாக வாழ்த்தி அனுப்பியதை இன்று நினைத்தாலும் எனக்கு வெட்கமாக இருக்கிறது. அவன் என்னையும் மதித்து என் ஆசீர்வாதத்திலும் நம்பிக்கை வைத்துக் கும்பிட்டதை நினைத்துவிட்டாலோ, நெஞ்சில் ஈட்டி பாய்வது போல் இருக்கிறது.

தங்கவேலுவும் அவனும் டாக்ஸியில் ஏறிக்கொண்டு போனார்கள்,

“ஒரு பெரிய பாரம் தீங்கியது” என்று தங்கவேலுவின் மனைவி என் மனைவியிடம் சொன்னதைக் கேட்டேன். நான் சொல்ல நினைத்த வார்த்தைகள் அவை. என் மனைவி ஒன்றும் சொல்லவில்லை.

தங்கவேலு சொன்னபடியே அவனுக்கு அப்புறம் ஆபரேஷன் செய்யப்பட்டது. அதற்கு முன்பு ஒரு நான் என் மனப்போக்கை அடியோடு மாற்றி, என்னை நினைத்து நானே வெட்கப்படும்படியாகவும், அவனை நினைத்து தான் கண்ணீர்விடும்படியாகவும் ஒரு சம்பவம்

அன்று இரண்டாவது சனிக்கிழமை. எனக்கு விடுமுறை. வீட்டிலேயே இருந்தேன். தங்கவேலு எங்கோ வெளியே போயிருந்தார். அவருடைய மனைவி தன் இரு குழந்தைகளோடு பகல் காட்சி சினிமா பார்க்கப் பதினொரு மணிக்கே கியூவில் நிற்கப் போய்விட்டாள் என்று கேள்விப்பட்டேன். மத்தியானம் ஒரு மணிக்கு ஒருவன் வந்து, “குப்புசாமி இருக்கிறாரா?" என்று கேட்டான். அவனுக்குச் சுமார் முப்பது வயது இருக்கும்.

"குப்புசாமியா? அப்படி இங்கே யாரும் இல்லையே! நீ யார்?' என்று நான் கேட்டேன்.

“காஞ்சிபுரம். அங்கிருந்துதான் குப்புசாமி இங்கே வந்தாரு. இது தங்கவேலு வூடுதானே?"

"ஆமாம். ஆனால் குப்புசாமின்னு யாரும் இல்லையே இங்கே!

"இங்கேதான் வந்தாருங்க - வவுத்து வலிக்கு மருந்து சாப்புடணும்னு ...”

இந்தச் சம்பாஷணையை உள்ளேயிருந்து கேட்ட என் மனைவி எழுந்து ஓடி வந்தாள்.

“குப்புசாமி அந்தப் பையன்தான்; ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்கிற பையன்” என்றாள்.

"குப்புசாமியைப் பார்க்கத்தான் வந்தேங்க. ஊருக்கும் அவசரமா போகணும். அவங்க வர ரொம்ப நேரமாவுங்களா?..... குப்புசாமி இங்கே வந்தாரா இல்லையா?" என்று கவலையோடு அவன் கேட்டான்.

அவன் குப்புசாமிக்கு நன்றாகத் தெரிந்தவனாம். முந்தின நாள் இரவு சென்னையில் உள்ள தன் சொந்தக்காரர் ஒருவரைப் பார்க்க வந்தவன், ஊர் திரும்பும் வழியில் அவசர அவசரமாகக் குப்புசாமியைப் பார்க்க வந்திருக்கிறான்.

குப்புசாமி வேலை செய்துவந்த சைக்கிள் கடைக்கு எதிரே ஒரு விறகுக் கடையில் அவன் கூலி வேலை செய்பவன். அவனுடைய பக்கத்து வீட்டுக்காரன் வீரப்பன் என்பவனும் குப்புசாமியும் ரொம்ப ரொம்பச் சிநேகமாம்.

குப்புசாமி நோய் காரணமாக வேலையை இழந்திருந்த சமயத்தில் தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக்கொண்டிருந்தபோது வீரப்பன்தான் அவ்வப்போது அவனை அழைத்து வந்து சாப்பாடு போடுவானாம். வீரப்பன் வீடு கட்டுகிற ஒரு மேஸ்திரியிடம் சிப்பந்தியாக வேலை செய்பவன். சில நாட்கள் வேலையில்லாமல் போய், வரும்படியும் இல்லாமல் கஷ்டப்படுகிற ஏழையாக இருந்தாலும், கடன் வாங்கியாவது சிநேகிதனுக்கு உதவி செய்து வந்தானாம் வீரப்பன்.

காஞ்சிபுரத்துக்காரன் இதைச் சொல்லும்போது, 'இவனுக்கு (குப்புசாமிக்கு) இப்படி ஒரு நட்பா? இவன் உயிருக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கிற ஓர் ஆத்மாவும் இந்த உலகத்தில் இருக்கிறதா?' என்று நான் வியந்துகொண்டிருந்தேன்.

காஞ்சிபுரத்தான் பேச்சை முடித்துக்கொண்டு, ஊருக்குப் புறப்படத் தயாரானான்.

"சரிங்க, அப்போ நான் போயிட்டு வர்ரேனுங்க. குப்புசாமி கிட்டக் குடுக்கச் சொல்லி வீரப்பன் ஒரு லெட்டர் குடுத்தான் இதைக் குடுத்துடுங்க. மூணு ரூபாயும் குடுத்தனுப்பினான்..."

சட்டைப் பையிலிருந்து கடிதத்தையும் மூன்று ரூபாயையும் எடுத்து, “குப்புசாமிகிட்டே குடுத்துடுங்க. இல்லே. தங்கவேலு கிட்ட வேணும்னாலும் குடுத்துடுங்க. இன்னொரு சமயம் பட்டணம் வந்தா ஆசுபத்ரிலே போயி பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கடிதத்தையும் ரூபாயையும் என்னிடம் கொடுத்தான். அப்புறம் ஒரு நிமிஷம் எதையோ யோசித்துப் பார்த்தான். மனசுக்குள் கணக்கு போடுகிறவன்போல் அவனுடைய முகபாவனையும் தலையசைப்பும் இருந்தன. மறு நிமிஷத்திலேயே, “இந்தாருங்க, இதையும் குப்புசாமிக்குக் குடுக்கச் சொல்லுங்க” என்று சொல்லித் தன் இடது கையில் தொங்கிய துணிப் பையிலிருந்து இரண்டு சாத்துக்குடிப் பழங்களை எடுத்துக் கொடுத்தான்.

“என் பசங்களுக்கு நாலு பழம் வாங்கினேன். போகட்டும். இவரு ஆசுபத்திரிலே இருக்கிறாரு. நாம்ப வேறு என்னத்தைச் செய்யப் போறோம்?

இத்துடனும் அவன் நிறுத்தவில்லை! தன் உபயமாக ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்து, குப்புசாமியிடமோ தங்கவேலுவிடமோ சேர்க்கச் சொன்னான். அவன் குப்புசாமிக்காகத்தான் கொடுத்தானோ, குப்புசாமிக்காகக் காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு கண்ணீர் வடிக்கும் அந்த வீரப்பன், குப்புசாமியின் உயிருக்குக் கொடுக்கும் மதிப்பைக் கண்டுதான் கொடுத்தானோ?

என்னிடமும் என் மனைவியிடமும் விடை பெற்றுக்கொண்டு காஞ்சிபுரத்துக்காரன் போய்விட்டான்.


அவன் கொடுத்த கடிதத்தின் மடிப்பைப் பிரித்து வாசித்துப் பார்த்தேன். வீரப்பன் எழுதிய அந்தக் கடிதத்தில் எழுத்துப் பிழைகளையும் பிற தவறுகளையும் திருத்திக் கீழே கொடுக்கிறேன்.

"என் உயிர் நண்பன் குப்புசாமிக்கு எழுதிக்கொண்டது. நீ இங்கிருந்து போனதிலிருந்து என் உயிர் இங்கே இல்லை. சதா உன் ஞாபகமாகத்தான் இருக்கிறேன். கடவுள் அருளால் நீ உடம்பு சௌக்கியமாகி வரவேண்டும் என்று தினமும் ஒரு தடவை கோவிலுக்குப் போய்க் கும்பிடுகிறேன். எனக்கு இப்போது வேலை இல்லை. கொஞ்ச நாட்களாக வருமானம் இல்லாமல் இருக்கிறேன். நேற்று கட்டைத் தொட்டி ஆறுமுகம் பட்டணம் போவதாகச் சொன்னான். உடனே, ஓடி ஒருவரிடம் மூன்று ரூபாய் கடன் வாங்கி அவனிடம் கொடுத்தனுப்பியிருக்கிறேன். நானே வரலாம் என்று பார்த்தேன். வந்தால் இந்த மூன்று ரூபாயும் பஸ்ஸுக்குச் செலவாகிவிடும். உனக்குச் சமயத்தில் உதவியாக இருக்கும் என நினைத்து, நான் ரூபாயைச் செலவழித்துக்கொண்டு வராமல், ஆறுமுகத்திடம் கொடுத்தனுப்பி இருக்கிறேன். இன்னோர் இடத்திலும் பணம் கேட்டிருக்கிறேன். கிடைத்தால் நான் சீக்கிரம் உன்னைப் பார்க்க வருவேன். உன்னைப் பார்த்தால்தான் நான் தின்னும் சோறு, சோறாக இருக்கும்.

உன் நண்பன்

க. வீரப்பன்,

காஞ்சிபுரம்.

கடிதத்தைப் பார்த்துவிட்டு நிம்மதியோடு என்னால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. என் மனைவியின் எதிரே கண்ணீர்விடவும் வெட்கமாக இருந்தது. அவளிடம் கடிதத்தைக் கொடுத்து, "படித்துப் பார்" என்று அவசர அவசரமாகச் சொல்லி விட்டு, குளிக்கும் அறைக்குள் போய் உண்மையிலேயே கண்ணீர் சிந்தி அழுதுவிட்டேன். முகத்தைக் கழுவிக் கொண்டு நான் வெளியே வந்தபோது, என் மனைவி வழக்கம்போல் இரக்கம் நிறைந்த குரலில், "பாவம்!" என்றாள். "ஏழைகள்தான் எவ்வளவு பிரியமாக இருக்கிறார்கள்!' என்று பரவசத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் சொன்னான்.

'நாமும் தங்கவேலுவோடு இன்னிக்கு ஆகபத்திரிக்குப் போகலாமா?" மனைவி ஆச்சரியப்பட்டாள் என்பதைவிட, என் சொற்களைக் கேட்டு ஆனந்தம் அடைந்தான் என்றுதான் சொல்லவேண்டும்.

"போகலாமே. ஒரு டஜன் சாத்துக்குடி வாங்கிக் கொண்டால் நல்லது. சும்மாவா போவது?"

தனியாக உட்கார்ந்திருந்த நான் என்னை நினைத்தே வருந்தியதையும் வெட்கப் பட்டதையும் விவரிக்கவே முடியாது. காஞ்சிபுரத்தில் இருக்கும் வீரப்பனை, உலகமே வெறுத்து ஒதுக்கிய குப்புசாமியிடம் உயிரையே வைத்திருக்கும் அந்தப் புண்ணிய மூர்த்தியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. 'குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான். குப்புசாமிக்கு மட்டுமா? எனக்குமே ஒருவனாக அவன் இருக்கிறான்.'

பழங்கள் வாங்கக் கடைத்தெருவுக்குப் போனேன்.

(கலைமகள், பிப்ரவரி 1966)

 

முன்தோன்றிய மூத்தகுடி


"ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து

அரசு பட அமர் உழக்கி"

மதுரைக்காஞ்சி, 127-130

 

நூல் வெளி

ஒருவன் இருக்கிறான் கதை 'கு.அழகிரிசாமி சிறுகதைகள்' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

கு.அழகிரிசாமி, அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர்; மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்; கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம். கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை. படைப்பின் உயிரை முழுமையாக உணர்ந்திருந்த கு.அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்; மலேசியாவில் இருந்தபோது அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர். இவர் பதிப்புப் பணி, நாடகம் எனப் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழ் இலக்கியத்தில் ஆர்வம்கொண்டு திறனாய்வு நூல்களையும் படைத்தவர்.

 

கற்பவை கற்றபின்...

1. சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஆளுமைகளைப் பட்டியலிட்டு அவர்கள் செய்த சமூகப்பணி குறித்துக் கலந்துரையாடுக.

2. "அகநக நட்பதே நட்பு" - என்ற தலைப்பில் நண்பர்களுக்கு உதவிய சூழல்களைச் சுவைபட எழுதுக.

 

 

Tags : by ku. Alagiri Swami | Chapter 9 | 10th Tamil கு. அழகிரிசாமி | இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 9 : Anbin mozhi : Supplementary: Oruvan irukiran by ku. Alagiri Swami | Chapter 9 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : துணைப்பாடம்: ஒருவன் இருக்கிறான் - கு. அழகிரிசாமி | இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி