இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: ஜெயகாந்தம் ( நினைவு இதழ்) | 10th Tamil : Chapter 9 : Anbin mozhi
உரைநடை உலகம்
ஜெயகாந்தம்
- நினைவு இதழ்
கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர்
ஜெயகாந்தன். சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில்
தந்தவர் அவர்; சிறுகதை, புதினம்,
திரைப்படம், முன்னுரை, பேட்டி
என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர்; இலக்கியத்திற்கான
பெரும் விருதுகளை வென்றவர். மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ஜெயகாந்தன்.
அவரது காந்தத் தன்மையுடைய எழுத்தை நினைவூட்டும் வகையில் அவரது படைப்புப்
புதையலிலிருந்து சில மணிகளைத் தொடுத்து ஜெயகாந்தம் என்னும் நினைவு இதழ்
உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளே ....
• எதற்காக எழுதுகிறேன்? - ஜெயகாந்தன்
• இவர்கள் பார்வையில் ஜெயகாந்தன்
• ஈன்ற முத்துகளில் சில (எழுதிய நூல்கள்)
• திரைப்படமான படைப்புகள்
• முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன்
• இன்னுமொரு முகம் (கவிதை)
• தொடுத்த கேள்விகளும் கொடுத்த பதில்களும் (கேள்வி
பதில்)
• தர்க்கத்திற்கு அப்பால் - கதை
விருதுகள்
• குடியரசுத் தலைவர்
விருது (உன்னைப்போல் ஒருவன்- திரைப்படம்)
• சாகித்திய அகாதெமி
விருது - சில நேரங்களில் சில மனிதர்கள் (புதினம்)
• சோவியத் நாட்டு விருது
(இமயத்துக்கு அப்பால்)
• ஞானபீட விருது
• தாமரைத்திரு விருது
எதற்காக எழுதுகிறேன்? - ஜெயகாந்தன்
சமூக அமைப்பின்
முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர். நேர்முக எதிர்முக விளைவுகளைப்
பெற்றவர். உள்ளடக்க விரிவால் மனிதாபிமானத்தை வாசக நெஞ்சங்களில் விதைத்தவர்.
தன்னையறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர்.
அவர்தான் ஜெயகாந்தன்
நான்
எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு, என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உண்டு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது
தனிமுயற்சியின் பயனுமாகும்.
இந்த
நாட்டில்,
வியாசன் முதல் பாரதி வரை எதற்காக எழுதினார்கள்? இவர்களில் யாராவது கலையைத் தாங்கிப் பிடிக்க என்று சொல்லிக்கொண்டதுண்டா?
இவர்களைவிட கலையைத் தாங்கியவர்களும், காலம்
காலமாய் வாழும், வாழப்போகும் கலாசிருஷ்டிகளைத் தந்தவர்களும்
உண்டா?
தர்மார்த்தங்களை
உபதேசிக்கவே வியாஸர் பாரதத்தை எழுதினார்.
தமிழ்
இலக்கணமே நூலினியல்பாவது என்னவென்று சொல்லும் போது,
'நூலினியல்பே நுவலின் ஓரிரு
பாயிரந்தோற்றி
மும்மை யினொன்றாய்
நாற்பொருட்
பயத்தலொடு எழுமதந் தழுவி'
என்று
நூலின் பயன் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பயனுக்காக இருத்தல் வேண்டும்
என்று சொல்லி அதன் பின்னர்தான் விளக்கங்களைக் கூறிச் செல்கிறது.
கலைத்தன்மைக்கு
எந்தவிதக் குறைவும் வராமல், கலாதேவியின் காதற் கணவனாகவும்
சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாகவும் இருந்துதான் நான் எழுதுகிறேன்.
அர்த்தமே
வடிவத்தை வளமாக்குகிறது அல்லவா? வெறும் வடிவம்
மரப்பாச்சிதான். ஆகையினால் இவற்றைப் பிரித்துக்கொண்டு அவஸ்தைக்கு உள்ளாகின்றார்.
நமது அறியாமையால் அவஸ்தைகளுக்குள்ளாகி, பிறரையும் நமது
அறியாமையால் அவஸ்தைக்கு உட்படுத்தாமல், சமூகப் பார்வையோடு
கலைப்பணி புரியவே நான் எழுதுகிறேன். கலைப்பணி என்றாலே அதனுள் சமூகப் பார்வை
அடக்கம். பிரித்துப் பேசும் போக்கு வந்துவிட்டதால் பிரித்துச் சொல்கிறேன். அது
சேர்ந்துதான் இருக்கிறது.
'எதற்காக எழுதுகிறேன்?' என்று நான் சொன்ன
காரணங்களுக்குப் புறம்பாக நடந்தால் நான் கண்டிக்கப்படவும், திருத்தப்படவும்
உட்பட்டிருக்கிறேன்.
இவர்கள் பார்வையில் ஜெயகாந்தன்
பள்ளிக்கல்வி அளவே
படித்திருந்த ஜெயகாந்தன் தமிழிலக்கிய உலகில் மிகப் பெரிய ஆளுமையாகத் திகழ்கிறார்.
எல்லாத்தரப்பு மொழிகளையும் ஆண்ட வல்லமை அவருக்கிருந்தது.
*
"ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப்
படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை.
துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும்
ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக
இருந்திருக்கலாம்."
- அசோகமித்திரன்
*
கச்சிதமான உருவம், கனமான உள்ளடக்கம், வலுவான நடை, புதுக்கருத்துக்கள், புதுவிளக்கங்கள், ஆழம், கனம்
இந்த அம்சங்களை இவருடைய சிறுகதைகளில் பூரணமாகக் காணலாம். அதுமட்டுமின்றிப்
பலதிறப்பட்ட சூழ்நிலைகளையும் வெற்றிகரமாகச் சித்தரிப்பது இவருடைய அரிய சாதனை.
- வாசகர்களின் கருத்து - தீபம் இதழ் - 1967.
* நேர் கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு, கம்பீரமான
குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச்
சித்தரிப்புகள் - இவைகள் தாம் ஜெயகாந்தன் என்ற செம்மாந்த தமிழனின் சிறப்பான
அடையாளங்கள். படிக்காத மேதை என்று குறிப்பிடப்படும் அவர், முறையாகக்
கல்லூரிகளில் படிக்கவில்லையே தவிர, தமிழ், இந்திய இலக்கியங்களை மட்டுமன்றி, சோவியத் பிரெஞ்சு
இலக்கியங்களைத் தானே படித்து உணர்ந்தது மட்டுமன்றி, வாழ்க்கையையும்
ஆழமாகப் படித்தவர் பிறகு அவற்றை வார்த்தைகளில் அழகுறப் படைத்தவர்.
- கா.செல்லப்பன்
ஈன்ற முத்துகளில் சில (எழுதிய நூல்கள்)
மொழி பெயர்ப்புகள்
* வாழ்விக்க வந்த காந்தி
(பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்)
* ஒரு கதாசிரியனின் கதை (முன்சி
பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)
திரைப்படமான படைப்புகள்
முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன்
எழுத்தாளர், ஒருவருடைய
படைப்பு நோக்கத்தையும் படைப்பு பாங்கையும் வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்த
கண்ணோட்டத்தையும் உணர்த்துவதுதான் முன்னுரை. தன்னுடைய படைப்புகளுக்குத் தானே
முன்னுரைகள் எழுதிக்கொள்ளும் ஜெயகாந்தன், பின்னர்
வரவிருக்கும் கேள்விகளுக்குத் தரும் பதில்களாக அவற்றை ஆக்கிவிடுவார்.
பாரீசுக்குப்போ .... புதினத்தின் முன்னுரை
"ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு
வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்.... ஓர் எழுத்தாளன் ஆத்ம சுக்தியோடு எழுதுகிறானே
அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம். நீங்கள் கதை என்று
நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு
வாழ்க்கையின் சாசனம்" (1966)
இன்னுமொரு முகம் (கவிதை)
ஜெயகாந்தன் சில
கவிதைகளையும் திரைப்பாடல்களையும் படைத்திருக்கிறார். அவரது படைப்பாற்றலின் இன்னொரு
பக்கம் அது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய அவரின் கவிதை இது
"எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்
பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – பழைய
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்"
தொடுத்த கேள்விகளும் கொடுத்த பதில்களும்
உடனுக்குடன் அறிவார்ந்த
எதிர்வினையாக ஜெயகாந்தன் அளிக்கும் பதில்களுக்கு முன்னால், கேள்விக்கணைகள்
மழுங்கிவிடும்.
சிறுகதைகளைப் படைப்பதில் தங்களுடைய தனித்தன்மை வாய்ந்த திறமையை
வாசகர்கள் கொண்டாடுகிறார்களே, இத்துறையில்
தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்கங்கள் யாவை?
(பேட்டி - திரு. கிருஷ்ண மணி, 1966)
நுணுக்கமா? அப்படித் தனியாக நான் எதையும் கையாளுவதாக எண்ணிச் செய்வதில்லை. என்
மனத்தால், புத்தியால், உணர்வால் நான்
அறிந்து அனுபவப்படாத எதைப் பற்றியும் நான் எழுதினதில்லை. என்னைப் பெரிதும்
பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு
அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே.
உங்கள் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப் பெரிய சவால் எது?
மகத்தான
சாதனை - பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தது. மிகப் பெரிய சவாலும் அதுவே.
இந்த வயதில், தேசம்
செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம்
பார்க்கும்போது எப்படி இருக்கிறது?
காலந்தோறும் மாற்றங்களை நாம்
பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.
சிறுகதை
மனிதம் என்பது பரந்து
விரிந்த வானம் போன்று எல்லைகளற்றது. இதை நம்மால் மேற்கொள்ள முடியாதென்று
ஒதுங்கிவிடக்கூடாது. ஆறுதலளிக்கும் ஒரு புன்னகை, ஒரு தோள்தட்டல்,
இரண்டொரு அன்புச்சொற்கள், தன்னால் இயன்ற சிறு
உதவி இவையெல்லாம் மனிதம்தான். மனிதத்தின் துளியளவு வெளிப்பாடு ஏதோ ஒரு வகையில்
நமக்கு உதவக்கூடும்.
வெற்றி
என்ற வார்த்தைக்குப் பொருளில்லை. நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக்
கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒருகாலத்தில் எனக்கு இப்படிப்பட்ட 'வெற்றிகள், வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.
என்
வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப்
போயிருந்தேன், வழக்கம் போல, 'தோல்வி
நிச்சயம்' என்ற மனப்பான்மையுடன்
போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று
தோற்றுப்போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு தோற்றது. என் வாழ்க்கையே
நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
இந்தத்
தோல்வியை,
அல்லது வெற்றியைக் கொண்டாடித் தீரவேண்டும். ஊருக்குத் திரும்பிய
பின்தானே? அல்ல; இப்போதே நான் ரொம்ப
அவசரக்காரன்.
கொண்டாடுவது
என்பது பெரிய காரியமா? அது கொள்ளப்பட்ட உள்ளம் தன்னுள்
வயித்துக் குதூகலிப்பது. அதன் விளைவாய் ஏற்படும் புற நிகழ்ச்சிகள் பெரிய காரியமன்று.
கொண்டாடத்தக்கதைச் சிலர் வானத்தை வண்ணப்படுத்தும்
வேடிக்கை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள். சிலர் நாலுபேருக்கு வயிறார உணவளித்துக்
கொண்டாடுவார்கள்.
இன்னும் சிலர் அந்தப் பொழுதிலாவது தன் வயிறாரத் தான் உண்டு மகிழ்வார்கள்.
அதெல்லாம்
அப்பொழுதிருக்கும் அவரவர் சக்தியைப் பொறுத்தது.
எனினும்,
மனசில் ஏற்படும் அனுபவம் அனைவர்க்கும் ஒன்றுதான்.
இப்பொழுது
என் நிலைமை ..... பையிலிருக்கும் ஒரு வெள்ளி ரூபாய் நாணயம்தான். அதற்கென்ன? இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே! அதுதான் முடியாது. ஊருக்குப் போக
முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன? கால் ரூபாயில் கொண்டாட முடியாதோ? நிச்சயம் முடியும்.
சங்கரய்யர்
ஹோட்டலில் புதுப்பால், புது டிகாக்ஷன், சர்க்கரை கம்மி, ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி
இரண்டணாதான். காபி அருந்தியதும் உடம்பில் ஒரு தெம்பும், மனசில்
ஒரு தனிக் குதூகலமும் பிறந்தன. ஊர்திரும்ப ஒதுக்கிவைத்த பன்னிரண்டணா போக, கையில் இருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம்? ‘கடைசிச்
சல்லியையும் ஒரு ராஜாவைப் போல் செலவுசெய்' என்ற பழமொழி
நினைவுக்கு வந்தது.
'ஐயா தருமதுரை... கண்ணில்லாத பிச்சைக்காரன் ஐயா..!” என்ற குரல்.
ஸ்டேஷனுக்குள் நுழையும் இடத்தில், ஒரு ஓரமாய் அந்தப்
பார்வையற்ற பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். கிழவன். அவன் எதிரே இருந்த
அலுமினியப் பாத்திரத்தில் வெறும் செப்புக்காசுகளே கிடந்தன. அவற்றின் நடுவே நான்
போட்ட இரண்டணா, வெள்ளைவெளேரென்று விழுந்தது அழகாகத்தான்
இருந்தது. பார்வையற்றவன் அதை எடுத்துத் தடவிப் பார்த்தவாறே நான் இருப்பதாக அவன்
நினைத்துக்கொண்ட திசைநோக்கிக் கரம் குவித்து, “சாமி, நீங்கபோற வழிக்கெல்லாம் புண்ணியமுண்டு” என்று வாழ்த்தினான். அதன்பிறகு,
உண்மையிலேயே நாலணாவில் அந்த நல்லநாளைக் கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது
எனக்கு.
புக்கிங்
கவுண்டரின் அருகே போய் என் சொந்தக் கிராமத்தின் பெயரைச் சொல்லிச் சில்லறையை
நீட்டினேன், டிக்கெட்டை எதிர்பார்த்து நீண்டிருந்த என்
கைக்குள் மீண்டும் சில்லறையே விழுந்தது.
இன்னும்
ஓரணா கொடுங்கள் ஸார்!
'பன்னிரண்டணாதானே?
“அது
நேற்றோடு சரி. இன்னிலேருந்து அதிகம்.”
என்கை
சில்லறையுடன் வெளியே வந்தது. திடிரென்று பாதானத்தில் வீழ்ச்சியுற்றது போன்ற
திகைப்பில் நின்றுவிட்டேன். 'யாரிடம் போய் ஓரணா கேட்பது?’
'அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே, அவரிடம்...' என்று நினைக்கும் போதே, 'ஓரணாதானே, கேட்டால்தான் என்ன என்று நினைக்கும் போதே
கேட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது. அங்கே! யாரோ ஒருவன் அவர்
அருகே சென்றான். அவன் என்ன கேட்டானோ..? அவர் சொன்ன பதில்
உலகத்துக்கே கேட்டது. எனக்கும் உறைத்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம்
ஆகவில்லை.... ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்துவிட்டதை
எண்ணும்போது, மனம்தான் வாழ்க்கையுடன் என்னமாய்த் தர்க்கம்
புரிகிறது?
'அதோ, அந்த பார்வையற்றவனின் அலுமினியப் பாத்திரத்தில்
செப்புக்காசுகளின் நடுவே ஒளிவிட்டுச் சிரிக்கிறதே இரண்டணா, அது
என்னுடையது!
'அது எப்படி உன்னுடையதாகும்? நீ கொடுத்துவிட்டாய்;
அவன் வாழ்த்திவிட்டான்!'
'இப்ப சந்தியில் நிற்கிறேனே? அதில் ஓரணா கூடவா
எனக்குச் சொந்தமில்லை ? அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது
என்னுடையது அல்லவா? கேட்டால் தருவானா? தரமாட்டான்.
அவனுக்கு எப்படித் தெரியும் அதைப் போட்டவன் நான் என்று!
‘எடுத்துக்கொண்டால்..? அதோ, ஒரு ஆள் ஓரணா போட்டுவிட்டு அரையணா எடுத்துக்
கொள்கிறானே! அதுபோல ஓரணாவைப் போட்டுவிட்டு அந்த என்னுடைய இரண்டணாவை எடுத்துக்
கொண்டால்...?'
'இது திருட்டு அல்லவா?'
'திருட்டா? எப்படியும் என் பக்கத்திலிருந்து தர்மமாக
ஓரணா அவனுக்குக் கிடைக்குமே! அந்த ஓரணா புண்ணியம் போதும்; என்
காசை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்று பொருளாதார ரீதியாய்க் கணக்கிட்டுத்
தர்க்கம் பண்ணியபோதிலும், திருடனைப் போல் கை நடுங்குகிறது.
ஓரணாவைப் போட்டேன்; இரண்டணாவை எடுத்துக்கொண்டு திரும்பினேன்.
"அடப்பாவி!"
திரும்பிப் பார்த்தேன். பார்வையற்ற விழிகள் என்னை வெறிக்க, வாழ்த்தத் திறந்த வாயால் சபிப்பது போல் அவன் கேட்டான்...
"சாமி, இதுதானுங்களா தர்மம்? யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா
போட்டாரு, அதை எடுத்துக்கிட்டு, ஓரணா
போடறியே? பார்வையற்றவனை ஏமாத்தாதே, நரகத்துக்குத்தான்
போவே!"
நெருப்புக்
கட்டியைக் கையிலெடுத்ததுபோல் அந்த இரண்டணாவை அலுமினியத் தட்டில் உதறினேன்.
இப்பொழுது என் கணக்கில் மூன்றனா தர்மம்.
"தெரியாம
எடுத்துட்டேன்' என்று சொல்லும்போது, என்
குரலில் திருட்டுத்தனம் நடுங்கியது.
ஒரு
பெண் அரையணா போட்டுவிட்டுக் காலணா எடுத்துச் சென்றாள். பார்வையற்றவன் உடனே இரண்டணா
இருக்கிறதா என்று தடவிப் பார்த்தான். அப்படிப் பார்த்தபோது அது இல்லாதிருந்துதான்
நான் சிக்கிக்கொண்டேன் என்று புரிந்தது. அது அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த செல்வம்.
விட மனம் வருமா?
நான்
யோசித்தேன்.
'அது அவன் பணமா?’
‘ஆமாம்!'
'நான்தானே தந்தேன்!'
'காசைத்தான் கடன் தரலாம்; தருமத்தைத் தரமுடியுமா?
தருமத்தை யாசித்து, தந்தால்தான் பெறவேண்டும்.’
வெகுநேரம்
நின்றிருந்தேன். நான் போகவேண்டிய ரயில் வந்து போய்விட்டது. அடுத்த வண்டிக்கு
இன்னும் நேரமிருக்கிறது. தர்மத்தின் பலனை அடுத்த ஸ்டேஷன்வரை கால்வலிக்க நடந்து
அனுபவித்தேன்.
சில
வருஷங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு கோர ரயில் விபத்தைப் பற்றி நீங்கள்
அறிந்திருப்பீர்கள். அது, அன்று நான் போக இருந்து, தவறவிட்ட ரயில்தான். இந்த விபத்திலிருந்து நான் எப்படித்தப்பினேன்?
தருமம் காத்ததா?
எனக்குத்
தெரியாது. இதெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது!
நூல் வெளி
ஜெயகாந்தன்
பேசி,
'எதற்காக எழுதுகிறேன்?' என்ற தலைப்பில் கட்டுரையாகத் தொகுக்கப்பட்ட பகுதியும் 'யுகசந்தி' என்ற
தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'தர்க்கத்திற்கு
அப்பால்' என்னும் சிறுகதையும் பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ளன. தான் வாழ்ந்த காலத்தில் சிக்கல்கள் பலவற்றை ஆராய, எடுத்துச்சொல்ல, தன் பார்வைக்கு உட்பட்ட தீர்ப்பைச்
சொல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கையே படைப்பு. அவருடைய படைப்புகள் உணர்ச்சி சார்ந்த
எதிர்வினைகளாக இருக்கின்றன. இதுவே அவருக்குச் ‘சிறுகதை
மன்னன்’ என்ற பட்டத்தைத் தேடித்தந்தது. இவர் குறும்புதினங்களையும்
புதினங்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளார்; தன்
கதைகளைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்; தலைசிறந்த உரத்த
சிந்தனைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்; சாகித்திய
அகாதெமி விருதையும் ஞானபீட விருதையும் பெற்ற இவருடைய கதைகள்
பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கற்பவை கற்றபின்....
•
வகுப்பு மாணவர்களின் படைப்புகளைத் திரட்டிக் குழுவாக இணைந்து கையெழுத்து இதழ்
ஒன்றை உருவாக்குக.