Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 9 : Anbin mozhi

   Posted On :  22.07.2022 04:31 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி

கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 9 : அன்பின் மொழி : திறன் அறிவோம்பாடநூல் வினாக்கள் - பலவுள் தெரிக.

1. “இவள் தலையில் எழுதியதோ

கற்காலம் தான் எப்போதும் ...”- இவ்வடிகளில் கற்காலம் என்பது.

) தலைவிதி

) பழையகாலம்

) ஏழ்மை

) தலையில் கல் சுமப்பது

[விடை : தலையில் கல் சுமப்பது]

 

2. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது.

) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்.

) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பது.

) அறிவியல் முன்னேற்றம்

) வெளிநாட்டு முதலீடுகள்.

[விடை : பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பது]

 

3. பூக்கையைக் குவித்துப் பூவே பரிவோடு காக்க என்று ........... வேண்டினார்.

) கருணையன் எலிசபெத்துக்காக

) எலிசபெத் தமக்காக

) கருணையன் பூக்களுக்காக

) எலிசபெத் பூமிக்காக

[விடை : கருணையன் எலிசபெத்துக்காக]

 

4. வாய்மையே மழைநீராகி - இத் தொடரில் வெளிப்படும் அணி

) உவமை

) தற்குறிப்பேற்றணி

) உருவகம்

) தீவகம்

[விடை : உருவகம்]

 

5. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன். இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது.

) நம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்.

) சமூகப் பார்வையோடு கலைப் பணி புரியவே எழுதினார்.

) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்.

) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

[விடை: சமூகப் பார்வையோடு கலைப் பணி புரியவே எழுதினார்]

 

குறுவினா


1. தீவக அணியின் வகைகள் யாவை?

தீவக அணி, முதல் நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் என்னும் மூன்று வகையாக வரும்.

 

2. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. இத்தொடரை இரு தொடர்களாக்குக.

• நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு. நான் எழுதுவதற்கு தூண்டலுக்குரிய காரணம் உண்டு.

 

3. “காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்" - உவமை உணர்த்தும் கருத்து யாது?

நெற்பயிர் வளர்ந்து கதிரை ஈன்று நெல்மணிகளைக் காணும் முன்னரே மழைத்துளி இல்லாமல் காய்ந்துவிட்டது போல என்பது உவமை.

திருமுழுக்கு யோவான், கானகத்தில் தன்தாயார் எலிசபெத் அம்மாளுடன் வாழ்ந்த சூழலில் அவருடைய தாயார் இறந்து விட்டார். எனவே, நெற்பயிர் கதிரை ஈன்று நெல்மணிகள் முற்றுவதற்கு முன்னால் மழையின்றிப் பட்டுப் போனதைப் போல, திருமுழுக்கு யோவான் வளர்ந்து பெரிய மனிதராகி இச்சமுதாயத்திற்கு நற்பலன்களை வழங்குவதற்கு முன்னரே அவருடைய தாய் எலிசபெத் இறந்து போனது, நெற்பயிர் காய்ந்தது என்ற உவமைக்குக் கருத்தாக அமைகிறது.

 

4. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது - இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?


சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.

 

5. ‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

நாள் தோறும் சுமக்கும் தலைச்சுமைதான் "தலைக்கனமே வாழ்வு" என்று சித்தாளின் வாழ்வைக் குறித்து நாகூர் ரூமி கூறுகிறார்.

 

சிறுவினா


1. "சித்தாளின் மனச் சுமைகள்

செங்கற்கள் அறியாது" - இடச்சுட்டிப் பொருள் தருக.

இடம் :

நாகூர் ரூமி எழுதிய "சித்தாளுஎன்னும் கவிதையில் இடம் பெறுகின்ற வரிகள்.

பொருள் :

நாகூர் ரூமி எழுதிய "சித்தாளு" என்னும் கவிதையில் சித்தாளாகப் பணிபுரிபவரின் மனச்சுமைகளைச் செங்கற்கள் அறியாது.

விளக்கம் :

சித்தாளாகப் பணிபுரிபவர்களின் வாழ்க்கையின் அவலங்களை நாகூர்ரூமி வர்ணிக்கிறார்.

கற்கால வாழ்க்கை வாழ்பவன் தலைக்கனமே வாழ்வாகக் கொண்டு ஆள்வான்.

அடுத்தவர்கள் கனவுக்காக அலுக்காமல் உழைப்பவள்

அடுத்த வேளை உணவுக்காக அவள் செத்தாலும் பெரிய மாற்றங்கள் உண்டாவதில்லை.

 

2. ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றை "தர்க்கத்திற்கு அப்பால் கதை மாந்தர் வாயிலாக விளக்குக.

• ஜெயகாந்தன் தன் பையில் இருந்த ஒரு வெள்ளி ரூபாய் நாணயத்தில் பன்னிரண்டணாவை இரயில் கட்டணத்திற்காக ஒதுக்கிவிட்டு இரண்டணாவை வைத்து காபி குடிக்கின்றார். மீதமுள்ள இரண்டணாவை என்ன செய்யலாம் என்று யோசிக்கையில், ஸ்டேஷனுக்குள் நுழையும் இடத்தில் ஒரு ஓரமாய் உட்கார்ந்திருந்த அந்தக் குருட்டுப் பிச்சைக்காரனைப் பார்க்கிறார். அவன் எதிரே இருந்த அலுமினியப் பாத்திரத்தில் வெறும் செப்புக் காசுகளே கிடந்தன. அவனுக்கு அவர் இரண்டணா பிச்சை போடுகிறார்.

• பின்னர் இரயில் கட்டணம் பதின்மூன்று அணா என்றறிந்து ஒரு அணாவிற்காக என்ன செய்வது என்று யோசிக்கிறார். பிச்சைக்காரனுக்குப் போட்ட இரண்டணாவிலிருந்து ஓரணாவை எடுத்துக் கொள்ளலாமா என்று யோசிக்கிறார். அதற்காக மிகவும் தயங்கி பின்னர் மெதுவாக தைரியம் கொண்டு ஓரணாவைப் போட்டுவிட்டு இரண்டணாவை எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்கிறார். அப்படி எடுத்துக் கொள்ளும்போது பிச்சைக்காரன் அவரை "சாமி, இது தானுங்களா தர்மம்? யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா போட்டாரு, அதை எடுத்துக்கிட்டு, ஓரணா போடறியே? குருடனை ஏமாத்தாதே, நரகத்துக்குதான் போவே!" என்று சொல்லவும் நெருப்புக்கட்டியைக் கையிலெடுத்தது போல் அந்த இரண்டணாவை அலுமினியத் தட்டில் மீண்டும் உதறுகிறார். இப்பொழுதாவது அவர் கணக்கில் மூன்றணா தர்மம்.

இவ்வாறு ஜெயகாந்தன் கதை மாந்தரின் மனப் போராட்டத்தை துல்லியமாக சித்தரிப்பதின் மூலம் கதை மாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறியதில்லை.

 

3. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

"நான் உயிர்பிழைக்கும் வழி அறியேன்"

"நினைந்து கண்ட அறிவனுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்".

"உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிகளை அறியேன்"

"காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்" என்று கருணையன் கூறுகிறார்.

 

4. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

அணி விளக்கம் :

இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

.கா

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

"வாரல்" என்பன போல் மறித்துக்கை காட்ட

பாடலின் பொருள் :

கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பது போல கை காட்டியது என்பது பொருள்.

அணிப் பொருத்தம் :

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்ற போது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்றையாக அசைந்தன. ஆனால், இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக் கருதி அக்கொடிகள் கையை அசைத்து இம்மதுரைக்குள் வரவேண்டாம் என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றி கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

 

நெடுவினா


1. கருணையின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

எலிசபெத்து அம்மையார் அடக்கம், கருணையன் கண்ணீர், கருணையன், தன் மலர் போன்ற கையைக் குவித்து "பூமித்தாயே! என் அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக" என்று கூறி குழியினுள் அழகிய மலர் படுக்கையைப் பரப்பினார். இவ்வுலகில் செம்மையான அறங்களையெல்லாம் தன்னுள் பொதிந்து வைத்து பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை, மண் இட்டு மூடி அடக்கம் செய்து, அதன் மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒரு சேரப் பொழிந்தான்.

"என் தாய், தன் வாயாலே மணி போன்று கூறும் உண்மையான சொற்களையே மழை நீராக உட்கொண்டு, அத்தாயின் மார்பில் ஒரு மணி மாலையென அசைந்து, அழகுற வாழ்ந்தேன், ஐயோ! இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல் மணிகளைக் காணும் முன்னே தூயமணி போன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டதைப் போல, நானும் இப்போது என் தாயை இழந்து வாடுகின்றேனே!"

"என் மனம் பரந்து நின்ற மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட மலரைப் போல வாடுகிறது. தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருந்துவது போன்றது என் துயரம். துணையைப் பிரிந்த ஒரு பறவையைப் போல நான் இக்காட்டில் அழுது இரங்கி வாடுகிறேன். சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டுச் செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல ஆனேன்.''

"நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன், நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன், உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன், காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன், என் தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன். என்னைத் தவிக்கவிட்டு விட்டு என் தாய் தான் மட்டும் தனியாகப் போய் விட்டாளே!"

இயற்கை கொண்ட பரிவு :

நவமணிகள் பதித்த மணிமாலைகளைப் பிணித்தது போன்று நல்ல அறங்களை எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன், இவ்வாறு புலம்பிக் கூறினான். அது கேட்டுப் பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன் மலர்கள் பூத்த மலர்கள் தோறும் உள்ள மணம் வீசும் மலர்களும் மலர்ந்த சுனைதோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போல் கூச்சலிட்டன.

 

2. ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

இதோ! ஓர் அரிய வாய்ப்பு

இனிமை வார இதழ் வெளியிடும்.

சிறுகதை மன்னன்

ஜெயகாந்தனின் நினைவுச் சிறப்பிதழ் !

வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் ! உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள்.

மாணவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு.

அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.

முன்பதிவுக்கு / தொலைபேசி எண் 044-45521350

 

3) அழகிரிசாமியின்ஒருவன் இருக்கிறான்சிறுகதையின் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

முன்னுரை:

ஆதரவின்றி வாழும் நிலை இரக்கத்தக்கது! எப்படிப்பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும். அந்தத் துணை தான் மனிதத்தின் வேருக்கு நீர். அதில் மனிதம் துளிர்க்கும். யாரையும் அலட்சியப்படுத்தாமல் அனைவரையும் நேசிக்க வேண்டும்.

குப்புசாமியின் தோற்றம் :

குப்புசாமிக்கு வயது இருபத்தைந்து இருக்கும். எலும்பும் தோலுமான உடம்பு எண்ணெய் காணாத தலை, காடாக வளர்ந்துள்ளது. சட்டையும் வேஷ்டியும் ஒரே அழுக்கு. சட்டையில் ஒரு பொத்தான் கூட இல்லை. காய்ந்து போன விழிகளில் ஒருவிதமான பயம். தன் நிலையை எண்ணிக் கூசும் ஓர் அவமானம்.

வயிற்றுவலிக்காரன்:

குப்பச்சாமிக்குத் தாய் தகப்பன் கிடையாது. காஞ்சிபுரத்திலுள்ள தாய் மாமன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு சைக்கிள் ரிப்பேர்க் கடையில் கூலி வேலை செய்தான். வயிற்று வலி காரணமாக ஆறேழு மாதங்களாக வேலை இல்லை. சம்பாத்தியமும் இல்லை. நோயும் வேறு. தாய்மாமன் விரட்டி விட்டதால் வைத்தியம் பார்ப்பதற்கு சித்தியை நம்பி சென்னைக்கு வந்துள்ளான்.

பக்கத்து வீட்டுக்காரர் மனைவியின் கரிசனம்

சித்தி வீட்டில் படுக்க இடம் இல்லாததால் தன் ஜன்னலுக்கு நேராகப் படுத்திருந்த குப்புசாமியைப் பற்றி பக்கத்து வீட்டுக்காரர் தன் மனைவியிடம் குறை சொன்ன போது "பாவம் நோயாளியாய் இருக்கிறான் கிடந்துட்டுப் போகட்டும்" என்றாள். மிகுந்த இரக்கத்தோடு குப்புசாமியைப் பற்றி தன் கணவர் குறை கூறும் பொழுதெல்லாம் கண்டித்தாள்.

வீரப்பனின் கடிதத்தைப் படித்துவிட்டு ஏழைகள் தான் எவ்வளவு பிரியமாக இருக்கிறார்கள்! என்று உணர்ச்சிவயப்பட்டாள். குப்புசாமியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போகலாமா? என்று கணவன் கேட்டதும் ஆனந்தமடைந்து பழங்கள் வாங்கிச் செல்லலாம் என்றாள் கனிவுடன்.

காஞ்சிபுரத்தான் ஆறுமுகத்தின் மனிதம் :

குப்புசாமியைத் தேடி காஞ்சிபுரத்திலிருந்து ஆறுமுகம் வந்தான். குப்புசாமி வேலை செய்த சைக்கிள் கடைக்கு எதிரே ஒரு விறகுக் கடையில் கூலி வேலை செய்கிறான். குப்புசாமியின் நண்பன் வீரப்பன் கொடுத்தனுப்பிய மூனு ரூபாயையும் ஒரு லெட்டரையும் பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்து குப்புசாமியிடம் கொடுக்கச் சொன்னான்.

ஒரு நிமிஷம் யோசித்தவன். தன் பிள்ளைகளுக்கு வாங்கிய நாலு சாத்துக்குடி பழங்களிலிருந்து இரண்டு பழங்களை எடுத்துக் கொடுத்தான். மேலும் தன் உபயமாக ஒரு ரூபாய் நோட்டு ஒன்றையும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்க்கச் சொன்னான். அவன் குப்புசாமிக்காகக் கொடுத்தானோ. குப்புசாமிக்காக காஞ்சிபுரத்தில் கண்ணீர் வடிக்கும் வீரப்பனுக்காகக் கொடுத்தானோ? தெரியாது. ஆனால், அவனிடம் துளிர்ந்த மனிதம் மகத்தானது.

இடுக்கண் களையும் நட்பு :

குப்புசாமி நோய் காரணமாக வேலையை இழந்திருந்த சமயத்தில் தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த போது வீரப்பன் தான் அவ்வப்போது சாப்பாடு போடுவானாம், வீரப்பன் ஒரு மேஸ்திரியிடம் சிப்பந்தியாக வேலை செய்பவன். வேலை இல்லாமல் போய் வரும்படியும் இல்லாமல் கஷ்டப்படுகின்ற ஏழையாக இருந்தாலும் கடன் வாங்கியாவது தன் சிநேகிதன் குப்புசாமிக்கு உதவி செய்தானாம்.

மனிதநேயக் கடிதம் :

என் உயிர் நண்பன் குப்புசாமிக்கு. நீ இங்கிருந்து போனதிலிருந்து என் உயிர் இங்கே இல்லை. நீ உடம்ப சௌக்கியமாகி வர வேண்டும் என்று தினமும் கோயிலுக்குப் போகிறேன். ஆறுமுகம் பட்டணம் போவதாகச் சொன்னதும் கடன் வாங்கி மூன்று ரூபாய் அவனிடம் கொடுத்தனுப்பியிருக்கிறேன். இன்னோரு இடத்திலும் பணம் கேட்டிருக்கிறேன், கிடைத்ததும் பார்க்க வருவேன். உன்னைப் பார்த்தால் தான் நான் தின்னும் சோறு சோறாக இருக்கும் என்று வீரப்பன் எழுதிய கடிதம் அவனது மனித நேயத்தை மிளிரச் செய்கிறது.

ஒருவன் இருக்கிறான் :

கடிதத்தைப் படித்த பக்கத்து வீட்டுக்காரரால் நிம்மதியாக உட்கார முடியவில்லை. மனைவியின் எதிரே கண்ணீர் விட வெட்கப்பட்டு அவளிடம் கடிதத்தைப் கொடுத்துவிட்டு குளியல் அறைக்குள் போய் கண்ணீர் சிந்தினார். குப்புசாமி நலம் பெறப் பொய்யாக வாழ்த்தியதை எண்ணி வருந்தினார். மனைவியிடம் குப்புசாமியைப் பார்க்க நாமும் ஆசுபத்திரிக்குப் போகலாமா? என்று கேட்டு, அவளை ஆனந்தப்படுத்தினார்.

உலகமே வெறுத்து ஒதுக்கிய குப்புசாமியிடம் உயிரையே வைத்திருக்கும் அந்த புண்ணிய மூர்த்தியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான். குப்புசாமிக்கு மட்டுமா? எனக்குமே ஒருவனாக அவன் கடைக்குச் சென்றான். வீரப்பனின் கடிதம் கல் நெஞ்சையும் கரைய வைத்து அதில் மனிதத்தைத் துளிரச் செய்தது.

முடிவுரை:

மனிதர்கள் அன்பால் பிணைக்கப்பட்டவர்கள். அவர்களின் தலையாயப் பண்பே மனித நேயம்தான். ஒருவருக்கொருவர் ஆதரவாய் அரவணைப்பாய், ஆறுதல்மொழி கூறுபவராய் இருந்தால் வாழ்வே சொர்க்கமாகும். இத்தகு மனிதநேயப் பண்பு மிக்க மனிதர்களால் தான் இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது.


Tags : Chapter 9 | 10th Tamil இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 9 : Anbin mozhi : Questions and Answers Chapter 9 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி