Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 10th Tamil : Chapter 9 : Anbin mozhi

   Posted On :  26.07.2022 01:03 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி

வாழ்வியல்: திருக்குறள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

திருக்குறள்


14. ஒழுக்கம் உடைமை

1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்துஓம்பித்

தேரினும் அஃதே துணை.

3. ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.

4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

5. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து.

7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

9. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல்.

10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

 

36. மெய் உணர்தல்

1. பொருள்அல் லவற்றைப் பொருள்என்று உணரும்

மருளான்ஆம் மாணாப் பிறப்பு.

2. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசுஅறு காட்சி யவர்க்கு.

3. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணியது உடைத்து.

4. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே

மெய்உணர்வு இல்லா தவர்க்கு.

5. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

6. கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றுஈண்டு வாரா நெறி

7. ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.

8. பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்

செம்பொருள் காண்பது அறிவு.

9. சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரும் நோய்.

10. காமம் வெகுளிமயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்.

 

45. பெரியாரைத் துணைக்கோடல்

1. அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன்அறிந்து தேர்ந்து கொளல்.

2. உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.

3. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.

4. தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை.

5. சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

6. தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்தது இல்.

7. இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே

கெடுக்கும் தகைமை யவர்?

8. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்.

9. முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்

சார்புஇலார்க்கு இல்லை நிலை.

10. பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

 

56. கொடுங்கோன்மை

1. கொலைமேற் கொண்டாரின் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்துஒழுகும் வேந்து.

2. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

கோலொடு நின்றான் இரவு.

3. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாள்தொறும் நாடு கெடும்.

4. கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.

5. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.

6. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்

மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.

7. துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்

அளிஇன்மை வாழும் உயிர்க்கு.

8. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோல்கீழ்ப் படின்.

9. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.

10. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.

 

58. கண்ணோட்டம்

1. கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை

உண்மையான் உண்டுஇவ் வுலகு.

2. கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதுஇலார்

உண்மை நிலக்குப் பொறை.

3. பண்என்னாம் பாடற்கு இயைபுஇன்றேல்; கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்?

4. உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்?

5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்

புண்என்று உணரப் படும்.

6. மண்ணோடு இயைந்த மரத்துஅனையர் கண்ணோடு

இயைந்துகண் ணோடா தவர்.

7. கண்ணோட்டம் இல்லவர் கண்இலர்; கண்உடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.

8. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்துஇவ் வுலகு.

9. ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்துஆற்றும் பண்பே தலை.

10. பெயக்கண்டு நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

 

62. ஆள்வினை உடைமை

1. அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

2. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

3. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னும் செருக்கு.

4. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாள்ஆண்மை போலக் கெடும்.

5. இன்பம் விழையான் வினைவிழையான் தன்கேளிர்

துன்பம் துடைத்துஊன்றும் தூண்

6. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

7. மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்

தாள்உளாள் தாமரையி னாள்.

8. பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து

ஆள்வினை இன்மை பழி.

9. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

10. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்

தாழாது உஞற்று பவர்.

 

64. அமைச்சு

1. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு

2. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு.

3. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்லது அமைச்சு

4. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு.

5. அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்

திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை.

6. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாஉள முன்நிற் பவை.

 7. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்.

8. அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழைஇருந்தான் கூறல் கடன்.

9. பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்.

10. முறைப்படச் சூழ்ந்தும் முடிவுஇலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்.

 

76. பொருள் செயல்வகை

1. பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருள்அல்லது இல்லை பொருள்.

2. இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு.

3. பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று.

4. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

தீதுஇன்றி வந்த பொருள்.

5. அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்

புல்லார் புரள விடல்.

6. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்.

7. அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்

செல்வச் செவிலியால் உண்டு.

8. குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று

உண்டாகச் செய்வான் வினை.

9. செய்க பொருளை; செறுநர் செருக்கறுக்கும்

எஃகு அதனின் கூரியது இல்.

10. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு.

 

83. கூடா நட்பு

1. சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு.

2. இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்.

3. பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்

ஆகுதல் மாணார்க்கு அரிது.

4. முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா

வஞ்சரை அஞ்சப் படும்.

5. மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்

சொல்லினால் தேறல்பாற்று அன்று.

6. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப்படும்.

7. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான்.

8. தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.

9. மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லல் பாற்று.

10. பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு

அகநட்பு ரீஇ விடல்.

 

87. பகை மாட்சி

1. வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பா

மெலியார்மேல் மேக பகை.

2. அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு?

3. அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு.

4. நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்

யாங்கணும் யார்க்கும் எளிது.

5. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

பண்புஇலன் பற்றார்க்கு இனிது.

6. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேணாமை பேணப் படும்.

7. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து

மாணாத செய்வான் பகை.

8. குணன்இலனாய்க் குற்றம் பலஆயின் மாற்றார்க்கு

இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து.

9. செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலா

அஞ்சும் பகைவர்ப் பெறின்.

10. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்

ஒல்லானை ஒல்லாது ஒளி.

 

101. நன்றிஇல் செல்வம்

1. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்.

2. பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்

மருளான்ஆம் மாணாப் பிறப்பு.

3. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை.

4. எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன்?

5. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடிஉண் டாயினும் இல்.

6. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று

ஈதல் இயல்பிலா தான்.

7. அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகுநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று.

8. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

நச்சு மரம்பழுத் தற்று.

9. அன்புரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர்.

10. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறம்கூர்ந்து அனையது உடைத்து.

 

103. குடிசெயல் வகை

1. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுஉடையது இல்.

2. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.

3. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.

4. சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்

தாழாது உஞற்று பவர்க்கு.

5. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.

6. நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

இல்ஆண்மை ஆக்கிக் கொளல்.

7. அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை.

8. குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து

மானம் கருதக் கெடும்.

9. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்

குற்றம் மறைப்பான் உடம்பு?

10. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துஊன்றும்

நல்ஆள் இலாத குடி.

 

105. நல்குரவு

1. இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.

2. இன்மை எனஒரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.

3. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குரவு என்னும் நசை.

4. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொல்பிறக்கும் சோர்வு தரும்.

5. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்.

6. நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.

7. அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்.

8. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.

9. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதுஒன்றும் கண்பாடு அரிது.

10. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

 

106. இரவு

1. இரக்க இரத்தக்கார்க் காணின்; கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று.

2. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை

துன்பம் உறாஅ வரின்.

3. கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று

இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து.

4. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.

5. கரப்புஇலார் வையகத்து உண்மையான் கண்நின்று

இரப்பவர் மேற்கொள் வது.

6. கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.

7. இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து.

8. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று.

9. ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை?

10. இரப்பான் வெகுளாமை வேண்டும்; நிரப்புஇடும்பை

தானேயும் சாலும் சரி.

 

108. கயமை

1 மக்களே போல்வர் கவர் அவர்அன்

ஒப்பாரி யாம்கண்டது இல்.

2. நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்;

நெஞ்சத்து அவலம் இலர்.

3. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

மேவன செய்தொழுக லான்.

4. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்

மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

5. அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம்

அவாஉண்டேல் உண்டாம் சிறிது.

6. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான்.

7. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.

8. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ்.

9. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்.

10. எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்

விற்றற்கு உரியர் விரைந்து.

 

வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும்; அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற போக்கில் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறளின் 150 பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன

திருக்குறளை நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் பொருளுடன் கூறலாம்.  

வகுப்பு வாரியாகத் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி வைக்கலாம்.

இலக்கியமன்றக் கூட்டங்களில் குறட்பாக்கள் தொடர்பான கதைகள் சொல்லவும் நாடகங்கள் நடத்தவும் செய்யலாம்.

குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து “வினாடி வினா” நடத்தலாம்.

உலகப் பொதுமுறையாம் திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள், இசைப்பாடல்கள், சித்திரக் கதைகள் அசைவூட்டப் படங்கள் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

குறிப்பு: மாணவர்கள் எளிதில் படித்துப் பொருள் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சொற்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன; அலகிடுவதற்கு அன்று.


Tags : Chapter 9 | 10th Tamil இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 9 : Anbin mozhi : Valviyal: Thirukkural Chapter 9 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி : வாழ்வியல்: திருக்குறள் - இயல் 9 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : அன்பின் மொழி