Home | 9 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்து புத்தெழுச்சி இயக்கம்

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் - இந்து புத்தெழுச்சி இயக்கம் | 10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century

   Posted On :  27.07.2022 06:05 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

இந்து புத்தெழுச்சி இயக்கம்

(அ) சுவாமி தயானந்த சரஸ்வதி மற்றும் ஆரிய சமாஜம், 1875 (ஆ) இராமகிருஷ்ண பரமஹம்சர் (இ) சுவாமி விவேகானந்தர் (ஈ) பிரம்மஞான சபை

இந்து புத்தெழுச்சி இயக்கம்


(அ) சுவாமி தயானந்த சரஸ்வதி மற்றும் ஆரிய சமாஜம், 1875

பஞ்சாபில், ஆரிய சமாஜம் சீர்திருத்த இயக்கங்களுக்குத் தலைமையேற்றது. இது 1875இல் நிறுவப்பட்டது, இவ்வமைப்பை நிறுவியவர் மேலை கங்கைச் சமவெளியில் அலைந்து திரிந்து கொண்டிருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி (1824-83) ஆவார். 

சுவாமி தயானந்தர் பின்னர் தனது கருத்துகளைப் போதிப்பதற்காகப் பஞ்சாபில் தங்கினார். அவருடைய நூலான சத்யார்த்த பிரகாஷ் பெரும்பாலோரால் படிக்கப்பட்டது. குழந்தைத் திருமணம், விதவை மறுமணத்திற்கு மறுப்பு போன்ற பழக்கங்களும் அயல்நாடு சென்றால் தீட்டு என்று சொல்லப்படுதலும் மறைநூல்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அறிவித்தார். அவர் முன்வைத்த நேர்மறையான கொள்கைகள் கட்டுப்பாடான ஒரு கடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டை நிராகரித்தல், பிராமணர் மேலாதிக்கம் செலுத்தும் சடங்குகள், சமூக நடைமுறைகள் ஆகியவற்றை மறுத்தல் என்பனவாகும். ஆரிய சமாஜம் இந்து மதத்திலிருந்த மூடநம்பிக்கைகளை மறுத்தது. அதனுடைய முழக்கம் வேதங்களுக்குத் திரும்புவோம் என்பதாகும்.

ஆரிய சமாஜம் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மதமாற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன் முக்கியக் குறிக்கோள் எதிர்மத மாற்றம் என்பதாகும். ஏற்கனவே இஸ்லாமுக்கும் கிறித்தவ மதத்திற்கும் மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற சுத்தி (Suddhi)' எனும் சுத்திகரிப்புச் சடங்கை சமாஜம் வகுத்துக்கொடுத்தது.

ஆரிய சமாஜம் சமூக சீர்திருத்தக்களத்திலும் கல்வியைப் பரப்பும் பணியிலும் முக்கிய சாதனைகள் புரிந்தது. சமாஜம் பல தயானந்தா ஆங்கில வேதப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்கியது.


(ஆ) இராமகிருஷ்ண பரமஹம்சர்

கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேசுவரம் என்னும் ஊரைச்சார்ந்த எளிய அர்ச்சகரான இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886) பஜனைப்பாடல்களை மனமுருகிப் பாடுவதைப்போன்ற வழிமுறைகள் பேரின்ப நிலையை அடைந்து அந்நிலையில் ஆன்மரீதியாக கடவுளோடு ஒன்றிணைவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். புனிதத்தாயான கடவுள் காளியின் தீவிர பக்தரான அவர் அக்கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார். அவருடைய கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும். ஜீவன் என்பதே சிவன் எனவும் அவர் கூறினார் (வாழ்கின்ற அனைத்து உயிர்களும் இறைவனே). மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.

இராமகிருஷ்ணா மிஷன்

இராமகிருஷ்ணருடைய முதன்மையான சாதனையே, பிரம்மசமாஜம் போன்ற சீர்திருத்த அமைப்புகள் முன்வைத்தப் பகுத்தறிவுக் கருத்துகளின் பால் அதிருப்தியுற்ற கல்வியறிவு பெற்ற இளைஞர்களைத் தன்பால் ஈர்த்ததுதான். 1886இல் அவர் இயற்கை எய்திய பின்னர் அவருடைய சீடர்கள் தங்களை ஒரு மதம் சார்ந்த சமூகமாக அமைத்துக்கொண்டு இராமகிருஷ்ணரையும் அவரின் போதனைகளையும் இந்தியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பரப்பும் பெரும்பணியை மேற்கொண்டனர். இப்பெரும்பணியின் பின்புலமாய் இருந்தவர் சுவாமி விவேகானந்தர். கிறித்தவசமயப் பரப்பு நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பைப் பின்பற்றி விவேகானந்தர் இராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார். இராமகிருஷ்ணா மிஷன் சமயச் செயல்பாடுகளோடு மட்டும் தனதுப்பணிகளை நிறுத்திக்கொள்ளவில்லை. மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவது, மருத்துவ உதவி, இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரணப்பணிகளை மேற்கொள்வது போன்ற சமூகப்பணிகளிலும் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.


(இ) சுவாமி விவேகானந்தர்

பின்னாளில் சுவாமி விவேகானந்தர் என்றழைக்கப்பட்ட நரேந்திரநாத் தத்தா (1863-1902) இராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடராவார். படித்த இளைஞரான அவர் இராமகிருஷ்ணரின் கருத்துகளால் கவரப்பட்டார். மரபுசார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மனநிறைவு பெறாத அவர், நடைமுறை வேதாந்தமான மனிதகுலத்திற்குத் தொண்டுசெய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார். மதத்தோடு தொடர்புடையது எனும் ஒரே காரணத்திற்காக அனைத்து நிறுவனங்களையும் பாதுகாக்கும் மனப்பாங்கினை அவர் கண்டனம் செய்தார். பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அவர் இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவருடைய சிந்தனைகள், பொருள் உற்பத்தியில் மேலைநாடுகள் செய்திருந்த சாதனைகளைக் கண்டு தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்த இந்தியர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுவதாய் அமைந்தது. 1893இல் சிக்காகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்தி மார்க்கத் தத்துவம் குறித்தும் அவராற்றிய சொற்பொழிவுகள் அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது. இந்து சமயச் சடங்குகளில் கலந்துகொள்ளக்கூடாதென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களும் அதுபோன்ற சடங்குகளில் கலந்துகொள்ளக் கட்டாயம் அனுமதிக்கப்படவேண்டும் என்றார். விவேகானந்தரின் செயலாக்கமிக்க கருத்துகள் மேற்கத்தியக் கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை ஏற்படுத்தியது. வங்கப்பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்.



(ஈ) பிரம்மஞான சபை

மேடம் H.P. பிளாவட்ஸ்கி (1831-1891) மற்றும் கர்னல் H.S. ஆல்காட் (1832-1907) ஆகியோரால் பிரம்மஞானசபை 1875இல் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. இவ்வமைப்புப் பின்னர் 1886இல் இந்தியாவில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்டது.

பிரம்மஞானசபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது. இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞானசபை முக்கியப் பங்காற்றியது. இந்து மறை நூல்களின் மீது மேலைநாட்டவர் காட்டிய ஆர்வம், படித்த இந்தியர்களிடையே தங்கள் பாரம்பரியம், பண்பாடு குறித்த அளப்பரியப் பெருமிதத்தை ஏற்படுத்தியது.

அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு

ஆல்காட்டின் மறைவுக்குப் பின்னர் இவ்வமைப்பின் தலைவராக அன்னிபெசன்ட் (1847-1933) தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக்கம் மேலும் செல்வாக்குப் பெற்றது. இந்திய தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற அவர் தன்னாட்சி இயக்கச் சங்கத்தை அமைத்து அயர்லாந்திற்கு வழங்கப்பட்டதைப் போல இந்தியாவிற்கும் தன்னாட்சி வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அன்னிபெசன்ட் பிரம்மஞானக் கருத்துக்களைத் தன்னுடைய நியூ இந்தியா (New India), காமன்வீல் (Commonweal) எனும் செய்தித்தாள்களின் மூலம் பரப்பினார்.



Tags : Social and Religious Reform Movements in the 19th Century 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்.
10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century : Hindu Revivalism Social and Religious Reform Movements in the 19th Century in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : இந்து புத்தெழுச்சி இயக்கம் - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்