வரலாறு | சமூக அறிவியல் - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் | 10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century
19ஆம் நூற்றாண்டில் சமூக,
சமய சீர்திருத்த இயக்கங்கள்
கீழ்க் காண்பனவற்றோடு அறிமுகமாதல்
• 19ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் புதிய
விழிப்புணர்ச்சியை உருவாக்கியதில் மேற்கத்தியச் சிந்தனைகள் மற்றும் கிறித்தவ
மதத்தின் செல்வாக்கு
• சமுதாய
மற்றும் சமயத்துறைகளில் ஏற்பட்ட போட்டிகள், உடன்கட்டை ஏறுதல் (சதி), அடிமைமுறை, தீண்டாமை, குழந்தைத்திருமணம் போன்ற
பழக்கங்களுக்கு எதிர்ப்பு
• உருவவழிபாடு, சடங்குகள், மூடநம்பிக்கைகள்
ஆகியனவற்றிற்கு எதிர்ப்பு
• இந்தியா
புத்துயிர் பெற்றதில் பிரம்ம சமாஜம்,
ஆரிய சமாஜம், இராமகிருஷ்ணா மிஷன், பிரம்மஞானசபை, அலிகார் இயக்கம்
ஆகியவற்றின் பங்களிப்பு
• பார்சிகள், சீக்கியர்கள் ஆகிய
சமூகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முக்கிய ஆளுமைகளின் பங்கு
• ஜோதிபா
பூலேயின் சமூக இயக்கமும், கேரளா, தமிழ்நாட்டில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்களும்
எழுத்தர்களை
உருவாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கிலக் கல்வி ஒரு புதிய ஆங்கிலக்
கல்வி பயின்ற நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியது. இவ்வர்க்கம் மேற்கத்தியக்
கருத்துக்களின், சிந்தனைகளின் தாக்கங்களுக்குள்ளானது.
கல்வியறிவு பெற்ற இந்நடுத்தர வர்க்கம் எண்ணிக்கையில் சிறிதாக இருந்தாலும்
அரசியலிலும், சீர்திருத்த இயக்கங்களிலும் தலைமை வகிக்கத்
தொடங்கியது. இருந்தபோதிலும் இந்தியச் சீர்திருத்தவாதிகள் தங்களுடையப் பழைய
கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் விமர்சனபூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்
பெரிதும் தயங்கினர். அதற்குப் பதிலாக அவர்கள் இந்தியப் பண்பாட்டிற்கும் மேலைப்
பண்பாடுகளுக்குமிடையே இணக்கத்தை ஏற்படுத்த முயன்றனர். இருந்தபோதிலும் அவர்களுடைய
கருத்துகளும் செயல்பாடுகளும் உடன்கட்டை ஏறுதல் (சதி),
பெண்
சிசுக்கொலை, குழந்தைத் திருமணம் போன்ற அனைத்து வகையான
கண்மூடித்தனமான மதநம்பிக்கைகள் மற்றும் சமூகத் தீமைகளை கட்டுப்படுத்த உதவியது.
பத்தொன்பதாம்
நூற்றாண்டின் சமயம் சார்ந்த சீர்திருத்த இயக்கங்களை இரண்டாக வகைப்படுத்தலாம்.
பிரம்ம சமாஜம், பிரார்த்தனை சமாஜம்,
அலிகார்
இயக்கம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் ஒருவகை ,
ஆரிய
சமாஜம், இராமகிருஷ்ணா மிஷன்,
தியோபந்த்
இயக்கம் போன்ற சமயப் புத்தெழுச்சி மீட்டெடுப்பு இயக்கங்கள் மற்றொருவகை. இவைகளைத் தவிர
ஒடுக்குமுறைப்பாங்குடைய சமூகக் கட்டமைப்பை எதிர்க்கும் முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட்டன. புனேயில் ஜோதிபாபூலே, கேரளாவில்
நாராயணகுரு, அய்யங்காளி,
தமிழகத்தில்
இராமலிங்க அடிகள், அயோத்திதாசர் ஆகியோர் இவ்வகைப்பட்டோராவர்.