Home | 9 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இஸ்லாமிய சீர்திருத்தங்கள்

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் - இஸ்லாமிய சீர்திருத்தங்கள் | 10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century

   Posted On :  27.07.2022 04:59 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

இஸ்லாமிய சீர்திருத்தங்கள்

இஸ்லாமிய சீர்திருத்தங்கள் : சர் சையத் அகமத்கான், அலிகார் இயக்கம், தியோபந்த் இயக்கம்

இஸ்லாமிய சீர்திருத்தங்கள்

1857ஆம் ஆண்டுப் பெரும்புரட்சி ஒடுக்கப்பட்ட பின்னர் இந்திய முஸ்லீம்கள் மேற்கத்தியப் பண்பாட்டைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர். மேற்கத்தியக் கல்வி, பண்பாடு, மேற்கத்திய சிந்தனைகள் ஆகியவை தங்கள் மதத்திற்கு ஆபத்தாய் அமையுமோ என அச்சமூகம் அஞ்சியது. ஆகையால் முஸ்லீம்களில் ஒரு சிறிய பிரிவினரே மேற்கத்தியக் கல்வி பயில முன்வந்தனர்.

சர் சையத் அகமத்கான்

டெல்லியில் உயர்குடி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த சையத் அகமத்கான் படிப்பறிவின்மையே குறிப்பாக, நவீன கல்வியறிவின்மையே இஸ்லாமியர்களுக்குப் பெருந்தீங்கு விளைவித்து, அவர்களைக் கீழ்நிலையில் வைத்துவிட்டது எனக்கருதினார். மேலைநாட்டு அறிவியலையும், அரசுப்பணிகளையும் ஏற்றுக்கொள்ளும்படி அவர் இஸ்லாமியர்களை வற்புறுத்தினார். அறிவியல் கழகமொன்றை நிறுவிய அவர் ஆங்கில நூல்களைக் குறிப்பாக அறிவியல் நூல்களை உருதுமொழியில் மொழியாக்கம் செய்தார்.

மேலெழுந்துவரும் தேசிய இயக்கத்தில் இணைவதைக் காட்டிலும் ஆங்கில அரசுடன் நல்லுறவு மேற்கொண்டால் இஸ்லாமியர் நலன்கள் பேணப்படும் என அவர் நம்பினார். எனவே அவர் இஸ்லாமியருக்கு ஆங்கிலக்கல்வியைப் பயிலும் படியும் அதில் கவனம் செலுத்தும்படியும் அறிவுரை கூறினார்.


அலிகார் இயக்கம்

சர் சையத் அகமத்கான் 1875ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கிலோ - ஓரியண்ட ல் கல்லூரியை (Aligarh Mohammedan Anglo-Oriental College) நிறுவினார். அலிகார் இயக்கம் எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியை மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது. இந்திய முஸ்லீம்களின் கல்விவரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும். 1920இல் இக்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது.

தியோபந்த் இயக்கம்

தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கமாகும். இவ்வியக்கம் பழமைவாத முஸ்லீம் உலேமாக்களால், தொடங்கப்பெற்றது. இவ்வுலேமாக்கள் முகமது குவாசிம் நானோதவி (1832-1880), ரஷித் அகமத் கங்கோத்ரி (1826-1905) ஆகியோரின் தலைமையில் 1866 இல் உத்தரப்பிரதேசத்தில் சகரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினர். இப்பள்ளியின் பாடத்திட்டம் ஆங்கிலக் கல்வியையும் மேலைநாட்டுப் பண்பாட்டையும் புறக்கணித்தது. இப்பள்ளியில் உண்மையான இஸ்லாமிய மதம் கற்றுத்தரப்பட்டது. இதன் நோக்கம் இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்கத்தையும் மதத்தையும் மீட்டெடுப்பதாய் அமைந்தது.

மௌலானா முகமத்-உல்-ஹசன் தியோபந்தின் புதிய தலைவரானார். அவரின் தலைமையில் இயங்கிய ஜமைத் - உல் - உலேமா (இறையியலாளர்களின் அவை) ஹசனுடைய கருத்துக்களான, இந்திய ஒற்றுமை எனும் ஒட்டுமொத்தச் சூழலில் முஸ்லீம்களின் அரசியல், சமய உரிமைகளின் பாதுகாப்பு என்பது குறித்த உறுதியான வடிவத்தை முன்வைத்தது.

 

Tags : Social and Religious Reform Movements in the 19th Century 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்.
10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century : Islamic Reforms Social and Religious Reform Movements in the 19th Century in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : இஸ்லாமிய சீர்திருத்தங்கள் - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்