19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் - தமிழ் நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள் | 10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century
தமிழ் நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்
வள்ளலார் எனப் பிரபலமாக
அறியப்பட்ட,
இராமலிங்க
சுவாமிகள் அல்லது இராமலிங்க அடிகள் (1823 - 1874) சிதம்பரத்திற்கு அருகேயுள்ள மருதூர்
எனும் கிராமத்தில் பிறந்தார். தந்தையாரின் மறைவுக்குப்பின்னர் அவரது குடும்பம்
சென்னையிலிருந்த அவருடைய சகோதரரின் இல்லத்திற்குக் குடிபெயர்ந்தது. முறையான
கல்வியை அவர் பெற்றிராவிட்டாலும் அளப்பரியப் புலமையைப் பெற்றிருந்தார். உயிர்களிடையே
நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
“துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம்
கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்"
எனும்
கருத்தினை முன்வைத்தார். அவர் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட
அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார். 1865இல்
சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரச சுத்த
சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1866இல்
தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல்
சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.
நாட்டில்
நிலவிய பசிக்கும் வறுமைக்கும் இராமலிங்கர் சாட்சியாய் இருந்தார். "பசியினால் இளைத்துப்போன,
மிகவும்
சோர்வுற்ற ஏழைமக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லுவதை நான் பார்த்தேன். இருந்தும்
அவர்களின் பசி போக்கப்படவில்லை என் இதயம் கடுமையாக வேதனைப்படுகிறது. கடுமையான நோயினால்
வேதனைப்படுபவர்களை எனக்கு முன்பாகப் பார்க்கிறேன். எனது இதயம் நடுங்குகிறது.
ஏழைகளாகவும் இணையில்லா நன்மதிப்பையும் களைப்படைந்த இதயத்தையும் கொண்டுள்ள
அம்மக்களை நான் பார்க்கிறேன், நான் பலவீனம் அடைகிறேன்."
(ஆ)
அயோத்தி தாசர்
பண்டிதர்
அயோத்தி தாசர் (1845-1914) ஒரு
தீவிரத் தமிழ் அறிஞரும் சித்த மருத்துவரும் பத்திரிக்கையாளரும் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார்.
சென்னையில் பிறந்த அவர் தமிழ், ஆங்கிலம்,
சமஸ்கிருதம்,
பாலி
ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். சரளமாகப் பேசக் கூடியவர். சமூகநீதிக்காக இயக்கம்
நடத்திய அவர், சாதியத்தின் கொடிய
பிடியிலிருந்து ஒடுக்கப்பட்டோர் விடுதலைபெறப் பாடுபட்டார். சாதிகளற்ற அடையாளத்தை
நிறுவமுயன்ற அவர் சாதிய மேலாதிக்கத்திற்கும் தீண்டாமைக்கும் எதிராகக் கண்டனக்குரல்
எழுப்பினார். கல்வியை வலிமை பெறுவதற்கான கருவியாகக் கருதிய அவர் தமிழகத்தில்
ஒடுக்கப்பட்டோருக்கென பல பள்ளிகள் உருவாக்கப்படுவதற்கு உந்து சக்தியாகத்
திகழ்ந்தார்.
ஒடுக்கப்பட்டோரின்
கோவில் நுழைவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர்
அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை நிறுவினார். 1882இல்
அயோத்தி தாசரும் ஜான் ரத்தினம் என்பவரும் "திராவிடர்க் கழகம்"
எனும்
அமைப்பை நிறுவினர். மேலும் 1885இல் "திராவிட பாண்டியன் எனும்
இதழையும் தொடங்கினார். "திராவிட
மகாஜனசபை" என்ற அமைப்பை 1891இல்
நிறுவிய அவர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார்.
பிரம்மஞான
சபையை நிறுவியவர்களில் ஒருவரான கர்னல் H.S. ஆல்காட்
ஏற்படுத்தியத் தாக்கத்தின் விளைவாக 1898இல்
இலங்கை சென்ற அவர் அங்கே பௌத்தத்தைத் தழுவினார். அதே ஆண்டில் பௌத்த மதத்தின் வழியே
பகுத்தறிவின் அடிப்படையிலான சமயத்தத்துவத்தைக் கட்டமைப்பதற்காக “சாக்கிய
பௌத்த சங்கம்” எனும்
அமைப்பை சென்னையில் நிறுவினார்.
1907இல் “ஒரு
பைசா தமிழன்” என்ற
பெயரில் ஒரு வாராந்திரப் பத்திரிக்கையைத் தொடங்கி அதை 1914இல்
அவர் காலமாகும் வரையிலும் தொடர்ந்து வெளியிட்டார்.