இந்திய-பங்களாதேஷ் உறவுகள்
பங்களாதேஷ் இந்தியாவின் அண்டை நாடுகளில் முக்கியமான அங்கமாகவும், பங்குதாரர்களில் இன்றியமையாததாகவும், வடகிழக்குப் பகுதியில் நிலைத்தன்மையின் ஆதாரமாகவும், தென்கிழக்கு ஆசியாவிற்குப் பாலமாகவும் அமைந்துள்ளது. "கிழக்கு நோக்கி கொள்கை"க்கு முக்கியமான காரணியாகவும் அமைந்துள்ளது.
1970இல் பாகிஸ்தானிய தேசிய தேர்தலில் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை பெற்றது. ஆனால் மேற்கு பாகிஸ்தான் அந்த வெற்றியை அங்கீகரிக்காமல், அவாமி லீக் கட்சியினரை மிகவும் மோசமான அணுகுமுறையில் அடக்கியது. இந்நிலைமை கிட்டத்தட்ட போர்க்களம் போன்ற சூழ்நிலையை கிழக்கு பாகிஸ்தானில் உருவாக்கி "முக்தி வாஹினி" என்ற சுதந்திர இயக்க குழு உருவாக வழிவகுத்தது.
பங்களாதேஷ் உடன் வரலாற்று ரீதியான உறவு முறைக்கு அடித்தளமாக 1947-க்கு முன்பாக அமைந்த இந்தியாவின் நிலப்பரப்பில் பார்க்கலாம். இரு நாட்டு மக்களின் கலாச்சாரம், மதம் மற்றும் மொழி ஆகியவையிடையே பல்வேறு ஒற்றுமைகளைக் காணலாம். இவ்விரு நாடுகளின் தேசிய கீதமும் கவிஞர் "ரவீந்திரநாத் தாகூரால்" எழுதப்பட்டதாகும். பங்களாதேஷின் உருவாக்கம் இந்தியாவின் மூலமாக என்பது தெற்காசிய நாடுகளின் மைல்கல் சாதனையாகும்.
கலவரம் பெருகும் பட்சத்தில் அகதிகளாக பெருவாரியான மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இதனால் பங்களாதேஷ் சுதந்திர இயக்கத்திற்கு இந்தியா தன்னால் இயன்றவரை பயிற்சி மற்றும் ஆயுதங்கள் என்று உதவி செய்தது. பாகிஸ்தானின் திடீர் தாக்குதல், இந்தியாவை கிழக்குப் பாகிஸ்தான் நோக்கி போரை தொடங்குவதற்கு வழிகாட்டியது. டிசம்பர் 1971இல் பங்களாதேஷ் சுதந்திரம் பெற்று தனிநாடாக மாறியது.
புதிய நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்தியாவிற்கு அண்டை நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஜனவரி 1972இல் ஷேக் முஜிப்பூர் ரஹ்மான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு, இந்திய-பங்களாதேஷ் உறவுகளில் பொற்காலமாக விளங்கியது. மேலும் இந்தியபங்களாதேஷ் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1. பராக்கா தடுப்பணைகள்
பல்வேறுபட்ட இந்தியா- பங்களாதேஷ் உறவுகளின் பிரச்சனைகளில் மேற்கு வங்காளத்தில் உள்ள பராக்கா அணை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அணை பங்களாதேஷிலிருந்து இரண்டு மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஹீக்ளி ஆற்றை சுத்தப்படுத்துவதற்கு, அதில் வண்டல் மண் தேங்காமல் இருப்பதற்கும், பராக்கா தடுப்பணை உபயோகமாக உள்ளது. மேலும் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா துறைமுகம் இயங்கவும், தொழில் துறை மற்றும் விவசாயம் தழைக்கவும் இந்த அணை பயன்பாட்டில் உள்ளதாக இந்தியத் தரப்பு கூறுகிறது. ஆனாலும் 1970-களிலிருந்து இந்த அணை தொடர்பான பிரச்சனைகள் இவ்விரு நாடுகளை மட்டுமல்லாது, உலக அரங்கின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
2. டீஸ்டா நதி நீர் பங்கீடு
டீஸ்டா காங்சே பனிப்பாறையிலிருந்து கிட்டத்தட்ட 7,068 மீ (23,189 அடி) உயரத்தில் கிழக்கை நோக்கி, சிக்கிம், மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷிற்கு பாயக்கூடியதாக உள்ளது. இந்த நதியானது பங்களாதேஷுக்கு நுழையும் பொழுது, பிரம்மபுத்திரா நதியோடு கலந்து பின் வங்காளவிரிகுடாவில் முடிகிறது. 1979இல் மேற்கு வங்காள அரசு தடுப்பணையை இதன் குறுக்கே கட்டிய போது இப்பிரச்சனை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பாகபங்களாதேஷ் அரசு, "அந்நாட்டின் நெற்களஞ்சியமான" ராக்பூர் மாகாணம் பாதிப்பதாக வாதிட்டது. 1983-ல் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனாலும் பங்களாதேஷுக்கு தேவையான நீரை இந்தியாவால் வழங்கிட முடியவில்லை . அரசியல் ரீதியாக நீர் பங்கீட்டு பிரச்சனை இன்றளவிலும் தீர்க்கமுடியாததாக உள்ளது.
இந்திய-பங்களாதேஷ் எல்லைக்கோடு
• இந்திய-பங்களாதேஷ் எல்லைக் கோடானது 2,979 கி.மீ நீளத்தையும், 1,116 கி.மீ ஆற்று வழியையும் உள்ளடக்கியது. இவ்வெல்லை 54 ஆறுகளையும் உள்ளடக்கியது, பிரம்மபுத்திரா உட்பட இந்தியாவின் மேற்கு வங்காளம், மேகாலயா, மிசோரம், அசாம் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்கள் பங்களாதேஷிடன் 4,096 கி.மீ எல்லையை பகிர்ந்து காணப்படுகின்றன.
• திரிபுரா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், பங்களாதேஷ், மியான்மர், பூடான் மற்றும் சீனா போன்ற நாடுகளால் சூழப்பட்டும், ஒரே நில மார்க்கம் அசாம் மற்றும் மேற்கு வங்காளம் மூலமாக மட்டுமே அமைந்துள்ளது. இதன் பிரதான புள்ளியாக மேற்குவங்காளத்தின் சிலிகுரி அமைந்துள்ளது.
3. நியூ மூர் தீவு
நியூ மூர் தீவு அல்லது தென் தளபதி என்பது வங்காள விரிகுடாவில் இருக்கும் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தீவாகும். இத்தீவு கங்கை - பிரம்மபுத்திரா டெல்டாவில் அமைந்துள்ளதாகும். 1970இல் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவான புயலால் இத்தீவு உண்டானது. இந்தியபங்களாதேஷ்ற்கு கடந்த 20ஆண்டுகளாக இருந்த இத்தீவு பிரச்சனை, 2010இல் கடல் மட்ட உயர்வால் விடை கண்டது. இந்த நியூ மூர் தீவு சுந்தரவன பகுதிகளால் முழுமையாக மூழ்கியுள்ளது. செயற்கைக்கோள் படங்களும், கடல் ரோந்து படைகளின் தீர்மானமான முடிவுகளின் வழியாக பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. இத்தீவில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு இருப்பதாக வந்த செய்தியினால் இந்தியாவும், பங்களாதேஷும் பரஸ்பரம் போட்டி போட்டுக் கொண்டன. மேலும் கடல் மட்டம் அதிகமாகும் போது மூர் தீவு காணாமல் போவதும், நீர் மட்டம் குறையும் போது தெரிவதும், வழக்கமாக காணப்படுகிறது. மூர் தீவில் மக்கள் வசிக்காத போதிலும், அதில் நிரந்தர குடியேற்றங்கள் அல்லது நிலையங்கள் எதுவும் இல்லை என்றாலும், இந்தியாவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பதைப் பற்றிய ஊகங்களால், இந்தியாவும் பங்களாதேஷும் அதன் மீது உரிமைக் கோரின.
தீர்மானம்
நிரந்தர நடுவர்மன்றம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, பங்களாதேஷிற்கு ஆதரவாக உள்ளது. ஜூலை 2014இல் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி வங்காள விரிகுடாவில் 19,467 ச.கி.மீ பங்களாதேஷிற்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டது. 25,000 ச.கி.மீ பிரச்சனைக்குரிய வங்காள விரிகுடாவில், மூர் தீவானது இந்தியாவிற்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.
4. சக்மா அகதிகள் பிரச்சனை
சிட்டகாங்க் மலை குன்றுகளில் வாழும் சக்மா மற்றும் ஹஜாங்க் குழுமங்கள் 1964-65 இல் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். கர்னாபுவி ஆற்றின் குறுக்கே "கப்தாய் அணை" கட்டும்போது மேற்கூறியவர்கள், தங்களின் பூர்வக்குடி பகுதிகளை இழந்து அகதிகளாக மாறினார்கள். மேலும் அவர்கள் வேறு மதத்தினராய் இருந்ததாலும், வங்காள மொழியை பேசாததாலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளானார்கள். இதனால் இந்தியாவில் தஞ்சம்புகவிரும்பினார்கள். இந்திய அரசாங்கம், அருணாச்சலச்பிரதேசத்தில் இம்மக்களுக்கு முகாம்களை உருவாக்கி இடம் தந்தது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக சக்மா அகதிகள் இம்முகாம்களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 2011இல் மக்கள் கணக்கெடுப்பின்படி, அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 47,471 சக்மா அகதிகள் வாழ்கிறார்கள்.
5. எல்லை பிரச்சனை
பங்களாதேஷும், இந்தியாவும் 4096 கி.மீ தங்கள் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இவ்வெல்லையானது மொத்தம் ஐந்து மாநிலங்கள், மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா, மற்றும் மிசோரமை கடந்து செல்கிறது. பங்களாதேஷ்ற்கும், இந்தியாவிற்கும் இடையில் மொத்தம் 162 உறைவிடங்கள் காணப்படுகின்றன, இந்த எல்லை உறைவிடங்கள் பெரும்பாலும் கடத்தல் காரர்களுக்கு ஏதுவான நிலையில் உள்ளன. தேசிய எதிர்ப்பு பொருள்கள், ஆள் கடத்தல் மற்றும் கிளர்ச்சிகாரர்களுக்கு, இந்த எல்லையானது சொர்க்க பூமியாக அமைந்துள்ளது.
இதனால் எல்லை பாதுகாப்பு என்பது இரு நாடுகளுக்குமே பெரும் சவாலாக உள்ளது. பல்வேறு பேச்சுவார்த்தைகளின் மூலம் 50 உறைவிடங்கள் இந்தியாவிற்கும், 111 பங்களாதேஷ்ற்கும் பிரிக்கப்பட்டுள்ளது. எல்லைகள் பிரிக்கப்பட்டாலும், ஆயுத கடத்தல், ஆள் கடத்தல், போதை பொருள் மற்றும் தீவிரவாதம் போன்றவைகள் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு பிரச்சனைகளாக தொடர்கின்றன.
• இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் நிதானமாக உயர்நிலையை நோக்கி எட்டிக்கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இது 17 சதவீதமாக உயர்ந்துள்ளது.
• பேருந்து மற்றும் ரயில் சேவைகள் டாக்காவிற்கும், கொல்கத்தாவிற்கும் இடையே தொடங்கப்பட்டுள்ளது.
• இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அதாவது, அசுகன்ஜ்-சகிகன்ஜ் குஷியாரா ஆற்றிலும், ஜமுனா ஆற்றின் சிராஜ்காங்-டைக்காவா நீட்சியும் வளர்ச்சி அடைவதற்கு, இரு நாட்டினிடையே இணைப்பு ஏற்படுத்துவதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணைப்பானது பெருவாரியான சரக்கு பொருள்கள் வடகிழக்கு பகுதிகளுக்கு செல்ல ஏதுவாகவும், அதற்கு உண்டான செலவு குறைவாகவும் அமையுமாறு உள்ளது. மேலும் இப்பாதையானது சிலிகுரி "இரு நாடுகளின் எல்லைகளுக்கருகே அமைந்துள்ள குறுகிய இந்திய நிலப்பரப்பில்" கூட்ட நெருக்கடியை குறைப்பதாகவும் உள்ளது.
• இரு நாடுகளுக்குமான இணைப்பு பாதை பரஸ்பரம் முக்கியமானதாக கருதப்படுகிறது. பயணிகள் மற்றும் சரக்கு இரயில் போன்றவைகள் இரு நாடுகளின் வளர்ச்சிக்குத் துணை புரிகிறது.
• துணை மண்டல ஒத்துழைப்பிற்கு டாக்காவுடனான கூட்டு முயற்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. டாக்கா, பூடான், பர்மா, இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளின் நட்புறவு பலப்படுத்தலும் இதற்கு அவசியமாகிறது. கிழக்கு ஆசியாவிற்கும் வங்காள விரிகுடா நாடுகள் வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில் டாக்கா நடவடிக்கை எடுத்தலும் அவசியமாகிறது.
• ஆசிய புவி அரசியலில் தற்போதைய முக்கிய அம்சமாக போக்குவரத்தும், இணைப்பு பாதையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2016இல் சீன குடியரசுத்தலைவர் ஜீ ஜின்பிங் பங்களாதேஷ் வருகை புரிந்தபோது, அந்நாடு "ஒரே பாதை ஒரே சாலை முன்னெடுப்பு" திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முன்வந்தது.
• சீனாவின் முதலீடு பன்மடங்காக, பல ஆண்டுகளாக பங்காளதேஷில் இருந்து வருகிறது. சிட்டாகாங்கில் ஆழ்கடல் துறைமுகம் உட்பட "ஒரே பாதை ஒரே சாலை முன்னெடுப்பு" திட்ட கொள்கையின் மூலம் மற்ற அனைத்து வளர்ச்சி திட்டங்களும் சிறியதாகி, இந்தியாவின் நட்புறவிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
• இரு நாடுகளின் மின்னாற்றல் பகிர்வு, நேர்மையாகவும் வலிமையாகவும் இருந்து வரும் நிலையில் திரிபுரா மாநிலத்திலிருந்து பங்களாதேஷ்ற்கு 160 மெகா வாட், 2013-லிருந்து மேற்கு வங்காளத்திலிருந்து 500 மெகா வாட் தொடர்ந்து அனுப்பப்படுகிறது.
• மேற்கொண்டு 100 மெகா வாட் ஆற்றல் கேட்கும் நிலையில் அடுத்த வரக்கூடிய காலக்கட்டங்களில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
• இந்தியா-பங்களாதேஷ் இராணுவ உடன்படிக்கை என்பது இரு நாடுகளுக்கிடையேயான நீண்ட நாளைய கனவாகவே இருந்து வருகிறது. தகவல் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சி, பாதுகாப்பு வலிமைப்படுத்தல், இவையாவும் உள்ளடக்கம் ஆகும். ஆனாலும் சீனாவிற்கு, பங்களாதேஷ் மிகப்பெரிய கூட்டாளியாக இருப்பதனால், இந்தியா சற்று கவனமாக முடிவெடுத்தல் அவசியமாகிறது.
• இந்தியா உடனான பாதுகாப்பு உறவு, உறுதியாக பங்களாதேஷிற்கு உலக அரங்கில் நன்மையை ஏற்படுத்தும். அதேபோல் இந்தியாவிற்கு, பங்களாதேஷ் உடனான வலிமையான இராணுவ நட்புறவே, கிழக்கு துணை கண்டத்தில் அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்தும்.
• இராணுவ நட்புறவின் அடித்தளமாக சம இறையாண்மையும் புவிப்பரப்பு உண்மை நிலவரமும் இருக்கும் பட்சத்தில் தொலை தூர வலிமையான நட்புறவு நாடாக மாறுவதற்கு வாய்ப்பு இரு நாடுகளுக்கிடையே காணப்படுகிறது.
இந்தியா-பங்களாதேஷ் உறவுகள் மூன்று 'டி" (3T)-க்களில் அமைந்துள்ளதாக காணப்படுகிறது. 1. தீவிரவாதத்தை சமாளித்தல், 2. வாணிபம் மற்றும் போக்குவரத்து 3. டீஸ்டா ஒப்பந்தம். புது தில்லி மற்றும் டாக்கா இடையே வளர்ந்து வரும் பரஸ்பர நம்பிக்கையும், அரசியல் ஆறுதலும் நீண்டகாலவிளைவுகளை ஏற்படுத்தும் வகையில் பிரச்சினைகளைத் தீர்த்து உறவை முன்னெடுத்து கொண்டு செல்வோம் என்று நம்ப வேண்டும். இந்தியாவின் வடகிழக்கு பகுதிக்கு இது அவசியமானது. மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் தீர்வாகின்றபட்சத்தில் இந்திய துணைக் கண்டத்திற்கும், வடகிழக்கு பகுதிக்கும், கிழக்கு ஆசிய மண்டலத்திற்கும் இரு நாட்டு உறவுகள் நன்மை பயக்கும்.