Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய-மாலத்தீவு உறவுகள்
   Posted On :  04.04.2022 03:50 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்

இந்திய-மாலத்தீவு உறவுகள்

மாலத்தீவு, கிட்டத்தட்ட 1192 தீவுகளை உள்ளடக்கியது. இவற்றுள் 200 தீவுகளில் 4,30,000 மக்கள் வாழ்கிறார்கள். 80 தீவுகளில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு உண்டான ஓய்வு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

இந்திய-மாலத்தீவு உறவுகள்


மாலத்தீவு, கிட்டத்தட்ட 1192 தீவுகளை உள்ளடக்கியது. இவற்றுள் 200 தீவுகளில் 4,30,000 மக்கள் வாழ்கிறார்கள். 80 தீவுகளில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு உண்டான ஓய்வு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. தலைநகரமான மாலே அதிக மக்கள் வசிக்கின்ற நகரமாக உள்ளது. பெருவாரியாக சன்னி இஸ்லாமியர்கள் வாழும் இந்நாட்டில், ஏனைய மற்ற மதங்கள் தொடர்பான வழிபாடுகள் வீடுகளிலேயே நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

மாலத்தீவுகளின் பிரதமர் அகமது ஜகி 1974 இந்தியா வந்ததுதான், அந்நாட்டின் முதல் அரசுமுறை பயணமாகும்.

நவம்பர் 1968இல் மாலத்தீவு விடுதலை பெற்றதிலிருந்து இந்தியாவிற்கும், அந்நாட்டிற்கும் முறையான உறவுகள் ஆரம்பித்தன. இந்தியா, மாலத்தீவை அங்கீகரித்த முதல் நாடாகும். இதன் பிறகு இரு நாட்டின் பிரதிநிதிகளும் உறவுகள் மேம்பட சந்திப்புகளும் , பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. அவற்றில் மாலத் தீவுகளில் முகமது நஷீத் பொருளாதார வளர்ச்சி உச்சநிலையை நோக்கி சென்றது.

இம்மாதிரியான சுமூக உறவுகள், குடியரசுத்தலைவர் நஷீத் பதவி வகித்த காலத்திலும் வழக்கத்தில் இருந்தது. நஷீத் குடியரசுத்தலைவர் ஆனவுடன் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயனமாக 2008இல் இந்தியா வந்தார். 2008இல் நடைபெற்ற இச்சந்திப்பின்போது இந்தியா, மாலத்தீவிற்கு 100 மில்லியன் டாலரை அதனுடைய சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு கடன் அளிப்பதாக உத்திரவாதம் அளித்தது. இதன்பிறகு இரு நாட்டினரின் அரசு தொடர்பான சந்திப்புகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. 2012 இல் நஷீத் அவர்கள் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். 



இந்தியா-மாலத்தீவின் பாதுகாப்பு முக்கியத்துவம் 

புவியமைப்பு :

மாலத்தீவு லச்சத்தீவிலிருந்து 700 கி.மீ தொலைவிலும், இந்திய பிரதான இடத்திலிருந்து 1200 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் சீனாவின் இருப்பு, இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தலை விளைவிக்கிறது.


இந்தியா பெருங்கடல் மேலாதிக்கம் :

மாலத்தீவில் சீனாவின் இருப்பால் நேரடியாகவோ (அல்லது) மறைமுகமாகவோ இந்திய பெருங்கடலில் தன் கட்டுப்பாட்டை நிறுவுவதற்கும், கட்டுப்படுத்தவதற்கும் வாய்ப்பு அதிகம். மேலும் அரபு நாடுகளிலிருந்து வரக்கூடிய ஆற்றல் பகிர்வு, மாலத்தீவு வழியாகவே வருவது வழக்கமாக உள்ளது.

மண்டல ஏற்றத்தாழ்வு :

இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இந்தியா, மாலத்தீவு, செஷல்ஸ், மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளுடன் இணைந்து நட்பு பாராட்டுவது சீனாவிற்கு பிரச்சினையாக உள்ளது. சீன - மாலத்தீவு நல்லுறவானது இந்தியாவின் நிலையை குறைக்கும் வண்ணம் உள்ளது.


பொருளாதார உறவுகள் 

மாலத்தீவில் இந்தியர்கள்

கிட்டத்தட்ட 25,000 இந்திய மக்கள் மாலத்தீவில் பல்வேறுபட்ட துறைகளில் பணிபுரிந்து, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர்.

நீல பொருளாதாரம்

கடல் வளத்தை மையமாக கொண்டதாக மாலத்தீவின் பொருளாதாரம் இயங்குகிறது. நீல பொருளாதாரம் என்று அழைக்கப்படும் இவ்வகை நடவடிக்கைகளின் பாதுகாப்பிற்கும், நிலையான அபிவிருத்திக்கும் அடித்தளமாக உள்ளது.

சுற்றுலாத்துறை

இரு நாடுகளுக்கிடையே சுற்றுலாத்துறை சார்ந்த உறவுகளும், சந்திப்புகளும் நடந்தவண்ணம் உள்ளது. மேலும் 6% இந்திய சுற்றுலாப் பயணிகளும் ஒவ்வொரு ஆண்டும் மாலத்தீவிற்கு பயணிக்கின்றனர்.

காக்டஸ் நடவடிக்கைகள் மாலத்தீவை இந்தியா காப்பாற்றியுள்ளது


1988இல் 80-200 இலங்கை தமிழ் போராளிகள் (PLOTE) அப்துல்லா லுத்துபி என்கிற தொழிலதிபரின் சூழ்ச்சியில் மாலத்தீவை நோக்கி தாக்குதல் நடத்தினர். மாலத்தீவில் ஊடுருவிய பிறகு, அவர்கள் தலைநகரமான 'மாலே'வில் ஊடுருவிமுக்கியமான பகுதிகளை ஆக்கிரமித்தனர். 

குடியரசுத்தலைவர் அப்துல் கயமின் ஆட்சியை கலைப்பதற்கு முனைந்தனர். ஆனால் கயும், மாலத்தீவின் தேசியப் பாதுகாப்பு பணி தலைமையிடத்தில் தஞ்சம் புகுந்தார். கயும் பல நாடுகளுக்கு அதாவது இந்தியா, பாகிஸ்தான் அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா, இலங்கை பிரச்சினையை விளக்கினார். அமெரிக்காாவும், பிரிட்டனும், தங்களால் நேரடியாக நடவடிக்கையில் இறங்க இயலாது என்றும், இந்தியா மூலம் தீர்வு கிடைக்க பெறும் என்றும் நம்பிக்கை அளித்தனர். பிரதமர் ராஜிவ் காந்தி மூலமாக இந்தியா வெகுவேகமாக தீர்வு நடவடிக்கையில் இறங்கியது.

குடியரசுத்தலைவர் கயுமின் வேண்டுகோள் கிடைத்த சில மணி நேரங்களில் இந்திய படைவீரர்கள் மாலத்தீவில் இருந்தனர். நவம்பர் 3 1988 இல் 15.30 மணி அளவில் இந்திய படை வீரர்களை மாலத்தீவில் இறக்கியது. கயூமின் செய்தி கிடைத்த 16 மணி நேரங்களில் ஆக்ரா போர் விமான நிலையத்திலிருந்து இல்யுசன் II 76 போர் விமானம் கிளம்பியது. 2,500கிலோ மீட்டர் கடந்து இந்தியா விமானப்படையின் 44-வது ஸ்கோட்ரன், முற்றுகையிடப்பட்ட மாலேதலைநகருக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹல்ஹிலே விமான நிலையத்தில் இறங்கியது. மேலும் தரையிறக்கப்பட்ட இந்திய விமானப் படைவீரர்கள், குடியரசுத்தலைவர் கயுமை மீட்டெடுத்தனர். போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இலங்கை தமிழ் போராளிகள் நகரம் முழுவதும் பல முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியபோது, அவர்கள் கண்காணிக்க மறந்த ஒரு பகுதி ஹல்ஹிலே விமான நிலையம். இந்த நுழைவாயிலை யாரும் கவனிக்காமல், இந்திய விமானப் படைவீரர்கள் தரையிறங்கின. விரைவாக விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டனர். பின்னர் கமாண்டோகள் படகுகளைப் பயன்படுத்தி தலைநகருக்குள் நுழைந்து குடியரசுத்தலைவர் கயூமை மீட்டு, போராளிகளை விரட்டியடித்தனர்.

இந்திய தரப்பில் இந்நடவடிக்கையில் எந்தவித இழப்பும் இல்லாதது என்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆசியாவின் பாதுகாப்பில் இந்தியா மிகச்சிறப்பாக பங்காற்ற முடியும் என்பதை நிரூபித்தது காக்டஸ் நடவடிக்கை. அமெரிக்கா அதிபர் ரொனால்டு ரீகன் முதல் பிரிட்டனின் பிரதமர் மார்கரெட் தாட்சர் வரை உலக சமூகம் அனைத்தும் இந்தியாவின் இந்த உறுதியான நடவடிக்கையை பாராட்டினார்கள்.


சுகாதாரம்

பெருவாரியான மாலத்தீவு மக்களுக்கு மருத்துவ ரீதியான முதல் அண்டை நாடாக இந்தியா விளங்குகிறது. இதன் மூலம் இந்திய சுகாதாரத் துறை வளர்ச்சி காண்கிறது.


அரசியல் உறவுகள்

• அரசியல் குழப்பம் : அரசியல் குழப்பம் அரசியவில் நிலைத்தன்மை இல்லாததால் மாலத்தீவில் தீவிரவாதம், மத அடிப்படைவாதம், கடத்தல் மற்றும் போதை பொருள் பழக்கம் அதிகமாகவே அச்சுறுத்துகிறது. ஐ.எஸ்.ஐகள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களும் மாலத்தீவில் நிலையூன்றி நிற்கின்றன. 


சார்க் அமைப்பு

சார்க் அமைப்பானது இந்தியாவிற்கும், அண்டை நாடுகளுக்கும் உள்ள உறவுகளை வலுமைப்படுத்துவதாக உள்ளது. ஆனால் சார்க் நாடுகளில் சீனா ஊடுருவி இருப்பதால் இந்தியாவின் நிலை சற்று பின்னோக்கி உள்ளது எனலாம். பாகிஸ்தானின் போக்குவரத்திலும் இலங்கையில் ஹம்பன்தோட்டா துறைமுகம் போன்றவற்றிலும் சீனாவினால் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு அடுத்த கவனம் மாலத்தீவில் உள்ளது.

இந்திய-மாலத்தீவு உறவுகளில் தற்போதைய வளர்ச்சி : இருநாடுகளின் அரசியல் நிலைமையைப்பொறுத்து உறவுகள் பாதிப்பை சந்திக்கின்றது. 2013இல் யாமீன் குடியரசுத்தலைவர் நஷ்தை தோற்கடித்தார். யாமீனின் ஆட்சியில் இந்தியாவுடனான உறவுகள் மோசமடைந்த நிலையில் சீனாவுடன் வலிமையான உறவினைக் மாலத்தீவு உண்டாக்கி வருகிறது. இதை பின்வரும் நடவடிக்கைகள் நிரூபிக்கின்றன. 

• இந்தியாவுடனான 'ஜி.எம்.ஆர்' திட்டம் 2012இல் மாலத்தீவு ரத்து செய்தது. 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள இத்திட்டம் மாலத்தீவு தலைநகரமான "மாலேக்கு" அருகே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்காக திட்டமிட்டதாகும். இத்திட்டம் தற்போது சீனாவிடம் தரப்பட்டுள்ளது.

• 2015இல் இந்திய பிரதமர் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தார். மாலத்தீவில் நிலவிய எதிர்மறையான அரசியல் சூழ்ச்சியே காரணமாக காட்டப்பட்டது. 

• 2017இல் சீனாவிற்கும், மாலத்தீவிற்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பாகிஸ்தானிற்கு அடுத்ததாக சீனாவுடன் மாலத்தீவு இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்தியாவுடன் இம்மாதிரியான ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை என்பது உண்மை .  

• கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நடவடிக்கை 2018இல் மாலத்தீவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் பாகிஸ்தானின் இராணுவ படை தளபதியின் பயணத்தின் போது மாலத்தீவில் முடிவு செய்யப்பட்டது. வெளிப்படையாகவே இந்தியாவிற்கும் எதிராக நகர்த்தப்படும் காயாக இந்நடவடிக்கை விளக்குகிறது.

மேற்கூறிய அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவிற்கு எதிராக இருப்பினும், இந்தியா தமது பொறுமையையும், சகிப்புதன்மையையும் இழக்காமல் மாலத்தீவுடனான உறவுகளை புதுப்பிக்கும் முயற்சி செய்து வருகிறது. ஆனால் 2018இல் தேர்தல் வெற்றி பெற்ற சோலி குடியரசுத்தலைவராக பதவியேற்கும் நிலையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. 

• இந்திய பெருங்கடல் நாடுகள் அமைப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியபோது இந்தியா மாலத்தீவை இவ்வமைப்பில் இணைப்பதற்கு மூத்த உயரதிகாரிகளை சமாதானப்படுத்தியது. இதன்மூலம், மாலத்தீவு புதிய உறுப்பினராக இந்திய பெருங்கடல் நாடுகள் அமைப்பில் சேர்க்கப்பட்டது. 

• மாலத்தீவுகள் வேண்டுதலுக்கு இணங்க டோர்னியர்போர்விமானத்தை உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. 

• மாலத்தீவின் புதிய அரசாங்கம், சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு முடிவு செய்துள்ளது. சீனாவின் ஒரு தலைப்பட்சமான ஒப்பந்தமாக இருப்பதால் மாலத்தீவு வெளியேற முடிவு செய்தது.


இந்திய மாலத்தீவு தொடர்பான இடைவெளிகள்

• சீனாவின் இருப்பு : மாலத்தீவுகளில் சீனாவின் உள்கட்டுமான திட்டங்கள் இந்திய நிறுவனங்களுக்கு மாபெரும் போட்டியாக உள்ளது.

• சீனா - மாலத்தீவு சுதந்திர வாணிப ஒப்பந்தம்: சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சரியான தீர்வை இன்றளவில் மாலத்தீவு மூலம் வெளியிட தயாராகிறது. மேலும் எதிர்கால முதலீடு தொடர்பாகவும் சரியான நிலைமை மாலத்தீவு தெரிவிக்க மறுக்கிறது.

• இந்திய - மாலத்தீவு வர்த்தகம் குறைப்பு : இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே வர்த்தகம் இன்றளவில் 200 அமெரிக்கா டாலர் வரை, குறைவாகவே காணப்படுகிறது.

2018 இல் இப்ராஹிம் சோலி மாலத்தீவின் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு மாற்றங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. சோலியின் பதவியேற்பு விழாவில் இந்திய பிரதமர் பங்கேற்று அமைதியையும், நட்புறவையும் தெரிவித்தார். இப்ராஹிம் முகமது சோலியின் இந்தியப் பயணம் 2018, டிசம்பர் 16-18" அன்று நடந்தது அப்பயணத்தில் "இந்தியாவே முதன்மைத்தும் என்ற கொள்கையை வலியுறுத்தினார்." மேலும் இந்தியா மாலத்தீவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக 1.4 மில்லியன் டாலர்கள் அளிப்பதாக உறுதி செய்தது. 

எதிர்கால ஒத்துழைப்பு

சமீபத்திய அரசியல் மாற்றங்கள், இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கிடையேயான உறவுகளை புதுப்பிக்க, ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. நம்பிக்கை கட்டுமானத்தின் பின்வருவன கவனத்திற்கு உட்பட்டது. 

மாலத்தீவுடனான முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை குழு ஒன்றைமைத்து பிரச்சினைக்குரிய பகுதிகளை ஆய்வு செய்வதற்கு முனைய வேண்டும். மேலும் இக்குழுவானது முதலீட்டில் குறைபாடுகள் உள்ள பகுதிகளை கண்டறியலாம். 

இலவச (அ) அன்பளிப்பு கொள்கை மாலத்தீவிற்கு அவசியமாக உள்ளது. சீனாவின் பெயரளவிலான முதலீடுகள் தடுப்பதற்கு இந்தியா மேற்கூறிய வழியை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. 

இந்தியா தீவிரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மாலத்தீவுடன் சேர்ந்து உருவாக்குதல் வேண்டும். மாலத்தீவில் காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படையுடன் சேர்ந்து பயிற்சி மற்றும் திறன் மேம்படுத்துதல் போன்ற வழிகளை பின்பற்ற தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு முயற்சிக்கவும் வேண்டும். 

நிரந்தமான அடிக்கடி நிகழக்கூடிய பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பையும், நட்புறவையும் வளர்க்கும் சிறிய நாடுகளான மாலத்தீவை போல் உள்ள மற்ற நாடுகளையும் இந்தியா தன் பெருந்தன்மையான அணுகுமுறையின் மூலம் உறவை வளர்க்க வேண்டும். இதற்கு குஜ்ரால் கொள்கை போன்றவைகளை பயன்படுத்தி உண்மையையும் நம்பிக்கையையும் மேம்படுத்தலாம். 

சார்க் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகள் அமைப்பு போன்ற அமைப்புகள் நல்லுறவு நாடுகளாக பயன்படுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்கு முடிவு காணலாம்.

மேலும் பல்வேறு உறவுமுறை தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்தியா இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து முத்தரப்பு செயல் வழிமுறையை உருவாக்கி தீர்வு காணலாம்.


இந்திய அயல்நாட்டு கொள்கையில் தற்போதைய புதிய மாற்றங்கள்

குஜ்ரால் கொள்கை


குஜ்ரால் கொள்கை என்பது, இந்தியாவின் அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு உண்டான ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது ஆகும். இக்கொள்கை முன்னால் வெளியுறவு துறை அமைச்சராகவும், பிரதமராகவும் பதவி வகித்த I.K.குஜ்ரால் அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கொள்கையின்படி, இந்தியாவின் நிலையும், வலிமையும் ஏனைய நாடுகளுடன் உள்ள உறவுகளை நிர்ணயிக்கிறது. அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. இக்கொள்கைகள் பின்வருவன:

முதலாவதாக, அண்டை நாடுகளான பங்களாதேஷ், பூடான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை போன்ற நாடுகள் இந்தியாவின் மீது வைத்துள்ள நம்பிக்கை, உண்மையின் அடிப்படையில் தன்னாலான அதிகமான உதவிகளையும் எதிர்பார்ப்பில்லாமல் செய்கிறது. 

இரண்டாவதாக, எந்த ஒரு தென்கிழக்கு ஆசியா நாட்டிற்கும், தன் அண்டை நாடுகளுக்கு எதிரான காரியங்களை நிகழ்த்துவதற்கு தன் நாட்டில் இடமளிக்கக்கூடாது. 

மூன்றாவதாக, எந்த ஒரு நாடும், தென்கிழக்கு ஆசியாவின் மற்ற நாடுகளின் உள்ள பிரச்சினைகளில் தலையிடக்கூடாது. 

நான்காவதாக, அனைத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளும் ஏனைய நாடுகளின் நிலப்பரப்பையும், இறையான்மையையும் மதித்தல் வேண்டும். 

ஐந்தாவதாக, அவர்கள் தங்கள் மோதல்களை அமைதியான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்

மேற்கூறிய கொள்கையை, அனைத்து நாடுகளும், பின்பற்றுகின்ற பட்சத்தில் நட்புறவும், நம்பிக்கையும் நீடிக்கும். தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ஒற்றுமையை மேம்படுத்தலாம். இந்திய-பாகிஸ்தானின் மோசமடைந்த உறவுகளையும் சீர்படுத்தலாம் என்பது குஜ்ராலின் நேர்மறை கொள்கை அம்சமாகும்.

"கிழக்கு நோக்கி கொள்கை" மற்றும் "கிழக்கு நோக்கி செயல்பாடு" இடையேயான வேறுபாடுகள் 

"கிழக்கு நோக்கி கொள்கை" மற்றும் "கிழக்கு நோக்கி செயல்பாடு" இடையேயான வேறுபாடுகள் இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பை உண்டாக்குவதற்காகவே "கிழக்கு நோக்கி கொள்கை" உண்டாக்கப்பட்டது. அதேசமயம் "கிழக்கு நோக்கி செயல்பாடு" என்பது பொருளாதார மற்றும் பாதுகாப்பு கிழக்கு ஆசியாவையும் உள்ளடக்கியது ஆகும். 

"கிழக்கு நோக்கி கொள்கை"யின் இலக்குகள் 

1. ஆசிய-பசிபிக்மண்டலத்தில் உள்ள நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு, கலாச்சார, மரபு மற்றும் ராணுவம் சார்ந்த உறவுகளை இரட்டிப்பு மற்றும் பலதரப்பு கட்டங்களில் மேம்படுத்துதல். 

2. வடகிழக்கு மாநிலங்களுடன் அண்டை நாடுகளை இணைக்கும் பரஸ்பர நடவடிக்கைகள் செயல்முறைபடுத்துதல். 

3. பாரம்பரிய நட்பு நாடுகள் மட்டுமல்லாது, மற்ற நாடுகளை வர்த்தகத்திற்காக அமைத்தல், இதில் இந்திய பசிபிக் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.

இந்தியாவின் "கிழக்கு நோக்கி கொள்கை"

இக்கொள்கை திட்டம் 1991இல் பிரதமர் நரசிம்மராவ் அவர்களால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமே இந்தியாவின் இலக்கு மேற்கிலிருந்து தென் கிழக்கு ஆசியா நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டது. 2014 நவம்பர் மாதம் நடைபெற்ற கிழக்கு ஆசியா கூட்டத்தில் ஜனதா ஆட்சியானது, இத்திட்டத்தை "கிழக்கு நோக்கி செயல்பாடு " ஆக மாற்றியது.

அண்டை நாடுகளே முதன்மை முக்கியத்துவம் பெறுபவை என்றால் என்ன?

இந்தியாவின் வெளிநாட்டுகொள்கையானது நட்புறவில் அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அமைந்து நட்புறவை வளர்க்கும் விதமாக வடிவமைக்கப்படல். 

பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக பிரதமர் பதவி ஏற்றபோது, அப்பதவி ஏற்பு விழாவிற்கு தெற்காசியாவின் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது பின்பு அவர்களுடன் இரு தரப்பு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது ஒரு சிறிய சார்க் மாநாடு என்று கூறப்பட்டது. 

முதன் முதலில் பதவி ஏற்ற பிறகு பிரதமர் பூடானிற்கு பயணம் செய்தார்.



12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours : India - Maldives Relations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும் : இந்திய-மாலத்தீவு உறவுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்