Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய-ஆப்கானிஸ்தான் உறவுகள்
   Posted On :  04.04.2022 01:53 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்

இந்திய-ஆப்கானிஸ்தான் உறவுகள்

ஆப்கானிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்த 1947இல் இருந்து இந்தியா தன்னுடைய கொள்கைத் திட்டத்தை மேம்படுத்தியும் செயல்படுத்தியும் வருகிறது. - 1950 இல் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் "நட்புறவு ஒப்பந்தத்தை" ஏற்படுத்திக் கொண்டது.

இந்திய-ஆப்கானிஸ்தான் உறவுகள்


ஆப்கானிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்த 1947இல் இருந்து இந்தியா தன்னுடைய கொள்கைத் திட்டத்தை மேம்படுத்தியும் செயல்படுத்தியும் வருகிறது. - 1950 இல் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் "நட்புறவு ஒப்பந்தத்தை" ஏற்படுத்திக் கொண்டது.


ஆப்கானிஸ்தான் மன்னர் ஜாஹிர் ஷாவின் ஆட்சி காலம் இந்தியாவிற்கான நட்பு உறவில் சிறந்த காலமாக கருதப்பட்டது. 1979இல் சோவியத் ஆக்கிரமிப்பிற்கு முன்பாகவே, பல்வேறு ஒப்பந்தங்களின் வாயிலாகவும், நெறிமுறைகளின் மூலமாகவும், சோவியத் ஆதரவு அரசாங்கங்களுடன் இந்தியா நட்புறவை வளர்த்து வந்துள்ளது. இந்தியாவுடனான ஆப்கானிஸ்தானின் உறவு 1979இல் இருந்து 1989வரை தடைப்பட்டிருந்தாலும், இந்தியா பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பங்கு பெற்று ஆப்கானிஸ்தானின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. 


ஆப்கானிஸ்தானில் 1990-களின் மத்தியில் தாலிபான்களின் ஆட்சி உறுதியானதால், தாலிபானுக்கு எதிரான அமைப்புகளுடன் இந்தியா கைகோர்த்து நட்புறவை வளர்த்தது. ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா அல்லும் பகலும் பாடுபட்டு நன்மதிப்பை சம்பாதித்தது. ஆனாலும் ஆப்கானிஸ்தானில் நிலவிய நிலையற்ற சூழ்நிலையினால் இந்தியாவின் கொள்கைகள் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் தடைப்பட்டன.


மேலும், வடக்கு நாடுகளின் கூட்டணியுடனும், மண்டல நாடுகளுடனும் சேர்ந்து தாலிபான்களின் ஆட்சியை நீர்த்துப் போக இந்தியா பாடுபட்டது. ஈரான், ரஷ்யா, தஜிகிஸ்தான் போன்ற நாடுகளுடன் கைகோர்த்து, இந்தியா வடக்கு நாடுகளின் கூட்டணிக்கு வேண்டிய பொருள் வளங்களை அளித்து வலிமைப்படுத்தியது. 2001 முதல், பல்வேறு வளர்ச்சி திட்டங்களிலும், மனிதாபிமான அடிப்படையிலும் ஆப்கான் நாட்டின் மேம்பாட்டில் இந்தியா ஈடுபட தொடங்கியது. இவை மட்டுமல்லாது, ஆப்கான் நாட்டின் குடிமக்கள் மற்றும் ராணுவத்திற்கு ஆயுத பயிற்சியையும் அளித்தும் உறவுமுறையை பலப்படுத்தியது. ஆப்கானிஸ்தானில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்குமான உறவுமுறை போட்டி "பெரும் சவாலாக" உலக அரங்கில் கருதப்படுகிறது.

2005ஆம் ஆண்டு, இந்தியா சார்க் மண்டல அமைப்பில், ஆப்கானிஸ்தான், உறுப்பினராக சேர்வதற்கு வழி மொழிந்தது. 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் உறுப்பினராக இணைந்தது.


இந்திய-ஆப்கானிஸ்தான் ராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு

ஆப்கானிஸ்தான், இந்தியாவின் இயற்கையான நட்புறவு நாடாகும். ஏனெனில் பாகிஸ்தானின் விருப்பங்களை அறியவும், நடப்பு நிகழ்வுகளை அறியவும் ஆப்கானிஸ்தானை வரையறையில்லாத நட்பு நாடாக இந்தியா போற்றியது. மேலும் ஆப்கானிஸ்தான் ராணுவம் சார்ந்த உறவுமுறையை இந்தியாவுடன் செயல்படுத்தியதை, பாகிஸ்தான் தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது.

இது அல்லாது, மனிதாபிமான உதவிகளை செய்ததின் மூலமாக, பாரபட்சமில்லாத உறவு முறையையும் இந்தியா தோற்றுவித்தது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அடிப்படை இந்திய சமூக கட்டமைப்பில் பல்வேறு அழிவு ரீதியான நடவடிக்கைகள் அரங்கேற்றுவதற்கு வழிவகுத்தது.


இந்திய-ஆப்கானிஸ்தான் பொருளாதார உறவுகள்

ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய கனிம வளங்களான இரும்புத்தாது, லித்தியம், குரோமியம், இயற்கை வாயு மற்றும் பெட்ரோலியத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ஒரு ட்ரில்லியன் முதல் மூன்று ட்ரில்லியன் டாலர்கள் ஆகும்.


ஆப்கானிஸ்தானில் மட்டும் இந்திய முதலீடு சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் இருப்பதால் இந்தியர்களையும் அவர்களது முதலீட்டையும் காப்பது தலையாய கடமையாக உள்ளது. முக்கிய ஏற்றுமதி பொருள்களாக பருப்புகள், மின் சாதனங்கள், பால் பொருள்கள், தேன், ரப்பர் பொருள்கள், மருந்துகள் மற்றும் ஆடைகள், இதர இயந்திர பொருள்கள் விளங்குகின்றன. மேலும் இறக்குமதி பொருள்களாக பழங்கள், உலர் பருப்பு / பழங்கள், காய்கறிகள், என்ணெய் வித்துக்கள், விலைமதிப்புள்ள கற்கள் ஆகியன உள்ளன. 2003இல் இந்திய-ஆப்கான் வணிகத்தை முன்னேற்றும் பொருட்டு முன்னுரிமை வாணிப ஒப்பந்தத்தில் இவ்விரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் மூலம் சுமார் 38 வகை இறக்குமதி பொருள்களுக்கு, 50-லிருந்து 100 விழுக்காடு வரை வரிச்சலுகைகளை இந்தியா அளித்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 2011இல் இந்தியா, ஆப்கான் நாட்டிலிருந்து இறக்குமதியாகக் கூடிய அனைத்தும் பொருள்களுக்கும் (மது மற்றும் புகையிலை பொருள்கள் தவிர) அடிப்படை சுங்க வரியை நீக்கியது. இதன் மூலம் மேற்கூறிய அனைத்து பொருள்களுமே இந்திய சந்தையில் சுலபமாக விற்பதற்கு வழி வகுத்தது. ஆப்கானிஸ்தானின் மிக முக்கிய சந்தையாக இந்தியா விளங்குவது, இதன் மூலம் அறியலாம்.

ஈரானில் அமைந்திருக்க கூடிய "சபாஹர்" துறைமுகத்தின் மூலம் ஆப்கானிலிருந்து இந்தியாவிற்கும், ஏனைய மற்ற நாடுகளுக்கும் வாணிபம் எளிதாக மேற்கொள்ள வழி செய்யலாம். சமீபத்தில் சபாஹர் துறைமுகத்தில் 85 மில்லியன் அமெரிக்கா டாலர் செலவில் வர்த்தக போக்குவரத்து மையம் ஒன்றை இந்தியா, அமைத்தது மற்றொரு மைல் கல்லாகும்.


இந்திய-ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு உறவுகள் 

ஆப்கான் தாலிபான்களையும், அவர்களின் அச்சுறுத்தல்களையும் 1990-களில் இந்தியா மிகப்பெரிய சவாலாகவே பார்த்தது. மேலும் பாகிஸ்தானும், பல்வேறு தீவிரவாத குழுக்களான லஷ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-வுல்-முஜாஹிதீன்/ஹர்ஹத்-வுல்அன்சார் மற்றும் ஹர்ஹத்-வுல்-ஜிஹாத்அல்-இஸ்லாமி போன்றவைகளை வளர்த்தும், இந்தியாவில் செயல்பட வைத்தும் வந்தன. மேற்கூறிய அனைத்து தீவிரவாத குழுக்களும், ஆப்கானிஸ்தானில் பயிற்சிப் பெற்று அல்-கொய்தாவின் நீட்சியாகவே இந்தியாவில் செயல்பட்டன. ஆப்கானிஸ்தான், தீவிரவாதத்தின் சொர்க்க பூமியாக செயல்பட்டது. இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது. மேலும் தீவிரவாத கொள்கைகளும் செயல்பாடுகளும் ஆப்கானில் பரவியதால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது பங்கமாக விளைந்தது.

பாகிஸ்தானுடனான ஆப்கானிஸ்தானின் ராணுவம் சார்ந்த உறவுமுறைகளில் பாகிஸ்தானை பலப்படுத்தியும், இந்தியாவை செயலிழக்கவும் செய்தன. ஆப்கானிஸ்தானில் பல்வேறு தீவிரவாத குழுக்களை அதன் எல்லைப் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் செயல்பட வைத்தது. பாகிஸ்தான், முக்கிய நகரமாக லோயா பாக்டியா ஆகும். தங்க பிறை எனப்படும் ஈரான், ஆப்கான் மற்றும் பாகிஸ்தானின் 'தங்க நிலா விளைவானது' மாபெரும் பிரச்சனையாகவே இருந்தது. முக்கியமாக போதைப்பொருள் விஷயங்களில் பஞ்சாப் அதிகமாக பாதிக்கப்பட்டது. ஈரான் மற்றும் சிரியாவின் பாதிப்பானது ஆப்கான் நாட்டில் கண்கூடாகவே தெரிந்தது.

ஆப்கானிஸ்தானில் இந்திய வளர்ச்சி திட்டங்கள்

ஸ்டோர் அரண்மனையை அதே நகரத்தில் மீட்டெடுப்பது. 

ஹபீபியா உயர்நிலை பள்ளியை தலைநகரத்தில் கட்டுவது, அதற்குண்டான நிதி உதவி அளிப்பது. 

ஆப்கான் தேசிய விவசாய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை காந்தஹாரில் நிறுவுவதில் நிதியளிப்பது. 

காபூலில் சிம்ட்டாலா துணை மின் நிலையம் அமைப்பது. 

காந்தஹாரில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது. ஆப்கானின் கிரிக்கெட் வீரர்கள், இந்திய மைதானத்தை தங்களின் சொந்த மைதானதமாக நினைக்க வைப்பது. 

காந்தஹாரில் குளிர்சாதன கிடங்கை உருவாக்குவது. 

தொலைபேசி தகவல் பரிமாற்ற அலுவலகங்களை நியமிப்பது. தேசிய தொலைகாட்சி வலைத்தளங்களை உருவாக்குவது. 

சிலமண்டலங்களில் குழாய் கிணறுகளை தோண்டுவது. 

இந்தியா, பேருந்துகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அவசர ஊர்திகளையும் இலவசமாக அளித்துள்ளது.


இந்திய - ஆப்கானிஸ்தான் ராணுவம் சார்ந்த ஒப்பந்தம்

2011-இல் ஆப்கானிஸ்தானுடன் ராணுவம் சார்ந்த தொடர்பை ஒப்பந்தத்தின் மூலமாக உறுதி செய்த முதல் நாடு இந்தியாவாகும். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு உடன்பட்டு, இந்தியா குறைந்த அளவிலேயே நட்புறவை கொண்டிருந்தது. மேலும் இந்தியஆப்கானிஸ்தான் உடனான நட்புறவை, பாகிஸ்தானின் பாதிப்பில்லாத வகையில் மட்டுமே நோக்கியது. இந்திய-பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் முத்தரப்பு நட்புறவானது, பரஸ்பரம் தனித்தன்மையானது என்பதை இந்தியா உறுதியாக்கியது. 1965 மற்றும் 1971 இந்தியாவிற்கு எதிராக போர்களில் ஆப்கான் தனித்து நின்று கொண்டது. காஷ்மீர் பிரச்சனையிலும் பொதுப்படையாக ஆப்கானிஸ்தான் இந்தியாவை ஆதரிக்க தயங்கியது. டியூரண்ட் எல்லை சர்ச்சையில் இந்தியா தனித்து நின்றது.

அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் அதன் நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றில் பங்கு இருந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியா உணர்கிறது. ஆப்கானிஸ்தானில் மண்டல மற்றும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது. இது தீவிரவாதத்தின் மேலாதிக்கத்தற்கு ஒரு சாத்தியமான கூறாகும் மற்றும் ஜூன் 2012 இல் ஆப்கானிஸ்தானில் டெல்லி முதலீட்டு உச்சி மாநாடு போன்ற முன்னோடி நிகழ்வுகளின் மூலம் அதன் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. ஆப்கானிஸ்தானில் அமைதிக்கான திறவுகோலைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து, ஆசியாவின் இதயமான இந்தியா எல்லைக்குள் இந்த செயல்பாட்டின் மூலம் வணிக நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது. பலதரப்பு ரீதியாக, ஆப்கானிஸ்தான்-இந்தியா-அமெரிக்க முத்தரப்பு மற்றும் ஆப்கானிஸ்தான்-இந்தியாஈரான் முத்தரப்பு போன்ற பல்வேறுபேச்சுவார்த்தை மூலம் ஆப்கானிஸ்தானில் ஒரு உரையாடலைத் தொடங்க இந்தியா உதவுகிறது. அவை சமாதானத்தையும், செழிப்பையும், பாதுகாப்பதற்கான பொதுவான இலக்கைத் தொடர்ந்து வேறுபட்ட உலக நாடுகளின் சர்வதேச அமைப்புகளுடன் ஆப்கானிஸ்தானை ஒன்றிணைக்க இந்தியா முயற்சிக்கிறது. ஐ.நாவில் ஆப்கானிஸ்தான் மீதான சர்வதேச ஒத்துழைப்புக்கும், ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட பல்வேறு சர்வதேச மாநாடுகளுக்கும் இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது. இதில் ஜூலை 2012 இல் நடந்த டோக்கியோ மேம்பாட்டு மாநாடு மற்றும் 2014 டிசம்பரில் லண்டன் மாநாடு போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

தாலிபன் ஆட்சிக் காலத்தில் 1999 இல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC 814-யை கடத்தி, ஆப்கானிஸ்தானத்தில், கந்தஹாருக்கு கொண்டு சென்றனர்.

2015 இல் ஆப்கானிஸ்தானின் இராணுவத்திற்கு, Mi-25 ரக ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியது. தாக்குதல் பெரிய அளவில் நடத்த ஏதுவான இவ்வகை ஹெலிகாப்டர்களை பரிசாக அளித்து, பாகிஸ்தானின் எதிர்ப்பை சம்பாதித்தது. மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆப்கான் போர் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தியா ஒத்துக்கொண்டது.


எதிர்கால ஒத்துழைப்பு

இந்தியாவின் வளர்ச்சிக்கான வழிமுறைகள், ஆப்கான்மக்களிடையே மிகுந்தவரவேற்பையும், ஒத்துழைப்பையும் உருவாக்கியுள்ளது. ஆனாலும் ஒரு சக்தி பொருந்திய அதே சமயத்தில் மென்மையான நாடு என்ற தன்மையை கொண்டிருப்பதால் ஒரு சில எல்லை கூறுக்களுக்குள்ளேயே செயல்பட வேண்டியுள்ளது. சில நேரங்களில் மென்மையான நாடாகவே தொடர்வதா, அல்லது அதிரடியாக ஆற்றலை வெளிப்படுத்துவதா என்பதில் இந்தியாவிற்கு தயக்கங்கள் உண்டு. 

தாலிபான்களுடனான உறவை ஒருபோதும் நேரடியாக வைத்து கொள்ளாத நிலையில் இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அரசுடன் செய்து கொண்ட அத்துனை ஒப்பந்தங்களையும் இந்தியா தயங்காமல் பின்பற்றியது. பல்வேறு ஆப்கான் குழுமங்களுடன் வலுவான உளவுத்துறை நிறுவனங்களின் மூலமாக ஒரு வழிமுறையை ஏற்படுத்தியதன் மூலம் இந்திய விருப்பங்கள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அங்குள்ள மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

ஆப்கான் மக்களுடனான நல்லணக்கத்தை எப்போதும் இந்தியா வளர்க்க பாடுபட வேண்டும். மேலும் உலக வர்த்தக மற்றும் மண்டலக் கழகங்களும் பேச்சு வார்த்தையின் மூலம் தாலிபான் மற்றும் கடந்த ஆண்டு ஆப்கான் மக்களிடையேயான பிரச்சனைகளை சரிசெய்யும் வகையில் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அரசமைப்பு, மக்களாட்சி சட்டத்தின் ஆட்சி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமைகள் யாவும் நிலைப்படுத்தவும் இந்தியா முயற்சிக்க வேண்டும். தாலிபான்களின் குறைகளிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். மேலும் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் கலந்து ஆலோசித்து தாலிபான்களின் கோரிக்கைகளில் கவனம் செலுத்துவது, அவை அவர்களின் சொந்த பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் விளைவிக்க கூடியது என்பதை புரிய வைக்க வேண்டியது போன்றவை இந்தியாவின் கடமை எனலாம்.

12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours : India- Afghanistan Relations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும் : இந்திய-ஆப்கானிஸ்தான் உறவுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்