Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய-பாகிஸ்தான் உறவுகள்
   Posted On :  04.04.2022 02:06 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்

இந்திய-பாகிஸ்தான் உறவுகள்

இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 70 ஆண்டுகளாக அண்டை நாடுகளாக, நிலப்பரப்பு, கலாச்சாரம், மதம், மொழி மற்றும் தத்துவம் போன்றவைகளை பகிர்ந்து கொள்ளும் பழமைக்கால நாகரிகங்களாகும்.

இந்திய-பாகிஸ்தான் உறவுகள்


இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 70 ஆண்டுகளாக அண்டை நாடுகளாக, நிலப்பரப்பு, கலாச்சாரம், மதம், மொழி மற்றும் தத்துவம் போன்றவைகளை பகிர்ந்து கொள்ளும் பழமைக்கால நாகரிகங்களாகும். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவில் இடப்பெயர்வும் அதனை தொடர்ந்து மத கலவரமும், நடந்தபோது, லட்சக்கணக்கில் முஸ்லீம்கள்  பாகிஸ்தானிற்கும், அதே அளவில் இந்துக்களும், சீக்கியர்களும், இந்தியாவிற்கு வந்தடைந்தனர். இப்பிரிவினையின் தொடர்ச்சியாக, இரு நாடுகள் பல போர்கள் மூலமாகவும், அதன் விளைவாக தீவிரவாதமும் எதிர்விளைவை உண்டாக்கி பகைமை நாடுகளாக மாறியது.



காஷ்மீர் பிரச்சனை

இவ்விரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளில், முக்கியமானதாக காஷ்மீர் விளங்குகிறது. 1947இல் விடுதலைக்கு பிறகு நடைபெற்ற மூன்று போர்களில் இரண்டு போர்களுக்கு மேற்கூறிய காரணமே முன்னிலை வகிக்கிறது. இந்திய சுதந்திர சட்டத்தின்படி, எடுக்கப்பட்ட கொள்கை முடிவான பிரிவினை திட்டத்தின்படி, காஷ்மீர் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைய முழு சுதந்திரம் பெற்றது. ஆரம்பகால கட்டத்தில் தனி சுதந்திர நாடாக அமைய ஆசைப்பட்ட காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங், அக்டோபர் 1947இல் பழங்குடியினரின் தாக்குதலால் இந்தியாவுடன் இணைய சம்மதித்தார். அப்போது ஆரம்பித்த போரில், இந்தியா, ஐக்கிய நாட்டு சபையின் தலையீட்டை கோரியது.


இப்போரானது, ஜனவரி 1, 1949 இல் ஐக்கிய நாட்டு சபையின் தலையீட்டில் முடிவுக்கு வந்து, ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் படையின் ஆதரவுடன் "போர் நிறுத்தம்" மேற்கொள்ளப்பட்டது. இதுவே இந்தியபாகிஸ்தானின் முதல்போர் ஆகும்.

காஷ்மீருக்காக நடைபெற்ற நீண்ட போராகவும், செலவு குறைவான போராகவும் இது விளங்கியது. ஏனெனில் இருதரப்பு நாடுகளும் உபயோகப்படுத்திய துப்பாக்கி உபகரணங்கள் மிகக் குறைவே. இதன் தொடர்ச்சியாக காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு, இருநாட்டின் இராணுவமும் மதிக்கும்படியான எல்லைக்கோடு அமைந்தது. மேலும் மூன்று பாகம் பாகிஸ்தானின் எல்லையில் அமையப் பெற்றது.


ஐக்கிய நாடுகள் சபை, 'பொது வாக்கெடுப்பை' சிபாரிசு செய்தது. இவ்வாக்கெடுப்பின் மூலம் காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைவதற்கு உரிமை அளிக்கப் பெறுகிறது. ஆனால் அவ்வாறு நடைபெறுவதற்கு முன்னர், இரு நாடுகளும் "ராணுவமல்லாத பகுதியாக" காஷ்மீர் இருப்பதற்கு சம்மதிக்கவில்லை. ஜூலை, 1949இல் இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஐக்கிய நாட்டு சபையின் பரிந்துரையை நிறைவேற்றின . இந்திய - பாகிஸ்தானுக்கிடையேயான இரண்டாவது போர் 1965இல் நடைபெற்றது.

இவ்வாறு நடந்த போர்களில் 1971இல் நடந்தது மட்டுமே முன் பிரகடனம் செய்யப்பட்டு நடந்தது. ஏனைய போர்கள் யாவுமே எல்லையில் நடந்த சிறு சர்ச்சைகளாக பாவிக்கப்படுகின்றன. சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இவ்விரு நாடுகளும், போர்களை நிறுத்தி அமைதிக்காக பாடுபட வேண்டும் என்ற கொள்கையை நிலைநிறுத்தி கொண்டன.


அதன் பிறகு 1999 இல் இந்தியா பாகிஸ்தானின் படை பலத்தோடு கார்கில் போரில் ஈடுபட்டது. அச்சமயத்தில் இவ்விரு நாடுகளுமே அணு ஆயுத நாடுகளாக தங்களை பறைசாற்றி கொண்டன.1989-லிருந்து பிரிவினைவாதிகள் இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டதனால், பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.

செயல்பாடு


சீனா-இந்தியாவினுடைய மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்க முடியும் என்றால், ஏன் இந்தியா-பாகிஸ்தானோடு அவ்வாறு இருக்க முடியாது? மக்களும், மூலதனமும் எவ்வித தடையுமில்லாமல் பரி மாற்றம் செய்யப்பட்டால், காஷ்மீர் சிக்கலை நடவடிக்கை புதைத்து விட முடியாதா?- விவாதிக்க. - நன்றி: தி.இந்து கேலிசித்திரம்


இன்றைய இந்திய- பாகிஸ்தான் உறவுகள் "மூன்று முக்கியமான பிரச்சினைகளை மையமாக வைத்து இயங்குகிறது. காஷ்மீர், தீவிரவாதம் மற்றும் பொருளாதார உறவுகள், இம்மூன்று பிரச்சனைகளுமே, ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தாலும், தெற்கு ஆசியாவின் அமைதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்யமுடியாததாலும், பங்களாதேஷ்ஐ இழந்ததாலும், இந்தியாவை தீவிரவாதத்தின் மூலம் சீர்குலைக்க, பாகிஸ்தான் முனைகிறது.

சிம்லா ஒப்பந்தம் (1972)


இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமான அமைதி உடன்படிக்கை 1972, ஜூலை 2ஆம் நாளன்று ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரமான சிம்லாவில் கையெழுத்தானது. 1971இல் நடைபெற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போரின் தொடர்ச்சியாக இந்நிகழ்வு நடந்தது. பங்களாதேஷ் முன்பு கிழக்கு பாகிஸ்தானாக, பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்தது. இந்தியா-பங்களாதேஷின் கூட்டணி நாடாக சேர்ந்து, அப்போது இந்திய-பாகிஸ்தான் போராக சுல்பிகர் அலி பூட்டோவும் இந்திரா காந்தியும் 1971 இல் அறிவிக்கப் பெற்றது. இரு நாட்டு அரசாங்கங்களும் தங்களின் நாடாளுமன்றங்களின் துணையோடு ஒப்புதல் பெற்றன. இவ்வொப்பந்தம் பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோ மற்றும் இந்திய பிரதமர் இந்திரா காந்தியாலும் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷ் தூதரக உறவு மேற்கொள்வதற்கு ஏதுவாக பாகிஸ்தான் கையெழுத்திட்டது.


370-வது உறுப்பை திரும்பப்பெறல்

2019 ஆகஸ்ட் 5, அன்று இந்திய குடியரசுத்தலைவர் உறுப்பு 370(1)க்கு (ஜம்மு மற்றும் காஷ்மீர் தொடர்பாக) ஒப்புதல் அளித்தார். இதன்படி, உறுப்பு 370-ன் கீழ் உள்ள அனைத்து சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், விதி 370(1)ன் கீழே சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த திருத்தங்களின் கீழ், இந்திய அரசமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்துமாறு மாற்றப்பட்டுள்ளது.



இந்திய-பாகிஸ்தான் உறவுகளில் முக்கிய பிரச்சினைகள் 


1. சியாச்சின்


1984 இல் இருந்து இந்திய-பாகிஸ்தான் போர் படைகள், உலகிலே மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலையில் தங்களது எல்லைகளை பாதுகாத்து அப்பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க போராடும் நிலையில், மிஞ்சியது ஏமாற்றமே ஆகும்.



துல்லியத் தாக்குதல்

துல்லியத் தாக்குதல் - பாகிஸ்தான் அடுக்கடுக்கான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவின் குறைந்த பாதிப்புள்ள செயல்முறைதிட்டமே "துல்லியத் தாக்குதல்" என அழைக்கப்படுகிறது. 

• இவ்வகை தாக்குதல் குறிப்பிட்ட இராணுவ தளவாடங்களை குறிவைப்பது. 

• குடிமை பகுதிகளுக்கு குறைந்த சேதாரத்தை அளிப்பது. 

• குறைந்த அல்லது மனித சேதமில்லாத தாக்குதல்கள்.


2. நீர் பங்கீட்டு பிரச்சனை

காஷ்மீரிலிருந்து உருவாகும் ஆறுகள் பாகிஸ்தானின் "சிந்து நதி" ஆற்று படுகைக்கு செல்லும் பட்சத்தில் நீர் பகிர்வதில் கருத்து ஒற்றுமையின்மை எழுகிறது. 1960இல் ஒப்பந்தம் செய்யப்பட்ட சிந்து நதி உடன்படிக்கையின்படி, மூன்று கிழக்கு ஆறுகளிலிருந்து வரும் நீர் இந்தியாவிற்கும், மேற்கு ஆறுகள் மூன்றிலிருந்து வரக்கூடிய நீர் பாகிஸ்தானிற்கும் உபயோகப்படுத்தலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா நீர்வரத்து வரும் வழியில் அணைகளை கட்டி நீரைதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதாக, பாகிஸ்தான் தரப்பு குற்றம் கூறுகிறது. இதை இந்தியா மறுக்கிறது.


3. சர் கிரிக் பிரச்சினை


காஷ்மீர் மற்றும் சியாச்சின் மட்டுமல்லாது சிலபலமுக்கிய பிரச்சனைகளும் இவ்விரு அணு ஆயுத சக்தி நாடுகளை சுற்றி வலம் வருகின்றன. 70 ஆண்டுகளாக சர் கிரிக் பிரச்சனை தீர்வின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சர் கிரிக் என்பது 96கி.மீ நீர் பிரச்சனையாக கட்சி வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. இதன் உண்மையான பெயர் பான்கங்காவாகும். பிரிட்டிஷ் பிரதிநிதி சர் கிரிக்கின் நினைவாக பெயர் மாற்றமாகியுள்ளது. கிரிக் என்பது அரபி கடலில் குஜராத்தில் அமைந்துள்ள கட்ச் மண்டலத்தையும், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தையும் பிரிக்கின்ற ஒரு பகுதியாகும். கட்ச்சையும், சிந்து மாகாணத்தையும் பிரிக்கின்ற கடல் எல்லையே இந்த பிரச்சனைக்கு காரணியாகும். சுதந்திரத்திற்கு முன்பு, இம்மாகாணங்கள் மும்பையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆனால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, கட்ச் இந்தியாவின் பகுதியாகவும், சிந்து பாகிஸ்தானின் மாகாணமாகவும் பிரிந்தது. இடம் மற்றும் எல்லை தொடர்பான பிரச்சனை மட்டுமல்லாது இவ்விடம் மீன் வளம் அதிகமுள்ள பகுதியாக திகழ்கிறது. இதுமட்டுமல்லாது சர் கிரிக் நீர் நிலையில், இயற்கை வாயு மற்றும் எண்ணெய் வளம் மிகுந்து இருப்பதனால் இவ்விரு நாடுகளும் தீர்வு காணமுடியாமல் முடிவில்லாத பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர்.



கிளர்ச்சியாளர் தாக்குதலின் பட்டியல்

ஜம்மு-காஷ்மீரின் சட்டசபையில் தாக்குதல்

 2001, அக்டோபர் 1, அன்று சட்டசபையின் அருகே கார் குண்டு வெடித்ததில் 27 நபர்கள் உயிரிழந்தனர். இதற்க்கு காஷ்மீர் பிரிவினைவாதிகள் குற்றம் சாட்டப்பட்டனர். இந்திய நாடாளுமன்ற தாக்குதல் டிசம்பர் 2001-க்கு நிகராக நடைபெற்ற தாக்குதல் போன்றதாகும். 

அப்துல் ஹானி படுகொலை

அனைத்து கட்சி ஹீரியத் தலைவர் அப்துல் ஹானி அடையாளம் தெரியாத நபர்களால் ஸ்ரீநகரில் படுகொலை செய்யப்பட்டார். படுகொலையின் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்தை எதிர்த்து அம்மாநிலம் முழுவதும் போராட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடத்தினர். போதுமான பாதுகாப்பு அவருக்கு தரப்படவில்லை என்பதே மக்களின் ஆதங்கமாக காரணம் கூறப்பட்டது. 

2008 மும்பை தாக்குதல் (26/11)

நவம்பர் 2008இல் லஷ்கர்-இ-தொய்பாவின் பத்து உறுப்பினர்கள் 12 இடங்களில் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வைத்தல் நிகழ்வுகளை நான்கு நாட்களாக அரங்கேற்றினர். உலக அரங்கையே அதிரவைத்த இக்கோரசம்பவம் 26 நவம்பரில் தொடங்கி 29 நவம்பரில் முற்றுப்பெற்றது. இச்சம்பவத்தில் 174 நபர்கள் உயிரிழந்தனர், 300 நபர்கள் படுகாயமுற்றனர். தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளும் இறந்தவர்களில் உள்ளடக்கம். 

2016 யூரி தாக்குதல் 

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள யூரியில் 18 செப்டம்பர் 2016 அன்று நடந்த பயங்கர தாக்குதலில் 18 நபர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, 20 நபர்கள் படுகாயமடைந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில், யூரி தாக்குதல் கடுமையான விளைவை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. 

2019 புல்வாமா தாக்குதல்

2019 பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் ராணுவப் படை வாகனங்கள், தற்கொலை தீவிரவாதிய வாகனம் மோதியதில் அவ்விடத்திலேயே 38 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் படுகொலை செய்யப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இக்கோரச் சம்பவத்தில் பயங்கரவாதியும் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் இஸ்லாமிய தீவிரவாத குழுவான ஜெய்ஷ்இ-முகமது நிகழ்வுக்கு பொறுப்பேற்றது.


12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours : India - Pakistan Relations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும் : இந்திய-பாகிஸ்தான் உறவுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்