Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | ஜஹாங்கீர் (1605-1627)

முகலாயப் பேரரசு - ஜஹாங்கீர் (1605-1627) | 11th History : Chapter 14 : The Mughal Empire

11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு

ஜஹாங்கீர் (1605-1627)

அக்பருக்குப் பின் அவருடைய மகன் சலீம், நூருதீன் ஜஹாங்கீர் என்ற பட்டப் பெயருடன் அரியணை ஏறினார்.

ஜஹாங்கீர் (1605-1627)


அக்பருக்குப் பின் அவருடைய மகன் சலீம், நூருதீன் ஜஹாங்கீர் என்ற பட்டப் பெயருடன் அரியணை ஏறினார். இவர் அரசரானதை எதிர்த்து இவருடைய மூத்தமகன் இளவரசர் குஸ்ரு சீக்கிய குரு அர்ஜுன் தேவின் ஆதரவோடு கலகத்தில் இறங்கினார். கலகம் ஒடுக்கப்பட்டு இளவரசர் குஸ்ரு கைது செய்யப்பட்டு விழிகள் அகற்றப்பட்டன. கலகத்தைத் தூண்டியதாக குரு அர்ஜுன் தேவ் கொல்லப்பட்டார். வங்காளத்தில் தனக்கெதிராகக் கலகம் செய்த ஆப்கானியரான உஸ்மான் கான் என்பவரை ஜஹாங்கீர் பணிய வைத்தார். ராணா உதய்சிங், ராணா பிரதாப்சிங் ஆகியோர் காலத்தில் முகலாயருக்கு அடிபணிய மறுத்த மேவார் ராணா உதய்சிங்கின் பேரன் ராணா அமர்சிங்கிற்கு எதிராகத் தனது மகன் இளவரசர் குர்ரம் (பின்னாளில் பேரரசரான ஷாஜகான்) தலைமையில் படையெடுப்பு நடத்தி ஒழுங்குக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமர்சிங் ஜஹாங்கீரின் மேலதிகாரத்தை ஏற்றுக் கொண்ட அரசராகத் தனது பகுதிகளை ஆண்டார். 1608இல் தக்காண அரசான அகமது நகர் மாலிக் ஆம்பரின் தலைமையின் கீழ் தன்னைச் சுதந்திர அரசாக அறிவித்தது.

அகமது நகரை இளவரசர் குர்ரம் கைப்பற்ற மேற்கொண்ட பல முயற்சிகள் கடைசியில் தோல்வியில் முடிந்தன. 14 மாத கால முற்றுகைக்குப் பின்னர் காங்ரா கோட்டையைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். 1595இல் பாரசீகர்களிடமிருந்து அக்பரால் கைப்பற்றப்பட்ட காந்தகாரை 1622இல் பாரசீக அரசர் ஷா அப்பாஸ் மீட்டிருந்தார். ஜஹாங்கீர் அதை மீண்டும் கைப்பற்ற விரும்பினார். ஆனால் இளவரசர் குர்ரம் மேற்கொண்ட கிளர்ச்சியின் காரணமாக அதை அவரால் செய்ய இயலவில்லை. ஜஹாங்கீரின் ஆட்சி வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ என்ற இரு ஆங்கிலேயரின் வருகைக்கு சாட்சியமானது. இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குடியேற்றம் ஒன்றை நிறுவுவதற்குப் பேரரசின் அனுமதியை முதலாமவரால் பெற இயலவில்லை. ஆனால் தாமஸ் ரோ இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் அனுப்பிய தூதுவராய்ச் சூரத் நகரில் ஒரு வணிகக் குடியேற்றத்தை அமைத்துக் கொள்வதற்கான அனுமதியை பேரரசரிடம் பெறுவதில் வெற்றி பெற்றார்.



மாலிக் ஆம்பர்: எத்தியோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு ஓர் அடிமையாகக்கொண்டுவரப்பட்ட மாலிக் ஆம்பர், பல இடங்கள் மாறி இறுதியாக அகமதுநகர் அரசின் பிரதம மந்திரியான செங்கிஸ்கானிடம் வந்து சேர்ந்தார். மாலிக் ஆம்பர் அரசியல் விவேகம், ராணுவம் மற்றும் நிர்வாக விஷயங்களை செங்கிஸ்கானிடமிருந்து கற்றுக்கொண்டார். செங்கிஸ்கானின் மரணத்திற்குப் பின்னர் அவருடைய மனைவி மாலிக் ஆம்பரை சுதந்தர மனிதராக்கினார். கடுமையான உழைப்பின் மூலம் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இறுதியாகத் தென்னிந்தியச் சுல்தானியங்கள் ஒன்றின் இராணுவத் தளபதியாகவும் பகர ஆளுநராகவும் ஆனார்.


தக்காணத்தில் முஸ்லீம்களும் மராத்தியர்களும் தங்கள் அரசியல் மற்றும் வட்டாரத் தனித்தன்மைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒருங்கிணைந்து முகலாயரின் மேலாதிக்கத்தை எதிர்த்தனர். இம்முயற்சியின் பின்னே மூளையாகச் செயல்பட்டவர் மாலிக் ஆம்பர். 1626, மே 14இல் மாலிக் ஆம்பர் தன்னுடைய 78ஆம் வயதில் மரணமடைந்தபோது அவரால் பயிற்றுவிக்கப்பட்ட மராத்தியர்கள் ஓர் அங்கீகரிக்கப்பட்ட சக்தியாக மாறினர்.

ஜஹாங்கீர் அரசு விஷயங்களைக் காட்டிலும் கலை, ஓவியம், தோட்டம், மலர்கள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக அரசரின் பாரசீக மனைவி மெகருன்னிசா (ஜஹாங்கீரால் நூர்ஜகான் எனப் பெயரிடப்பட்டவர்) அரியணையின் பின்னே உண்மையான அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார். நூர்ஜகான் மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக இளவரசர் குர்ரம் தனது தந்தைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். ஆனால் ஜஹாங்கீரின் விசுவாசமிக்க தளபதி மகபத்கான் மேற்கொண்ட முயற்சிகளால் வெற்றிபெற இயலாத நிலையில் குர்ரம் தக்காணம் திரும்பினார். பின்னர் நூர்ஜகானின் சதி நடவடிக்கைகளின் காரணமாக மகபத்கான் கலகத்தில் இறங்க, அக்கலகம் நூர்ஜகானால் திறமையுடம் கையாளப்பட்டதால் மகபத்கானும் தக்காணம் சென்று குர்ரமுடன் கைகோத்தார். ஜஹாங்கீர் இறந்தவுடன் நூர்ஜகான் தன் மருமகன் ஷாரியர் என்பவருக்கு மணிமுடி சூட்ட முயன்றார். ஆனால் நூர்ஜகானின் சகோதரரும் குர்ரமின் மாமனாருமான ஆசப்கான் மேற்கொண்ட முயற்சிகளால் குர்ரம் ஷாஜகான் என்ற பெயருடன் அடுத்த முகலாய அரசராக அரியணை ஏறினார். பத்து ஆண்டுகள் நாட்டையாண்ட நூர்ஜகான், 1627இல் ஜஹாங்கீரின் இறப்புக்குப் பின்னர் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்தார்.



Tags : The Mughal Empire முகலாயப் பேரரசு.
11th History : Chapter 14 : The Mughal Empire : Jahangir (1605–1627) The Mughal Empire in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு : ஜஹாங்கீர் (1605-1627) - முகலாயப் பேரரசு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 14 : முகலாயப் பேரரசு