தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் - தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள் | 10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu
தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள்
இந்தியாவில்
தொழில்கள் வளர முதல் உலகப்போர் (1914-1918) உத்வேகம்
அளித்தது. போர்க்காலத்தேவைகளை நிறைவு செய்துவந்த இத்தொழிற்சாலைகள் மிக அதிக
எண்ணிக்கையில் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியிருந்தன. போர் முடிவடைந்ததால்
போர்காலத் தேவைகளும் குறைந்தன. எனவே, அனைத்து
தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டன. இத்துடன் ஏற்பட்ட விலைவாசி ஏற்றமும்
தொழிலாளர் இயக்கங்கள் தோன்றுவதற்கு உந்து சக்தியாக அமைந்தன. சென்னை மாகாணத்தில்
பி.பி. வாடியா, ம. சிங்காரவேலர்,
திரு.வி.
கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முன்முயற்சி
மேற்கொண்டனர். 1918இல் இந்தியாவின் முதல்
தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் (Madras
Labour Union) உருவாக்கப்பட்டது.
அகில
இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920
அக்டோபர்
31இல் பம்பாயில் நடைபெற்றது. பல தீர்மானங்கள்
குறித்து பிரதிநிதிகள் விவாதித்தனர். தொழிலாளர்களின் பிரச்சனைகளில் காவல்துறை
தலையிடுவதிலிருந்து பாதுகாப்பு, வேலையில்லாதவர்களுக்கென ஒரு பதிவேட்டைப்
பராமரித்தல், உணவுப் பண்டங்களின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு,
காயமடைந்தோர்க்கு
ஈட்டுத்தொகை மற்றும் உடல் நலக் காப்பீடு ஆகியவை இவற்றில் அடங்கும்.
சென்னை
மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ம. சிங்காரவேலர் (1860-1946)
ஆவார்.
சென்னையில் பிறந்த அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாநிலக் கல்லூரியில்
பயின்று பட்டம் பெற்றார். இளமைக் காலத்தில் பௌத்தத்தைப் பரிந்துரை செய்தார். அவர்
தமிழ், ஆங்கிலம்,
உருது,
இந்தி,
ஜெர்மன்,
பிரெஞ்ச்
மற்றும் ரஷ்யன் என பலமொழிகள் அறிந்திருந்ததோடு காரல் மார்க்ஸ்,
சார்லஸ்
டார்வின், ஹெர்பர்ட்
ஸ்பென்சர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோரின் கருத்துக்களைத்
தமிழில் வடித்தவர். 1923இல் முதல் முதலாக மே தின
விழாவை ஏற்பாடு செய்தவரும் அவரே. அவர் இந்திய பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்) கட்சியின்
ஆரம்பகால தலைவர்களில் ஒருவராக இருந்தார். தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளைப் தொழிலாளன் (Worker) என்ற
பத்திரிக்கையை வெளியிட்டார். பெரியாரோடும் சுயமரியாதை இயக்கத்தோடும் நெருக்கமாக
இருந்தார்.