தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் - சுயமரியாதை இயக்கம் | 10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu
சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை
இயக்கம் (Self Respect Movement) சடங்குகளும்
சம்பிரதாயங்களும் இல்லாத சாதிகளற்ற பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடற்ற ஒரு
சமூகத்தை இவ்வியக்கம் ஆதரித்தது. பகுத்தறிவும் சுயமரியாதையும் அனைத்து
மனிதர்களின் பிறப்புரிமை எனப் பிரகடனம் செய்த இவ்வியக்கம் சுயாட்சியைக் காட்டிலும்
இவை முக்கியமானவை எனும் கருத்தை உயர்த்திப் பிடித்தது. பெண்களின் தாழ்வான நிலைக்கு
எழுத்தறிவின்மையே காரணம் என அறிவித்த அவ்வியக்கம் அனைவருக்கும் கட்டாயத் தொடக்கக்
கல்வியை வழங்கும் பணிகளை மேற்கொண்டது.
இவ்வியக்கம்
பெண் விடுதலை கோருதல், மூடநம்பிக்கைகளை நீக்குதல் மற்றும் பகுத்தறிவை
வலியுறுத்துதல் போன்ற கோரிக்கைகளை கோரியது. மேலும் இவ்வியக்கம் சீர்திருத்தத்
திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணங்களை ஆதரித்தது.
சுயமரியாதை
இயக்கம் பிராமணர் அல்லாத இந்துக்களின் நலன்களுக்காக மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின்
நலனுக்காகவும் போராடியது. இஸ்லாமின் மேன்மை மிகுந்த கோட்பாடுகளான சமத்துவம்,
சகோதரத்துவம்
ஆகியவற்றை சுயமரியாதை இயக்கம் பாராட்டியது.
இவர் ஈரோட்டை சேர்ந்த செல்வந்தரும் வணிகருமான
வெங்கடப்பர், சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாவார். ஓரளவு முறையான கல்வியைக்
கற்றிருந்தாலும் தன் தந்தையால் ஆதரிக்கப்பட்ட அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதை
வழக்கமாகக் கொண்டிருந்தார். இளைஞராக இருந்தபோது ஒருமுறை வீட்டைவிட்டு வெளியேறிய
அவர் பல மாதங்கள் வாரணாசியிலும் ஏனைய சமயம் சார்ந்த மையங்களிலும் தங்கியிருந்தார்.
வைதீக இந்து சமயத்துடன் ஏற்பட்ட நேரடி அனுபவங்கள் இந்து சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த
நம்பிக்கைகளைத் தகர்த்தன. வீடு திரும்பிய அவர் சில காலம் குடும்பத் தொழிலான
வணிகத்தை கவனித்து வந்தார். அவருடைய சுயநலமற்ற பொதுச் சேவைகளும்,
தொலைநோக்குப்
பார்வையும் அவரை புகழ்பெற்ற ஆளுமை ஆக்கின. ஈரோட்டின் நகரசபைத் தலைவர் பதவி (1918-1919)
உட்பட
பல பதவிகளையும் அவர் வகித்தார்.
தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் பதவி வகித்தபோது ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமை குறித்த
தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். சாதி தர்மம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட
பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள வீதிகளிளும்
நுழைவது மறுக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நடைமுறையினை வைக்கம் (திருவாங்கூர்
சமஸ்தானத்தின் ஒரு சுதேசி அரசு, தற்போதைய கேரள மாநிலத்திலுள்ள ஒரு நகரம்)
மக்கள் எதிர்த்தனர். எதிர்ப்பின் தொடக்கக் கட்டங்களில் மதுரையைச் சேர்ந்த ஜார்ஜ்
ஜோசப் பெரும்பங்கு வகித்தார். உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர்
பெரியார் இந்த இயக்கத்திற்கு தலைமையேற்றதால் சிறையிலடைக்கப்பட்டார். மக்கள் அவரை 'வைக்கம்
வீரர்' எனப் பாராட்டினர். இதே சமயத்தில் சேரன்மாதேவி
குருகுலப் பள்ளியில், உணவு உண்ணும் அறையில் சாதி அடிப்படையிலான
பாகுபாடு நிலவுவதைக் கேள்வியுற்று மனவருத்தமடைந்தார். இக்குருகுலம் தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டியின் நிதியுதவியில் வ.வே.
சுப்பிரமணியம் எனும் காங்கிரஸ் தலைவரால் நடத்தப் பெற்றது. இதனைப் பெரியார்
கண்டித்து எதிர்த்த பின்னரும், குருகுலத்தில் நடைபெறும் சாதிப்பாகுபாட்டை
காங்கிரஸ் தொடர்ந்து ஆதரித்ததால் மனமுடைந்தார்.
பெரியார்
1925 இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் மக்கள் தொடர்புச் சாதனங்களின்
முக்கியத்துவத்தைப் பெரியார் புரிந்து கொண்டார். குடிஅரசு (1925)
ரிவோல்ட்
(1928), புரட்சி (1933),
பகுத்தறிவு
(1934), விடுதலை (1935)
போன்ற
பல செய்தித்தாள்களையும் இதழ்களையும் பெரியார் தொடங்கினார். சுயமரியாதை இயக்கத்தின்
அதிகாரபூர்வ செய்தித்தாள் குடி அரசு ஆகும். ஒவ்வொரு இதழிலும் சமூகம் பிரச்சனைகள்
தொடர்பான தனது கருத்துகளைப் பெரியார் வழக்கமான கட்டுரையாக எழுதினார். அவ்வப்போது
சித்திரபுத்திரன் எனும் புனைப் பெயரில் கட்டுரைகளை எழுதினார்.
பௌத்த
சமய முன்னோடியும், தென்னிந்தியாவின் முதல்
பொதுவுடமைவாதியுமான சிங்காரவேலருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். B.R.
அம்பேத்கார்
எழுதிய சாதி ஒழிப்பு (Annihilation of caste) எனும்
நூலை, அந்நூல் வெளிவந்தவுடன் 1936இல்
தமிழில் பதிப்பித்தார். B.R. அம்பேத்கார் அவர்களின்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்.
1937இல் இராஜாஜியின் தலைமையிலான அரசின்
செயல்பாட்டினை எதிர்க்கும் விதமாக, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிமுகம்
செய்ததற்கு எதிராகப் பெரியார் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கத்தை நடத்தினார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டமானது (1937-39) தமிழ்நாட்டு
அரசியலில் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்துக்காக பெரியார்
சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் சிறையில் இருந்தபோதே நீதிக்கட்சியின் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்
பின்னர் நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்தது. அதற்கு 1944இல்
திராவிடர் கழகம் (திக) எனப் புதுப்பெயர் சூட்டப்பெற்றது.
சென்னை
மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த இராஜாஜி (1952-54)
பள்ளிக்
குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய தொழில் கல்வி பயிற்சித் திட்டமானது,
மாணவர்களுக்கு
அவர்களின் தந்தையர்கள் செய்து வந்த தொழில்களில் பயிற்சியளிப்பதாக அமைந்தது. இதை
குலக்கல்வித் திட்டம் (சாதியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை) என விமர்சித்த
பெரியார் இத்திட்டத்தை முழுமையாக எதிர்த்தார். இதற்கு எதிராக பெரியார் மேற்கொண்ட
போராட்டங்கள் இராஜாஜியின் பதவி விலகலுக்கு இட்டுச் சென்றது. கு. காமராஜ் சென்னை
மாநிலத்தின் முதலமைச்சரானார். பெரியார் தன்னுடைய தொண்ணூற்று நான்காவது வயதில் (1973)
இயற்கை
எய்தினார். அவரது உடல் சென்னையில் பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெரியார்
ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார். குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும்
கண்டனம் செய்தார். 1929 முதல் சுயமரியாதை
மாநாடுகளில், பெண்களின் மோசமான நிலை குறித்து குரல்
கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில்
பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார். “திருமணம் செய்து
கொடுப்பது” எனும் வார்த்தைகளை மறுத்த அவர் அவை பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன
என்றார். அவைகளுக்கு மாற்றாக திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை
என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார். பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக
முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.
பெண்களுக்குச்
சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும்,
பாதுகாப்பையும்
வழங்கும் என பெரியார் நம்பினார்.
1989இல் தமிழக அரசு,
மாற்றங்களை
விரும்பிய சீர்த்திருத்தவாதிகளின் கனவை நனவாக்கும் வகையில் 1989ஆம்
ஆண்டு தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தது.
அச்சட்டம் முன்னோர்களின் சொத்துக்களை உடைமையாகப் பெறுவதில் பெண்களுக்குச் சம உரிமை
உண்டென்பதை உறுதிப்படுத்தியது. முன்மாதிரியாக அமைந்த இந்தச் சட்டம்
தேசிய அளவிலும் இது போன்ற சட்டங்கள் இயற்றப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது.
இரட்டைமலை
சீனிவாசன் (1859-1945) 1859ஆம்
ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார். சாதிப்படி நிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக
நீதி, சமத்துவம்,
சமூக
உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடினார். அவருடைய தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப் (1926),
ராவ்
பகதூர் (1930), திவான் பகதூர் (1936)
ஆகிய
பட்டங்களால் அவர் சிறப்புச் செய்யப்பட்டார். அவரது சுயசரிதையான ஜீவிய சரித
சுருக்கம் 1939இல் வெளியிடப்பட்டது.)
இந்நூல் முதன் முதலாக எழுதப்பெற்ற சுயசரிதை நூல்களில்
ஒன்றாகும்.
தீண்டாமையின்
கொடுமைகளை அனுபவித்த இரட்டைமலை சீனிவாசன் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின்
முன்னேற்றத்திற்காக உழைத்தார். 1893இல் ஆதிதிராவிட மகாஜன சபை
எனும் அமைப்பை உருவாக்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை
மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் தலைவராகப்
பணியாற்றினார்.
B.R. அம்பேத்காரின் நெருக்கமானவரான அவர்,
லண்டனில்
(1930 மற்றும் 1931)
நடைபெற்ற
முதல், இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்டு
சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் கருத்துக்களுக்காகக் குரல் கொடுத்தார். 1932இல்
செய்துகொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுள் அவரும் ஒருவர்.
மயிலை
சின்னதம்பி ராஜா (1883-1943) மக்களால்
எம்.சி. ராஜா என அழைக்கப்பட்ட அவர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களில்
முக்கியமானவர். ஒரு ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய அவர் பள்ளிகள்,
கல்லூரிகள்
ஆகியவற்றுக்கான பல்வேறு பாடப்புத்தகங்களை எழுதினார். தென்னிந்திய நல உரிமைச்
சங்கத்தை (நீதிக்கட்சி) உருவாக்கியவர்களில் ஒருவராவார். சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து
சட்ட மேலவைக்கு தேர்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினராவார் (1920-1926)
சென்னை
சட்ட சபையில் நீதிக்கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டார்.
1928இல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும்
அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக நீண்டகாலம் பணியாற்றினார்.