Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | தென்னிந்திய நல உரிமைச்சங்கம் (நீதிக்கட்சி)

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் - தென்னிந்திய நல உரிமைச்சங்கம் (நீதிக்கட்சி) | 10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu

   Posted On :  27.07.2022 05:09 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

தென்னிந்திய நல உரிமைச்சங்கம் (நீதிக்கட்சி)

1916 நவம்பர் 20இல் டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) உருவாக்க ஒருங்கிணைந்தனர்.

தென்னிந்திய நல உரிமைச்சங்கம் (நீதிக்கட்சி)

1916 நவம்பர் 20இல் டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) உருவாக்க ஒருங்கிணைந்தனர். இதே சமயம் 1916 டிசம்பரில், விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் பிராமணரல்லாதோர் அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை பிராமணரல்லாத சமூகங்களின் கருத்துக்களைத் தெளிவுபடக்கூறியது.

இவ்வமைப்பு தொடங்கி வெளியிட்ட மூன்று செய்தித்தாள்களாவன; கட்சியின் கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காகத் தமிழில் திராவிடன் ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிக்கைகளை வெளியிட்டது.

மாகாண அரசுகளில் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்த பின்னர் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் 1920இல் முதல் தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்தது A. சுப்பராயலு சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார். மேலும் நீதிக்கட்சி 1920-1923 மற்றும் 1923-1926 ஆகிய ஆண்டுகளில் அரசமைத்தது. 

காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்த சூழலில் நீதிக்கட்சி 1937இல் தேர்தல் நடைபெறும் வரை ஆட்சி தொடர்ந்து நீடித்தது. 1937 தேர்தல்களில், முதன் முதலாகப் பங்கேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் நீதிக்கட்சியை படுதோல்வி அடையச் செய்தது.

திட்டங்களும் செயல்பாடுகளும் 

நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று. நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்தி அரசியல் தளத்தில் அவர்களுக்கென இடத்தை உருவாக்கியது.

சாதி மறுப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்திய சட்டச் சிக்கல்களை நீதிக் கட்சியினர் அகற்றியதோடு பொதுக் கிணறுகளையும் நீர் நிலைகளையும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்துவதை தடுத்த தடைகளைத் தகர்த்தனர் ஒடுக்கப்பட்ட பிரிவு குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென நீதிக்கட்சியின் அரசு ஆணை பிறப்பித்தது. இச்சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென 1923இல் தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன. நீதிக்கட்சியின் கீழிருந்த சட்டமன்றம்தான் முதன் முதலாக தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை 1921இல் அங்கீகரித்தது. இத்தீர்மானம் பெண்களுக்கென இடத்தை ஏற்படுத்தியதால் 1926இல் முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக முடிந்தது.

பல்வேறு சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நீதிக்கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளை மேற்கொண்டது. சமூக நீதியை நிலைநாட்டுவதின் ஒரு பகுதியாக பல்வேறு சாதிகளையும் சமூகங்களையும் சார்ந்தவர்களுக்கு அரசுப்பணிகளில் சேர்வதற்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் பொருட்டு இரண்டு வகுப்புவாரி அரசாணைகள் (1921 செப்டம்பர் 16 மற்றும் 1922 ஆகஸ்ட் 15) இயற்றப்பட்டன. நிர்வாக அதிகாரங்களை அனைத்து சமூகத்தினரும் பங்கிட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்தது. இம்முறையைப் பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய அரசு 1929இல் பொதுப் பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது.

இவைகள் தவிர சமய நிறுவனங்களை சீர்திருத்துவதிலும் நீதிக்கட்சி கவனம் செலுத்தியது. நீதிக்கட்சி 1926இல் இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது. அதன்படி எந்தவொரு தனிநபரும், சாதி வேறுபாடின்றி கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவும் கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டது. 


Tags : Social Transformation in Tamil Nadu தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்.
10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu : South Indian Liberal Federation (Justice Party) Social Transformation in Tamil Nadu in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் : தென்னிந்திய நல உரிமைச்சங்கம் (நீதிக்கட்சி) - தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்