தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் - இந்திய விடுதலைக்கு முன்பு மொழிப் போராட்டம் | 10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu
இந்திய விடுதலைக்கு முன்பு மொழிப் போராட்டம்
பொதுவாக,
மொழி
என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடாகும்,
மேலும்
இது ஒரு சமூகத்தின் பண்பாடு மற்றும் உணர்வுகளுடன் இயைந்து நிற்பது. தமிழ்மொழி
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்
தனது மேன்மையை மீட்டுப் பெற்றது. மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம்,
பெரியாரின்
மொழிச் சீர்திருத்தம் மற்றும் தமிழிசை இயக்கம் ஆகியவை தமிழுக்கு வலுச்சேர்த்தன.
திராவிட உணர்வுக்கு இட்டுச் சென்ற தமிழ் மறுமலர்ச்சி நவீனத் தமிழ் மொழியின்
வளர்ச்சியிலும் அதன் கலை வடிவங்களுடைய வளர்ச்சியிலும் பெரும் பங்களிப்பைச்
செய்தது. ஆகம கோவில்களில் செய்யப்படும் சடங்குகள் தமிழில் செய்யப்படுவதில்லை. இசை
நிகழ்ச்சிகளிலும் தமிழ் பாடல்கள் ஓரளவிலான இடத்தையே பெற்றிருந்தன. ஆபிரகாம்
பண்டிதர் தமிழ் இசை வரலாற்றை முறையாகக் கற்றாய்ந்து,
பழந்தமிழர்
இசை முறையை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார். 1912இல்
தஞ்சாவூர் ‘சங்கீத வித்யா மகாஜன சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதுவே
தமிழிசை இயக்கத்தின் கருமூலமானது. இசை நிகழ்வுகளில் தமிழில் பாடல்கள்
பாடப்படுவதற்கு இவ்வியக்கம் முக்கியத்துவம்
வழங்கியது. தமிழிசையின் நிலை குறித்து விவாதிக்க 1943இல்
முதல் தமிழிசை மாநாடு நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில்
வெவ்வேறு காலப்பகுதிகளில் இந்தி கட்டாயமொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது
தமிழ்மொழிக்கும், பண்பாட்டிற்குமான
அச்சுறுத்தலாகவே கருதப்பட்டது. தமிழுக்கு மேலாக இந்தியை அறிமுகம் செய்வது
திராவிடர்களுக்கான வேலைவாய்ப்புகளை மறுப்பதாக அமையுமென பெரியார் அறிவித்தார்.
இந்திமொழி அறிமுகம் செய்யப்பட்டால் தமிழ்மொழி பாதிப்புக்குள்ளாகும் என மறைமலை
அடிகள் சுட்டிக் காட்டினார். இந்தி எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள்
போராட்டத்தை பிராமணியத்திற்கும் தமிழின் மீதான சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்திற்கும்
எதிரான கருத்தியல் போராகவே கருதினர்.