Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | சுதேச அரசுகளும் ஆங்கிலேயரின் மேலாதிக்கமும்

ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் - சுதேச அரசுகளும் ஆங்கிலேயரின் மேலாதிக்கமும் | 11th History : Chapter 17 : Effects of British Rule

11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

சுதேச அரசுகளும் ஆங்கிலேயரின் மேலாதிக்கமும்

பிளாசிப் போருக்குப்பின் (1757) கம்பெனி தன்னை விரிவுப்படுத்தும் முகமாக இரட்டை ஆட்சி முறையை உருவாக்கியது.

சுதேச அரசுகளும் ஆங்கிலேயரின் மேலாதிக்கமும்

பிளாசிப் போருக்குப்பின் (1757) கம்பெனி தன்னை விரிவுப்படுத்தும் முகமாக இரட்டை ஆட்சி முறையை உருவாக்கியது. இம்முறையின் கீழ், மேலளவில் ஓர் அதிகாரமற்ற அரசரை வைத்துக்கொண்டு அவரது பின்புலத்தில் கம்பெனி அதிகாரிகள் செயலாற்றினர். கொள்கையளவில் கம்பெனி, தன்னை திவானாக (வரி வசூலிக்கும் அதிகாரம்) மட்டும் சொல்லிக்கொண்டாலும் முழு அதிகாரமும் அதனிடமே குவிந்திருந்தது. கிளைவால் உறுதியளிக்கப்பட்டிருந்த முகலாய மன்னர் இரண்டாம் ஷா ஆலமிற்கு செலுத்த வேண்டிய ஆண்டு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதன் மூலம் இவ்வதிகாரம் வலியுறுத்தப்பட்டது. கடித அளவிலான மரியாதையைக்கூடக் காரன்வாலிஸ் கொடுக்க மறுத்தார். வெல்லெஸ்லி மேலும் நெருக்கடியைக் கூட்டும் வண்ணமாக பிரிட்டிஷாருக்குச் சாதகமாகத் துணைப்படைத் திட்டத்தைக் கடைபிடித்தார். அதனை ஹைதராபாத், பூனா, மைசூர் போன்ற முக்கிய அரசுகளை ஏற்க வைத்தார்.

கவர்னர் ஜெனரலாக 1813 ஆம் ஆண்டு பதவியேற்ற ஹேஸ்டிங்ஸ் (மொய்ரா) முகலாய முத்திரையைப் பரிவர்த்தனைகளில் தவிர்த்தார். கம்பெனியின் உடைமைகள் மீது முகலாய மன்னர் இரண்டாம் அக்பர் செலுத்தி வந்த ஆதிக்கத்தை நிறுத்திக்கொள்ளாவிட்டால் அவரைத் தான் சந்திக்க முடியாது என்றார். ஹேஸ்டிங்ஸ் இந்திய அரசுகளை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பெனிக்கு இல்லை என்ற கொள்கை முடிவைப்பின்பற்றினார். ஆக, துணைப்படைத் திட்டத்தின் கீழ் மக்கள் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி கொண்டாலோ, அண்டை அரசு பொறாமையால் சூழ்ச்சியில் ஈடுபட்டாலோ பாதிப்பு எதுவும் ஆட்சி செய்வோருக்கு ஏற்படவில்லை. குறுந்தலைமைகளால் பிரித்து ஆட்சி செய்யப்பட்டுவந்த கத்தியவார் பகுதியையும் மத்திய இந்தியப் பகுதியையும் கம்பெனி நெருங்கிய கண்காணிப்பில் வைத்திருப்பது தவிர்க்க முடியாததாயிற்று.

துணைப்படைத் திட்டத்தின் கீழ் கம்பெனி ராணுவம் இந்திய ஆட்சியாளர்களை உள்நாட்டு கலகங்களிலிருந்தும், பிற பாதிப்புகளிலிருந்தும் காத்தது. ஹைதராபாத்தின் சில பகுதிகள் நிஜாமின் கட்டுபாட்டிலிருந்து விடுபட்ட அரேபியப் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தன. பிரிட்டிஷ் படைப்பிரிவின் உதவியோடு அரேபிய வீரர்கள் பணிய வைக்கப்பட்டார்கள். மைசூர் அரசில் 1830ஆம் ஆண்டு நிதி நிர்வாக முறைகேட்டில் அரசர் ஈடுபட்டார் என்ற காரணத்தை முன்வைத்து ஏற்பட்ட கிளர்ச்சியை வெல்லெஸ்லியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் கம்பெனி தலையிட்டு சரி செய்தது. கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பெண்டிங் அரசரை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் விடுவித்து மார்க் கப்பன் என்பவரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார். குவாலியரின் வாரிசு இளம் வயதினர் என்பதால் நிர்வாகம் கட்டுடைந்து, அரசவையில் கோஷ்டிகள் தோன்றி அவர்களுக்குள் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டார்கள். இராணுவமோ கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு செயலிழந்து கிடந்தது. எல்லன்பரோ வலிமையான படைகளோடு வந்து சேர்ந்தார். அவரது படைகளை உள்ளூர் படைகள் எதிர்த்தன. மகாராஜ்பூர் போரில் உள்ளூர் இராணுவம் தோற்கடிக்கப்பட்டு 1843ஆம் ஆண்டில் படை பலத்தைக் குறைத்துக்கொள்வது உள்ளிட்ட நிபந்தனைகளோடு புதிய வழிமுறை மொழியப்பட்டது.

டல்ஹௌசியின் வாரிசு இழப்புக்கொள்கை பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுபாட்டிற்குள்ளிருந்த பகுதியை விரிவாக்கியது. இணைக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் இந்திய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த அரசுகளின் மீதான கம்பெனியின் அதிகாரம் ஓங்கியது.

Tags : Effects of British Rule ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்.
11th History : Chapter 17 : Effects of British Rule : Native States and British Paramountcy Effects of British Rule in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : சுதேச அரசுகளும் ஆங்கிலேயரின் மேலாதிக்கமும் - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்