Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியாவின் இயற்கைத் தாவரங்கள்
   Posted On :  27.07.2022 06:24 am

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

இந்தியாவின் இயற்கைத் தாவரங்கள்

இயற்கைத் தாவரம் என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ மனித உதவியில்லாமல் இயற்கையாக வளர்ந்துள்ள தாவர இனத்தை குறிக்கிறது.

இயற்கைத் தாவரங்கள்

இயற்கைத் தாவரம் என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ மனித உதவியில்லாமல் இயற்கையாக வளர்ந்துள்ள தாவர இனத்தை குறிக்கிறது. இவை இயற்கையான சூழலில் காணப்படுகின்றன. ஒரு பகுதியில் இயல்பாகவே நீண்ட காலமாக மனிதர்களின் தலையீடு இன்றி இயற்கையாக வளரும் மரங்கள், புதர்கள், செடிகள், கொடிகள் போன்ற அனைத்து தாவர உயிரினங்களையும் இயற்கைத் தாவரங்கள் என்கிறோம்.

காலநிலை, மண் வகைகள், மழைப்பொழிவு மற்றும் நிலத்தோற்றங்கள் ஆகியவை இயற்கைத் தாவரங்கள் பரவல் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.

மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில் இந்தியாவின் இயற்கைத் தாவரங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.


அயனமண்டல பசுமை மாறாக் காடுகள்

ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கு மேலும் ஆண்டு வெப்பநிலை 22°Cக்கு அதிகமாகவும், சராசரி ஆண்டு ஈரப்பதம் 70 சதவீதத்திற்கு மேலும் உள்ள பகுதிகளில் இவ்வகைக்காடுகள் காணப்படுகிறன. மேற்கு தொடர்ச்சி மலை, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகிறன. இரப்பர், எபனி, ரோஸ் மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன. போக்குவரத்து வசதியின்மை காரணமாக இவை வியாபார ரீதியாக பெருமளவில் பயன்படுத்தப்படுவதில்லை .

அயன மண்டல இலையுதிர்க் காடுகள்

இவ்வகை காடுகள் ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. இதனை பருவக்காலக்காடுகள் என்றும் அழைக்கலாம். இப்பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலை 27°C ஆகவும் மற்றும் சராசரி ஒப்பு ஈரப்பதம் 60 முதல் 70 சதவீதமாகவும் உள்ளது. இக்காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைக்காலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன. இமயமலைக்கு அருகில் அமைந்துள்ள பஞ்சாப் முதல் அசாம் வரையிலான பகுதிகள், வடசமவெளிகள், பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், மத்திய இந்தியா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தென் இந்தியா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன. இங்கு தேக்கு மற்றும் சால் மிக முக்கிய மரங்களாகும். இதைத் தவிர சந்தனமரம், ரோஸ்மரம், குசம், மாகு , பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம் மற்றும் படாக் ஆகியவை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களாகும். இக்காடுகள் நறுமண திரவியங்கள், வார்னீஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை அளிக்கின்றன.

அயனமண்டல வறண்டக் காடுகள்

ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் அயனமண்டல வறண்ட காடுகள் காணப்படுகின்றன. அயனமண்டல வறண்ட காடுகள் ஒரு இடைநிலை வகைக் காடாகும்.

கிழக்கு இராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்திரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதி, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ராவின் கிழக்குப்பகுதி, தெலங்கானா, மேற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் கிழக்கு பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. இலுப்பை (mahua), ஆலமரம், ஆவாராம் பூ மரம் (Amaldas), பலா, மஞ்சக் கடம்பு (Haldu), கருவேலம் (Babool) மற்றும் மூங்கில் ஆகிய முக்கிய மரவகைகளாகும்.

பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள் : இக்காடுகளை முட்புதர் காடுகள்" என்றும் அழைப்பர். இவை ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50 செ.மீட்டருக்கு குறைவாகவும், அதிக வெப்பமும் மற்றும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. இவ்வகைக் காடுகள் வடமேற்கு இந்தியப் பகுதிகளான மேற்கு இராஜஸ்தான், தென்மேற்கு ஹரியானா, வடக்கு குஜராத் மற்றும் தென்மேற்கு பஞ்சாப் ஆகிய பகுதிகளிலும், தக்காண பீடபூமியின் கர்நாடகா, மகராஷ்ட்டிரா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் வறண்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன. கருவேலம் (Babool), சீமை கருவேல மரம் (Kikar), ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.

அல்பைன்/இமயமலைக் காடுகள்

உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில் இக்காடுகள் வகைப்படுத்தப்படுகின்றன.

i.  வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள கிழக்கு இமயமலைச் சரிவுகளில் 1200-2400 மீ உயரம் உள்ள பகுதிகளில் காணப்படும் இக்காடுகளில் சால், ஓக், லாரஸ், அமுரா, செஸ்ட்நெட், சின்னமன் போன்ற மரங்கள் வளர்கின்றன. 2400- 3600 மீ உயரங்களில் ஓக், பிர்ச், சில்வர், பெர், பைன், ஸ்புரூஸ், ஜுனிப்பர் போன்ற மரங்கள் காணப்படுகின்றன.

II.  இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்ட் போன்ற மாநிலங்களில் மிதமான மழைப் பொழிவு உள்ள பகுதிகளில் சுமார் 900 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் அரை பாலைவனத் தாவரங்களான சிறு புதர் செடிகள், சிறு மரங்கள் போன்றவை வளருகின்றன. சுமார் 900 – 1800 மீ உயரம் உள்ள மலைகளில் சிர்பைன் எனப்படும் மரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. 1800 முதல் 3000 மீ உயரமுள்ள பகுதிகளில் மித வெப்ப மண்டல ஊசியிலைக் காடுகள் பரவியுள்ளன.

அல்பைன் காடுகள்

சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன. இவ்வகைக்காடுகள் ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன. ஓக், சில்வர் பிர், பைன் மற்றும் ஜுனிபர் மரங்கள் இக்காட்டின் முக்கிய மரவகைகளாகும். கிழக்கு இமயமலைப் பகுதியில் இவ்வகையான காடுகள் பரந்த அளவில் உள்ளன.

அலையாத்திக் காடுகள்

இக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்புநிலக்காடுகள் மற்றும் டெல்டா காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. கங்கை-பிரம்மப்புத்திரா டெல்டா பகுதிகளில் உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் இவ்வகை ஓதக்காடுகள் காணப்படுகின்றன. இவை ’’மாங்குரோவ் காடுகள்’’ என்றும் அழைக்கப்படுகின்றன.


10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India : Natural Vegetation of India in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் : இந்தியாவின் இயற்கைத் தாவரங்கள் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்