Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள்
   Posted On :  27.07.2022 05:11 am

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள்

அட்சங்கள் கடல் மட்டத்திலிருந்து உயரம், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகளாகும்.

இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள்

அட்சங்கள் கடல் மட்டத்திலிருந்து உயரம், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகளாகும்.

அட்சங்கள்

இந்தியா 8°4' வட அட்சம் முதல் 37°6' வட அட்சம் வரை அமைந்துள்ளது. 23°30' வட அட்சமான கடகரேகை நாட்டை இரு சம்பாகங்களாக பிரிக்கிறது. கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிக வெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது. கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மித வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது.

உயரம்

புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.50C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது. இதற்கு வெப்ப குறைவு விகிதம் என்று பெயர். எனவே சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகள் குளிராக இருக்கும். உதகை தென்னிந்தியாவின் இதர மலை வாழிடங்கள் மற்றும் இமயமலையில் அமைந்துள்ள முசௌரி, சிம்லா போன்ற பகுதிகள் சமவெளிகளைவிட மிகவும் குளிராக உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 6.7மீ உயரத்தில் அமைந்துள்ள சென்னையின் வெப்பநிலை 35°Cஆக இருக்கும்பொழுது 2240மீ உயரமுள்ள உதகை வெப்பநிலையைக் கண்டறிக.

கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு

இந்தியாவின் பெரும்பகுதி குறிப்பாக தீபகற்ப இந்தியா கடலிலிருந்து வெகுதொலைவில் இல்லை. இதன் காரணமாக இப்பகுதி முழுவதும் நிலவும் காலநிலை கடல் சார் ஆதிக்கத்தை கொண்டுள்ளது. இப்பகுதியில் குளிர்காலம் குளிரற்று காணப்பட்டு வருடம் முழுவதும் சீரான வெப்ப நிலையைக் கொண்டுள்ளது.

கடல்களின் ஆதிக்கமின்மை காரணமாக மத்திய மற்றும் வட இந்திய பகுதிகள் வெப்பநிலையில் பருவகால மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. இங்கு கோடையில் கடும் வெப்பமும் மற்றும் குளிர் காலத்தில் கடும் குளிரும் நிலவுகிறது. கொச்சி, கடற்கரை பகுதியில் அமைந்திருப்பதால் இதன் வருடாந்திர சராசரி வெப்பம் 30°C அளவுக்கு மிகாமல் உள்ளது. மாறாக கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள புதுடில்லியின் வருடாந்திர சராசரி வெப்பம் 40°C க்கும் அதிகமாக உள்ளது. கடற்கரை பகுதியில் காற்றில் ஈரப்பதம் மிகுந்து இருப்பதால் இவை அதிக மழைத்தரும் திறனைக் கொண்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு அருகிலுள்ள கொல்கத்தாவில் மழைப்பொழிவு 119 செ.மீ ஆகவும் உள் பகுதியில் அமைந்திருக்கும் பிகானிரில் (இராஜஸ்தான்) 24 செ.மீக்கு குறைவான மழைப்பொழிவே பதிவாகின்றது.

பருவக்கால காற்று

இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக்கால காற்றாகும். இவை பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும். இந்தியா ஒரு ஆண்டின் கணிசமான காலத்தில் பருவக்காற்றுகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறது. இந்தியாவில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் ஜூன் மாத மத்தியில் விழுகின்ற பொழுதிலும் கோடைக்காலம் மே மாத இறுதியில் முடிவடைகிறது. ஏனெனில் தென் மேற்கு பருவக்காற்று தொடக்கத்தின் காரணமாக வெப்பநிலை குறைந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமழை வரை பொழிகிறது. இதேபோல் தென்கிழக்கு இந்தியாவின் காலநிலையும் வடகிழக்கு பருவக்காற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா?

வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும்.

காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

நிலத்தோற்றம்

இந்தியாவின் நிலத்தோற்றம், காலநிலையின் முக்கிய கூறுகளான வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், காற்றின் திசை மற்றும் மழையளவை பெருமளவில் பாதிக்கின்றது. இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்க்காற்றை தடுத்து, இந்திய துணைக் கண்டத்தை வெப்பப் பகுதியாக வைத்திருக்கிறது. இதனால் குளிர் காலத்திலும் வட இந்தியா வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேற்கு சரிவுப்பகுதி கன மழையைப் பெறுகிறது. மாறாக மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பெரும் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மழைமறைவுப் பகுதி அல்லது காற்று மோதாப்பக்கத்தில் அமைந்திருப்பதால் மிகக்குறைந்த அளவு மழையைப் பெறுகின்றன. இப்பருவத்தில் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள மங்களூர் 280 செ.மீ மழைப்பொழிவையும், மழைமறைவுப் பகுதியில் அமைந்துள்ள பெங்களூரு 50 செ.மீ மழைப்பொழிவையும் பெறுகின்றன.

ஜெட் காற்றோட்டங்கள்

வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் ஜெட்காற்றுகள் என்கிறோம். ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின் படி, துணை அயன மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம்பெயர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உருவாகின்றது. கீழை ஜெட் காற்றோட்டங்கள் தென்மேற்கு பின்னடையும் பருவக்காற்று காலங்களில் வெப்பமண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.

 

 

 

10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India : The factors affecting the climate of India in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் : இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு - 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்