Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | ஒளிச்சேர்க்கை : அறிமுகம்

11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை

ஒளிச்சேர்க்கை : அறிமுகம்

இப்புவியின் உயிர்வாழ்க்கை கரிம சேர்மங்களை சார்ந்தே உள்ளது என கூறினால் அது மிகையாகாது.

ஒளிச்சேர்க்கை

 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தினைக் கற்போர்

• பசுங்கணிகத்தின் நுண் அமைப்பினை அறிதல்

• சூரிய ஆற்றல், ஒளி மற்றும் ஒளிமின்காந்த நிறமாலை பண்புகளை வேறுபடுத்தி அறிதல்

• குவாண்டம், குவாண்டம் விளைச்சல், குவாண்டம் தேவைகளை அறிதல்

• ஒளிச்சேர்க்கை ஆய்வுகளான சிவப்பு வீழ்ச்சி, எமர்சன் மேம்படுத்தப்பட்ட விளைவு மற்றும் ஹில்வினை ஆகியவற்றில் ஆர்வம் ஏற்படுத்துதல்

• எலக்ட்ரான் வழித்தடம் PS- I மற்றும் Ps- II ஆராய்தல்

• ஒளி ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒளி வேதிவினையின் பாதையை உணர்ந்து, பகுப்பாய்தல்

• ஒளிச்சேர்க்கை வழித்தடம் அறிதல் C3, C4, C2 மற்றும் CAM சுழற்சியை வரையும் திறனை பெற இயலும்.

 

பாட உள்ளடக்கம்

13.1 வரையறை, முக்கியத்துவம் மற்றும் ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடம்

13.2 ஒளிச்சேர்க்கை நிறமிகள்

13.3 மின்காந்த கதிர்வீச்சு நிறமாலை

13.4 ஒளிச்சேர்க்கை அலகு

13.5 ஒளி ஈர்ப்பு நிறமாலை மற்றும் ஒளிசெயல் திறன் நிறமாலை

13.6 எமர்சன் ஆய்வுகள் மற்றும் ஹில்வினை

13.7 ஒளிச்சேர்க்கையின் நவீன கோட்பாடுகள்

13.8 ஒளிவினையின் ஆக்ஸிஜனேற்ற நிலை

13.9 ஒளிவினையின் ஒளிவேதி நிலை

13.10 ஒளி பாஸ்பரிகரணம்

13.11 இருள் வினை (அ) C3 சுழற்சி

13.12 ஹாட்ச் மற்றும் ஸ்லாக் (அ) C4 சுழற்சி

13.13 CAM சுழற்சி (அ) கிராசுலேசியன் அமில வளர்சிதை மாற்றம்

13.14 ஒளிச்சுவாசம் (அ) C2 சுழற்சி

13.15 ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கும் காரணிகள்

13.16 பாக்டீரியங்களின் ஒளிச்சேர்க்கை 

 

இப்புவியின் உயிர்வாழ்க்கை கரிம சேர்மங்களை சார்ந்தே உள்ளது என கூறினால் அது மிகையாகாது. ஏனெனில் அனைத்து உயிரினங்களும் கரிம கூட்டுப்பொருளால் மட்டுமே இயங்குகிறது. எவ்விடத்திலிருந்து நாம் இந்த கரிம சேர்மங்களை பெறுகிறோம்? தாவரங்களில் இருந்து என நம்மால் உறுதியாக கூறமுடியும். தாவரங்கள் முக்கிய ஆதாரமாக இருந்து இந்த அரிய பணியினை செய்கிறது. இதற்காக நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாவரங்களை சார்ந்துள்ளோம். உயிரி மூலக்கூறுகளான கார்போஹைட்ரேட்டுகள், லிப்பிடுகள், புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள் போன்றவற்றை உருவாக்கும் மிகப்பெரிய உற்பத்திசாலையாக தாவரங்கள் உள்ளன. 

நம்மிடம் பல்வேறு வகையான இயந்திர தொழிற்நுட்பங்களும் அவற்றை இயக்கும் மென்பொருட்களும் இருந்தாலும் தாவரங்கள் வளர்சிதை மாற்றத்தின் மூலம் உருவாக்கும் ஆற்றல் ஆதாரங்களையும், எண்ணற்ற உயிர்ம மூலக்கூறுகளையும் நம்மால் உருவாக்க இயலவில்லை.

தாவரங்கள் சூரியனிடம் இருந்து ஒளி ஆற்றலை பெற்று அதனை வேதி ஆற்றலாக ஒளிச்சேர்க்கையெனும் நிகழ்வின் மூலம் மாற்றுகிறது. ஒளிச்சேர்க்கையே இவ்வுலகின் உந்துசக்தியாக இருந்து உயிர்காரணிகள் மற்றும் உயிரற்ற காரணிகளை இயக்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் 75x1012Kg கார்பனை நிலைப்படுத்தி வருடத்திற்கு 1700 மில்லியன் டன் உலர் கரிம பொருட்களை உற்பத்தி செய்கிறது. இதற்கு ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினங்கள் பயன்படுத்துவது பூமியின் மீது விழும் 0.2% சூரிய ஒளியை மட்டுமே. 

 

எதிர்கால ஆற்றலுக்கானதோர் தேடல் (Aquest for future energy) 

ஹைட்ரஜன் அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கையூட்டும் ஒரு ஆற்றல் மூலமாகும். இதனை பசுமை மின்னாற்றல் உற்பத்திக்கும் அதன் உபஆற்றல் உற்பத்தி அமைப்புகளான ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன்களை உருவாக்கவும் பயன்படுத்தலாம். ஹைட்ரஜன் அதிகம் பொதிந்த சேர்மங்களான நீர் மற்றும் உயிர்திரளிலிருந்து ஆற்றல் உற்பத்தியானது தொடர் பயன்தரும் ஆற்றலை அளிக்க கூடியதாக உள்ளது. ஒளியால் நீரை பிளந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக மாற்றக்கூடிய ஒளிசார் நீர்பகுப்பு தாவரங்களில் இயல்பாக நடைபெறும் நிகழ்வு. நீர் பிளப்பு என்பது செயல்முறையில் எளிதான செயலன்று, ஆனால் துவக்க வெற்றிகளை நாம் - இதுவரை பெற்றுள்ளோம் இளம்தளிர்களாகிய நீங்கள் இதனை ஆராய்ச்சி நோக்கமாக கொண்டால் பசுமை ஆற்றல் உற்பத்தியில் உங்களால் ஒரு புரட்சியை உருவாக்கமுடியும்.

 

ஒளிச்சேர்க்கை மூலம் உருவாக்கப்படும் கார்போஹைட்ரேட்டுகளே செல்சுவாசத்திலும், பல்வேறு கரிம சேர்மங்களை உருவாக்கவும் உதவும் அடிப்படை மூலப் பொருளாகத்திகழ்கின்றன. உயிரினங்கள் சுவாசத்தின் போது வெளியிடப்படும் கார்பன்டை ஆக்ஸைடை தாவரங்கள் ஒளிச்சேர்க்கையில் எடுத்துக்கொள்வதன் மூலம் வளிமண்டல ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு அளவினை சமநிலை படுத்துகிறது.

ஒளிச்சேர்க்கை ஒர் மிகமுக்கிய ஆற்றல் கொள்வினை செயலாகத் திகழ்கிறது. இப்பாடப்பகுதியில் ஒளிச்சேர்க்கையின் ஆற்றல் உருவாக்க செயல்முறைகளையும் மற்றும் ஆற்றல் பயன்பாட்டு செயல்முறைகளையும் தெரிந்து கொள்வோம்.


11th Botany : Chapter 13 : Photosynthesis : Photosynthesis: Introduction in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை : ஒளிச்சேர்க்கை : அறிமுகம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை