Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | செய்யுள் கவிதைப்பேழை: அகநானூறு

இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: அகநானூறு | 11th Tamil : Chapter 5 : Naalellam vinasei

   Posted On :  16.08.2023 10:42 pm

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்

செய்யுள் கவிதைப்பேழை: அகநானூறு

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : செய்யுள் கவிதைப்பேழை: அகநானூறு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 5

கவிதைப்பேழை

அகநானூறு


நுழையும்முன்

சொல்ல வந்த கருத்தை 'உள்ளுறை', 'இறைச்சி' வழியாக உரைப்பது அகநானூற்றுப்பாடல்களின் சிறப்பு. அதனைப்பாடும் கவிஞர் சொல்லின் பயன்பாடு குறையாமல் கூறுவதோடு மரபின் நாகரிகம் குறைவுபடாது கூறவும் வேண்டும். அன்பை மறைக்கவும் வேண்டும்; பயன்பாடு கருதி வெளிப்படுத்தவும் வேண்டும். தலைவியைத் தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்தைப் பற்றிய குறிப்பைப் பொதிந்து வெளியிடுவது தோழியின் பொறுப்பு.

 


பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!

இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்,

போர்ப்புஉறு முரசின் இரங்கி, முறைபுரிந்து

அறன் நெறி பிழையாத் திறன்அறி மன்னர்

அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர்

கழித்துஎறி வாளின்,  நளிப்பன விளங்கும்

மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்

கொன்னே செய்தியோ, அரவம்? பொன்னென

மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்

பொலிந்த ஆயமொடு காண்தக இயலித்

தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும்,

அழலேர் செயலை அம்தழை அசைஇயும்,

குறமகள் காக்கும் ஏனல்

புறமும் தருதியோ? வாழிய, மழையே!

(அகம்.188)

- வீரை வெளியன் தித்தனார்

திணை : குறிஞ்சி

துறை : இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

 

சொல்லும் பொருளும்

கொண்மூ - மேகம்: விசும்பு - வானம்; சமம் - போர்; அரவம் - ஆரவாரம்; ஆயம் சுற்றம்; தழலை, தட்டை - பறவைகளை ஓட்டும் கருவிகள்.

 

பெருங்கடலில் நீர்முகக்கும் முகிலே சொல்நீ

வான்வெளி இருளப் பரபரப்பாய் வரும்உலா

போர்க்கள முரசாய்ப் பொழுதுக்கும் இடிமுழக்கம்

அறநெறியாளன் ஆட்சியில் காக்கும்

போர்க்கள வீரர் வாள்போல் பொறிமின்னல்

நாளும் இவையெல்லாம் சும்மா நடிப்பா? அல்லது

ஆளை அலைக்கழிக்கும் மழை ஆரவாரமா?

பொன்பூ வேங்கை மாலை தொடுத்து

அணியும் தோழியர் ஆயத்துடன் இருப்பாள்

அழல்எரி அசோகஇலை ஆடை உடுப்பாள்

காண்பதற்கு இனிய ஒயிலுடன் நடப்பாள்

தழலை தட்டைக் கருவியொலி எழுப்பிப்

பறவைகள் விரட்டித் தினைப்புனம் காப்பாள்

தலைவியின் காட்டிலும் பொழிவாலா? இல்லை

தப்பிப் பிழைத்துப் போய்விடுவாயா?

பாடலின் பொருள்

தலைவனுக்குக் குறியிடம் சொல்லும் தோழி மேகத்திடம் சொல்வதுபோல் சொல்கிறாள்: “பெருங்கடலில் நீரை முகந்துகொண்டு செல்லும் மேகக் கூட்டமே! வானம் திருணும்படி உலாவுகிறாய். போர் முரசம்போல முழங்குகிறாய். முறைமை தெரிந்து அறநெறி பிழையாமல் திறமையுடன் ஆளும் அரசனின் போர்க்களத்தில் திறமை மிக்க போர்வீரன் சுழற்றும் வாள்போல மின்னுகிறாய். முழக்கமும் மின்னறுமாக நாள்தோறும் வெற்று ஆரவாரம் செய்கிறாயா அல்லது மழை பொழிவாயா? பொன்னென மலர்ந்த வேங்கை மலரைக் கட்டி அணிந்துகொண்டிருக்கும் தோழியர் ஆயத்தோடு மெல்ல மெல்ல நடந்து குறமகள் தினைப்புனம்காப்பான் தழலை தட்டைஆகிய கருவிகளில் ஒலியெழுப்பிப் பறவைகளை ஓட்டிக்கொண்டு காப்பாள். அவள் அசோக இலைகளால் தழையாடை அணிந்திருப்பான். குறமகள் அப்படித் தினைப்புனம் காக்கும் பகுதியிலும் நீ மழை பொழிவாயா?"

தலைவி தினைப்புனம் காக்கும் இடத்துக்குத் தலைவன் வரலாம் என்பது குறிப்பு. இது இறைச்சிப் பொருள்.

இலக்கணக்குறிப்பு

வளைஇ, அசைஇ - சொல்லிசை அளபெடைகள்; அறன், திறன் ஈற்றுப்போலிகள்; பிழையா ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; சுருஞ்சமம் பண்புத்தொகை; எறிவாள்- வினைத்தொகை.


நூல்வெளி

அகநானூறு 145 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. இது, களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கு நெடுந்தொகை நானூறு என்ற பெயரும் உண்டு. இந்நூலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு. வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரேயொரு பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.




Tags : Chapter 5 | 11th Tamil இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 5 : Naalellam vinasei : Poem: Aganaanuru Chapter 5 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : செய்யுள் கவிதைப்பேழை: அகநானூறு - இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்