Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | துணைப்பாடம்: பிம்பம்

பிரபஜ்சன் | இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: பிம்பம் | 11th Tamil : Chapter 5 : Naalellam vinasei

   Posted On :  09.08.2023 06:11 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்

துணைப்பாடம்: பிம்பம்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : துணைப்பாடம்: பிம்பம் - பிரபஜ்சன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 5

விரிவானம்

பிம்பம்

- பிரபஞ்சன்

நுழையும்முன்

நம் ஒவ்வொருவரிடமும் தனித்தன்மைகள், விருப்பங்கள் உள்ளன. ஆயினும், பிறரோடு உறவு கொள்கையில் அவர்களுக்கேற்றவாறு நம்மை மறைத்து, மாற்றிக் கொள்கிறோம்; வளைந்து கொடுக்கிறோம். ஆனால் நம் மனசாட்சி நம்முடைய இயல்பை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். நாம் மற்றவர்களுக்காக அவர்களுக்கேற்ற முகமூடிகளை மாட்டிக்கொள்கிறோம். முகம் மாற்றி முகம் மாற்றி நம் உண்மை முகத்தையே இழந்து அடையாளமற்ற தன்மையில் காட்சியளிக்கிறோம். மாற்றி மாற்றி நாம் காட்டுகிற பிம்பம் பற்றி நம் மனசாட்சியைக் கேள்வி கேட்பதோடு நம் அசலையும் நினைவூட்டுகிறது இச்சிறுகதை

 

கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும், தட்டுவது யார் என்று எனக்குத் துல்லியமாகவே விளங்கியது. அதுதான் இந்த நேரத்தில் இப்படியெல்லாம் வரும். அதற்கு நேரம் காலம் கிடையாது. கிடைப்பதில்லை என்பதுவுமே ஒரு காரணம். என்னுடனே வளர்ந்து நானாகவே ஆகிவிட்ட அதுக்கு என்மேல் இருக்கும் சுவாதீனமும் ஒரு காரணம்.

கதவைத் திறந்தேன். அது உள்ளே வந்தது. உட்காரச் சொன்னேன். அது உட்காரவில்லை. என் வீடு நாலு கைத் தாழ்வாரமும் நடுவே பெரிய '' மாதிரி ஒரு வாசலும் கொண்ட அடக்கமான வீடு. நான் என் சாய்வு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்த இடம் நடுவாசலில்தான். அங்கிருந்து அண்ணாந்து பார்த்தால் வானம் என் மீது வழியும். காற்று கைவீசி வரும். மனசால் நான் வாழும் வாழ்க்கை ஸ்தாபிதமாவதும். சூல்கொள்வதும் கலைவதும் இங்கே இந்த இடத்தில்தான். என்னைத் தேடி சம்பாஷணைக்காக வருவோரை நான் இந்த இடத்தில்தான் உட்கார்த்தி வைப்பது. என்னை இம்சிக்க வருவோர்க்கும் இதுவே இடம்.

வந்தது வீட்டைச் சுற்றி நோட்டம் விட்டது. இடதுகைத் தாழ்வாரச் சுவரும் நேர்ச் சுவரும் சந்திக்கும் இடத்தில் அதன் பார்வை வந்து நிலைகுத்தியதை நானும் உணர்ந்து அந்த இடத்தைப் பார்த்தேன். நான் மென்று சுவைத்துத் துப்பிய எலும்புத் துண்டுகள் வாரப்படாமலும் கூட்டிக் குப்பையில் எறியப்படாமலும் அந்த மூலையில் குவிந்திருந்தன. சாரை சாரையாக எறும்புகள் தம் உணவை அதில் கண்டு, தம் சக்திக்குட்பட்ட விகிதங்களில் எடுத்துக்கொண்டு போவதையும் ஈக்கள் கும்பலாய்ச் சுள்ளென்று பறந்து மொய்ப்பதையும் நான் பார்த்தேன்.

குறுநகையோடு அது என்னைப் பார்த்தது. எனக்கு வெட்கமாகப் போச்சு. யாரும் கண்டுகொள்ளும் முன்னமேயே அந்த எறும்புகளை வாரிக் குப்பைத் தொட்டியில் கொட்டியிருக்கலாம். அல்லது பூ வேலை செய்த அழகிய துணியை அதன்மேல் போர்த்தி. மறைத்து, அவ்விடத்தைப் பார்ப்போர், கண்ணுக்கும் புலணுக்கும் புலப்படா வண்ணம் மறைத்து இருக்கலாம். இரண்டில் ஒன்றையும் நான் செய்யவில்லை. ஏன் செய்யாமல் போனோம் என்று வருந்தினேன்.

படுத்தவாறே அண்ணாந்து பார்க்கிறேன். வானம் கறுப்பாக. நிலவு எங்கோ எதிலோ மறைந்து கொண்டாற்போல. ஆனாலும் காற்று வீசி மேகம் கலைய...

இடக்கைத் தாழ்வாரத்தில் ஓர் அறை இருக்கிறது. அது 'நான் இதன் உள்ளே நுழைகிறேன்' என்றது. அனுமதி கேட்பது மாதிரி இல்லை. தேவையில்லை என்று நினைத்தது போலும். உள்ளே போனது, எதையோ கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்து என்முன் நின்றது.

'இது என்ன?' – அது கேட்டது.

இது அப்பாவின் சட்டை. முக்கால் கைச்சட்டை என் அளவுக்கு ரொம்பத் தொள தொளவென்று இருக்கும். என்போல் மூவர் ஒரே சமயத்தில் நுழையலாம். அவ்வளவு பெரிசு. பல இடங்களில் துணி நைந்து கிழிஞ்சு போச்சு. பல இடங்களில் ஒட்டு. கொஞ்சம் வேகமாகவோ முரட்டுத்தனமாகவோ கையாண்டால் கிழியும் என்பது நிச்சயம். துவைக்காததால் எழும் துர்வாசம் இதனோடயே ஐக்கியமாகிப் போச்சு.

இதை இன்னமும் எதற்கு வைத்திருக்கிறாய். அது கேட்டது. 'உபயோகப்படுத்தத்தான்' – நான் சொன்னேன்.

இதை இன்னுமா உபயோகப் படுத்துகிறாய்?" அதன் புருவம் மேலே உயர்ந்தது.

'ஆம். பல சமயங்களில், சந்தர்ப்பங்களில்' 'உன்னிடம் உன் சட்டை இருக்குமே...? 'இருக்கும்...அதோடு இதையும் அவ்வப்போது உபயோகப் படுத்திக்கொள்கிறேன்'

அது பதில் வேண்டியது. சொல்லலாமா என்று யோசித்தேன். சொல்லத்தான் வேண்டும். அதுக்கு என்னில் அறியாதது எதுவுமே இல்லை என்கிற பயம் என்னை உசுப்பியது. மேலும், அதன் சம்பாஷணை என் சுகம், அதன் சிநேகிதமான பார்வை, எனக்குத் தூண்டில். எனவே, என் பதில் எனக்கு ஆறுதல் சொன்னேன்.

'என் சட்டை என்னை முழுதும் போர்த்தாதபோது அப்பாவின் சட்டையை நான் அணிந்துகொள்வேன். அவர் சட்டையைப் போட்டுக்கொண்டால் என் குளிரை அது போக்கி விடுகிறது. அதோடு பல சமயங்களில் என்னைப் பாதுகாக்கிறது. இது எனக்குக் கவசம். இதுவே எனக்கு அம்பு. இதுவே எனக்கு அட்சயப் பாத்திரம். இப்போது தைத்த என் சட்டை புது மோஸ்தர். இது சமயங்களில் என்னை இறுக்கிக்கொள்கிறது. உனக்குத் தெரியாதா...'

நான் பரிதாபத்தோடு சொன்னதை அது பார்த்திருக்கக் கூடும். 'சரி' என்று அறைக்குள் சென்று சட்டையைப் போட்டுவிட்டு வெளியே வந்தது.

என் வாசலை மிகவும் ஒட்டி இரண்டு அறைகள். முதல் அறைக்குள் அது என் அனுமதி இன்றியே போய் எதையோ தூக்கிக் கொண்டு வெளியே வந்தது.

'இது என்ன?'

இது ஒரு கவுன்... ஏழெட்டு வயசுப் பெண் குழந்தைகள் கவுன். கால மறைவாலும் மாற்றத்தாலும் பழசாகித் தேய்ந்து, நைந்து போய் இருந்தது. இன்றைய குழந்தைகள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வினோதமான தையலும் பூவளையுமாய் மிளிர்க்கது.

இந்தக் கவுன் உனக்கெதுக்கு?"

சமயா சமயங்களில் போட்டுப் பார்த்துக் கொள்ளத்தான் '

'இதைக் கூடவா நீ போடுகிறாய்?"

 'சொல்றேனே... சமயா சமயங்கள்'

இதைப் போட்டுக்கொண்டு எப்படி வெளியே வருகிறாய். ஒரு ஆண் மகனாய் எப்படி வெளியே பிரவேசிக்கிறாய்.'

'இந்த கவுன் அம்மா எனக்காக வாங்கியது. அம்மாவின் உதரத்தில் பெண் குழந்தைகள் ஜனிக்கவில்லை.'

ஜனித்தாலும் லபிக்கவில்லை. ஆணாகப் பிறந்த என்னை அம்மா தன் ஆசைக்காக இந்த கவுனுக்குள் அடக்கி வளர்த்தாள். காலப்போக்கில் வளர்ந்து வந்த என் பௌருஷ ஆகிருதியை இந்தச் சின்ன கவுனுக்குள் நுழைத்து நுழைத்து அதில் வெற்றி கண்டாள். நான் சாமானியத்தில் அதனுட்கொள்ளவில்லை. எனினும், எப்படியோ என்னை நுழைப்பதில் அவள் திருப்தி கொண்டாள். பதின்வயதின் இளைஞனாகிய நான் அந்த கவுனில் நூதனமாக எனக்கே காட்சி கொடுத்தேன்.

அம்மா என்னை ஒரு போட்டோ எடுத்தாள். ஒரு பிரதியை இந்த கவுனின் மார்பில் ஒட்டினாள். மற்றொன்றைத் தன் தலைக்கு மேல் ஒட்டி வைத்தாள். இந்தப் போட்டோவுக்குள் பொட்டு வைத்த நான். கண்ணுக்கு அழகாக மை தீட்டிய நான். கோண வகிடெடுத்து அழகாக ஜடை பின்னி, ஜடை முனையில் பூ வைத்த நான். வளையல், கொலுசு, ஒட்டியாணம் அணிந்த நான்.


நான் குனியும்போது மார்பில் போட்டோ என்னைக் குத்தி நிமிர்த்தியது. நான் நிமிரும்போது தலைக்குமேல் போட்டோ. என்னைக் குட்டித் தாழ்ந்தது.

என் கவுன் ஓட்டுக்குள் என் புலன்கள் நுழைக்கும்- ஆமை நான்.

முதலில் இது கஷ்டமாக இருந்தது -வாஸ்தவமாய். பின் இது சவுகரியமாய்ப் போச்சு- எதார்த்தமாய். இப்போது இதுவே சுகமாய்ப் போச்சு- நிர்ப்பந்தமாய்.

என்னை, ஆம்பிளையான என்னை, இந்த வணாந்தரங்களில் மேயும் எந்த துஷ்ட மிருகங்களாவது சீண்ட ஓட்டுக்குள் என்னை நுழைத்துக்கொள்வேன். அவை என்னைப் புரட்டிப்பார்க்கும். வெறும் ஓடென்று விலகிப்போகும்.

'அதற்குத்தான்...அதனால்தான்'

நான் சொன்னேன்.

நான் நிறுத்தினேன். அது என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்துச் சிரித்தது...

ஆகவே, நீதப்பிக்கிறாய்....' என்றது அது,

'ஆம்.. எல்லாமே எதனிடமிருந்தோ தப்புதல்தான்...'

அது மௌனமாக அறைக்குள் சென்றது. மீண்டும் அறைக்குள்ளிருந்து எதையோ வாரிக் கொண்டு வந்து என்முன் போட்டது.

மேலே வானமூட்டம் இன்னும் விலகவில்லை. கறுப்பு இன்னும் வெளுக்கவில்லை. நிலா காணோம். எந்தச் சேற்றில் போய்ப் புதைந்துவிட்டதோ - பாவம்.

படபடவென்று சரியும் ஒலி என் புலனைத் தாக்க என்முன் குவிந்த பொருள்களை தான் பார்த்தேன்.

'இதெல்லாம் என்ன'- அது.

'இவை என் முகங்கள்'- நான்.

'இத்தனை முகங்கள் உனக்கெதுக்கு?'

'இவை என் பார்வைகள். தேவைகள். சிரமமில்லாமலும், சிரமத்தோடும் சமயா சந்தர்ப்பங்களில் நான் சேர்ந்து அணிந்து கொள்ளும் முகங்கள் இவை."

'நீ என்னையும் உன்னையும் ஏமாற்றுகிறாய்...' என்று வருத்தத்தோடு அது சொன்னது.

'ஆம்... என்னை நானும் உன்னை நீயும் முறை மாறி என்னை நீயும் உன்னை நானும் ஏமாற்றிக் கொள்ளுதலே நம் விஸ்தரிப்புகள், நம் ஆக்கங்கள், நம் விகசிப்புகள்'

நான் குனிந்து பார்த்தேன். என் காலடியில் பலவிதமான முகங்கள் பல வர்ணங்களில், பல அளவுகளில் பல கோணங்களில் சிதறிக் கிடந்தன. சிலது ரொம்பப் பழசு; சிலது ரொம்பப் புதுசு. சிலது பழசாகி இருந்து புதுசானவை. சிலது புதுசாசி இருந்து பழசானவை.

இவற்றில் இடமும் காலமும் மாறிச் சூழ்நிலை தவறி, பாத்திரம் தவறி, முகத்தை மாட்டிக் கொள்ள மாட்டாயா? என்று அது சந்தேகித்தது.

'மாறாது. மாட்டேன். என்முன் முகம் காட்டும் முகங்கள் என் கண்ணாடி. எந்த முகத்தை நான் என் கண்ணாடியில் பார்க்கிறேனோ, அதைப்போலவே இருக்கும் என் முகச் சிதறல்கனில் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொள்வேன். -க்கு -யும் இசட்டுக்கு இசட்டும் தான்.

'அம்மாவிடம் கூடவா...'

'ஆட்சேபமில்லாமல். அவளிடம் என்னிடம் காட்ட ஒரு முகம் இருந்தது. அதேபோல் என்னிடமும் ஒன்று இருக்கிறது'

மனைவியிடம் கூடவா...'

'நீ சுவாரசியமாகவே கேட்கிறாய். வாஸ்தவத்தில் இந்த இடத்துக்குப் பல முகங்கள் எனக்குத் தேவை. அவளிடமும் பலமுகம் தயாராகவே தயார் நிலையில் இருந்தன. அதோடு அவள் என்னின் இருமையையும் கண்டவள். கொண்டவள். நானும் கண்டவன். துய்த்தவன். வினாடிக்கு ஒருமுறை முகம் மாற்றும் சித்தி இதுக்குத் தேவை. அச்சித்தி எனக்கு லபித்திருந்தது. ஆனால், ஒரு விசயம். என் முகத்தை அவளுமோ அவள் முகத்தை நானுமோ இன்றுவரை பார்த்ததில்லை. இவை போலிகள் என்று எங்கள் இருவருக்கும் தெரியும். வாய்விட்டுச் சொல்லிக் கொள்வதில்லை.

நான் காலடியில் குவிந்திருந்த பல முகங்களில் ஏழெட்டைக் காலால் தள்ளி, 'இவை என் சிநேகிதர்களுக்காக' என்றேன். சிலவற்றைத் தள்ளி. ' இவை என் தெருவுக்காக, ஊருக்காக" என்றேன்.

 அது நின்றபடியே நின்றிருந்தது. பார்த்தபடியே கண்டிருந்தது. 'நீ இப்போது போட்டிருப்பதுகூட..' 'பொய்தான்.போலிதான்'

நான் என் முகத்தைக் கழட்டிக் கீழே போட்டேன்.

'இது' அது என் முகத்தைக் காட்டியது. 'இதுவும்'- நான்',

நிமிஷங்கள் கரைந்து நீராயின. அப்புறம் கொஞ்சநாழி அது இருந்தது.

'போய் வருகிறேன்' என்றது.

'சரி '

கதவைத் திறந்து விடை கொடுத்தேன். வெளியே சென்றது, சற்று நின்றது.

'கடைசியாக ஒன்று. உன்னுடைய முகம்தான் எது...'

'எனக்கு முகமே கிடையாது...

நான் சொல்லி, கதவைத் தாழிட்டுக் கொண்டேன்.

 

நூல்வெளி

புதுச்சேரியைச் சேர்ந்த பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்தியலிங்கம். இவர் சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். 1995இல் இவருடைய வரலாற்றுப் புதினமான 'வானம் வசப்படும்' சாகித்திய அகாதெமி விருது பெற்றது. இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Tags : by Prabhanjan | Chapter 5 : 11th Tamil பிரபஜ்சன் | இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 5 : Naalellam vinasei : Supplementary: Pimpam by Prabhanjan | Chapter 5 : 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : துணைப்பாடம்: பிம்பம் - பிரபஜ்சன் | இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்