Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | செய்யுள் கவிதைப்பேழை: சீறாப்புராணம்

இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: சீறாப்புராணம் | 11th Tamil : Chapter 5 : Naalellam vinasei

   Posted On :  09.08.2023 06:06 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்

செய்யுள் கவிதைப்பேழை: சீறாப்புராணம்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : செய்யுள் கவிதைப்பேழை: சீறாப்புராணம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 5

கவிதைப்பேழை

சீறாப்புராணம்

நுழையும்முன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் சீறாப்புராணம். இது தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியமாகும். பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைச் செலவியற் காண்டம் (ஹிஜிறத்துக் காண்டம்) காட்சிப்படுத்துகிறது.

 

ஹிஜிறத்துக் காண்டம் - மதீனம் புக்க படலம்

ஹிஜிறத் என்ற அரபுச் சொல்லுக்கு இடம்பெயர்தல் என்பதுபொருள். மக்கா நகரத்தின் குறைசி இன மக்கள், நபிகள் நாயகத்திற்குக் கொடுமைகள் பல செய்தனர். நபிகள் நாயகம் மக்காவை விட்டு. மதீனாவிற்கு வரவேண்டுமென்று மதீனா மக்கள் அழைத்தனர், அந்த அழைப்பை நபிகள் நாயகம் ஏற்றார். இசுலாமிய அறநெறிகளை வளர்க்க மக்காவை விட்டு மதீனா நகரத்திற்குத் தம் துணைவரான அபூபக்கர் முதலானோருடன், முல்லை நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும் கடந்து மதீனா நகரத்தில் நுழைந்தார். அந்நகரினைக் காப்பிய இலக்கண நெறி நின்று உமறுப்புலவர் புகழ்ந்து பாடியுள்ளார்.

மாளிகை நகரம்

வடவரை பொருவென மலிந்த மேனிலைக்

கடலென ஒலித்ததா வணத்தின் கம்பலைப்

புடவியை அளந்தன போன்று வீதிகள்

இடனற நெருங்கின மாடம் எங்குமே

கொடை நகரம்

கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணிய(து)

இலையெனா(து) அரும்பொருள் யாவும் எய்தலால்

மலைவிலா(து) அருளிய வள்ளி யோரினும்

தொலைவிலாப் பெரும்புகழ் படைத்த தொன்னகர்

பொன்னகரம்

தோரணத் தொடும் கொடிக்காடு துன்னலால்

வாரண மதமலை மலிந்து நிற்றலால்

காரணத் தொடும்வர வாறு காணலால்

பூரணப் புவியெனப் பொலிந்த பொன்னகர்

மனைநகரம்

சுதையொளி மேனிலை துலங்கித் தோன்றலால் பு

துமலர்த் தெருத்தொறும் சிந்திப் பொங்கலால்

எதிர்பணிந்(து) இடுவிருந்து இனிதின் நல்கலால்

வதுவையின் மனையென இருந்த மாநகர்

மாநகரம்

உறுபகை வறுமைநோய் ஓட ஓட்டிமேல்

குறைவற மனுமுறைக் கோன்() டாத்திநீள்

நிறைதரு பெரும்புகழ் நிலைநி றுத்தியோர்

மறுவிலாத அரசென இருந்த மாநகர்

ஒண்ணகரம்

தெண்டிரை ஆரமும் பூணுஞ் சிந்தலால்

விண்டுபற் பலபல மொழிவி ளம்பலால்

மண்டிய வளந்தலை மயங்க லால்மது

உண்டவர் எனமதர்த்(து) இருந்த ஒண்ணகர்

செம்மை நகரம்

தானமும் ஒழுக்கமும் தவமும் ஈகையும்

மானமும் பூத்ததின் மறனும் வெற்றியும்

ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல்

தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்.

- உமறுப்புலவர்

 

சொல்லும் பொருளும்

வரை - மலை; கம்பலை - பேரொலி; புடவி - உலகம்; எய்தல் - அடைதல்; துன்னநெருங்கிய; வாரணம் - யானை; பூரணம் - நிறைவு; நல்கல் - அளித்தல்; வதுவை - திருமணம்; கோன் - அரசன்: மறுவிலா - குற்றம் இல்லாத: தெண்டிரை - தெள்ளிய நீரலை; விண்டு திறந்து; மண்டிய - நிறைந்த; தீன் - மார்க்கம்.

பாடலின் பொருள்

மேருமலையினைப்போன்று மதீனா நகரின் மேன்மாடங்கள் உயர்ந்திருந்தன. அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த ஒலி, பெருங்கடலொலிபோன்று இருந்தது. மதீனா நகரின் வீதிகள் பேரண்டத்தைப்போன்று பரந்திருந்தன. அந்நகரில் சிறிதும் இடைவெளியின்றி மாளிகைகள் நெருக்கமாக அமைந்திருந்தன.

பழைமையான மதீனா நகரம், கலைஞர்களும் மறையவர்களும் நினைக்கின்ற பொருள் வளத்தைக் கொண்டது. அங்கு எந்தப் பொருளும் இல்லையென்று சொல்வதற்கு இல்லை. அப்படிக் கேட்போர்க்கும் அப்பொருளை எல்லாம் வாரி வழங்கும் வள்ளன்மை கொண்டவர்கள் உண்டு. அவ்வள்ளல்களைவிடக் குறையாத பெரும் புகழைப் பெற்றது மதீனா நகரம்,

கட்டப்பட்ட தோரணங்களும் கொடிகளும் காடுபோல நெருங்கியிருந்தன; மலைபோன்ற யானைகள் அவ்விடத்தில் நிறைந்திருந்தன; வழிகள் யாவும் ஒழுங்குடன் காணப்பட்டன; இவற்றால் முழுமை பெற்ற பூமியைப்போல மதீனா நகரம் பொன்னெனப் பொலிந்தது.

மதீனா நகரத்தில் வெண்சுண்ணச் சாந்தினைக்கொண்ட மாளிகைகள் ஒளிர்ந்தன; வீதிகளில் புதிய பூக்கள் சிந்திக் கிடந்தன; ஒவ்வொருவரையும் அழைத்துக் கொடுக்கும் விருந்தானது இனிமையுடன் இருந்தது; இதனால் அந்நகர் திருமண வீட்டைப்போன்று பொலிவுடன் காட்சியளித்தது.

பகை, வறுமை, நோய் முதலியவை மதீனா நகரிலிருந்து ஓடிவிட்டன. மேலும். குறைவில்லாத மானுட அறத்தை உடைய செங்கோல் ஆட்சி நடத்திப் பெரும்புகழ் பெற்ற சிறந்த அரசைப்போலப் பொலிவுடன் இருந்தது மதீனா நகரம்.

அலைகடலானது முத்தையும் பல்வேறு அணிகளையும் சிதறுவதுபோல மதீனா நகரில் மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். தேன் அருந்தியவர்கள் மயங்குவதுபோலப் பலவாறான பொருள் வளத்தால் ஒளி பெற்றுத் திகழ்கிறது மதீனா நகரம்.

மதீனா நகரில் தானம், ஒழுக்கம், தவம், ஈகை, மானம் முதலியன பூத்திருந்தன; திண்ணிய வலிமை நல்கும் வெற்றி, அள்வெற்றியைத் தருகின்ற குறைவற்ற ஊக்கம் முதலியன காய்த்திருந்தன. தீன் எனும் செல்வம் பழுத்திருந்த செம்மை பொருந்திய நகராக மதீனா இருந்தது.

இலக்கணக்குறிப்பு

மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த - பெயரெச்சங்கள்; இடன் - ஈற்றுப் போலி; பெரும்புகழ், தெண்டிரை - பண்புத்தொகைகள்;

பொன்னகர் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை;

மாநகர், உறுபகை - உரிச்சொல் தொடர்கள்;

தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் - எண்ணும்மைகள்

பகுபத உறுப்பிலக்கணம்

மலிந்த - மலி + த்(ந்) + த் +

மலி - பகுதி, த் - சந்தி, 'ந்' ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

- பெயரெச்ச விகுதி

நெருங்கின - நெருங்கு + () ன் +

நெருங்கு - பகுதி, () ன் - இறந்தகால இடைநிலை

- பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதி

அரும்பொருள் - அருமை + பொருள்

ஈறு போதல் - அரு + பொருள்

இனமிகல் - அரும்பொருள்

மனையென - மனை + என

வழி யவ்வும் - மனை + ய் + என

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - மனையென.

 

நூல்வெளி

இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். 'சீறா' என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு 'வாழ்க்கை' என்பது பொருள். புராணம் வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார் என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் 'பனி அகமது மரைக்காயர்' இதன் தொடர்ச்சியாக சின்னச்சீறா என்ற நூலைப் படைத்துள்ளார். உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர் கடிகை முத்துப் புலவரின் மாணவர். நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை ஆதரித்தனர்.

Tags : Chapter 5 | 11th Tamil இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 5 : Naalellam vinasei : Poem: Serapuranam Chapter 5 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : செய்யுள் கவிதைப்பேழை: சீறாப்புராணம் - இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்