இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 11th Tamil : Chapter 5 : Naalellam vinasei
இயல் 5
வாழ்வியல்
திருக்குறள்
பொச்சாவாமை
1) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
தங்களின் மகிழ்ச்சியில் கடமையை மறக்கும்போது மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்த்துக் கொள்க.
2) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
எப்போதும் எண்ணியதையே எண்ணிக்கொண்டிருந்தால், எண்ணியதை அடைதல் எளியதே!
குறிப்பறிதல்
3) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.*
முகக்குறிப்பில் அகக்குறிப்பை அறிபவரை என்ன பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்க.
4) பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
கண்ணின் குறிப்புகளை உணர வல்லவற்கு, பிறருடைய பகைமையையும் நட்பையும் அவரது கண்ணே அறிவித்துவிடும்.
படைமாட்சி
5) மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
வீரம், மானம், முன்னோர் வழியில் நடத்தல், நம்பிக்கைக்கு உரியவர் ஆதல் ஆகிய நான்கே படைக்குப் பாதுகாப்பு.
பகைத்திலும் தெளிதல்
6) பகைஎன்னும் பண்பில் அதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
பகை என்னும் பண்பற்றதை ஒருவன் விளையாட்டுக்குக் கூட விரும்பக் கூடாது!
7) வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.*
வில் வீரரின் பகையைப் பெற்றாலும், சொல்வன்மை உடைய அறிஞரின் பகையைப் பெறக்கூடாது!
8) இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து*
சிறியதாக இருக்கையிலேயே முள்மரத்தைக் களைந்து விடுக! முதிர்ந்துவிட்டால் வெட்டுபவரின் கையையே காயப்படுத்தும்.
அணி : பிரிதுமொழிதல் அணி
மருந்து
9) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.*
உண்டதும், செரித்ததும் அறிந்து உண்டால் மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
10) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.*
நோயையும் அதன் காரணத்தையும் அதை நீக்கும் வழியையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும்.
அணி: சொற்பொருள் பின்வரும் நிலையணி
11) உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
நோயாளியின் வயதையும் நோயின் அளவையும் குளிர்காலம், வேனிற்காலம் முதலிய பருவங்களையும் அறிந்து மருத்துவர் செயல்படவேண்டும்.
12) உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால்நார் கூற்றே மருந்து.
நோயாளி. மருத்துவர், மருந்து, மருத்துவ உதவியாளர் -
என்று மருத்துவம் நான்குவகையில் அடங்கும்.
இரவச்சம்
13) இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.*
பிறரிடம் கையேந்தி உயிர்வாழும் நிலை இருக்கும் எனில், அப்படி அந்நிலையை உருவாக்கியவன் அலைந்து கெடட்டும்.
14) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு, கொடாமை என்னும் பாறை மோதினால் உடைந்துவிடும்.
அணி : உருவக அணி