இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: ஆனந்தரங்கர் நாட்குறிப்பு | 11th Tamil : Chapter 5 : Naalellam vinasei
இயல் 5
உரைநடை உலகம்
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
நுழையும்முன்
பன்மொழிப் புலமையும் பல்துறை ஆளுமையும் கொண்ட ஆனந்தரங்கர் புதுச்சேரி வரலாற்றினைப் பதிவு செய்தவர்களில் முதன்மையானவர். அவருடைய நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்துகொள்ள நமக்குக் கிடைத்த அரிய பெட்டகமாகும். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவரின் வாழ்வோடு ஒன்றியிருப்பது ஓர் அரிய நிகழ்வு.
நாட்குறிப்பு என்பது தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளைப் பதிவு செய்யும் ஏடாகும். இதனை ஆங்கிலத்தில் 'டைரி' என்று அழைப்பர். டைரியம் என்னும் இலத்தீன் சொல்லின் மூலமான 'டைஸ்' என்ற சொல்லில் இருந்து இச்சொல் உருவாயிற்று.
நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் திகழ்வது EPHEMERIDES என்று அழைக்கப் பெறும் கிரேக்கக் குறிப்பேடு ஆகும். இச்சொல் 'ஒரு நாளுக்கான முடிவு"
என்னும் பொருளைத் தரும். முகவாய மன்னர்களில் பாபர் காலம் முதல் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஔரங்கசீப் ஆட்சிக்காலத்தில் நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டிருந்தது. 1498இல் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழியைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர். அவருடைய நாட்குறிப்புகள் ஆல்வாரோ வெல்லோ என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனந்தரங்கர்
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் குழுமத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் துய்ப்ளே என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர்.
இவருடைய நாட்குறிப்புகள் 25 ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவதோடு. அக்காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்று ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழ்கின்றன.
ஆனந்தரங்கர்
பிரான்சுவா மர்த்தேனுக்குப் பிறகு கியோம் ஆந்த்ரே எபேர் புதுச்சேரியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றார். அவர்தம் தரகராக 'நைனியப்பர்' நியமிக்கப்பட்டார். தைனியப்பரின் மைத்துனர் திருவேங்கடம் என்பவரின் மகன் ஆனந்தரங்கர். இவர் 1709ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 30ஆம் நாள் சென்னையிலுள்ள பெரம்பூரில் பிறந்தார். தம்முடைய பதினேழு வயதில் தந்தையை இழந்த ஆனந்தரங்கர், பிரெஞ்சு மேலதிகாரி 'அலனுவார்' உதவியால் பரங்கிப்பேட்டை நெசவுச்சாலைக்கும் சாயம் தோய்க்கும் கிடங்குக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
உழைப்பும் உண்மையும் உறுதியும் மிக்க ஆனந்தரங்கர் பிரெஞ்சு ஆளுநர் 'துய்ப்ளே காலத்தில் தலைமை மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். வல்லாண்மை மிக்க பிரெஞ்சு ஆட்சியரின் நம்பிக்கைக்கு உரியவராக, மிகுந்த அரசியல் செல்வாக்குடன் திகழ்ந்தார்.
ஆனந்தரங்கர், தம்முடைய நாட்குறிப்பில் ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை, அந்த நாளின் நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டே செய்திகளை எழுதியுள்ளார்.
நாட்குறிப்பு வெளிப்படுத்தும் அரசியல் செய்திகள்
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு அக்கால கட்டங்களில் புதுவையிலும், தமிழகத்திலும், தென்னிந்தியாவிலும் நிகழ்ந்த பல்வேறு அரசியல் நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது.
தெரியுமா?
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் சாமுவேல் பெப்பிசு ஆவார். ஆங்கிலேயக் கடற்படையில் பணியாற்றிய அவர் 'இரண்டாம் சார்லஸ்' மன்னர் காலத்து நிகழ்வுகளை (1660 - 1669) நாட்குறிப்பாகப் பதிவு செய்துள்ளார். இவரைப் போலவே ஆனந்தரங்கரும் 06.09.1736 முதல்
11.01.1761வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார். இந்நாட்குறிப்பு இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பாகும். இதனால், ஆனந்தரங்கர் இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்படுகிறார்.
ஆனந்தரங்கரின் கையெழுத்து
10.09.1736ஆம் நாள் குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையைப் பெற்றதை விளக்குகிறது. இந்த உரிமையைப் பெறுவதற்காக ஆளுநர் செலவழித்த பெருந்தொகையையும் ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்.
பிரெஞ்சுக் கப்பல் தளபதி லெயூர்தொனே ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை, 1746இல் கைப்பற்றியதையும் அதனால் சினமுற்ற ஆற்காடு நவாபு அன்வர்தீன் கானின் மூத்த மகன் மகபூஸ்கான் பிரெஞ்சு அரசை எதிர்த்துப் போரிட்டதையும் நேரில் கண்டு உரைப்பதுபோல் நாட்குறிப்பில் கூறியுள்ளார்.
தேவனாம்பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயருடன் பிரெஞ்சு அரசு நடத்திய படையெடுப்பு, புகழ் பெற்ற ஆம்பூர் போர் பற்றிய செய்திகள், தஞ்சைக் கோட்டை மீது நடத்திய முற்றுகை, இராபர்ட் கிளைவின் படையெடுப்பு, ஆங்கிலேயர் புதுச்சேரியை முற்றுகை இட்டது முதலியவற்றையெல்லாம் வரலாற்று ஆசிரியர் போன்று நாட்குறிப்பில் விளக்கிக் கூறியுள்ளார்.
1758ஆம் ஆண்டு இறுதியில் சென்னைச் கோட்டை முற்றுகையை லல்லி என்பார் தொடங்கினார். கோட்டையை இடித்தும் வீடுகளைத் தரை மட்டமாக்கியும், மதிலை இடித்து அகழியைத் தூர்த்தும் கூடக் கோட்டையை லல்லியால் கைப்பற்ற முடியவில்லை. அக்கோட்டையின் கவர்னர் 'மேஸ்சர் பிகட்"
மகத்தான வெற்றி பெற்றார்.
நாட்குறிப்பு வெளிப்படுத்தும் சமுதாயச் செய்திகள்
இவரின் நாட்குறிப்பு
18ஆம் நூற்றாண்டின் தமிழ்ச்சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. பண்பாடு, சமயம், சாதி, நீதி, வணிகம், நம்பிக்கைகள் முதலான பல்வேறு கூறுகள் அடங்கிய நிகழ்வுகளை ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார்.
'11.06.1738ஆம் நாள் புதுச்சேரியின் ஆளுநர் 'துய்மா பிறப்பித்த ஆணையில், புதுச்சேரிப் பட்டணத்திற்குன்ளேயும். சம்பாக் கோவிலுக்குத் தெற்காகப் போகிற உப்பங்கழிப் பகுதியிலும் பட்டணத்தின் வீதிகள் எவ்விடத்திலும் காலைக்கடன் கழிப்பவர்களுக்கு ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீறியவர்களிடமிருந்து பெறப்பட்ட தண்டத்தொகையில் இரண்டு பணம் பிடித்துக் கொடுப்பவருக்கும். மீதி நான்கு பணம் சாவடிக்கும் உரியது என்று அறிவிக்கப்பட்டது. இது தெரியாமல் பலரும் தண்டம் கட்டியதாக' ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நீதி வழங்குதல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளையும் இவருடைய நாட்குறிப்பு. பதிவு செய்துன்னது. பல்வேறு காரணங்களுக்காக மரணதண்டனை வழங்கல், காதறுத்தல், சாட்டையடி, கிடங்கில் போடுதல் முதலிய தண்டனைகள் அக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளன.
ஆனந்தரங்கர் நாட்குறிப்புக் குறித்து உ. வே. சா.
தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன.
அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூடக் கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார், ஆனந்தரங்கர்
- வ.வே.சு.
தொடர்ந்து வீடுகளில் திருடி வரும் கும்பல் ஒன்று பிடிபட்டபோது, அவர்களுள் தலைமைத் திருடனைக் கடைத்தெருவில் தூக்கில் தொங்கவிட்டனர். ஏனைய இருவருக்கும் இரண்டு காதுகளை அறுத்து. ஐம்பது கசையடிகளும் தரப்பட்டன.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளது. கணக்கு வரவுசெலவுப் பட்டியல் என அச்செய்திகள் நீண்டுள்ளன. ஆனந்தரங்கரும் பிறரும் வணிகத்திற்கு முதன்மை அளித்துள்ளதை உணரமுடிகிறது. பிரெஞ்கக் கிழக்கிந்தியக் கழகம் வணிகர் பலரைப் பங்குதாரராகக் கொண்ட கூட்டு நிறுவனம் ஆகும். தமது மூலதனத்திற்கு ஏற்ப ஒவ்வோராண்டும் எத்தனை கப்பல்களைக் கீழை நாடுகளுக்கு அனுப்புவது என்பது முன்பே திட்டமிடப்பட்டது. புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் அழகப்பன் என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதையும் அவர் பதிவு செய்துள்ளார்.
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடைய, கப்பல்களுக்கு ஆறு திங்கள் தேவைப்பட்டன. 11.11.1737 அன்று பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் 08.05.1738 அன்று புதுச்சேரியை அடைந்துள்ளது. கப்பல் வந்தவுடன் பிரங்கி முழங்குதல் வழக்கத்தில் இருந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் துணிகளுக்காக வர்த்தகரிடமும் தரகரிடமும் ஒப்பந்தம் செய்து கொன்னப்பட்டது. சிலர், கழகத்தின் வர்த்தகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருந்தனர். துணிகள், வர்த்தகருக்கு விற்கப்பட்டபோது உரிய இரசீதுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. 100க்கு 320 என்ற விகிதத்தில் அவர்கள் ஆறு திங்களுக்குள் கழகத்திற்குப் பணத்தைச் செலுத்திவிடுவதாகவும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர். வணிகக் கழகத்தின் அதிகாரியான கொர்னே இவற்றைப் பெற்றுப் பாதுகாத்துள்ளார்.
புதுச்சேரியில் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிகக் கழகம் பெற்றது. இதற்கான ஆணையை 10.09.1736 அன்று கனகராயர் பல்லக்கில் வைத்து ஊருக்குள் கொண்டு வந்தார். 21 பீரங்கிகள் முழங்கின. எட்டு மாற்றுக்குக் குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரெஞ்சு மன்னரின் ஆணையின் பேரில் 1739ஆம் ஆண்டு மே திங்களில் அறிவிக்கப்பட்டது. பல்வேறுவிதமான வராகன்களை ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார். அவை புதுச்சேரிப் பிறை வராகன், சென்னைப் பட்டணத்து நட்சத்திர வராகன், வட்ட வராகன், பரங்கிப் பேட்டை வராகன், ஆரணி வராகன் முதலியன.
ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயங்கள்
480 காசு - ஒரு ரூபாய்
60 காசு - 1 பணம்
8 பணம் - 1 ரூபாய்
24 பணம் - ஒரு வராகன்
1 பொன் – 1/2 வராகன்
1 வராகன் - 3 அல்லது 3.2 ரூபாய்
1 மோகரி - 14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்
1 சக்கரம் - 1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்.
ஆனந்தரங்கரின் பதிவுகள்
1745ஆம் ஆண்டு 21ஆம் நாள் வியாழக்கிழமை மாலைப் பொழுதிலே வீசிய பெருங்காற்று புதுச்சேரியைச் சூறையாடியதனை,
"அஸ்தமித்த உடனே துவங்கிப் பெருங்காற்று அடித்தது. ஊரிலே உண்டான மரங்களெல்லாம் படுகாடாய் விழுந்து போனதும், வீடுகள் வெள்ளத்தில் முழுகிப்போய், அந்த வெள்ளத்திலே வீடுகளை அடித்துக்கொண்டு போனதும், மாடுகள், கன்றுகள், மனுஷர் செத்ததும் தெருவுக்குத்தெரு பிண நாற்றமாய் இருந்தது என்று மனம் நொந்து எழுதியுள்ளார்.
இப்பேரிடர் புதுச்சேரியில் நிகழ்ந்தபோது மக்கள் எல்லோரும் உணவும் நீரும் இன்றி வாடினர். அப்போது ஒழுகரையிலே கனகராயர், பெருஞ்சோறு அளித்துத் தமிழரின் இரக்கத்தையும் ஈரத்தையும் வெளிப்படுத்தியதை ஆனந்தரங்கர் பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்திற்கும், பிரான்சுக்கும் இடையே போர் மூண்டதால் கப்பல் வணிகம் பெரிதும் தடைபட்டது. புதுச்சேரிக்குக் கப்பல்களின் வருகை 1745ஆம் ஆண்டில் தடைபட்டுப் பெரும் பொருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது. புதுச்சேரி வாணிகம் முழுவதும் வீழ்த்தது. மக்கள் எல்லோரும் கப்பல் வருகையையே எதிர்பார்க்கத் தொடங்கினர். ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூடப் பணம் இல்லாமல் ஆளுநர் துன்பப்பட்டார். இந்நிலையில் 08.06.1746ஆம் நாள் லெபூர்தொனேவின் ஒன்பது கப்பல்கள் புதுவைக்கு வந்தன. இது பற்றி ஆனந்தரங்கர், "கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டதும் நஷ்டப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற்போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும். நீண்டநாள் தவமிருந்து புத்திரப் பாக்கியம் கிட்டினாற்போலவும், தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும் மக்கள் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது" என்று நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
ஆனந்தரங்கரின் இறுதிக்கால நாட்குறிப்புகள்
அவருடைய இறுதிக்கால நாட்குறிப்புகள் ஆங்கிலேயர் புதுச்சேரி மீது நிகழ்த்திய முற்றுகையையும் புதுச்சேரியின் வீழ்ச்சியையும் மிக விரிவாகப் பேசியுள்ளன. 1760 பிப்ரவரியில் புதுச்சேரியைத் தாக்க ஆங்கிலேயக் கப்பல்கள் வந்துகொண்டிருந்ததாகவும் செஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளை வென்று ஆங்கிலத் தளபதி, புதுச்சேரியை நெருங்கிவிட்டதாகவும் தகவல் வந்துள்ளது. ஆங்கிலேயப் படைகள் சாரம் வரை வந்துவிட்டதைப் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். குண்டு சாலையை ஆங்கிலேயர் பிடித்ததும் புதுச்சேரி நகரில் பீதி நிலவியது. தேவனாம்பட்டணத்தில் மேலும் மேலும் துருப்புகளை ஆங்கிலேயக் கப்பல்கள் இறக்கின. புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.
புதுச்சேரியின் ஆளுநராக லெறி இருந்த காலத்தில், புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும், ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்தப்பட்டது. அப்போது ஆளுநரிடம், ஆனந்தரங்கர், "இப்பட்டணத்தில் உம்முடைய அதிகாரம்தான் இறுதியானது. அநீதியாகவும் உண்மைக்கு மாறாகவும் நடக்க நீர் விரும்பினால் உம்மைத் தடுக்கும் அதிகாரம் ஒருவருக்கும். இல்லை. ஆகவே, என்னைக் காவலில் போட விரும்பினால் உடனே செய்யலாம். பிற தண்டனையும் வழங்கலாம். இரண்டு சல்லிகூட நான் செலுத்த மாட்டேன். சிறையில் அடைத்துவிடுவீர் எனப் பயந்து ஒரு வாரத்தில் பணம் தருவேன் என்று நீர் கருத வேண்டாம்.
( தொகுதி 11 பக்.
81-84 )
ஆனந்தரங்கர் பற்றிய நூல்கள் சில
1. ஆனந்தரங்கன் கோவை - தியாகராய தேசிகர்
2. ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் - புலவரேறு அரிமதி தென்னகன்
3. வானம் வசப்படும் - பிரபஞ்சன்
புதுச்சேரியின் இவ்வாறான சூழ்நிலையில் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு இருந்த ஆனந்தரங்கரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. 12.01.1761 திங்கள் கிழமை ஐந்து நாழிகைக்குப் பட்டணத்தின் மீது பீரங்கிக் குண்டுகள் விழுந்துகொண்டிருந்த வேளையில் ஆனந்தரங்கர் மறைந்தார்.
1736ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் நாள் தொடங்கி ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றைப் பதிவுசெய்த ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு 1761ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் நாளோடு முடிவடைந்துள்ளது. புதுச்சேரியின் முற்றுகை பற்றிய முடிவினைக் கூறாமலேயே நாட்குறிப்பும் முடிந்துள்ளது. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது வெளிப்படுத்தும் விரிவான செய்திகளை, வரலாற்றறிஞர் தம் குறிப்புரைகளின் துணையோடு கண்டறிய முடியும்.