இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: ஆத்மாநாம் கவிதைகள் | 11th Tamil : Chapter 6 : Palkalai niruvu
இயல் 6
கவிதைப்பேழை
ஆத்மாநாம் கவிதைகள்
நுழையும்முன்
ஆத்மாநாம், கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் பேசியவர். கவிதை பாடுதலைச் சமூக அக்கறையாக மாற்றிக்கொண்டவர். இக்கவிதையில் அணிலையும் புளியமரத்தையும் காட்சிப்படுத்தி நம்முடன் உரையாடுகிறார்.
கேள்வி
காலை எழுந்ததும்
இரை தேடத் துள்ளும்
இவ்வணில்
இரவு எங்கே உறங்குகிறது
மலர்க்கிளைப் படுகையிலா
ஆற்றுமணற் சரிவிலா
சதுர வட்டக் கோண மயக்கச் சந்து பொந்துகளிலா
நிச்சயம் நூற்றுக்கணக்கில் இருக்கும்
இவ்வணில்கள்
ஒன்றல்ல தம் குழந்தைத்தனமான முகங்களுடன்
சிறு பிள்ளைக்கைகளுடன்
அனுபவித்து உண்ணும்
இவை
தங்களைப்பற்றி என்ன கனவு காணும்
உணவையும் உறக்கத்தையும் தவிர.
ஒரு புளியமரம்
ஒரு புளியமரம் சமீபத்தில்
என் நண்பனாயிற்று
தற்செயலாய்
அப்புறம் நான் சென்றபோது
நிழலிலிருந்து ஒரு குரல்
என்னைத் தெரிகிறதா
நினைவிருக்கிறதா
அன்றொரு நாள்
நீ புளியம்பழங்கள்
பொறுக்க வந்தபோது
என் தமக்கையின் மடியில்
அயர்ந்து போனாய்
அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே
உன் முகத்தில் உடலில் எங்கும்
வா எப்படியும் என் மடிக்கு.
நூல்வெளி
மதுகதனன் என்ற இயற்பெயரைக்கொண்ட ஆத்மாநாம் தமிழ்க்கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். காகிதத்தில் ஒரு கோடு அவருடைய முக்கியமான கவிதைத் தொகுப்பு. 'ழ' என்னும் சிற்றிதழை நடத்தியவர் கவிதை,கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று மூன்று தளங்களிலும் இயங்கியவர். இவருடைய கவிதைகள் ஆத்மாநாம் கவிதைகள் என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக்கப்பெற்றுள்ளன.