Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | உரைநடை: காலத்தை வென்ற கலை

இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: காலத்தை வென்ற கலை | 11th Tamil : Chapter 6 : Palkalai niruvu

   Posted On :  09.08.2023 06:27 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு

உரைநடை: காலத்தை வென்ற கலை

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு : உரைநடை: காலத்தை வென்ற கலை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 6

உரைநடை உலகம்

காலத்தை வென்ற கலை


நுழையும்முன்

கலையும் அறிவியலும் மனித குல வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை. மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலையாகும்; அது நம் மனத்தில் அழகுணர்வை ஏற்படுத்தி மகிழ்வைத் தருகிறது. நுண்கலை, பயன்கலை,பருண்மைக்கலை, கவின்கலை, நிகழ்த்துகலை எனக் கலைகள் பலவகைப்படும். கலை ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேன்மையையும் எதிரொலிக்கின்றது. தமிழகத்தில் பழங்காலத்திலேயே சிற்பம், கட்டடம், ஆடல், பாடல் முதலிய கலைகள் சிறப்புற்றிருந்தன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் தஞ்சைப் பெரிய கோவிலின் கட்டடக் கலைநுட்பம் நம்மை வியப்படையச் செய்கிறது.

 

கதிரும் நிலாவும் அண்ணா பல்கலைக் கழகத்தில் கட்டட அழகியல் கலைஞர்களுக்கான பட்டப்படிப்பின் (B.Arch.,) இறுதியாண்டு மாணவர்கள். கல்வெட்டுக்கலைப் பயிற்சியுள்ளவர்கள். தொன்மையான கோவில்களுக்குச் சென்று கலையழகையும் நுட்பங்களையும் விருப்பத்துடன் ஒளிப்படம், ஆவணப்படங்களை எடுத்துத் தங்கள் வலைத்தளத்தில் கட்டுரைகளோடு பதிவேற்றுவார்கள்.

கல்லூரியில் மூன்று நாள்கள் விடுமுறை கிடைத்தபோது அப்விருவரும் தங்களின் பல நாள் கனவான தஞ்சாவூர்க் கோவிலுக்குச் செல்வதென்று முடிவெடுத்தனர். விடியலில் குளிர்காற்றின் மென்மையை அனுபவித்தபடி தஞ்சையில் இறங்கிய இருவரும் உறவினர் வீட்டில் ஓய்வு எடுத்தனர், பின்னர், நிழற்படக் கருவி, வரைபடத் தாள்கள் உள்ளிட்ட பொருள்களைக் கதிர் எடுத்துக்கொள்ள, நிலா கோவிலை நோக்கித் தன் வாகனத்தை ஓட்டினாள்.

கோவிலுக்குள் நுழைந்ததும், ஒளிப்படம் எடுப்பதற்கான அனுமதிச்சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றனர். சுற்றிப் பார்த்து ஆங்காங்கே நின்று ஒளிப்படங்கள் எடுத்தபடி, அதன் நுணுக்கங்களைக் கவனித்து வியந்த இருவரும் சற்றே களைத்தவர்களாய்த் திருச்சுற்று மாளிகையில் அமர்ந்தனர்.

பெரியகோவிலின் கோபுரங்களில் உயரமானது, கேரளாந்தகன் கோபுரம். இராசராசன் 988ஆம் ஆண்டு சேரநாட்டை வெற்றிகொண்டதைப் போற்றும் வகையில் இக்கோபுரத்திற்குக் "கேரளாந்தகன் வாயில் கோபுரம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நிலா : கதிர், கவனித்தாயா? இந்தக் கோவிலில் இரண்டு கோபுரங்கள் இருக்கின்றன.

கதிர் : ஆமாம். முதலில் உள்ளது கேரளாந்தகன் திருவாயில்: அதை அடுத்து உள்ளது இராசராசன் திருவாயில். இவை சோழர்களின் தனி அடையாளம். ஆமாம் நிலா, இங்குக் கோபுரத்தின் நிழல் விழாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா?

நிலா : விமானத்தின் நிழல் விழாது என்பது கட்டுக்கதை. தினமும் இருவேளையும் விமானத்தின் நிழல் முழுவதுமாகவே விழும்.

புதிய குரல் : "தம்பி, நீங்கள் கோபுரமென்றது தவறு. இந்தப் பெண் சொன்னதுதான் சரி" (குரல் வந்த திசையில் பார்த்தபோது அவர்களுக்குப் பின்னால் தூணில் தூய வெண்ணிற ஆடையில் அறிவின் களையுடனும் சோர்ந்த முகத்துடனும் 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.)


பெரியவர் : கோபுரமென்பது வாயில்களின் மேலே அமைக்கப்படுவது. விமானமோ, 'அகநாழிகை'யின்மேல் அமைக்கப்படுவது.

கதிர் : அகநாழிகையா?

பெரியவர் : கருவறையைத்தான் அகநாழிகை என்று அழைப்பார்கள். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரண்டு நுழைவாயில் கோபுரங்கள் என்பது பிற்காலச் சோழர்களின் தனிச்சிறப்பு.

நிலா : இதை ஏன் பெரிய கோவில் என்று அழைக்கிறார்கள் ஐயா?

பெரியவர் : (குறு நகையுடன்) தஞ்சைப் பெரிய கோவில் நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் ஆகும் அம்மா. இராசராச சோழனால் ஏறத்தாழ ஆறு ஆண்டுகன் முயன்று இது கட்டி முடிக்கப்பட்டது. 'தட்சிண மேரு' என்று இராசராசனால் பெருமையுடன் அழைக்கப்பட்ட இக்கோவில் விமானம் 216 அடி உயரம் உடையது. கருவறை விமானம் 13 தளங்களையுடையது.

கதிர் : கற்றளிக் கோயில்களென்றால்.....

பெரியவர் : செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதுபோல. கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் கற்றளி என்று பெயர். ஏழாம் நூற்றாண்டில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் உருவாக்கிய வடிவம் இது. மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக் கோவில் ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அந்த வகையில் முழுமையாகக் கற்களைக்கொண்டே கட்டப்பட்ட மிகப் பெரிய கோவில் இதுதான்.

11ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த முதலாம் இராசராச சோழன் தஞ்சைப் பெரிய கோவிலை 1003ஆம் ஆண்டு தொடங்கி 1010ஆம் ஆண்டுவரை கட்டினான். 2010இல் இக்கோவிலின் 1000 ஆவது ஆண்டு நிறைவடைந்தது

நிலா : பழங்காலத்தில் கோவில்கள் எப்படிக் கட்டப்பட்டன ஐயா?

பெரியவர் : தொடக்கத்தில் மண்ணால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டனர். தில்லைக் கோவில், குற்றாவநாதர் கோவில் ஆகியன அவ்வாறு கட்டப்பட்டவை. அதன்மேல் செப்பு, பொன் தகடுகளால் கூரை வேய்ந்தார்கள். அடுத்த நிலையில் செங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டினார்கள். அந்த வகையில் சோழன் செங்கணான் எழுபத்தெட்டுக் கோவில்களைக் கட்டியிருப்பதாகத் திருநாவுக்கரசர் தம் பதிகமொன்றில் கூறுகிறார்.

நிலா : கோவில்கள் ஏன் பெரிதாகக் கட்டப்பட்டன?

பெரியவர் : கோவில் என்பது வெறும் வழிபடும் தலம் மட்டுமன்று. அங்கே இசை, நடனம், நாடகம் போன்ற அருங்கலைகள் வளர்க்கப்பட்டன. அது, மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும் இருந்தது. எனவே, மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் அனைத்துமே அங்கே கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பஞ்ச காஸத்திஸ் மக்களுக்கு உதவுவதற்கான தானியக் கிடங்குகளும் கோவிலுக்குள் அமைக்கப்பட்டிருந்தன. கருவூலமாகவும் மருத்துவமனையாகவும், போர்க்காலங்களில் படைவீரர்கள் தங்கக்கூடிய இடமாகவும் கோவில்கள் பயன்பட்டன என்றால் நீங்கள் வியப்படைவீர்கள்.

கதிர் : சரிதான், பல்லவர்கள்தாம் கோவில் கட்டுவதில் வல்லவர்கள் என்று நினைத்திருந்தேன்

பெரியவர் : செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு 'விசித்திர 'சித்தன்' என்று அழைக்கப்பட்ட முதவாம் மகேந்திரவர்ம பல்லவன் குடைவரைக் கோவில்களை அமைத்ததாக மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது. அவர்கன்வழி வந்த இராசசிம்மனோ தம் முன்னோர்களையும் விஞ்சும் வகையில் உன்னதச் சிறப்பும் எழிலும் வாய்ந்ததாகக் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை அமைத்து அழியாப் புகழ் பெற்றான்.

கட்டடக்கலை என்பது உறைந்துபோன இசை

- பிரடிரிகா வொன்ஸ்லீவிங்

நிலா : இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்ட அக்கோவிலே இராசராசனுக்கு, அதுபோன்றதொரு பெரிய கோவிலைக் கட்ட வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியது அல்லவா?

பெரியவர் : பரவாயில்லையே, நிறையத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஆனால், தஞ்சைப் பெரிய கோவிலை இராசராசன்தான் கட்டினான் என்பதற்குச் சான்று எங்கே உள்ளது? இக்கோவில் எந்தக் கலைப் பாணியைச் சேர்ந்தது? சொல்லுங்கள் பார்ப்போம்.

கதிர் : இந்தியக் கட்டடக் கலைப்பாணியை நாகரம், வேசரம், திராவிடம் என்று மூன்றாகக் கூறுவர். அதில் தஞ்சைக் கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும்.

பெரியவர் : முதல் கேள்விக்குப் பதில் சொல்லலையே தம்பி?

நிலா : நான் சொல்கிறேன் ஐயா. 1886ஆம் ஆண்டு ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ் ஆறு ஆண்டுகள் தீவிரமாகக் கல்வெட்டுகளைப் படியெடுத்து வாரித்து இக்கோவிலை இராசராச சோழன்தான் கட்டினான் என்று உறுதி செய்தார்.


பெரியவர் : சரியாகச் சொன்னாய் அம்மா. இக்கோவிலில் அரிய ஓவியங்களும் இருக்கின்றன தெரியுமா?

கதிர் : செய்தித்தாள்களில் படித்த நினைவு இருக்கிறது. ஆனால், சரியாகத் தெரியவில்லை.

பெரியவர் : 1930ஆம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த எஸ்.கே. கோவிந்தசாமி தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகைப் பகுதிச்சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன்முதலில் கண்டறிந்தார். அதில், தட்சிணாமூர்த்தி ஓவியம். சுந்தரர் வரவாறு, திரிபுராந்தகர் ஒவியம் முதலியன சுவர் முழுவதுமாகப் பெரிய அளவில் வரையப்பட்டுள்ளன.

நிலா : ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்களைத்தானே சொல்கிறீர்கள்? சோழர் கால ஓவியங்கள் மீதே நாயக்கர் ஆட்சியில் ஓவியங்கள் வரைந்திருந்ததை அறிந்து அதனை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தியவரும் அவர்தானே ஐயா!

கதிர் : அந்த ஓவியங்கனை நாங்கள் பார்த்துப் படமெடுக்க இயலுமா?

பெரியவர் : பொது மக்களுக்கு அனுமதியில்லையப்பா. சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பார்க்க முடியும். கோவில்களுக்கோ, தொல்லியல் கண்டுபிடிப்புகள் உள்ள இடங்களுக்கோ செல்பவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணராமல் சிலைகளைச் சேதப்படுத்துதல், சுவர்களில் கிறுக்குதல், தொல்லிடங்களில் குப்பை போடுதல் போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுகிறார்கள். நம்முடைய தொன்மையையும் பாரம்பரியத்தையும் பேசும் அந்த இடங்களை நாம் பாதுகாக்க வேண்டாமா? ஏற்கெனவே நாம் பல இடங்களை, அதன் முக்கியத்துவம் உணராமல் கற்கனைப் பெயர்த்தும் கோபுரங்களைச் சிதைத்தும் சிலைகளை உடைத்தும் அழித்துவிட்டோமே தம்பி,

கதிர் : ஆமாம் ஐயா. நீங்கள் சொல்வது சரியே. வரலாற்றைப் படைத்த நமக்கு அதனைப் பாதுகாக்கத் தெரியவில்லை. தஞ்சைக் கோவிலில் நந்தியும் சிகரமும் ஒற்றைக்கல்லால் ஆனதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் ஐயா.

திட்பமும் நுட்பமும்

ஃப்ரெஸ்கோ ஓவியங்கள்


ஃப்ரெஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லுக்குப் புதுமை என்று பொருள். சுண்ணாம்புக் காரைப்பூச்சு மீது அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம் இது. இவ்வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் போன்ற இடங்களிலும் காணலாம்.

பெரியவர் : இங்குள்ள நந்தி, சோழர் காலத்தைச் சார்ந்தது அன்று. நாம் பார்க்கும் இந்தப் பெரிய நந்தியும் மண்டபமும் நாயக்கர் காலத்தது தம்பி. சோழர் காலத்து நந்தி தற்போது தென்புறத் திருச்சுற்றில் உள்ளது. இன்னொரு செய்தி சொல்கிறேன் கேளுங்கள். அந்தச் சிகரத்திலுள்ள பிரமந்திரக் கல் ஒற்றைக்கல் அன்று, பதின்மூன்று தளங்களை உடைய கருவறை விமானத்தின் மேல் எண்பட்டை அமைப்பில் ஆரஞ்சுப்பழச்சுளை போன்று எட்டுக் கற்கள் நெருக்கமாக வைத்து ஒட்டப்பட்டன.

நிலா : புதிய செய்தி ஐயா. கோபுரங்களை உயரமாகக் கட்டுவது என்பது பின்னால் வந்த பழக்கமில்லையா கதிர்? பழைய கோவில்களில் கோபுரங்கள் சிறியதாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நம்முடைய தமிழக அரசின் சின்னமே கோவில் கோபுரம்தானே!

கதிர் : 12ஆம் நூற்றாண்டிலிருந்து கோபுரங்கள் தனிச்சிறப்புப் பெற்றண என்று சொல்லலாம். வெளிக்கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு வகைக் கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவன் இராசராசன். அதனைத் திருவாயில் என்று சொல்வார்கள். கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் இரண்டு வாயில்கள் பார்த்திருக்கிறோம்தானே நிலா!

பெரியவர் : நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப் பெறும் மரபு. இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்திலிருந்து தொடங்கியது. கீழ்ப்பகுதியைக் கல்லாலும் மேற்பகுதியைச் செங்கற்களாலும் கட்டியிருப்பர். புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரத்தை எழுப்பியது விஜயநகர அரசு. காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் உள்ள கோபுரங்கள் எல்லாமே 150அடிக்கு மேல் உயரம் உள்ளவை.

நிலா : இராசராசன் காலத்தில் பெண் அதிகாரிகள் அரசுப்பணிகளில் இருந்திருக்கிறார்கள் தெரியுமா! இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி திருவையாற்றில் கட்டிய கோவில் ஓலோகமாதேவீச்சுரம் என்று வழங்கப்படும். அந்தக் கோவிலில் உள்ள கல்வெட்டில்,

"உடன் கூட்டத்து அதிகாரம் செய்கின்ற

கோவலூரு டையான் காடந்

னூற்றெண்மநையும் அதிகாரிச்சி

எருதந் குஞ்சிர மல்லியையும்"

என்ற வரிகளில் 'எருதம் குஞ்சிர மல்லி' என்ற பெண் அதிகாரியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரியவர் : அதே கோவிலில் முதலாம் இராசாதிராசன் காலத்திலும் ஓர் அதிகாரிச்சி பற்றிய குறிப்பு இருக்கிறது. அவர் பெயர், அதிகாரிச்சி சோமயன் அமிர்தவல்லி. மகிழ்ச்சிதானே!

கதிர் : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் அதிகாரிகளாகப்  பணி புரிந்திருக்கின்றனர் என்பது ஆச்சரியமாக இருக்கே! நிலா, இந்தச் செய்திகளைப் பற்றி எனக்குச் சொல்லவேயில்லையே!

நிலா : அது இருக்கட்டும். ஐயா, நாங்கள் இருவரும் தொடர்ச்சியாக, கட்டடக்கலை பற்றி ஆய்வு செய்து வருவதால் ஓரளவு இந்தச் செய்திகள் தெரியும். உங்களைப் பார்த்தால் சாமியாரைப் போல் இருக்கிறீர்கள். ஆனால், எங்களுக்குத் தெரியாத தகவல்களையும் சொல்கிறீர்களே.....

பெரியவர் : இதே ஊரில் வசிக்கும் கல்தச்சன் நான். என் முன்னோர்கள் அல்லவா இப்படிப்பட்ட பெருங்கோவில்களை எழுப்பியிருக்கிறார்கள். கற்களே கிடைக்காத காவிரிச் சமவெளிப் பகுதியில் இவ்வளவு உயரத்தில் ஒரு கற்கோவில். தஞ்சையின் பெருமை இந்தக் கோவில். அடடா! இரண்டு, மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோவில் கட்டிவந்த காலத்தில் புதிய மரபு படைத்தவன் இராசராசன். என் தந்தை காலத்தில்கூட, கற்சிற்பங்கள் செய்திருக்கிறோம். அவ்வப்போது இந்தக் கோவிலுக்கு வருவேன். இங்கு வந்துவிட்டால் என் காதில் கற்களைச் செதுக்கும் உளியின் ஓசையும் பெருந்தச்சனின் ஆணைகளும் ஒலிக்கத் தொடங்கிவிடும். அதன் கண்ணியைப் பிடித்துக்கொண்டு அந்த நூற்றாண்டின் பெருந்தச்சர்களான என் முன்னோர்களை வியந்தபடி இங்கே அமர்ந்திருப்பேன்.

(பேசியவாறே விடைபெற்றுச் செல்கிறார் பெரியவர்)

கோவிலை எடுப்பித்தவர்கள் பற்றிய கல்வெட்டில்,

"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்தக் கல்லிலே வெட்டி அருள்க...."

என்று கோவில் கட்ட உதவியவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். தான் மட்டுமே பங்களிக்காமல் மற்றவர்களின் உதவியையும் பெற்றதோடு அதனைக் கல்வெட்டாகவும் ஆவணப்படுத்தியிருக்கும் இராசராசனின்பாங்கு போற்றத்தக்கது. தனக்கு அடுத்தபடியான இடத்தைத் தன் தமக்கை குந்தவை தேவிக்கு (அக்கன்) அளித்துள்ளார். அடுத்து, பெண்டு என்னும் சொல்லால் அவருடைய மனைவியர் கொடுத்த கொடையைக் குறிப்பிடுவதோடு கொடுப்பார் கொடுத்தனவும் என்று சொல்வதன் மூலம் இராசராசன், மற்றவர்களின் கொடையையும் உலகம் அறியும்படி செய்துள்ளார்.

கதிர் : தஞ்சைக் கோவிலை எந்த வகையிலும் மறக்க முடியாது. எத்தனை எத்தனை சிறப்புகள், அடடா! பெரியவர் சொன்ன புதிய தகவல்கள் ஆச்சரியம் இல்லையா நிலா இப்போது, திரும்பவும் கோவிலைச் சுற்றிப் பார்க்கலாம்; படங்கள் எடுக்கணும். இவ்வளவு தகவல்கள் சொன்னவர் பெயரைக்கூட நாம் கேட்க மறந்து விட்டோமே.... சரி, நாமும் கிளம்புவோம்.

(திருவரும் கோவிலை மீண்டும் கற்றி வருகின்றனர்)

நிலா : கதிர், இங்கே பாரேன், கோவிலைக் கட்டிய தச்சர்களின் பெயர்களைப் பொறிச்சிருக்காங்க. வீரசோழன் குஞ்சரமல்லன் இராசராசப் பெருந்தச்சன், மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன். எடுப்பித்தவன் பெயர் மட்டுமே பொறிக்கப்படும் நிலையில், தச்சர்களின் பெயரும் இந்த அழியாக் கோவிலில் பதித்திருப்பது மேலும் ஒரு புதுமை.

கதிர் : ஆமாம் நிலச. இந்த வாரம் நம்முடைய வலைத்தளத்தில் தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றி விரிவான கட்டுரையையும் படங்களையும் பதிவேற்றுவோம்.

Tags : Chapter 6 | 11th Tamil இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 6 : Palkalai niruvu : Prose: Kalathai ventra kalai Chapter 6 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு : உரைநடை: காலத்தை வென்ற கலை - இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : பல்கலை நிறுவு