இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: குற்றாலக் குறவஞ்சி | 11th Tamil : Chapter 6 : Palkalai niruvu
இயல் 6
கவிதைப்பேழை
குற்றாலக் குறவஞ்சி
நுழையும்முன்
சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனிமனிதர்களைப் பாடின. சமய நூல்கள் கடவுளரைப் பாடின சிற்றிலக்கியங்கள் கடவுளரோடு மனிதர்களையும் பாடின. அவற்றுள் இயற்றமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி.
குறவஞ்சி என்பது ஒரு வகை நாடக (opera) இலக்கிய வடிவமாகும். இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. பாட்டுடைத் தலைவன் உலா வரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல்கொள்ள, குறவர் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தலைவிக்குக் குறிகூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுவதால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது. இது குறத்திப்பாட்டு என்றும் வழங்கப்படுகின்றது. பரிசில் பெற்றுவரும் சிங்கிக்கும் சிங்சனுக்கும் இடையிலான உரையாடல் சுவைமிக்கது.
சிங்கனுக்கும் சிங்கிக்கும் உரையாடல் கண்ணிகள்
சிங்கன் : இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி? (எங்கே)
சிங்கி : கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப் போனனடா சிங்கா! (குறிசொல்ல)
சிங்கன் :
பார்க்கில் அதிசயம் தோணுது
சொல்லப் பயமா இருக்குதடி சிங்கி! (பயமா)
சிங்கி : ஆர்க்கும் பயமில்லை தோணின காரியம்
அஞ்சாமல் சொல்லடா சிங்கா! (அஞ்சாமல்)
சிங்கன் : காலுக்கு மேலே பெரிய விரியன்
கடித்துக் கிடப்பானேன் சிங்கி? (கடித்து)
சிங்கி : சேலத்து நாட்டில் குறிசொல்லிப்பெற்ற
சிலம்பு கிடக்குதடாசிங்க (சிலம்பு)
சிங்கன் : சேலத்தார் இட்ட சிலம்புக்கு மேலே
திருகு முறுகு என்னடி சிங்கி? (திருகு)
சிங்கி : கோலத்து நாட்டார் முறுக்கிட்ட தண்டை
கொடுத்த வரிசையடா சிங்கா! (கொடுத்த)
சிங்கன் : நீண்டு குறுகியும் நாங்கூழுப் போல
நெளிந்த நெளிவு என்னடி சிங்கி? (நெளிந்த)
சிங்கி : பாண்டிய னார்மகள் வேண்டும் குறிக்காகப்
பாடகம் இட்டதடா சிங்கா! (பாடகம்)
சிங்கன் : மாண்ட தவளை உன் காலிலே கட்டிய
மார்க்கம் அது ஏது பெண்ணே சிங்கி? (மார்க்கம்)
சிங்கி : ஆண்டவர் குற்றாலர் சந்நிதிப் பெண்கள்
அணிமணிக் கெச்சம் அடா சிங்கா! (அணிமணி)
சிங்கன் : சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி
சுருண்டு கிடப்பானேன் சிங்கி? (சுருண்டு)
சிங்கி : கண்டிய தேசத்தில் பண்டுநான்பெற்ற
காலாழி பீலியடா சிங்கா! (காலாழி)
சொல்லும் பொருளும்
கொத்து -
பூமாலை; குழல் -
கூந்தல்; கோலத்து நாட்டார் -
கலிங்க நாட்டார்; வரிசை -
சன்மானம்; நாங்கூழ் -
மண்புழு.
இலக்கணக்குறிப்பு
மாண்ட தவளை -
பெயரெச்சம்.
பகுபத உறுப்பிலக்கணம்
பெற்ற -
பெறு (பெற்று)
+ அ
பெறு -
பகுதி
பெற்று -
ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது
அ - பெயரெச்ச விகுதி.
புணர்ச்சி விதி
பயமில்லை -
பயம் +
இல்லை
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே -
பயமில்லை.
நூல்வெளி
தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து, அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றிப் பாடப்பட்டது குற்றாலக் குறவஞ்சி. இந்நூல், திரிகூட ராசப்பக் கவிராயரின் 'கவிதைக் கிரீடம்' என்று போற்றப்பட்டது. மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது. திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர். குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார். 'திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்' என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர் குற்றாலத்தின்மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியிருக்கின்றார்.