இயல் 6 : 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: திருச்சாழல் | 11th Tamil : Chapter 6 : Palkalai niruvu
இயல் 6
கவிதைப்பேழை
திருச்சாழல்
நுழையும்முன்
மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை திருச்சாழல் ஆகும். ஒரு பெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்படுத்துவது போலவும் பாடப்படுவது இது. இவ்வகையில் மாணிக்கவாசகர் இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் இருபது பாடல்களைப் பாடியுள்ளார்.
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.
(1)
கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ.
(2)
தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ.
(3)
-
மாணிக்கவாசகர்
சொல்லும் பொருளும்
காயில் வெகுண்டால்; அயன் -
பிரமன்; மால் -
விஷ்ணு; ஆலாலம் -
நஞ்சு; அந்தம் -
முடிவு.
பாடலின் பொருள்
பெண் 1
: சுடுகாட்டைக் கோயிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாயும் தந்தையும் இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்?
பெண் 2
: எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும் அவன் சினந்தால் உலகம் அணைத்தும் கற்பொடியாகிவிடும்.
பெண்
1: அக்காலத்தில் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய நஞ்சை, சிவன் உண்டான். அதற்குக் காரணம் யாதோ?
பெண்
2: அந்த நஞ்சை இறைவன் உண்டிருக்காவிட்டாஸ் பிரமன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் அன்றே அழிந்து ஒழிந்திருப்பார்கள்.
பெண்
1: தான் முடிவு இல்லாதவனாக இருந்தும் அவனை அடைந்த என்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்தானே, இது என்ன புதுமை?
பெண்
2: உன்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த திருவடிகன் தேவர்களுக்கும் மேன்மையான பொருளாகும்.
தெரியுமா?
சாழல் என்பது பெண்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு ஒரு பெண் வினா கேட்க, மற்றொரு பெண் விடை கூறுவதாக அமைந்திருக்கும். இறைவன் செயல்களையும் அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது திருச்சாழல் வடிவமாகும். திருமங்கையாழ்வாரும் தமது பெரிய திருமொழியில் இதே வடிவத்தைப் பயன்படுத்தியுள்ளார். மக்கள் வழக்கில் ஒருவர் விடுகதை சொல்லியும் அதற்கு மற்றொருவர் விடை கூறியும் விளையாடுவது இன்றைக்கும் வழக்கில் உள்ளது.
இலக்கணக்குறிப்பு
கடுகாடு, கொல்புவி, குரைகடல் -
வினைத்தொகைகள்:
நல்லாடை -
பண்புத்தொகை.
உறுப்பிலக்கணம்
உண்டான் -
உண் +
ட் +
ஆன்
உண் -
பகுதி, ட் -
இறந்தகால இடைநிலை
ஆன் -
ஆண்பால் வினைமுற்று விகுதி.
புணர்ச்சி விதி
கற்பொடி -
கல் + பொடி
லள வேற்றுமையில் வலி வரின் றடவும் -
கற்பொடி.
உலகனைத்தும் - உலகு + அனைத்தும்
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும், உலக் +
அனைத்தும்
உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே உலகனைத்தும்
திருவடி -
திரு + அடி
ஏனை உயிர்வழி வவ்வும், திரு +
வ் +
அடி உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே திருவடி.
நூல்வெளி
திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். இது சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை திருவாசகப் பாடல்கள். 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பது முதுமொழி. திருச்சாழல் தில்லைக் கோவிலில் பாடப்பெற்றது. ஜி.யு. போப் திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவர். திருவாதவூரைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார். மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் திருவாசகம், திருக்கோவையார் ஆகியனவாகும்.