பவணந்தி முனிவர் | இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: நன்னூல் பாயிரம் | 11th Tamil : Chapter 1 : Ennuyir enbean
இயல் 1
கவிதைப்பேழை
நன்னூல் - பாயிரம்
நுழையும்முன்
நூலைப் புரிந்துகொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் பாயிரம் உதவுகிறது. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இத்தகைய அமைப்பினைக் காணலாம். தொல்காப்பியத்தையும் அதன் உரைகளையும் பின்பற்றி எழுதப்பட்ட நூலான நன்னூலில்பொதுப்பாயிரம்,சிறப்புப்பாயிரம் ஆகியனகுறித்து விளக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஏழு நூற்பாக்களை நம் பாடப்பகுதியில் பார்ப்போம்.
பாயிரம் இல்லது பனுவல் அன்றே
1. முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம். (நூ. எண்: 1)
2. பாயிரம் பொது, சிறப்பு எனஇரு பாற்றே. (நூ. எண்: 2)
3. நூலே நுவல்வோன் நுவலும் திறனே
கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்
எல்லா நூற்கும் இவைபொதுப் பாயிரம். (நூ. எண்: 3)
4. ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோடு ஆய்எண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே.* (நூ. எண்: 47)
5. காலம் களனே காரணம் என்றுஇம்
மூவகை ஏற்றி மொழிநரும் உளரே.* (நூ. எண்: 48)
6. ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே. (நூ. எண்: 54)
7. மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும்போல் - நாடிமுன்
ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது. (நூ. எண்: 55)
- பவணந்தி முனிவர்
பாயிரம் - அறிமுகம்
நூலை உருவாக்கும். ஆசிரியரின் சிறப்பையும் அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறையற்றிப் பேசுவது பாயிரமாகும்.
சொல்லும் பொருளும்
பால் -
வகை ; இயல்பு - இலக்கணம்;
மாடம் -
மாளிகை; அமை -
மூங்கில்.
பாடலின் பொருள்
1. பாயிரத்திற்கு உரிய ஏழு பெயர்கள்
அ) முகவுரை –
நூலுக்குமுன் சொல்லப்படுவது.
ஆ) பதிகம் -
ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது.
இ) அணிந்துரை ஈ) புனைந்துரை -
நூலின் பெருமை முதலியவை விளங்க அபங்கரித்துச் சொல்வது.
உ) நூன்முகம் -
நூலுக்கு முகம்போல முற்பட்டிருப்பது.
(ஊ) புறவுரை - நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது.
எ) தந்துரை -
நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து சொல்வது.
2. பாயிரம் பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.
3. நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்.
4. சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம்
நூலாசிரியர் பெயர்
நூல் பின்பற்றிய வழி
நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு
நூலின் பெயர்
தொகை வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு
நூலில் குறிப்பிடப்படும் கருத்து
நூலைக் கேட்போர் (மாணவர்)
நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்
ஆகிய எட்டுச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும். இப்பாடல் நூற்பா வகையைச் சார்ந்தது.
5. நூல் இயற்றப்பட்ட காலம், அது அரங்கேற்றப்பட்ட அவைக்களம், அது இயற்றப்பட்டதற்கான காரணம் என்னும் இம்மூன்றையும் மேலே கூறப்பட்டுள்ள எட்டுச் செய்திகளுடன் சேர்த்துக் கூறுவோரும் உள்ளனர்.
6. ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும் பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்படாது.
7. மாடங்களுக்கு ஓவியங்களும் பெரிய நகரங்களுக்குக் கோபுரங்களும் அழகிய தோள்களைக்கொண்ட மகளிருக்கு அணிகலன்களும் எழிலைத் தரும். அவை போன்று எல்லாவகை நூல்களுக்கும் முன்னர் அழகு தருவதற்காக அணிந்துரையைப் புலவர்கள் பெருமையுடன் சேர்த்து வைத்தனர்.
இலக்கணக்குறிப்பு
காட்டல், கோடல் -
தொழிற்பெயர்கள்
ஐந்தும் -
முற்றும்மை
கேட்போர் -
வினையாலணையும் பெயர்
மாநகர் -
உரிச்சொற்றொடர்.
பகுபத உறுப்பிலக்கணம்
வைத்தார் – வை +
த் +
த் +
ஆர்
வை -
பகுதி
த் – சந்தி
த் -
இறந்தகால இடைநிலை
ஆர் -
பலர்பால் வினைமுற்று விகுதி.
புணர்ச்சிவிதி
அணிந்துரை -
அணிந்து +
உரை
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் -
அணிந்த் +
உரை
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே -
அணிந்துரை.
பொதுச்சிறப்பு -
பொது +
சிறப்பு
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் -
பொதுச்சிறப்பு.
நூல்வெளி
நன்னூல், தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்ட வழிநூல் ஆகும். இது, பொ.ஆ. 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என 5 பகுதிகளாகவும் சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என 5 பகுதிகளாகவும் அமைந்துள்ளன.
சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார் எனப் பாயிரம் குறிப்பிடுகிறது.
ஈரோடு மாவட்டம், மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரப்பிரபாவின் கோவில் உள்ளது. இங்கே பவணந்தியாரின் உருவச் சிற்பம் இன்றும் உள்ளது.