வில்வரத்தினம் | இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: யுகத்தின் பாடல் | 11th Tamil : Chapter 1 : Ennuyir enbean
இயல் 1
கவிதைப்பேழை
யுகத்தின் பாடல்
நுழையும்முன்
மொழி, மனித இனத்தின் ஆதி அடையாளம். அது, பண்பாட்டுப் பரிணாம் வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு உருவானது. ஓர் இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவதும் மொழியே. அது,
நம் இருப்பின் அடையாளம். நம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் வேர், சங்கத்தில் தொடங்கி இன்றையகாலம் வரையும் இடர் பல களைந்து, உயர்தனிச் செம்மொழியாய்ச் செழித்தோங்கி இருக்கிறது.
1. என் அம்மை, ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே!
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே!
உனக்குப்
பல்லாண்டு
பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
2. பாடத்தான் வேண்டும்!
காற்றிலேறிக்
கனைகடலை, நெருப்பாற்றை,
மலைமுகடுகளைக் கடந்து
செல் எனச் செல்லுமோர் பாடலை
கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்
உரமெலாம் சேரப்
பாடத்தான் வேண்டும்!
*ஏடு தொடக்கி வைத்து என்னம்மை
மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த
விரல்முனையைத் தீயிலே தோய்த்து
திசைகளின் சுவரெலாம்
எழுதத்தான் வேண்டும்
எழுகின்ற யுகத்தினோர் பாடலை.*
சு. வில்வரத்தினம்
தெரியுமா?
புதுக்கவிதை - விளக்கம்
மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர். படிப்போரின் ஆழ்மனத்தில் புதுக்கவிதை ஏற்படுத்தும் தாக்கமே முதன்மையானது. இது படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப விரிவடையும் பன்முகத்தன்மை கொண்டது. எளியவர்களும் தம் உணர்ச்சிகளைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தந்தது புதுக்கவிதை எனலாம்.
நூல்வெளி
கவிஞர் சு. வில்வரத்தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்தவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக,
'உயிர்த்தெழும் காலத்துக்காக' எனும் தலைப்பில் 2001இல் தொகுக்கப்பட்டன. இவர் கவிதைகள் இயற்றுவதுடன் சிறப்பாகப் பாடும் திறனும் கொண்டவர். வில்வரத்தினத்தின் இரண்டு கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில் இடம்பெறுகின்றன.
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை.
- இரசூல் கம்சதோவ்
உயிர்ப்பு
என் புன்னகையைக் கூட
மொழிபெயர்க்க முடியாத
அந்நிய தேசத்தில்
எனக்கு நானே அகதியானேன்.
உணர்வுகளைச் சொல்ல முடியாமலும்
உதற முடியாமலும்
குரலற்றுக் கிடந்தேன்
என் காயத்தை வருடிச் சென்றது
மின்னலெனக் கடந்த
தாய்மொழியின் அமுதிசை
துள்ளி உயிர்த்தெழுந்தேன்
பரவச வெளியில்
நானுமோர் பறவையானேன்.