Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | துணைப்பாடம்: ஆறாம் திணை

அ.முத்துலிங்கம் | இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: ஆறாம் திணை | 11th Tamil : Chapter 1 : Ennuyir enbean

   Posted On :  05.08.2023 06:43 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன்

துணைப்பாடம்: ஆறாம் திணை

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன் : துணைப்பாடம்: ஆறாம் திணை - அ.முத்துலிங்கம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 1

விரிவானம்

ஆறாம் திணை

. முத்துலிங்கம்


 

நுழையும்முன்

காலந்தோறும் நிலையான வாழ்விடங்களைத் தேடிப் புலம்பெயர்ந்தபடியே இருந்த நாடோடி இனம், நிலவுடைமைச் சமூகமாக மாறப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின. மண்ணிலிருந்து பயிர்களைப் பிடுங்கியெறிவதுபோல, தாய்மண்ணிலிருந்து மனிதவுயிர்களைப் பெயர்த்து எறியும் போக்கு காலந்தோறும் நடந்துவரும் பேரவலமாகும். தங்களுடைய தாய்நாட்டிலிருந்து வெளியேறியவர்களும் வெளியேற்றப் பட்டவர்களும் எதிர்கொள்ளும் அவலங்களை ஆறாம்திணை ஆறாத வடுவாகப் பதிவு செய்கிறது.

 

நாங்கள் அப்போது இலங்கையில் மவுண்லவினியா என்னும் இடத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுச் சொந்தக்காரர் பெயர் பிரீஸ். அவருக்குத் தமிழ் தெரியாது. எனக்குச் சிங்களம் தெரியாது.

1958ஆம் ஆண்டு மே மாதம் ஓர் இரவு கலவரம் மெல்ல மெல்ல ஊர்ந்து கொழும்புக்கு வந்தது. எந்த நேரமும் எங்கள் வீடு தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று உணர்ந்த எங்கள் அண்ணா எங்கள் உயிரையும் உடைமைகளையும் பிரீஸ்தான் பாதுகாக்க வேண்டும் என்று அவரிடம் வேண்டினார். பிரீஸ் அப்போதுதான் தன் நினைவுக்கு வந்ததுபோல் ஒரு புதுமனிதராக மாறினார். எங்கள் பாதுகாப்புக்கு, தான் உத்திரவாதம் என்றார். ஒரு நாற்காலியை எடுத்து வீட்டுக்கு வெளியே போட்டு அன்றிரவு முழுக்க அங்கேயே தங்கினார். தூங்கவே இல்லை. உள்ளே நாங்களும் தூங்காமல் விடிவதற்காகக் காத்திருந்தோம். அடுத்த நாள் காவை அங்கிருந்த மூன்று தமிழ்க் குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் வீடு உடைந்து சிதிலமாகிவிட்டது என்றார்கள். ஒரு குடும்பத்து ஆட்கள் இரவோடு இரவாக மறைந்துவிட்டார்கள். எஞ்சியது நாங்கள் மட்டும்தான்.

எனக்குக் கிடைத்த சட்டை

ஒரு போலீஸ் வாகனத்தில் எங்களையும் இன்னும் சில தமிழ்க் குடும்பங்களையும் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரேயொரு பெட்டிதான் எடுத்து வரலாம் என்று கட்டளை. என் பங்குக்கு டேனியல் டிஃபோ எழுதிய "ராபின்சன் குரூசோ' என்ற ஒரேயொரு புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டேன். எப்போது வீட்டுக்குத் திரும்பி வருவோம் என்பது நிச்சயமில்லை. அடுத்த வேளை உணவு எப்போது, எங்கேயிருந்து வரும் என்பதும் தெரியாது.

முகாமில் ஒரு தொண்டு நிறுவனம் அகதிகளுக்கு இலவசமாக உடைகள் வழங்கியது. ஏதோவொரு வெளிநாட்டில் யாரோ போட்டு வைத்த உடைகள்தாம் அவை. அதற்காக ஆட்கள் சண்டை போட்டு ஒருவர் மேல் இன்னொருவர் ஏறி நின்று பெற்றுக்கொண்டார்கள். எனக்குப் பெரிசான இரவு ஆடையின் மேல்சட்டை மட்டுமே அகப்பட்டது. கீழ்க் கால்சட்டை யாருக்குப் போனதோ தெரியாது. அந்த மேல்சட்டையின் கடைசிப் பட்டன் என் கைகளுக்கு எட்டாது. ஆனால் மிகச் சந்தோஷமாக அதை நான் பகலிலும் இரவிலும் அணிந்துகொண்டேன்.

அகதி முகாமில் 2000பேர் வரை இருந்தார்கள் என்று நிணைக்கிறேன். இன்னும் பல முகாம்கள் இருந்தன என்று பின்னர்க் கேள்விப்பட்டேன். ஒரு மத்தியான நேரத்தின்போது அகதிகளாகிய நாங்கள் மறியல் கைதிகள்போல வரிசையில் தட்டையேந்தி உணவுக்காக நின்றோம். இரண்டு கரண்டி எண்ணி என் தட்டில் விழுந்தது. அது மஞ்சள் நிறத்தில் சோறுபோலவே இருந்தது. பருப்பு முடிந்துவிட்டது. யாரோ ஒருவர் போட்டு முடித்த நீளமான இரவுச்சட்டையோடு நான் நெடுநேரம் அங்கே நின்றேன். அப்பொழுது நான் எனக்குச் சொல்லிக் கொண்டேன் இந்த நாளை நன்றாக ஞாபகம் வை. இதுவே உன் வாழ்நாளில் ஆகக் கிழேயான தருணம். இனிமேல் இப்படி ஒரு கணம் உன் வாழ்க்கையில் வராமல் பார்த்துக்கொள்',

யாரோ போட்டு முடித்துத் தானமாகக் கிடைத்த இரவுச் சட்டையை நான் பல வருடங்களாகப் பல தேசங்களுக்கும் ஒரு ஞாபகத்துக்காகக் காவித் திரிந்தேன். ஒரு காலத்தில் நான் வளர்ந்து பெரியவனாகி அந்த உடையை நிரப்புவேன் நினைத்தேன். அது நடக்கவே இல்லை. அந்த உடையும் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு மாறும் இடைவெளியில் எங்கோ எப்போதோ ஏதோ ஒரு தருணத்தில் என்னை விட்டுத் தப்பியது.

உயிர் வாழும் திறமை

சில வருடங்களுக்கு முன்னர் நான் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன். முப்பது வயதிருக்கும். உற்சாகமாக இருந்தார். இவருடையது வித்தியாசமான கதை. இலங்கையிலும் பாங்காக்கிலும் சிறையில் இருந்திருக்கிறார். ரஷ்யாவில் பனிப்புதைவில் மயிரிழையில் உயிர் தப்பியவர், ஒன்பது நான் விசா கெடுவை மீறித் தங்கியதற்காக, சிங்கப்பூரில் இவரைக் குப்புறக் கிடக்க வைத்து ஒன்பது' பிரம்படிகள் கொடுத்திருக்கிறார்கள். கழுத்தில் மரப்பூட்டைப் போட்டுவிட்டு ஒரு தடியான மனிதன் பிரம்பினால் அடித்தான். அடித்து முடித்த பிறகு அதே இடத்தில் ஒரு சீனக்கிழவி மயிலிறகால் முதுகில் எண்ணெய் பூசிவிட்டாள். இருவருக்கும் சிங்கப்பூர் அரசு சம்பளம் கொடுத்தது.

அமெரிக்கா போய்ச் சேர்ந்தபோது அவருடைய கள்ள பாஸ்போர்ட்டைக் கண்டுபிடித்துவிட்டார்கள். கையிலும் காலிலும் சங்கிலி மாட்டிக் கையிலே 8 றாத்தல் கனமான இரும்புக்குண்டைக் காவக் கொடுத்து, நடத்திச் சிறைக்குக் கூட்டிச் சென்றார்கள். சிறைவாசம் முடிந்து. மூன்று வருடப் பயணத்துக்குப் பின்னர் கனடாவுக்கு வந்து சேர்ந்தார். அங்கு அகதியாக இருந்தபோது வேலை தேடி 17 கம்பெனிகளில் நேர்முகத் தேர்வுக்குப் போனார். எல்லோரும் அவரிடம், 'உங்கள் கனடிய அனுபவம் என்ன? உங்கள் திறமை என்ன?' என்றே கேள்வி கேட்டார்கள். 18 ஆவது இடத்தில் அவர் இப்படிப் பதில் சொன்னார். 'ஐயா, எனக்குக் கனடா அனுபவம் கிடையாது; ஆனால், என்னிடம் நிறையத் திறமை' உள்ளது. என் திறமை நான் உயிர் வாழ்வது. இன்றுவரைக்கும் உயிர் தப்பி நான் வாழ்கிறேன் என்றால் அது என் திறமை. இப்பொழுது அவர் கனரக வாகனம் ஓட்டுகிறார். அவருடைய வருமானம் சராசரி கனடியரின் வருமானத்திலும் பார்க்க இரண்டு மடங்கு அதிகம். இது ஓர் உதாரணம்தான். ஒரு புது நாடு கிடைத்துவிட்ட சந்தோஷம் அவருடைய முகத்தில் நிரந்தரமாக இருக்கிறது. கூடவே அகதியாக வாழ்வதன் வலியும்.

புலம்பெயர் இலக்கியம்

புலம்பெயர்வது ஒன்றும் புதிதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் புலம்பெயர்ந்தபடியே இருக்கிறான். சங்க இலக்கியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம். நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலங்கள் பற்றிப் பேசும்; பல பாடல்கள் தலைவன், தலைவி பிரிந்து போவதைச் சொல்லும். பொருள்வயின் பிரிவு என்று சொல்வார்கள். பொருள் தேடப் போவதால் புலம் பெயர நேரிடுகிறது. நற்றிணை 153 ஆவது பாடலில் தனிமகனார், சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்று, சொந்த ஊரைவிட்டு ஓடியவர்களின் கதையை, 'வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி, வாழ்வோர் போகிய பேர் ஊரிப் பாழ்' என்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அரசரின் கொலைச் சீற்றத்திற்குப் பயந்து வெளியேறியவர்கள் போலத்தான் சமீப காலங்களில் புகலிடம் தேடி அலைந்து கரை சேர்ந்தவர்களையும் சொல்லலாம்.


கனடாவுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டு. திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் பாதிரியார் கனடாவில் பிறந்தவர். தமிழ் அகதிகள் கண்டாவுக்குக் குடிபெயரத் தொடங்கியது 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான். அவர்கள் குடியேறிய சில வருடங்களிலேயே இதழ்கள் ஆரம்பித்துவிட்டார்கள். அகதிக் கோரிக்கை இன்னும் வெற்றி பெறவில்லை. நிரந்தர வேலை கிடையாது. அடுத்த வேளை உணவு பற்றி நிச்சயமில்லை. ஆனால் பத்திரிகைகளும் இலக்கிய இதழ்களும் தொடங்க அவர்கள் தயங்கவில்லை. புது நாட்டுக்கு வந்தவுடன் அவர்கன் செய்தது புது வாழ்க்கையைப் பதிவு செய்ததுதான்,

ஈழத்துக் கவிஞர் ... ஜெயபாலன் எழுதுகிறார்.

"யாழ்நகரில் என் பையன்

கொழும்பில் என் பெண்டாட்டி

வன்னியில் என் தந்தை

தள்ளாத வயதினிலே

தமிழ்நாட்டில் என் அம்மா

சுற்றம் பிராங்க்பர்ட்டில்

ஒரு சகோதரியோ ப்ரான்ஸ் நாட்டில்

நானோ

வழிதவறி அலாஸ்கா

வந்துவிட்ட ஒட்டகம்போல்

ஓஸ்லோவில்

கவிதைகள் எழுத முடியாதவர்கள் அவர்கள் சேர்த்துவைத்த நூல்களைச் சுமந்துகொண்டு வர மறக்கவில்லை. ஒருவர் சாண்டில்யனின் கடல்புறாவை 10 வருட காலமாகத் தூக்கிக்கொண்டு நாடு நாடாக அலைந்ததாகச் சொன்னார். இதற்கெல்லாம் காரணம் இருந்தது. 1981ஆம் ஆண்டு மே 31ஆம் தேதியைத் தமிழர் எவர் ஒருவராலும். மறக்க இயலாது. ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை எரித்தால் போதும். அவர்கள் அறிவு மேலும் வளர்வதற்கு முடியாமல் நின்றுவிடும். 'ஃபாரன்ஹீட் 451' நூல் அதைத்தான் சொல்கிறது. அறிவைச் சாகடித்துவிட்டால் மனிதன் செத்துவிடுவான்.

உலக அரங்கில் தமிழ்

புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை, தமிழைக் கைவிட்டுவிடும். என்ற பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது. இன்றைய கணினி யுகத்தில் தமிழ் கற்பது இலகுவாகிவிட்டது. புலம்பெயர் நாடுகளில் தமிழ் கற்க முனையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுதான் உண்மை நிலை. இவர்களில் சிலராவது உயர்ந்த இலக்கியங்கள் படைத்துத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துவார்கள்.

தமிழர்கள் எட்டுக்கோடிப் பேர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நியூசிலாந்திலிருந்து அலாஸ்காவரை பரந்துபோய்ப் புலம்பெயர் தமிழர்கள் பத்து லட்சம் பேர் வாழ்கிறார்கள். கனடாவில் மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள் என்று கணக்கெடுப்புச் சொல்கிறது. ஒரு காலத்தில் பிரித்தானிய அரசைச் சூரியன் மறையாத அரசு என்று அழைத்தார்கள். இப்போதோ சூரியன் மறையாத தமிழ்ப்புலம் என்று சொல்கிறார்கள்.

2012ஆம் ஆண்டு தொடங்கி வரும் எல்லா வருடங்களிலும் ஜனவரி 14ஆம் நாள், தமிழர் பாரம்பரிய நாள் எனப் பிரகடணப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் உலகத்தில் இரண்டாவது பெரிய தேசமான கனடாவில் முதல்முறையாக ஒரு புதிய சாலை ஒன்றுக்கு 'வன்னி வீதி' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு வன்னி வீதி, தமிழர்களுக்குச் சொந்தமான வீதி. இந்த வீதியை ஒன்றும் இலகுவாகச் சிதைக்க முடியாது. நூலகத்தை எரித்ததுபோல இதை அழிக்க முடியாது. என்றென்றைக்குமாகக் கனடாவில் ஈழத்தமிழரின் புலம்பெயர் வரலாற்றை நினைவுபடுத்தியபடியே இந்த வீதி நிற்கும்.

பனியும் பனி சார்ந்த நிலமும்


சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகையில் ஒன்று ஐங்குறுநூறு. ஐவகை நிலத்திற்கும் ஒவ்வொரு நூறு பாடலாக ஐந்து நூறு பாடல்கள் கொண்டது. அந்நூலில் பனியும் பனி சார்ந்த நிலத்துக்கும் பாடல்கள் இல்லை. புலம்பெயர்ந்த பத்து லட்சம் மக்கள் சென்றடைந்தது பனிப் பிரதேசங்களுக்குத் தான்.

என்னுடைய கிராமம் கொக்குவில். அங்கே காகம் இருந்தது. ஆறுமணிக்குருவியும் இருந்தது. சரியாக காலை ஆறு மணிக்கு இந்தக் குருவி 'கீஈஈஈய்க்' 'கீஈஈஈய்க்' என்று சத்தமிடும். காகத்துக்குப் பறக்கும் எல்லை இரண்டு மைல் தூரம். ஆறுமணிக்குருவிக்கு எல்லையே கிடையாது. இமயமலைக்குப் பறந்துபோய் மீண்டும் திரும்பும். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் இந்த ஆறுமணிக்குருவிபோல. அவர்களுக்கு எல்லையே கிடையாது. அவர் உலகம் பனியும் பனி சார்ந்த நிலமும். ஆம், ஆறாம் திணை.

 

நூல்வெளி

எழுத்தாளர் . முத்துலிங்கம், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். பணி தொடர்பாகப் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அக்கா, மகாராஜாவின் ரயில்வண்டி, திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றார். வம்சவிருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றவர். வடக்கு வீதி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1999இல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார்.

Tags : by aa. Muthulingam | Chapter 1 | 11th Tamil அ.முத்துலிங்கம் | இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 1 : Ennuyir enbean : Supplementary: Aaraam thinai by aa. Muthulingam | Chapter 1 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன் : துணைப்பாடம்: ஆறாம் திணை - அ.முத்துலிங்கம் | இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன்