Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 1 : Ennuyir enbean

   Posted On :  16.08.2023 09:49 pm

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன்

கேள்விகள் மற்றும் பதில்கள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன் : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 1

என்னுயிர் என்பேன்


நம்மை அளப்போம்

பலவுள் தெரிக

1. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க. 

அ) அ. முத்துலிங்கம் - யுகத்தின் பாடல் 

ஆ) பவணந்தி முனிவர் - நன்னூல் 

இ) சு. வில்வரத்தினம் - ஆறாம் திணை

ஈ) இந்திரன் - பேச்சுமொழியும் கவிதை மொழியும்

i) அ, ஆ

ii) அ, ஈ

iii) ஆ, ஈ

iv) அ, இ

[விடை : iii) ஆ, ஈ]


2. “கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்

காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்” - அடி மோனையைத் தெரிவு செய்க.

அ) கபாடபுரங்களை - காவுகொண்ட

ஆ) காலத்தால் - கனிமங்கள்

இ) கபாடபுரங்களை - காலத்தால்

ஈ) காலத்தால் - சாகாத

[விடை : இ) கபாடபுரங்களை – காலத்தால்]


3. பாயிரம் இல்லது --------- அன்றே.

அ) காவியம்

ஆ) பனுவல்

இ) பாடல்

ஈ) கவிதை

[விடை: ஆ) பனுவல்]


4. ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.

அ) மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்.

ஆ) பேச்சுமொழி, எழுத்துமொழியை திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.

இ) எழுத்துமொழியைவிட, பேச்சுமொழி எளிமையானது.

ஈ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.

[விடை: இ) எழுத்துமொழியைவிட, பேச்சுமொழி எளிமையானது.]


5. மொழிமுதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.

அ) அன்னம், கிண்ணம்

ஆ) டமாரம், இங்ஙனம்

இ) ரூபாய், லட்சாதிபதி

ஈ) றெக்கை, அங்ஙனம்

[விடை:அ) அன்னம், கிண்ணம்]


குறுவினா

1. பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்? 

விடை :

எழுத்துமொழி - எழுதுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது.

பேச்சுமொழி - முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது.

அதனால் பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்திமிக்கதாக உள்ளது.


2. என் அம்மை, ஒற்றியெடுத்த

நெற்றிமணி அழகே!

வழிவழி நினதடி தொழுதவர்,

உழுதவர், விதைத்தவர்

வியர்த்தவர்க்கெல்லாம்

நிறைமணி தந்தவளே! - இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக. 

விடை :

வினையாலணையும் பெயர்கள்: தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்.


3. 'பாயிரம்' பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

விடை :

நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பு,

அந்நூல் வழங்கும் கருத்துவளம்.

இவ்விரண்டிணையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும். 

பாயிரம்: பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.


4. உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் - இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?

விடை :

உயிரெழுத்து = உயிர் + எழுத்து - ர், மெய்யீறு

பன்னிரண்டு = பத்து + இரண்டு - த் + உ, உயிரீறு

திருக்குறள் = திரு + குறள் - ர் + உ, உயிரீறு

நாலடியார் = நான்கு + அடியார் - க் + உ, உயிரீறு


5. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பீடுக.

விடை :

தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை. இதுவே, இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையாகும்.


சிறுவினா

1. சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்? 

விடை :

என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே....., 

காலம் காலமாகத் தமிழன்னையைப் போற்றியவர்கள், 

சங்கம் அமைத்து தமிழன்னையைப் பாடியவர்கள்,

தமிழ்ப்பயிர் வளர அயராது உழைத்தவர்கள்,

இவ்வாறு தமிழ்மொழி வளர இடைவிடாது உழைத்தவர்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடத்தான் வேண்டும்.

காற்றில் ஏறி ஒலிக்கின்ற கடலையும், நெருப்பாறுகளையும், மலைச்சிகரங்களையும் கடந்து செல் என்னும் ஒரு பாடலையும்,

கபாடபுரங்களைக் கடல் விழுங்கிய பின்னரும் காலத்தால் அழியாத தொன்மையான இலக்கிய வலிமையெலாம் சேர்த்துப் பாடத்தான் வேண்டும் என்று சு. வில்வரத்தினம் குறிப்பிடுகிறார். 


2. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது? நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெறவேண்டுவன:

விடை :

முகவுரை - நூலுக்கு முன் சொல்லப்படுவது.

பதிகம் – ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது.

அணிந்துரை, புனைந்துரை - நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்துச் சொல்வது. 

நூன்முகம் - நூலுக்கு முகம்போல முற்பட்டிருப்பது.

புறவுரை - நூலுக்கு சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் பறத்திலே சொல்வது.

தந்துரை - நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து சொல்வது என்பனவாகும்.


3. ‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்' என்னும் தலைப்பில் நீவீர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக,

விடை :

தொன்மையான மொழி.

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்மொழி.

இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளை உள்ளடக்கிய மொழி.

  பொருள் இலக்கணம் கூறும் மொழி.

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி’. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது தமிழ்மொழி.

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாரதியால் பாராட்டப்பெற்ற தமிழ்மொழி. 

'உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே' என்று பாரதிதாசனால் பாடப்பெற்ற தமிழ்மொழி. இவை யாவும் தமிழ்மொழிமேல் நாங்கள் கொண்டுள்ள பற்றாகும்.


4. கூற்று – குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு

செய்வதன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.

கவிதை - கூண்டு திறந்தது 

சிறகடிக்கவா?

இல்லை! சீட்டெடுக்க.

கூற்றில் குறியீடு எனக் குறிப்பிடப்படுவது கவிதையில் எப்பொருளாக வந்துள்ளது?

விடை :

சிறகிருந்தும் பறப்பதை மறந்த கிளி.

எஜமானின் விரலசைவுக்கு சீட்டெடுக்கும் கிளி.

சீட்டெடுக்க மட்டும் வெளியே வருவதற்கு அனுமதி.

யாரோ ஒருவனின் வன்மத்திற்குச் சுதந்திரத்தைப் பறிகொடுக்கும் வாயில்லா கிளியின் அடிமை வாழ்வு,


5. மொழி முதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.

விடை :

மொழி முதல் எழுத்துகள் மொத்தம் - 22

உயிர் எழுத்துகள் அ முதல் ஒள வரை - 12

எ.கா: அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊஞ்சல், எறும்பு, ஏணி, ஐந்து, ஒட்டகம், ஓடம், ஒளவை. ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.

க ங் ச் ஞ் த் ந் ப் ம் ய் வ் (மெய்யெழுத்துகள்) - 10

எ.கா: கப்பல், ஙனம், சக்கரம், ஞமலி, தண்ணீர், நண்பன், பந்து, மருத்துவம், யவர், வரம். 

மொழி இறுதி எழுத்துகள் மொத்தம் - 24

உயிரெழுத்து - 12, மெய்யெழுத்து - 10, குற்றியலுகரம் -1. 

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.

எ.கா: சில(அ), நிலா(ஆ), நரி(இ), தீ(ஈ), மிளகு(உ), பூ(ஊ), சே(ஏஎ), எங்கே(எ), மழை(ஐ), நொ(ஒ), மலரோ(ஓ), கௌ(ஔ)

மெய்களில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொன்றும் சொல்லின் இறுதியில் வரும்.

எ.கா: மெல்லின மெய் - உரிஞ், பெண், வெரிந், அறம், மான்.

இடையின மெய் - பொய், பால், தெவ், பாழ், வாள்.

பழைய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும், சொல்லின் இறுதியில் வருவதாகச் சேர்த்துக் கொள்வர்.

எ.கா: எஃகு - குற்றியலுகரம் ஈறாயிற்று.


நெடுவினா

1. நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியையும் எழுத்துமொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க,

விடை : 

பேச்சுமொழி (நேரடிமொழி):

எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது.

எனவேதான், இலக்கிய வழக்கைக் கைவிட்டு பேச்சுமொழிக்குத் திரும்பியவுடன் கவிதையானது அதிக வெளிப்பாட்டுச் சக்தியாக மாறிவிடுகிறது.

முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது.

பேச்சு என்பது தன்னைத் திறந்துகொள்கிற ஒரு செயல்பாடு; மேலும் மொழியில் நீந்துவது. 

பேச்சுமொழியின்போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் மொழியென்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன.

கவிஞர்கள் சிலர் தங்களின் கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவதுபோல அமைக்கின்றனர்.

இத்தகைய நேரடி மொழி ஒருபோதும் பழமை கட்டுவதில்லை.

நேரடி மொழி எப்போதும் உயிர்ப்புடனும் மாறிக்கொண்டும் இருக்கிறது.

நேரடி மொழிதான் கவிஞரின் காலத்தை நிர்ணயிக்கிறது (மலையாளக்கவி ஆற்றூர் ரவிவர்மா) 

பேச்சுமொழியில் ஒரு கவிதை செய்யப்படுகிறபோது அது உடம்பின் மேல்தோல் போல இயங்குகிறது.

எழுத்துமொழி:

எழுத்துமொழியில் பேச்சைக் கேட்க எதிராளி ஒருவன் கிடையாது.

எழுத்து என்பது தனக்குத்தானே பேசிக்கொள்கிற பேச்சு.

எழுத்து மொழியில் கவிதை செய்கிறபோது சொற்களானது கவிதையின் உணர்வை உணர்ச்சியற்ற ஆடைபோல் போர்த்தி மூடிவிடுகின்றன.

எழுத்துமொழி பேச்சுமொழிப் போன்று வெளிப்பாட்டுச் சக்தி இல்லாதது.


2. நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க. 

விடை : 

பாயிரம்:

நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பு.

அந்நூல் வழங்கும் கருத்து வளம்.

இவ்விரண்டினையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரம் ஆகும்.

பாயிரமானது பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.

பொதுப்பாயிரம்:

நூலின் இயல்பு

மாணவர் இயல்பு

ஆசிரியர் இயல்பு 

கற்கும் முறை.

கற்பிக்கும் முறை.

என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்.

சிறப்புப்பாயிரம்:

நூலாசிரியர் பெயர்.

நூல் பின்பற்றிய வழி.

நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு,

நூலின் பெயர்.

தொகை, வகை, விரி என்பனவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு,

நூலில் குறிப்பிடப்படும் கருத்து.

நூலைக் கேட்போர்.

நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்.

ஆகிய எட்டுச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது சிறப்புப்பாயிரத்தின் இலக்கணம் ஆகும்.


3. தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வுகளோடும் அ. முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு இணைக்கப்படுகிறது?

விடை : 

முன்னுரை:

அ. முத்துலிங்கம் எழுதிய ஆறாம் திணையில் புலம்பெயர்தல் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. புலம்பெயர்தல் என்பது தாம் வாழும் ஓர் இடத்தைவிட்டு மற்றோர் இடத்திற்குப் பற்பல காரணத்திற்காகப் பயணிப்பதும், பயணித்த இடங்களையே வாழிடமாகக் கொண்டு வாழ்வைக் கழிப்பதுமாகும். புலம் பெயர்வது ஒன்றும் பதிதல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே மனிதன் புலம்பெயர்ந்தபடியே இருந்து வந்துள்ளான்.

சங்க இலக்கியத்தில் புலம்பெயர்தல்;

சங்க இலக்கியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலப்பாடல்களில் தலைவன் தலைவியைப் பிரிவதைப் பொருள்வயின் பிரிவு என்று குறித்தனர். பொருள் தேடுதல் காரணமாகவே புலம்பெயர்ந்தனர்.

நற்றிணை 153 ஆவது பாடலில் தனிமகனார் என்ற புலவர் சினம்கொண்ட அரசனின் கொடுமை தாங்காமல் துயருற்று ஊரைவிட்டு ஓடிய கதை கூறப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் தமிழர்:

உலகம் முழுவதும் தமிழர்கள் எட்டு கோடி பேர் இருக்கிறார்கள். நியூசிலாந்திலிருந்து அலாஸ்கா வரை பத்துலட்சம் தமிழர்கள், கனடாவில் மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள்.

1983 ஆம் ஆண்டிற்குப் பின்னரே கனடாவில் தமிழர்கள் குடியேறினர். குடியேறிய சில வருடங்களிலே பத்திரிகை மூலம் தங்கள் புலம்பெயர்வு வாழ்வைப் பதிவு செய்தார்கள்.

2012 ஆம் ஆண்டு முதல் சனவரி 14ஆம் நாள் தமிழர் பாரம்பரிய நாள் எனப் பிரகடனப் படுத்தப்படுகிறது. கண்டாவில் ஒரு சாலைக்கு வள்ளிவீதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் புலம்பெயர்வு:

1958 மே மாதம் ஓர் இரவு கொழும்புவில் ஓர் இனக்கலவரம் நடந்தேறியது. எஞ்சியது முத்துலிங்கத்தின் குடும்பம் மட்டுமே அடுத்து, அகதிகள் முகாம். அம்முகாமில் 2000 அகதிகள். அங்கே தொண்டு நிறுவனம் வழங்கிய ஆடையே உடுத்தப் பயன்பட்டது. வரிசையில் நின்றுதான் உணவு பெறவேண்டிய கட்டாயம். அந்த நாட்கள் போல் வாழ்நாளில் கடினமான தருணம் வரக்கூடாது என்பார் முத்துலிங்கம்.

புலம்பெயர்ந்த இளைஞருடன் சந்திப்பு:

ஒரு சமயம் புலம்பெயர்ந்த இளைஞர் ஒருவரை முத்துலிங்கம் சந்தித்தார். அவ்விளைஞர் இலங்கையிலும் பாங்காக்கிலும் சிறை இருந்தவர். கனடாவில் 17 முறை வேலைக்காக நேர்காணாலுக்குச் சென்றவர். நேர்காணலில் உளது திறமை என்ன என்று கேட்டதற்கு. இதுவரை நான் உயிர் தப்பி வாழ்வதுதான் தனது திறமை என்றாராம். இன்று அவர் வாகன ஓட்டுநர்.

முடிவுரை:

சங்க இலக்கியத்தில் ஐங்குறுநூறு நூலில் ஐவகை நிலத்திற்கும் 100 பாடல் வீதம் 500 பாடல்கள் உள்ளன. அந்த நூலில் பளியும் பனிசார்ந்த நிலத்துக்குப் பாடல்கள் இல்லை. பத்துலட்சம் மக்கள் புலம்பெயர்ந்து பனிப் பிரதேசங்களில் நாட்களைக் கழிக்கிறார்கள். முத்துலிங்கத்தின் கொக்குவில் கிராமத்தில் காகம் உண்டு. ஆறுமணிக் குருவியும் உண்டு. காகம் பறக்கும். அதன் எல்லை இரண்டு மைல் தூரம்தான். ஆறுமணிக் குருவி பறக்கும். அதற்கு எல்லையே இல்லை. இமயமலைக்குப் போய் மீனர்டும் திரும்பும். இப்படித்தான் பிறந்த மண்ணான ஈழத்தினின்று ஆறுமணிக்குருவிபோல் பறந்தனர். ஈழத்தவர்க்கு எல்லையே இல்லை. அவர்கள் உலகம் பணியும் பனிச்சார்ந்த நிலமும் - ஆமாம் இவர்கள் ஆறாம் திணையைச் சார்ந்தவர்கள்.


மொழியை ஆள்வோம்


சான்றோர் சித்திரம் 


தமிழ் இலக்கிய வரலாற்றில், “புலமைக் கதிரவன்” எனத் தமிழறிஞர்கள் போற்றிய தமிழ்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அதவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர், திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கினார்.

மீனாட்சி சுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு, வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர், திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார். இவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூல் இவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகிவற்றைப் பாடிப் பெருமை அடைந்தார். உ.வே. சாமிநாதர், தியாகராசர், குலாம் காதிறு நாவலர் முதலானோர் இவரின் மாணவர்கள். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் புகழ் தமிழ் உள்ளவரையிலும் வாழும்.

வினாக்கள்:

1. தமிழிலக்கிய வரலாற்றில் புலமைக் கதிரவன் - இத்தொடரில் புலமைக் கதிரவன் என்பதற்கு இலக்கணக்குறிப்பத் தருக.

2. மேற்கண்ட பத்தியில் இடம்பெற்றுள்ள உவமை, உருவகத் தொடர்களைக் கண்டறிக.

3. மீனாட்சி சுந்தரனார் தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர் - விடைக்கேற்ற வினாவை அமைக்க.

4. பத்தியில் மொழிமுதல் எழுத்துகளைக்கொண்டு அமைந்த சொற்களுள் எவையெவை வடமொழிச் சொற்கள் எனச் சுட்டுக.

5. விளங்கினார் - பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.

விடைகள்:

1. புலமைக் கதிரவன் - உருவகத்தொடர்

2. வண்டு போல் - உவமைத்தொடர்; புலமைக் கதிரவன் - உருவகத்தொடர்

3. தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர் யார்?

4. முகாவித்துவான் - ம் + அ மெய்முதல்; தலபுராணங்கள் - த் + அ மெய் முதல்; யமக அந்தாதி - ய் + அ மெய்முதல்; திரிபந்தாதி - த் + இ மெய் முதல்; கலம்பகம் - க் + அ மெய்முதல்.

5. விளங்கினார் - விளங்கு + இன் + ஆர்

விளங்கு - பகுதி, இன் - இறந்தகால இடைநிலை, ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி.


தமிழாக்கம் தருக.

1. The Pen is mightier than the Sword.

சுத்தியின் முனையைவிட எழுதுகோலின் முனை கூர்மையானது.

2. Winners don't do different things, they do things differently.

வெற்றியாளர்கள் மாறுபட்ட செயல்களைச் செய்வதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள்.

3. A picture is worth a thousand words.

ஆயிரம் சொற்களைவிட ஓர் ஓவியம் மதிப்பு வாய்ந்தது.

4. Work while you work and play while you play.

வேலையில்போது வேலையிலும், விளையாடும்போது விளையாட்டிலும் சுவனம் வை.

5. Knowledge rules the world.

அறிவே ஆட்சி செய்யும்.


பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க.

1. வாடகை - குடிக்கூலி

2. நிச்சயம் - உறுதி

3. சம்பளம் - ஊதியம்

4. தேசம் - நாடு

5. பத்திரிகை - நாளிதழ்

6. வீசா - நுழைவு இசைவு

7. ராச்சியம் - நாடு

8. சொந்தம் - உறவு

9. மாதம் - திங்கள்

10. உத்திரவாதம் - உறுதிமொழி

11. ஞாபகம் - நினைவு

12. வித்தியாசம் - வேறுபாடு

13. பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு

14. கோரிக்கை - வேண்டுகோள்

15. சரித்திரம் - வரலாறு

16. சமீபம் - அருகில்

17. போலிஸ் - காவல்

18. சந்தோஷம் - மகிழ்ச்சி

19. வருடம் - ஆண்டு

20. உற்சாகம் - ஆனந்தம்

21. கம்பெனி - குழுமம்/தொழிலகம்

22. யுகம் - காலம்

23. முக்கியத்துவம் - முன்னுரிமை 

24. தருணம்  - வேளை


கீழ்க்காணும் நிகழ்ச்சிநிரலினைப் படித்துச் செய்திக் கட்டுரையாக மாற்றுக. அச்செய்தியை நாளிதழில் வெளியிட வேண்டி முதன்மை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

நிகழ்ச்சி நிரல்

“அரியன கேள் புதியன செய்" (திங்கள் கூடுகை)


விடை 

செய்தி:

எங்கள் பள்ளியில் திங்கள் கூடுகை நிகழ்வு நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. 2.35 மணிக்கு மாணவர் இலக்கியச்செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். 2.40 மணிக்கு தலைமையாசிரியர் தலைமையுரையாற்றினார். 2.50 மணிக்கு சுவிஞர் வாணி அவர்கள் புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 3.45 மணிக்கு ஏஞ்சலின் நன்றியுரைக்குப்பின் இறுதியாக நாட்டுப்பண் பாடப்பெற்றது.


அனுப்புதல்

தலைமை ஆசிரியர், 

அரசு மேல்நிலைப்பள்ளி, 

திருச்சி - 2.


பெறுதல்

முதன்மை ஆசிரியர்,

இந்து நாளிதழ், 

திருச்சி - 2.

மதிப்புமிகு ஐயா,

வணக்கம்.

பொருள்: எங்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வை உமது நாளிதழில் வெளியிட வேண்டுதல் - தொடர்பாக.

எங்கள் பள்ளியில் திங்கள் கூடுகை நிகழ்வு நேற்று 20.06.2022 அன்று நடைபெற்றது. அந்நிகழ்வின் தொகுப்பினை இத்துடன் இணைத்துள்ளேன். அதனைத் தங்கள் நாளிதழில் வெளியிட வேண்டுகிறேன். நன்றி.

இப்படிக்கு, 

தலைமை ஆசிரியர், 

அரசு மேல்நிலைப்பள்ளி, 

திருச்சி - 2


உறைமேல் முகவரி:

பெறுநர்

முதன்மை ஆசிரியர்,

இந்து நாளிதழ், 

திருச்சி - 2.


பத்தியினைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

‘தமிழ்’ என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல்' ஆகும் என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. 'தமிழ்' என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்னும் பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.

‘அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்” என்ற பறநானூற்றுப் பாடலடியில் ‘தமிழ்’ எனும் சொல் மொழி, கவிதை என்பவற்றைத் தாண்டிப் "பல்கலைப் புலமை” என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. “தமிழ்கெழு கூடல்” என்றவிடத்திலும் “கலைப்புலமை” என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. கம்பன் “தமிழ் தழீஇய சாயலவர்” என்னும் இடத்து, ‘தமிழ்' என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன.

தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் 'தமிழ்', பாட்டு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. ஞானசம்பந்தன் சொன்ன “தமிழ் இவை பத்துமே”, மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ் என்பன எடுத்துக்காட்டுகளாகும். முப்பது பாட்டுக்களாலான திருப்பாவையை ஆண்டாள் “தமிழ்மாலை” என்றே குறிப்பது இங்கு எண்ணத்தகும். ('பண்பாட்டு அசைவுகள்' - தொ. பரமசிவன்)

வினாக்கள்:

1. தமிழ் என்னும் சொல்லுக்குரிய பலவேறு பொருள்கள் யாவை?

விடை 

இனிமை, பண்பாடு, அகப்பொருள், மொழி, கவிதை, அழகு, மென்மை, பாட்டு, பல்கலைப் புலமை, கலைப்புலமை.


2. பத்தியில் உள்ள அளபெடைகளைக் கண்டறிக.

விடை 

அதூஉம் - இசைநிறை அளபெடை; தழீஇய- சொல்லிசை அளபெடை.


3. தமிழ் என்றவுடன் உங்கள் மனத்தில் தோன்றுவதை ஒரு வரியில் குறிப்பிடுக. 

விடை 

என்னுயிர்த் தமிழ் உலகின் முதல் மொழி


4. திருப்பாவைக்கு ஆண்டாள் குறிப்பிடும் பெயர் யாது?

விடை 

தமிழ் மாலை.


5. பத்தியின் மையக்கருத்திற்கேற்ப ஒரு தலைப்பிடுக.

விடை 

தமிழின் பன்முகம்.


மொழியோடு விளையாடு


1. எண்ணங்களை எழுத்தாக்குக.


விடை 

நீ(ர்) வருவாய் என எங்கும்

சிட்டுக்கு

நீ(ர்) சொட்டும் குழாயில்...

வாய் பிளந்து பார்க்கிறது.


2. தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக.

எ.கா: ஓர் பயிர் பறவை வளர வேண்டும் அழகான தண்ணீர் மயில்

அ) மயில் ஓர் அழகான பறவை. ஆ) பயிர் வளரத் தண்ணீர் வேண்டும்.


i) பள்ளிக்கூடம் எல்லாம் தருபவை ஒவ்வொரு கலைகள் குழந்தையும் போக வேண்டும் மகிழ்ச்சி 

விடை 

அ) ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் போக வேண்டும்.

ஆ) கலைகள் எல்லாம் மகிழ்ச்சி தருபவை.


ii) நிலவு வீசுவதால் தெற்கிலிருந்து மாலை தென்றல் மகிழ்விக்கும் எனப்படுகிறது மனதை

விடை 

அ) தெற்கிலிருந்து வீசுவதால் தென்றல் எனப்படுகிறது.

ஆ) மாலை நிலவு மனதை மகிழ்விக்கும்.


iii) பிறர் செய்யாவிட்டாலும் செய்த தீமை மறக்கக்கூடாது நன்மை செய்யக்கூடாது உதவியை, 

விடை 

அ) பிறர் செய்த உதவியை மறக்கக்கூடாது.

ஆ) நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யக்கூடாது.


iv) நேற்று ஏன் வந்த பையன் பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா?

விடை 

அ) நேற்று வந்த பையன் யார் தெரியுமா?

ஆ) என் பக்கத்தில் இருக்கவில்லை?


v) கோசல மக்கள் நாடு ஒரு மகிழ்ச்சியாக சிறந்த வாழ்ந்து நாடு வந்தனர். 

விடை 

அ) கோசல நாடு ஒரு சிறந்த நாடு.

ஆ) மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.


3. வேர்ச்சொற்களை எடுத்துக்காட்டில் உள்ளவாறு தொடர்களாக மாற்றுக.

அ) வா ஆ) பேசு இ) தா ஈ) ஓடு உ) பாடு

எ.கா: வா - வேர்ச்சொல்

அருணா வீட்டுக்கு வந்தாள். (வினைமுற்று)

அங்கு வந்த பேருந்தில் அனைவரும் ஏறினர். (பெயரெச்சம்)

கருணாகரன் மேடையில் வந்து நின்றார். (வினையெச்சம்)

என்னைப் பார்க்க வந்தவர் என் தந்தையின் நண்பர். (வினையாலணையும் பெயர்)

விடை 

ஆ) பேசு - வேர்ச்சொல்

அண்ணா மேடையில் நன்றாகப் பேசினார். (வினைமுற்று) 

அண்ணா பேசிய பேச்சு அழகாக இருந்தது. (பெயரெச்சம்)

அண்ணா பேசி முடித்ததும் கரவொலி எழும்பியது. (வினையெச்சம்) 

கடமை கண்ணியம் கட்டுப்பாடு வேண்டும் என்று பேசியவர் அண்ணா. (வினையாலணையும் பெயர்)

இ) தா - வேர்ச்சொல்

தாத்தா எனக்குத் திருக்குறள் தந்தார். (வினைமுற்று)

தாத்தா தந்த திருக்குறள் உயர்வானது. (பெயரெச்சம்)

தாத்தா எனக்குத் திருக்குறள் தந்து பாராட்டினார். (வினையெச்சம்)

எனக்கு திருக்குறளைப் பரிசாகத் தந்தவர் தாத்தா ஆவார். (வினையாலணையும் பெயர்).

ஈ) ஓடு - வேர்ச்சொல்

உசேன் போல்ட் வேகமாக ஓடினார். (வினைமுற்று)

சிறுத்தையென ஓடிய உசேன் போல்ட் முதலிடம் பெற்றார். (பெயரெச்சம்)

நான்கு முறை ஒலிம்பிக்கில் தொடர்ந்து ஓடி உலகப் புகழ் பெற்றார். (வினையெச்சம்) 

100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றியை மட்டுமே நோக்காகக் கொண்டு ஓடியவர் உசேன் போல்ட். (வினையாலணையும் பெயர்)

உ) பாடு - வேர்ச்சொல்

இளையராஜா நன்றாகப் பாடினார். (வினைமுற்று)

இளையராஜா பல்லவி பாடிய ராகம் நன்றாக இருந்தது. (பெயரெச்சம்)

இளையராஜா சரணம் பாடிக் காட்டினார். (வினையெச்சம்)

சிம்பொனி இசையுடன் பாடியவர் இளையராஜா ஆவார். (வினையாலணையும் பெயர்).


நிற்க அதற்குத் தக




கலைச்சொல் அறிவோம்

அழகியல் – Aesthetics

புத்தக மதிப்புரை – Book Review

இதழாளர் - Journalist புலம்பெயர்தல் - Migration

கலை விமர்சகர் - Art Critic மெய்யியலாளர் - Philosopher


அறிவை விரிவு செய்

நாடற்றவன் - . முத்துலிங்கம்

நல்ல தமிழ் எழுத வேண்டுமா? - .கி. பரந்தாமனார்

உயிர்த்தெழும் காலத்துக்காக - சு. வில்வரத்தினம்


இணையத்தில் காண்க

● amuttu.net/ - . முத்துலிங்கத்தின் வலைத்தளம் 

 www.sirukathaigal.com/tag/-முத்துலிங்கம்/

https://www.poemhunter.com/.../tonight-i-can-write-the-saddest-lin... - பாப்லோ நெரூடாவின் கவிதை வாசிப்பு.

● https://www.biography.com/ ./walt-whitman-mini-biography-60832... - வால்ட் விட்மன் பற்றிய ஆவணப்படம்

● aavanaham.org/islandora

/object/noolaham%3A115

வில்வரத்தினத்தின் குரலில் தைப்பாவாய் எனும் கவிதை.


இணையச் செயல்பாடு

சொல்லேர் உழவர்

சொல்லை விரிவு செய்!


படிகள்:

கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி tamilpulavar இணையப்பக்கம் செல்க.

திரையில் தோன்றும் தேடுபெட்டியில் சொல்லை உள்ளீடு செய்து 'பொது' என்னும் தெரிவின் மூலம் சொல்லின் பொருளை அறிக. மேலும் இணை / எதிர், கலைச்சொல், விக்கி, யாப்பறிஞர், சந்தம், அசைதேடல், பழமொழி, செம்மொழி போன்ற பல தெரிவுகளின் வாயிலாக அச்சொல்லின் பயன்பாட்டை அறிக.

எடுத்துக்காட்டாக அரும்பு என்னும் சொல்லிற்குக் 'கலைச்சொல்' என்பதைத் தெரிவு செய்தால் அச்சொல் பிற துறைகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை அறியலாம்.

செயல்பாட்டின் படிநிலைக்கான படங்கள்:


செயல்பாட்டிற்கான உரலி 


Tags : Chapter 1 | 11th Tamil இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 1 : Ennuyir enbean : Questions and Answers Chapter 1 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன் : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன்