Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | உரைநடை: பேச்சுமொழியும் கவிதை மொழியும்

இந்திரன் | இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: பேச்சுமொழியும் கவிதை மொழியும் | 11th Tamil : Chapter 1 : Ennuyir enbean

   Posted On :  05.08.2023 06:34 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன்

உரைநடை: பேச்சுமொழியும் கவிதை மொழியும்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன் : உரைநடை: பேச்சுமொழியும் கவிதை மொழியும் - இந்திரன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

உரைநடை உலகம்

இயல் 1

பேச்சுமொழியும் கவிதைமொழியும்

- இந்திரன்


 

நுழையும்முன்

கலைகளின் உச்சம் கவிதை என்பர். அக்கவிதையினை, இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றும் கூறினார் மகாகவி பாரதி கவிதை எவ்வாறு நிகழ்கிறது; எழுத்துமொழியைக் கடந்து பேச்சுமொழி எவ்வாறு கவிதைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பவை பற்றிப் பேசுகிறது இக்கட்டுரை.

 

கவிதை என்பது எது? கவிதை எழுதும் செயல்பாடு எப்படி நிகழ்கிறது? கவிதை எழுதுகிறபோது எழுதிக் கொண்டிருப்பவனுக்குள் என்ன நிகழ்கிறது? கவிதை எழுதி முடித்துவிட்ட பிறகு கவிஞனுக்கும் கவிதைக்கும் என்ன உறவு? அதை யார் முடிவு செய்கிறார்கள்?

தொடரும் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை எண்ணற்ற அழகியல்வாதிகளும் தத்துவ ஞானிகளும் கலை விமர்சகர்களும் மொழியியல் அறிஞர்களும் கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் நான் இதுவரை கேட்டது, கண்டது, படித்தது ஆகிய எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், நான் மொழியில் மிதந்துகொண்டுதான் பிறந்ததாகத் தெரிகிறது. மொழியில் மூழ்கியபடிதான் எனது விழிகள் இந்த உலகைக் காணத் திறந்தன என்று உணர்கிறேன்.

என்னை விளக்கிய மொழி

எனக்கு மொழி என்பது அறிமுகமாவதற்கு முன்னால் பொருள்களும் விலங்குகளும் பறவைகளும் வானும் நிலவும் சூரியனும் மரங்களும் செடிகளும் இருந்திருக்கவே இல்லை. மொழி எனது உலகத்தை ஒவ்வொரு பொருளுக்கும் பெயர்களுடன் கட்டியெழுப்பியது. இதன்பிறகுதான் 'நான்' என்ற ஒன்று பிறந்தது. எனது உலகம் என்பது மொழியினால் கட்டமைக்கப்பட்ட பிறகு அந்த உலகத்திலிருந்து தனித்துப் பிரிந்து நிற்கிற 'நான்' உதயமானேன்.

நான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன். மொழியின் பொருளை அறிந்துகொள்ளத் தொடங்கியது எந்த ஆண்டில்? எந்த நாளில்? எத்தனை மணிக்கு? இவை அனைத்திற்கும் என்னிடம் பதில் இல்லை.

நான் உணர்ச்சியினால் நிரம்பியிருக்கிறபோது அந்த வேகத்தைப் பதிவு செய்வதற்குச் சொற்கள் உதவும் என்று எப்போது தோன்றத் தலைப்பட்டது?

மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம்' என்பதும் 'நான்' என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக்கொள்கின்றன.

- எர்னஸ்ட் காசிரர்

மொழி என்ற ஒன்று என்னுள் தோன்றியவுடன்தான் உலகம் எனது கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது. எனது உலகத்தை இழையிழையாகப் பிரித்தும் வகுத்தும் தொகுத்தும் விதவிதமான தூரங்களில் வைத்தும் கொடுத்தது மொழி. இதன்மூலமாக எனக்குள் உலகத்தின்

பல கதவுகள் திறக்கலாயின. மொழியின் சாவியைப் போட்டுத் திறக்கிறபோதெல்லாம் இதுவரையிலும் பெயர் சூட்டப்பட்டிராத பலவற்றை நானே என் கண்களால் கண்டுபிடிக்கத் தொடங்கினேன். அவற்றிற்கு நானே எனக்குப் பிடித்தமான பெயர்களைச் சூட்டத் தொடங்கினேன். பெயர்களுக்குக் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய வண்ணங்களைப் பூசும் சக்தியை மொழி எனக்குக் கொடுத்தது. அவற்றை எவிதவிதமான அடுக்குகளில் ஒருமையாகவும் பன்மையாகவும் அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப அடுக்கும் திறனை மொழி எனக்கு வழங்கியது.

வாளினும் வலிமை

மொழிவழியாக ஒன்றைப் பெயரிட்டு அழைக்கத் தொடங்கியவுடன் அந்தப் பொருளின் மீது எனக்கொரு அதிகாரம் வந்துவிடுவதை உணர்கிறேன். குழந்தையாக இருந்தபோது, "அம்மா, அம்மா" என்று அழைப்பேன், வேலையில் மூழ்கிய அம்மா, என்னைக் கவனியாதபோது திடீரென்று அவரது பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறேன், அவர் திடுக்கிட்டுத் திரும்பி என்னிடம் வந்திருக்கிறார். அப்போதுதான் என்னுடைய மொழி, பெயர்கள் இட்டு அழைத்தவுடன் அவற்றின் மீது ஒரு அதிகாரத்தை உருவாக்கிக் கொடுத்ததை உணரத் தலைப்பட்டேன்.

உடம்பின் ஒரு பகுதியாக இருக்கிற தொண்டையிலிருந்து சொற்கள் எழுகின்றன. அவற்றை ஏற்றம், இறக்கம், உச்சரிப்பு, வேகம். நிதானம். திருப்பித் திருப்பிச் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மௌனம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்திப் பொருள் வேறுபாடுகளை என்னால் ஏற்படுத்த முடியும் என உணர்கிறேன். இதுமட்டுமன்றி, கைகால் அசைவுகள், முகத்தின் தசைநார்ச் சுருக்கங்களின் அபிநயங்கள் ஆகிய உடம்பின் செயல்பாடுகள் என்னுடைய மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளன.

ஒரு திரவ நிலையிஸ், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்று திடநிலையை அடைந்துவிடுகிறது. இந்தத் திடநிலையை அடைந்த மொழி அது அச்சிடப்பட்ட ஒரு கவிதையாக மாறுகிறபோது என்னிலிருந்து பிரிந்துபோய்விட்ட ஒரு பொருளாக மாறிவிடுகிறது. உலகை மொழி கட்டியெழுப்பியது என்று சொல்கிறபோது உலகம் மொழியின் கைப்பிடியிலிருந்து நழுவுவதற்குத் தொடர்ந்து முயல்வதாகவும் தெரிகிறது.

நேரடிமொழி

எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எனவேதான் இலக்கிய வழக்கைக் கைவிட்டுப் பேச்சுமொழிக்குத் திரும்பியவுடனே கவிஞனுடைய கவிதையின் மொழி, அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது. எழுத்துமொழி அப்படியன்று எழுதுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது. முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. அதனால்தான், பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

எழுத்துமொழியில் பேச்சைக் கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது. எழுத்து என்பது ஒரு வகையில் பார்த்தால் தனக்குத்தானே பேசிக்கொள்கிற பேச்சு. ஆனால் பேச்சு என்பது அப்படிப்பட்டதன்று. பேச்சு என்பது தன்னைத் திறந்துகொள்கிற ஒரு செயல்பாடு உண்மையில் சொல்லப்போனால் பேச்சு என்பது மொழியில் நீந்துவது. பேச்சுமொழியின்போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நம்மை மொழியென்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன. இதை உணர்ந்த கவிஞர்கள் சிலர் தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவதுபோல அமைக்கின்றனர், இதையே அவர்கள் நேரடிமொழி எனக் கருதுகின்றனர்.

நேரடிமொழி எனப்படும் பேச்சுமொழிக்கு ஒருபோதும் பழமை தட்டுவதில்லை. அது வேற்றுமொழி ஆவதில்லை. அது எப்போதும் உயிர்ப்புடனும் மாறிக்கொண்டும் இருக்கிறது. இம்மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்கிறார் மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா.

பேச்சுமொழியில் ஒரு கவிதை செய்யப்படுகிறபோது அஃது உடம்பின் மேல்தோல்போல் இயங்குகிறது. ஆனால். எழுத்துமொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வை, உணர்ச்சியற்ற ஆடைபோல் போர்த்தி மூடிவிடுகின்றன. எனவே, கவிதை மரபான தனது செய்யுள் சந்தத்திலிருந்து விடுதலை அடைந்துவிட்டது. அடுத்ததாக, அது கவிதைக்கென இருக்கிற தனித்துவமான மொழிநடையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும்.

பெருங்கவிஞர்களின் வாய்மொழி

பேச்சுமொழியைக் கவிதையில் பயன்படுத்துபவர்களில் மூன்று வகையினர் உண்டு. முதல் வகையினர், வால்ட் விட்மனைப் போன்றவர்கள். இவர்களுடைய கவிதைகளில் எந்தவொரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதாகிவிடுவதில்லை. எழுத்துக்கள் எப்படிச் சொற்களில் கரைந்து போகின்றனவோ அதுபோன்று சொற்கள் கவிதைகளில் கரைந்துபோவதில்லை. இவற்றில் சொற்கள் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வதில்லை. இக்கவிதைகள் இறுக்கிச் சுற்றப்பட்ட கம்பிச்சுருளைப் போன்று அல்லாமல் பேச்சுமொழிக்கே உரிய தளர்வோடு கட்டப்பட்டவை. இதில் பல நேரங்களில் கவிதை என்பது நடனமாடிக் கொண்டிருப்பவன், அவ்வப்போது நடப்பதற்குத் தாவிவிடுவதுபோல வெறுமனே ஒரு பேச்சு என்ற நிலைக்கு நழுவிவிடும்.

கவிஞர் மல்லார்மே போன்றவர்கள் இரண்டாம் வகையினர். இவர்களுடைய பேச்சு எதிராளியை விளித்துப் பேசுவது போன்றது அன்று. மின்சார ரயிலின் நெருக்கத்தில் படியில் தொங்கிக்கொண்டு போகிறபோது வெளியில் பரந்து கிடக்கும் தனிமையைச் சாட்சியாக வைத்துத் தங்களுக்குத் தாங்களே உதடு பிரித்துப் பேசிக்கொள்ளும் வகை. இவர்களுடைய கவிதைகளில் பேச்சு என்பது மூடிய நிலையில் செயல்படுகின்றது. தனிப்பட்ட ஒவ்வொரு சொல்லும் பிறிதொன்றைப் பேசுவதோடு மட்டுமவ்வாமல் தன்னையே பேசிக்கொள்கிறது. குறியீடுகளின் கூட்டம் ஒரு முனையிலும் மொழி மறுமுனையிலும் இருக்கையில் கவிதையின் பேச்சு, இடையில் இருக்கும் வெளியில் புழங்குகின்றது.

வால்ட் விட்மன்


வால்ட் விட்மன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். கவிஞர்; இதழாளர்; கட்டுரையாளர்; புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர். இவருடைய 'புல்லின் இதழ்கள்' (Leaves of grass) என்ற நூல் உலகப்புகழ் பெற்றது.

கனவொன்று நான் கண்டேன்

உலகெலாம் திரண்டுவந்து ஒருசேரத் தாக்கினாலும்

தோற்காத பெருநகரம் ஒன்று கண்டேன்

நண்பர்கள் நகரம் என்றொரு புதுநகரம் வந்தது என் கனவில்.

அன்பைவிடப் பெரிதென்ற ஒன்றும் அந்நகரில் இல்லை,

அன்பின் வழித்தடத்தில் மற்றெல்லாம் சென்றன அதன் பின்னே.

எந்நேரமும்,மாந்தர் செய்வது எதுவென்றாலும், அன்பேதான் தெரிந்தது அங்கே அவற்றில் எல்லாம், மக்கள் தோற்றத்திலும் அன்பே, அன்பேதான் அவர் மொழியும்.

குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவுகூரத்தக்க தருணங்கனைப் பதிவு செய்வதாகும்.

ஸ்டெஃபான் மல்லார்மே

ஸ்டெஃபான் மல்லார்மே பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரைப் புரிந்துகொள்வதன் மூலமே குறியீட்டியத்தையும் (Symbolsm) புரிந்துகொள்ள முடியும்.


புத்தகங்களிலெல்லாம் படித்துவிட்டேன் நான் தப்பிப் போகத்தான் வேண்டும் அங்கே ஆனால் உடலோ சோகத்தில்! வானுக்கும் முன்பின் தெரியாத கடல் நுரைக்குமிடையே மயக்கத்தில் பறவைகள் பறப்பதை உணர்கிறேன்!

என் கண்களில் பிரதிபலிக்கும் பழைய பூங்காக்களோ எழுதப்படாத தாளின் தூய வெண்மையின் மீது என் விளக்கிலிருந்து வீசும் பயனற்ற ஒளியோ தன் குழந்தைக்குப் பாலூட்டும் அவ்விளம்பெண்ணோ எதுவும் தடுக்காது கடல்நீரில் நனையும் இந்நெஞ்சை

நான் கிளம்பிச் செல்வேன்! பாய்மரங்களைத் தூக்கியெறிந்து விட்டிருக்கும் நீராவிக் கப்பலே புறப்படு, தொலைதேச இயற்கையை நோக்கி. இரக்கமற்ற எதிர்பார்ப்புகளில் மனமுடைந்து ஆடும் கைக்குட்டைகளின் மகத்தான வழியனுப்பலை

இன்னும் நம்பிக்கொண்டிருப்பது வேதனை! அதோ, பாய்மரமின்றிப் போய்ச்சேரத் தீவுகளின்றி மூழ்கிவிட்ட கப்பல்களின்மேல் சாய்ந்து புயலை அழைக்கும் பாய்மரங்கள்தாமே அவை.. ஆனால், இதோ கேள் என் நெஞ்சே மாலுமிகளின் பாடலை!

மூன்றாவது வகையினர் ஸ்பானிஷ் மொழிக் கவிஞராகிய பாப்போ நெரூடா போன்றவர்கள். ஒரு கவிதை, ஒரு பொருளைப் பற்றியது என்று தோன்றினாலும் அஃது அப்பொருளைப் பற்றியது அன்று. அது வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையைப் பற்றிப் பேசுகிறது. ஒரு வடிவம் கொள்ளுதல் என்பதை நோக்கி வாழ்க்கை தொடர்ந்து முயல்கிறபோதும் அது இந்த முயற்சியில் ஒருபோதும் வெற்றி கொள்வதில்லை. இதுபோன்ற கவிதை, எந்தவித முன்கூட்டிய திட்டமோ, ஒழுங்கமைதியோ இன்றி ஒன்றைச் சுட்டுவதுபோலக் காட்டி உடனே எதையும் சுட்டாமல் முடிந்துபோகிறது. அறியப்பட்டிராததை நோக்கி நகர்கிற அதே நேரத்தில் நெரூடாவின் கவிதை விரிந்ததாகவும் மையத்தை நோக்கி நகர்வதாகவும் இருக்கிறது.

பாப்லோ நெரூடா

தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் பிறந்தவர். இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்தகவிஞர். தன்னுடைய கவிதைகளுக்காக 1971ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.


எத்துணைப் பெயர்கள்! திங்கட்கிழமைகள் செவ்வாய்க்கிழமைகளுடனும்

ஆண்டு முழுவதுடன் வாரமும் சிக்கிக் கொண்டுள்ளன.

களைத்துப்போன உம் கத்தரிக்கோலால் காலத்தை வெட்ட முடியாது. பகலின் பெயர்கள் அனைத்தையும் இரவின் நீர் அழைக்கிறது.

இரவில் நான் உறங்குகையில் என்னை என்னவென்று அழைக்கின்றனர் அல்லது என்னவென்று அழைப்பதில்லை? தூங்கும்போது நான் நானாக இல்லையெனில் விழித்தெழுந்த பின் நான் யார்?

கவிதை என்பது எது? என்ற இந்தக் கேன்விக்கு எனக்குத் தற்சமயம் கிடைக்கும் விடை இதுதான். கவிதை என்பது ஒரு பொருளன்று; அது மொழிக்குள் உவகையும் உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்துவிடுவதற்காக முயலும் தொடர்ந்த ஒரு படைப்புச் செயல்பாடு. எனவே, கவிதை என்பதே மொழிதான். கவிதைக்குள் உலவும் மொழியின் தர்க்கம் கவிதைக்கான உலகத்தைக் கட்டியெழுப்புகிறது. எனவே, எத்தகைய மொழியை நாம் பயன்படுத்துகின்றோமோ அதன் குணாம்சங்களையும் பேச்சுவழக்குகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது கவிஞனின் கடமையாகிறது.

தெரிந்து தெளிவோம்

ஒவ்வொரு மொழியிலும் தோன்றும் கவித்துவ வெளிப்பாடுகளை ஒன்றாக வைத்து நோக்கும்பொழுது கவிதைகள் கேட்போரால் / வாசகர்களால் உள்வாங்கப்பட்டு ரசிக்கப்பெறும் முறையில், காலத்துக்குக் காலம் அழுத்த வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கம்.

கவிதை என்பது யாது; அது எவற்றைப் பற்றிப் பேசுதல் வேண்டும்; எப்பொழுது எந்த நிலையில் ஒரு கவிதையாக்கம் கவர்ச்சிகரமான கவிதையாக அமையும் என்பன பற்றி, அவற்றின் ஆக்கத்தில் ஈடுபடுவோருடைய கருத்து நிலைப்பாடுகள் கவிதை, கவிதையெனக் கொள்ளப்படுவதற்கான எடுத்துக்கூறல் முறைமைகள் ஆகியன யாவும் ஒருங்கு சேர்கின்றபொழுதுதான் மேலே கூறிய கவித்துவ உணர்வுச் செவ்வியலிலே மாற்றம் தெரிய வரும்.

- தமிழின் கவிதையியல் நூலில் கா. சிவத்தம்பி

 

நூல்வெளி

இராசேந்திரன் என்னும் இயற்பெயர் கொண்ட இந்திரன் சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். ஒரிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸின் "பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்" என்னும் நூலின் மொழிபெயர்ப்பு நூலுக்காக, 2011ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் விருது பெற்றுள்ளார். முப்பட்டை நகரம், சாம்பல் வார்த்தைகள் உள்ளிட்ட கவிதை நூல்களையும் தமிழ் அழகியல், நவீன ஓவியம் உள்ளிட்ட கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார். வெளிச்சம், நுண்கலை ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார்.

பாடப்பகுதிக்கான கவிதை மொழிபெயர்ப்புகள்

வால்ட் விட்மன் - ஆங்கிலத்திலிருந்து தமிழில் : சங்கர் ஜெயராமன்

மல்லார்மே - பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்: வெ. ஸ்ரீராம்

பாப்லோ நெரூடா - ஆங்கிலத்திலிருந்து தமிழில்: .இரா. வேங்கடாசலபதி

Tags : by Indiran | Chapter 1 | 11th Tamil இந்திரன் | இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 1 : Ennuyir enbean : Prose: Pechu mozhiyum kavithai mozhiyum by Indiran | Chapter 1 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன் : உரைநடை: பேச்சுமொழியும் கவிதை மொழியும் - இந்திரன் | இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன்