Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | செய்யுள் கவிதைப்பேழை: திருமலை முருகன் பள்ளு

பெரியவன் கவிராயர் | இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: திருமலை முருகன் பள்ளு | 11th Tamil : Chapter 2 : Maamalai potrutum

   Posted On :  05.08.2023 07:02 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : மாமழை போற்றுதும்

செய்யுள் கவிதைப்பேழை: திருமலை முருகன் பள்ளு

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : மாமழை போற்றுதும் : செய்யுள் கவிதைப்பேழை: திருமலை முருகன் பள்ளு - பெரியவன் கவிராயர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 2

கவிதைப்பேழை

திருமலை முருகன் பள்ளு


நுழையும்முன்

உழவர், உழத்தியரின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே பள்ளுச் சிற்றிலக்கியத்தின் உட்கோளாகும். 'நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது' என்பர். வேளாண்மை இலக்கியமான பள்ளு, அரிய பல செய்திகளின் கருவூலமாக விளங்குகிறது.

 

வடகரை நாடு

மலரில் ஆரளி இந்துளம் பாடும்

மடைஇ டங்கணி வந்துளம் ஆடும்

சலச வாவியில் செங்கயல் பாயும்

தரளம் ஈன்றவெண் சங்கயல் மேயும்

குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும்

குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்

புலவர் போற்றும் திருமலைச் சேவகன்

புகழ்வட ஆரி நாடெங்கள் நாடே.

 

தென்கரை நாடு

வளருங் காவில் முகில்தொகை ஏறும் - பொன்

மாடம் எங்கும் அகிற்புகை நாறும்

குளிரும் மஞ்ஞையும் கொண்டலும் காக்கும்

கோல்முறை மன்னர் மண்டலங் காக்கும்

இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும் -முத்(து)

ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும்

அளியுலாம் கொன்றை சூடுங் குற்றாலத் - தென்

ஐயன்தென் ஆரி நாடெங்கள் நாடே.

- பெரியவன் கவிராயர்

 


சொல்லும் பொருளும்

ஆரளி - மொய்க்கின்ற வண்டு, இந்துளம் - இந்தளம் எனும் ஒரு - வகைப் பண், இடங்கணி - சங்கிலி, உளம் - உள்ளான் என்ற பறவை, சலச வாவி - தாமரைத் தடாகம், தரளம் முத்து, வட ஆரிநாடு - திருமலை.

கா - சோலை, முகில்தொகை - மேகக் கூட்டம், மஞ்ஞை - மயில், கொண்டல் கார்கால மேகம், மண்டலம் - உலகம், வாவித் தரங்கம் - குளத்தில் எழும் அலை, அளியுலாம் - வண்டு மொய்க்கின்ற, தென் ஆரிநாடு - குற்றாலம்.

பாடலின் பொருள்

வடகரை நாடு

வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் இந்தளம் என்ற பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும். மீனைப் பிடித்து உண்பதற்காக வந்த உள்ளான் பறவை வண்டின் இசைகேட்டு வாய்க்காலின் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியில் வாலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும்.

தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும். முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும். மின்னலையொத்த பெண்கள், பெய் என்றால் மழை பெய்யும். உள்ளங்கை ஏந்தி இரந்து உண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறும் வார்த்தைகள் மெய்யாகும். இத்தன்மை கொண்ட திருமலையில் புலவர்கள் போற்றுகின்ற திருமலைச் சேவகன் வீற்றிருக்கின்றார்.

தென்கரை நாடு


தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும். இந்நாட்டில் உள்ள பொன்னாலான மாடமாளிகைகளில் அகில்புகையின் நறுமணம் பரவிக்கொண்டே இருக்கும். இம்மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும்.

செங்கோலைக் கொண்ட மன்னர் தென்கரை நாட்டை நீதி தவறாது காவல் காப்பர். இளைய பெண்கள் பொன்னாலான

தெரிந்து தெளிவோம்

உங்கள் மாவட்டத்திலுள்ள ஆறு, ஏரி, குளங்களின் பெயர்களை அறிவீர்களா? கேட்டறிக.

தமிழகத்தில் முன்னோர்கள் பயிரிட்டு வந்த நெல் வகைகள் தற்பொழுது குறைந்ததற்கான காரணம் அறிவீர்களா?

அரங்கில் நடித்து விளையாடி மகிழ்ந்திருப்பர். இங்குள்ள குளங்களின் அலைகள் முத்துகளை ஏந்தி வரும். அவ்வலைகள் கரைகளில் மோதும்பொழுது முத்துகள் சிதறி வெடிக்கும். கொண்ட இத்தன்மை குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலரைச் ஆடிய தென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றாலநாதர் வீற்றிருக்கின்றார்.

இலக்கணக்குறிப்பு

செங்கயல், வெண்சங்கு - பண்புத்தொகைகள்

அகிற்புகை - ஆறாம் வேற்றுமைத்தொகை

மஞ்ஞையும் கொண்டலும் - எண்ணும்மை

கொன்றைசூடு - இரண்டாம் வேற்றுமைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

ஈன்ற - ஈன் + ற் +

ஈன் - பகுதி

ற் இறந்தகால இடைநிலை

- பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதி

செங்கயல் - செம்மை + கயல்

ஈறு போதல் - செம் + கயல்

முன்னின்ற மெய் திரிதல் - செங்கயல்

தெரியுமா?

பள்ளு 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது உழத்திப் பாட்டு எனவும் அழைக்கப்படும். தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சாரும்.

 

திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள்


சீரகச்சம்பா

சீதாபோகம்

ரங்கஞ்சம்பா

மணல்வாரி

அதிக்கிராதி

முத்துவெள்ளை

புழுகுச்சம்பா

சொரிகுரும்பை

புத்தன்வாரி

சிறைமீட்டான்

கார்நெல்

அரியநாயகன்

குற்றாலன்

பாற்கடுக்கன்

கருங்சூரை

பூம்பாளை

கற்பூரப்பாளை

காடைக் கழுத்தன்

மிளகுச் சம்பா

பனைமுகத்தன்

மலைமுண்டன்

திருவரங்கன்

குருவைக் கிள்ளை

முத்துவெள்ளை

.

திருமலை முருகன் பள்ளு கூறும்

மாடு வகைகள்

காரி, தொந்திக்காளை

மால்காளை, மறைகாளை

மயிலைக்காளை, மேழைக்காளை

செம்மறையான், கருமறையான்

உழவுக் கருவிகள்

கலப்பை, நுகம், பூட்டு

வள்ளைக்கை, உழக்கோல், கொழு

கயமரம், மண்வெட்டி, வடம்

சொற்சுவை

கண்காணி: பேச்சு வழக்கில் கங்காணி என்று பயன்படுத்தப்படுகிறது. கண்காணம் என்பது பயிர்த்தொழிலில் கையாளப்படும் ஒரு சொல். கங்காணம் என்றும் வழங்கப்படுகிறது.

இதன் பொருள், நாள்தோறும் வயலில் நெல் அறுவடை செய்து களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவு என்பதாகும். கண்காணி என்பது இந்த ஒப்படியை மேற்பார்வை செய்பவரைக் குறிக்கும்.

 

நூல்வெளி

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டணம். இவ்வூர் 'பண்பை' என்றும் 'பண்பொழில்' என்றும் அழைக்கப்படும். இங்குள்ள சிறு குன்றின் பெயர் திருமலை. குன்றின் மேலுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு திருமலைமுருகன் பள்ளு பாடப்பட்டுள்ளது. இந்நூலில் கலித்துறை கலிப்பா, சிந்து ஆகிய பாவகைகள் விரவி வந்துள்ளன. இந்நூல் 'பள்ளிசை' என்றும் திருமலை அதிபர் பள்ளு' எனவும் வழங்கப்படுகிறது. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயர் இவர் காலம் 15ஆம் நூற்றாண்டு.

Tags : by Periyavan Kavirayar | Chapter 2 | 11th Tamil பெரியவன் கவிராயர் | இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 2 : Maamalai potrutum : Poem: Thirumalai Murugan pallu by Periyavan Kavirayar | Chapter 2 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : மாமழை போற்றுதும் : செய்யுள் கவிதைப்பேழை: திருமலை முருகன் பள்ளு - பெரியவன் கவிராயர் | இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : மாமழை போற்றுதும்