அழகிய பெரியவன் | இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: ஏதிலிக்குருவிகள் | 11th Tamil : Chapter 2 : Maamalai potrutum
இயல் 2
கவிதைப்பேழை
ஏதிலிக்குருவிகள்
நுழையும்முன்
உயிர்களின் இருப்பை இயற்கைச்சூழலே முடிவு செய்கிறது. இயற்கைக்கும் மனிதர்க்கும் தொப்புள்கொடி மழைத்துளி. மண்ணில் முதல்துளி விழுகையில் உயிர்கள் மலர்கின்றன. சூழலியல் மாற்றத்தால் நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்தைக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை
குருவிகளையும்
கூடுகளையும்
பார்க்கக் கூடவில்லை
முன்பென்றால் ஊரில்
அடைமழைக்காலம்
ஆற்றில் நீர் புரளும்
கரையெல்லாம் நெடுமரங்கள்
கரைகின்ற பறவைக் குரல்கள்
போகும் வழியெல்லாம்
தூக்கணாங்குருவிக் கூடுகள்
காற்றிலாடும் புல் வீடுகள்
மூங்கில் கிளையமர்ந்து
சுழித்தோடும் நீருடன்
பாடிக்கொண்டிருக்கும் சிட்டுகள்
மண்ணின் மார்பு
சுரந்த காலமது
வெட்டுண்டன மரங்கள்
வான் பொய்த்தது
மறுகியது மண்
ஏதிலியாய்க் குருவிகள்
எங்கோ போயின.
- அழகிய பெரியவன்
தெரியுமா?
மார்ச் 20 - உலகச் சிட்டுக்குருவிகள் நாள்.
நூல்வெளி
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டைச் சேர்ந்த அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன். புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புத் தளங்களில் இயங்குபவர். 'தகப்பன் கொடி’ 'புதினத்திற்காக 2003ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றவர். அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். குறடு, நெரிக்கட்டு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளும் மீள்கோணம், பெருகும் வேட்கை உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரின் படைப்புகள்.