ஜெயமோகன் | இயல் 2 | 11 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: யானை டாக்டர் | 11th Tamil : Chapter 2 : Maamalai potrutum
இயல் 2
விரிவானம்
யானை டாக்டர்
ஜெயமோகன்
நுழையும்முன்
காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகளைக் காட்டின் மூலவர்' என்பர். மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் தன்னை அறியும் ஆற்றலைப் பெற்றதும் மனிதர்களின் குணங்களில் பலவற்றைக் கொண்டதுமான யானைகள் நமது பண்பாடு, கலைகளின் பிரிக்க முடியாத கூறாக விளங்குகின்றன. அவற்றுக்குத் தெரிந்தோ தெரியாமலோ நாம் பல்வேறு இன்னல்களை இழைக்கிறோம். வானத்து நிலவும் மண்ணுலகத்துக் கடலும் போல் என்றும் அலுக்காத யானைகளின் பேருருக் காட்சியைக் காண அவற்றின் தடத்தைப் பின்தொடர்வோம்.
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி, வனத்துறையின் மிருக டாக்டராக முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் டாப் ஸ்லிப்புக்கு வந்தவர். டாக்டர் கே. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவர், காட்டு மிருகங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட்ட மிருகங்களுக்கும் மருத்துவ உதவி அளிப்பதைப் பணியாகக் கொண்டவர். ஆனால் மெல்ல மெல்ல யானைகளுக்குரிய சிறப்பு மருத்துவராக அறியப்பட்டார்.
தமிழக வனத்துறையில் யானைகளைப் பற்றி நன்கறிந்தவர் என்று ஆன பின்னர் எங்கே யானைக்கு என்ன பிரச்சனை என்றாலும் அவர்தான் செல்ல வேண்டுமென்ற நிலை வந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் உலகத்தின் பல நாடுகளில் உள்ள யானைகளுக்கும் அவர்தான் மருத்துவ ஆலோசகர். டாக்டர் கே. யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றும் உள்ளது. கிட்டத்தட்ட அதே குறிப்புகளின் இன்னொரு வடிவமே காசிரங்கா காண்டாமிருகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள்.
ஒருமுறை முதுமலையில் ஒரு யானைக்குக் கால் வீங்கி அது காட்டில் அலைவதாகத் தகவல் வந்தபோது டாக்டர் கே.யுடன் நானும் வனத்துறை அதிகாரி என்ற முறையில் சென்றேன். காட்டுக்குள் அந்த யானை இருக்குமிடத்தைக் குறும்பர் ஏற்கெனவே கண்டு வைத்திருந்தார்கள். அவர்களை ஏற்றிக்கொண்டு ஜீப்பில் காட்டுக்குள் நுழைந்தோம். அதுவும் பழங்காலக் குதிரைப்பாதைதான். நெடுந்தூரம் சென்றபின் ஜீப்பை நிறுத்திவிட்டு நானும் டாக்டரும் காட்டுக்குள் சரிவில் இறங்கிச் சென்றோம். துப்பாக்கியுடன் இரு வனக்காவலர்களும் மற்ற பொருள்களுடன் இரு குறும்பர்களும் எங்களுடன் வந்தார்கள். உடலை அறுக்கும் வேய்மூங்கில் இலைகளை அகற்றி டாக்டர் கே. முன்னால் சென்று கொண்டே இருந்தார். தரையிலுள்ள வேர் முடிச்சுகள் என் கால்களைத் தடுக்கின.
எழுபதை நெருங்கினாலும் டாக்டர் கே. மிகக் கச்சிதமான உடல் கொண்டவர். காடு அவருக்கு மீனுக்குக் கடல்போல, கொஞ்ச நேரத்தில் காட்டில் யானைகளின் நெடி மெலிதாக வர ஆரம்பித்தது. யானைகள் ஏற்கெனவே எங்களைக் கவனித்துவிட்டன என்று தெரிந்தது. மெல்லிய யானை உறுமல் கேட்ட புல்வெளியில் பன்னிரண்டு யானைகள் கூட்டமாக நிற்பதைக் கண்டோம். எங்கள் கண்களை ஓட்டியபோது மேலும் ஆறு யானைகள் மூங்கில் புதர்களுக்குள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றின் அருகே நான்கு குட்டி யானைகளும் நிற்பது தெரிந்தது.
டாக்டர் கே. தன் கருவிகளை எடுத்துப் பொருத்திக் கொண்டார். சிறிய துப்பாக்கி போன்ற ஒன்று. அதில் மாத்திரையே குண்டாக இருக்கும். யானையைக் கூர்ந்து தொலைநோக்கியால் கவனித்தார். அதன் எடையை அவதானிக்கிறார் என்று தெரிந்தது. எடைக்கு ஏற்பத்தான் அந்த யானைக்கான மயக்க மருந்தின் அளவைத் தீர்மானிக்க முடியும். அவர் முழுமையாகத் தனக்குள் மூழ்கி வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கருவிகளைப் பொருத்திக் கையில் எடுத்துக்கொண்டு, "நீங்க இங்க இருங்க, நான் போய்ப் பார்க்கிறேன்" என்றார். அவரிடம் எதுவும் சொல்ல முடியாதென்று ஏற்கெனவே நான் நன்றாக அறிந்திருந்தேன்.
அந்த யானை, "பெரிய மரத்தடிக்குப் பக்கத்திலே நின்னுக்கிட்டிருக்கு. கீழே விழுந்தா அடிபட்டிரும். அதக் கொஞ்சம் சதுப்புப் பகுதிக்குக் கொண்டு வரணும். மத்த யானைகள் விவரம் புரியாம ரெஸிஸ்ட் பண்ணும்" என்றார். யானைகளுக்குத் தெரியுமா, இந்தக் காயத்துக்குக் காரணம் மனுசங்கதான்னு என்று கேட்டேன்.
"கண்டிப்பா... ரொம்ப நல்லாத் தெரியும்" என்றார். மனிதனின் கீழ்மைகள் நாள்தோறும் வளர்வதன் சாட்சியாக யானைகளின் மரணங்கள் நிகழ்கின்றன. சுற்றுப்பயணம் என்ற பெயரில் காட்டுக்கு
நிகண்டுகளில் யானையைக் குறிக்கும் வேறு சொற்கள்
1. கயம்
2. வேழம்
3. களிறு
4. பிளிறு
5. களபம்
6. மாதங்கம்
7. கைம்மா
8. வாரணம்
9. அஞ்சனாவதி
10. அத்தி
11. அத்தினி
12. அரசுவா
13. அல்லியன்
14. அனுபமை
15. ஆனை
16. இபம்
17. இரதி
18. குஞ்சரம்
19. வல்விலங்கு
20. கரி
21. அஞ்சனம்
வரும் வசதியானவர்களும் படித்தவர்களும் குடித்துவிட்டு வெறியுடன் காட்டு மரத்தின் மீது வீசி எறியும் மதுக்குப்பிகள் மிகவும் ஆபத்தானவை மற்ற எந்த மிருகத்தை விடவும் யானைகளுக்கு மிக அபாயகரமானவை. யானையின் அடிக்கால், மணல் மூட்டை போன்றது. மரத்தடியில் கிடக்கும் குப்பியின் பாகங்கள் அதன் மகத்தான எடை காரணமாகப் பாதங்களுக்குள் முழுக்கப் புகுந்துவிடும். நடக்க நடக்க உள்ளே செல்லும். அதன் பின்னால் யானையால் நடக்கமுடியாது. காயம் சீழ் வைக்கும். குருதிப் பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டுவிட்டதென்றால் அதன்பின் யானை உயிருடன் எஞ்சாது.
'ஆனால்,உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது, துடிக்காது. கண் மட்டும் நல்லாச் சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்க மருந்தே கொடுக்காமக்கூட அறுவைச் சிகிச்சை பண்ணலாம். அந்த அளவுக்குப் பொறுமையா ஒத்துக்கிட்டு நிக்கும். என்ன ஒரு படைப்பு கடவுள் அவரோட நல்ல மனநிலையில் படைச்சிருக்கார்" என்று சொல்லிக்கொண்டே டாக்டர் கே. ஓடையைக் கடந்து இறங்கினார்.
யானைகளை நெருங்கியபோது நடுவே நின்ற பெரிய பிடி யானை உரக்கப் பிளிறியது. அதைக் கேட்ட மற்ற யானைகளும் பிளிறின. அவை டாக்டர் கே.யை நோக்கித் திரும்பின. பிடி யானையின் காதுகள் வேகமாக அசைந்தன. தலையை வேகமாகக் குலுக்கியபடி டாக்டரை நோக்கி வந்தது. டாக்டர் கே. அசையாமல் நின்றார். அது மேலும் தலையைக் குலுக்கி எச்சரிக்கை விடுப்பதுபோலப் பிளிறிக்கொண்டு இன்னும் இரண்டடி முன்னால் வந்தது. யானை தலையைக் குலுக்கினால் அது எச்சரிக்கிறது, "தாக்குவேன்" என்றுதான் அர்த்தம். என் இதயத்துடிப்பை என் காதுகளில் கேட்டேன். டாக்டர் கே. அசையாமல் சில நிமிடங்கள் நின்றார். யானையும் அசையாமல் நின்றது. டாக்டர் கே. மேலும் முன்னே சென்றார். இப்போது அந்த யானை நெருங்கி வந்தது. ஆனால் தலையைக் குலுக்கவில்லை. மத்தகத்தை நன்றாகத் தாழ்த்தியது. அதுவும் எச்சரிக்கை அடையாளம்தான். பல மணி நேரம் நீடித்த இக்காட்சியின் முடிவில் அந்தப் பிடி யானை பின்வாங்கியது. அதனைப் பின்பற்றி அணைத்து யானைகளும் முங்கில் கூட்டங்களுக்குள் சென்றன.
மனிதர்கள் தவிர்த்த மற்றைய விலங்குகளுள் யானைகள், அதிக நாள்கள் வாழும் தரைவாழ் விலங்குகள் ஆகும். வேட்டை விலங்குகளாகவும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவையாகவும் இருக்கின்ற சிங்கம், புலி முதலியனவும் நெருங்க அஞ்சும் வலிமை கொண்டவை யானைகள். இவை குடும்பமாக வாழும்; மிகுதியான நினைவாற்றல் கொண்டவை. யானைகளுள் மூன்று வகைகள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகியனவாகும். பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர் வாழ்கின்றன.
டாக்டர் கே. கையைத் தூக்கி எங்களை வரும்படி சைகை காட்டினார். நானும் பிறரும் ஓடைக்குள் இறங்கினோம். வனக்காவலர்கள் பின்னால் தங்கிவிட நானும் குறும்பர்களும் முன்னால் சென்றோம். பாதிக்கப்பட்ட யானை சட்டென்று சாய்ந்திருந்த மரம் அதிர நிமிர்ந்து எங்களை நோக்கி வந்தது. அதன் பின்னங்கால் வீங்கி மற்ற கால்களைவிட இருமடங்காக இருந்தது. அதைக் கிட்டத்தட்ட இழுத்துத்தான் அது முன் நகர முடிந்தது.
அது நாலடி முன்னால் வந்ததும் டாக்டர் அதைச் சுட்டார். மாத்திரை அதன் தோளுக்கு மேல் பதமான சதையில் புதைந்ததும் யானை உடல் அதிர்ந்து அப்படியே நின்றது. காதுகளை அசைப்பது நின்றது. அதன் அசைவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. முன் காலைக் கொஞ்சம் வளைத்து ஆடியது. சட்டென்று பக்கவாட்டில் சாய்த்து சேற்றை அறைந்து புல் மேல் விழுந்தது. துதிக்கையின் நுனியால் எங்களை வாசம் பிடித்தபின் யானை அசைவிழந்தது.
டாக்டர் கே. யானையின் அருகே அமர்ந்து சுறுசுறுப்பாக வேலையைத் தொடங்கினார். நான் அவருக்கு உதவினேன். காடுகளுக்குள் மற்ற யானைகள் எங்களையே கூர்ந்து நோக்கிக்கொண்டு நிற்பதை உணர்ந்தேன். யானையின் காலில் பாதி' கண்ணாடிக்குப்பி ஒன்று முழுமையாக உள்ளே ஏறி இருந்தது. அதைச் சுற்றிச் சீழ் கட்டிப் பொருக்கோடியிருந்தது. கத்தியால் டாக்டர் கே. அந்தப் பொருக்கை வெட்டிச் சீழ்பட்ட சதையை முழுக்க, சிறிய கோடாலி போன்ற கருவியால் வெட்டியெடுத்தார். ஆழப் பதிந்திருந்த கண்ணாடிக்குப்பியை எடுத்தெறிந்தார். "ஒரு வாரம்கூட ஆகலை, பொழைச்சுது' என்றார்.
தலையணை அளவுக்குப் பஞ்சை எடுத்து, அதில் மருந்தை நணைத்து, உள்னே திணித்து இறுக்கி வைத்துப் பெரிய துணியொன்றால் சுற்றிக் கட்டினார். அதன் பசை இறுக்கமாக ஒட்டிக்கொண்டது. அதன் காலில் கூடாரத் துணி போன்ற தோலின் மீது சிறிய எவர்சில்வர் கிளிப்புகளைக் குத்தி இறுக்கி அதனுடன் துணியைச் சேர்த்து ஓட்டிக்கட்டி இறுக்கி முடித்தார். அதன் மேல் கீழே கிடந்த கரிய சேற்றை அள்ளி நன்றாகப் பூசி மூடினார். யானையின் காதில் அதைத் திரும்பவும் கண்டு பிடிப்பதற்கான சிக்னலர் கம்மலைக் குத்தி அணிவித்துவிட்டு எழுந்தோம். மறைந்திருந்த யானைகள் ஒவ்வொன்றாகத் தரையில் கிடந்த யானையைச் சூழ்ந்துகொண்டன. துணியைத் துதிக்கையால் தடவிப் பரிசோதனை செய்து பெரிய யானை மெல்லப் பிளிற, மற்ற யானைகளும் அதனைத் தொடர்ந்து பிளிறின. ஒரு குட்டி யானை மட்டும் மஞ்சணத்தி மரத்தடியில் நின்று காதுகளை முன்னால் தள்ளி எங்களையே பார்த்தது.
"துணிக்கட்டை அவுத்திராதுல்ல?" என்றேன். "அதுக்குத் தெரியும்", "ஆனா யானைக்குப் பொதுவா வெள்ளை நிறம் பிடிக்காது. சேறு பூசலையன்னா நிம்மதியில்லாம காலை நோண்டிக்கிட்டே இருக்கும்"
என்றார். 'குணமாயிடுமா என்றேன். அனேகமா பதினஞ்சு நாளிலே பழையபடி ஆயிடும். யானையோட ரெஸிஸ்டென்ஸ் பயங்கரம். சாதாரண ஆண்டிபயாட்டிக்கூட அபாரமா வேலை செய்யும் என்றார். மீண்டும் டாப் ஸ்லிப்புக்குக் காரில் திரும்பும்போது டாக்டர் கே., என்ன ஒரு அற்புதமான படைப்பு. என்ணிக்காவது தமிழ்நாட்டிலே யானை இல்லாமப் போனா அப்புறம் நம்ம பண்பாட்டுக்கே என்ன அர்த்தம்" என்றார்.
.காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரைத் தங்கி யாங்கு.
- கலித்தொகை 2: 26-27
அடுத்த முறை அவரை யானை முகாமில் சந்தித்தேன். அவர் வந்ததும் நாற்பத்தெட்டுத் துதிக்கைகன் தலைக்குமேல் எழுந்து அவரை வரவேற்றன. அவர் அவற்றுடன் கொஞ்சியபடி குலவியபடி வேலைகளில் மூழ்கினார். ஒவ்வொரு யானையாகப் பார்த்துப் பரிசோதனை செய்து அறிக்கைகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுதினேன். நடுவே ஷெல்லி. கொஞ்சம் கம்பன், கொஞ்சம் பரணர் பற்றிப் பேசினார். வனத்துறை அதிகாரி என்பதை மறந்த நான், மெல்ல மெல்ல அவரின் உதவியாளராகவும் ரசிகராகவும் மாணவராகவும் மாறிக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் அவர் வீட்டுக்குச் சென்றதுமே அவர் எழுதி வைத்திருந்த பெரிய ஆய்வேட்டை எடுத்து நீட்டினார்.
"படிச்சுப் பாரு" என்றார். அவருடன் பேசிக்கொண்டே இருந்ததில் இருட்டிவிட்டது. "கெளம்பறியா.. வேணுமானா இங்கேயே தங்கிக்கோ" என்றார். அசதியாக இருந்ததால் நான் படுத்துக்கொண்டே படித்தேன். டாக்டர் இரவு உணவை அரைமணி நேரத்தில் சமைத்தார். இருவரும் அமைதியாகச் சாப்பிட்டோம். கோயில் யானைகளைக் காட்டுக்குள் கொண்டு வந்து பராமரித்துத் திருப்பி அனுப்புவதற்குண்டான செயல் திட்டத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார், இரவு பத்து மணிக்குக் களைப்புக் காரணமாக நான் படுத்துத் தூங்கிவிட்டேன்.
மீண்டும் விழித்தபோது அறையில் வெளிச்சம் இருந்தது. டாக்டர் கம்பளிச்சட்டையைப் போட்டுக் கொண்டிருந்தார்.
"வெளியே ஏதோ சத்தம் கேக்குது... யானை வாசமும் அடிக்குது" என்றார். யானைக்கூட்டம் வந்திருக்குமோ" என்றேன்.
"வழக்கமா இந்தப் பக்கம் வராது. ஏதோ காரணம் இருக்கணும்" என்று டார்ச்சை எடுத்துக் கொண்டார். நானும் கிளம்பினேன். ஆனால் அதற்குள்ளாகவே டாக்டர் கே. யானையைப் பார்த்துவிட்டிருந்தார். "குட்டி.. இரண்டு வயசுக்குன்ன இருக்கும்" என்று அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் சில கணங்களுக்குப் பின் நானும் அந்த யானைக்குட்டியைக் கண்டேன். "இந்த வயசிலே தனியா வராதே" என்றார் டாக்டர், "வா, பாப்போம்". இருட்டில் வெளிச்சத்தை அடித்தால் அதன் பின்சூழலைப் பார்க்க முடியாது என்பதால் இருட்டுக்குள்ளேயே சென்றோம்,
யானைக்குட்டி மெல்லப் பிளிறியபடி துதிக்கையைத் தூக்கி மோப்பம் பிடித்தது. "ஈஸி ஈஸி" என்றார் டாக்டர். யானைக்குட்டி மெல்ல முன்னால் வந்தது. அது நொண்டுவதுபோல் இருந்தது. 'காயம் பட்டிருக்கு என்றேன். யானைக்குட்டி மீண்டும் நின்று ஜெர்ஸி பசு கத்தும் ஒலியில் பிளிறியது. மீண்டும் தள்ளாடியபடி முன் நகர்ந்தது. டாக்டர் என்னிடம், "நில்லு"
என்று சொல்விவிட்டு அருகே சென்றார். அது துதிக்கையை ஊசல்போல் வீசித் தலையை வேகமாக ஆட்டி அவரை வரவேற்றது. அவர் அந்தக் குட்டியானையைத் தட்டித்தட்டி அமைதியாக்கினார். 'இவனைப் படுக்க வைக்கணும். இப்பச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. போய் என்னோட கிட்டை எடுத்துட்டு வா" என்றார். தான் அறைக்குள் ஓடிச்சென்று அவரது பெரிய மருத்துவப் பெட்டியைக் கொண்டு வந்தேன்.
யானை டாக்டர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தின் முக்கியமான காட்டியல் வல்லுநர்களில் ஒருவர். யானைகளுக்காகத் தம் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். உலகப்புகழ் பெற்ற அறிவியல் இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வேணுமேனன் ஏலீஸ் விருதினை 2000ஆம் ஆண்டில் பெற்றார். தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப் புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசின் மூலம் செயல்படுத்தியவர்.
டாக்டர் கே. அதன் வாயில் ஊசி போட்டார். துதிக்கையை முன்னங்கால்களுக்கு நடுவிலிருந்து முன்பக்கம் வரை ஊஞ்சல்போல ஆட்டி முன்னும் பின்னும் உடலை அலைத்தது. ஆட்டம் தளர்ந்து மெல்லப் பக்கவாட்டில் சரிந்து உட்கார்ந்து விழுந்து கால்களை நீட்டிப் படுத்தது. "விளக்கு" என்றார். நான் காட்டினேன். மறுபடியும் மதுக்குப்பி. திம்முறை அதன் கீழ் நுனிக் கால்களுக்கு வெளியே நீட்டித் தெரிந்தது. யானை அதிக எடையில்லாததனாலும் அதிக நாட்கள் ஆகாமல் இருந்ததனாலும் அது உள்ளே செல்லவில்லை. டாக்டர் அதைப் பிடித்து இழுத்து உருவினார். குருதி அவர் கையை நனைத்தது. கையை உள்ளே விட்டு மதுக்குப்பியின் பாகம் ஏதும் இல்லையென்பதை உறுதி செய்து, பஞ்சை மருந்தில் நனைத்து உள்ளே செலுத்திக் கட்டினார்.
"ஒரு மணி நேரத்தில எந்திரிச்சுடுவான்... காலையிலே முதுமலைக்குத் திரும்பிப் போயிடுவான்" என்றார் கே. "முதுமலைக்கா?" என்றேன். 'ஆமா, அங்கே இருந்துதானே வந்திருக்கான். நீயும் இவனைப் பாத்திருக்கே. ஒண்ணரை வருசம் முன்னாடி நாம முதுமலையிலே ஒரு யானைக்கு இதேமாதிரி மதுக்குப்பி எடுத்தோமே. அப்போ அந்தப் பெரிய மஞ்சணத்தி மரத்தடியில நின்னது இவந்தான். அப்ப ரொம்பச் சின்னக்குட்டி' என்றார். "எப்படித் தெரியும்?" என்றேன். 'ஏன், அங்க பார்த்த ஒரு மனுசனை உன்னால் திரும்பிப் பாத்தா சொல்லிட முடியாதா?" என்றார். பின்னர் டாக்டர் கே. எழுந்து கைகளைப் பஞ்சால் அழுத்தித் துடைத்துக் காகிதப் பைக்குள் போட்டார். அவ்வளவு தூரம் உங்களைத் தேடியா வந்திருக்கான்.. ஆச்சரியம்!" என்றேன். பாவம், நல்ல வலியிருந்திருக்கு. யானைகள் அடையாளங்களைக் கண்டுகொண்டு தேடிச் செல்வதைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கேன். முந்நூறு கிலோ மீட்டர் தூரம்கூட யானைகள் தேடிச் செல்வது உண்டு. அவை சிறு தகவலைக்கூட மறப்பதில்லை" என்றார். இருந்தாலும் ஜீப்பில் திரும்பிய எங்களை ஒரு குட்டியானை அத்தனை தூரம் தேடி வந்தது, என்னைப் பிரமிப்பூட்டியது.
நாங்கள் மீண்டும் வீட்டுப் படியை அடைந்ததும் டாக்டர் கே. காட்டை உற்றுப் பார்த்தார். இருளுக்குள் மெல்லிய இருளசைவுகள் உருவாகின. பெரிய யானைக்கூட்டமே அங்கே நிற்பதைக் காண முடிந்தது. நான் விளக்கை அடிக்கப் போனேன்.
"வேண்டாம்" என்றார் டாக்டர். என்னால் அந்தக் கால் ஊனமான யானையை அதன் மெல்லிய கோணல் கொண்ட நடையை வைத்து அடையாளம் காண முடிந்தது. அவை முன்னால் வந்து அரை வட்டமாகக் காதுகளை அசைத்துக்கொண்டு நின்றன.
“வந்து கூட்டிக்கொண்டு போயிடும் வா என்று டாக்டர் சொல்லிக்கொண்டே திரும்பியபோது சட்டென்று இருபதுக்கும் மேற்பட்ட யானைப் பிளிறல்கள் ஒன்றாக இணைந்து பேரொலி எழுப்பின. என் உடல் சிலிர்த்துக் கூசிக் கண்கள் பொங்கி நிறைந்து வழிந்தன. நெஞ்சடைக்கக் கை கூப்பியபடி ஒரு சொல் மிச்சமில்லாமல் மனமிழந்து நின்றேன். யானைக்கூட்டம் துதிக்கைகளைத் தூக்கி வீசிச் சேர்ந்து மீண்டும் மீண்டும் பிளிறின. ஆம், தேவ துந்துபிகள் முழங்கின! வான் முரசுகள் இயம்பின! கருமேகம் திரண்ட விண்ணெங்கும் யானை முக வானவர்களின் புன்னகை நிறைந்திருந்தது.
என்னை
"வா" என்று சொல்லி உள்ளே சென்றார் யானை டாக்டர்.
(யானை டாக்டர் குறும் புதினத்தின் சுருக்கப்பட்ட வடிவம்.)
நூல்வெளி
ஜெயமோகன், நாகர் கோவிலைச் சேர்ந்தவர். விஷ்ணுபுரம், கொற்றவை உள்ளிட்ட பல புதினங்களோடு சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இயற்கை ஆர்வலர். யானையைப் பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் ஆகிய கதைகளையும் எழுதியுள்ளார். இந்தக் குறும் புதினம் 'அறம்' என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று உள்ளது.